முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Squid Gamesஉம் புதுப்பேட்டையும்




Squid Games இணைய தொடரை இன்று தான் பார்த்து முடித்தேன் - நான் தொடர்ச்சியாக பார்த்த இரண்டாவது தொடர் இது.


1) கண்காணிப்பு சமூகத்தை எப்படி முதலீட்டியம் உண்டு பண்ணுகிறது, எப்படி நமது தன்னிலையை ஒரு பண்டமாகவும், வாழ்க்கையை ஒரு போட்டியாகவும் அது உருமாற்றுகிறது என்பதை கவனிப்பதில் எனக்கு ஒரு தனி ஆர்வமுண்டு. அது இந்த இணைய தொடர் என்னை ஈர்க்க ஒரு காரணம்.


2) அடுத்து, மிக அதிகமான தேய்வழக்குகளை தயக்கமின்றி பயன்படுத்துகிற தொடர் இது. அதே நேரம், காட்சிகளை பரபரப்பாக வேகமாக கொண்டு செல்லும் இதன் நேர்த்தியான திரைக்கதையையும் பாராட்ட வேண்டும். 


3) பெரும்பாலான காட்சிகள் கனமற்றவை, ஆனால் நன்றாக எடிட் செய்து ஒரு பதற்றத்தில் நம்மை வைக்கிறார்கள். உ.தா., போட்டி பங்கேற்பாளரான ஒரு நாற்பது வயதுப் பெண் கழிப்பறைக்கு சென்று தன் புழைக்குள் கையை விட்டு எதையோ சிரமப்பட்டு எடுக்கிறார். ஏதோ என்னமோ ஒருவேளை சின்ன சைஸ் துப்பாக்கியோ என நாம் இருக்கை நுனிக்கு வரும் போது பார்த்தால் சிகரெட் பாக்கெட். அநாயசமாக ஒரு சிகரெட்டை உருவி சாவதானமாக புகைக்கிறார். அடுத்து அங்கு கழிப்பறைக்குள் வந்து ஒரு இளம்பெண்ணான பங்கேற்பாளர் வந்து கூரையை உடைத்து மேலே ஏறுகிறார். மேலே ஏதோ நடக்கிறது, அந்த உண்மையை கண்டுபிடிக்கப் போகிறேன் என்கிறார். இந்த அம்மா தோளில் ஏறி நின்று மேலே செல்லுகிறார். அப்படி போராடி அவர் ஒரு சாதாரண விசயத்தை கண்டுபிடிக்கிறார். பெரிய குண்டான்களில் சர்க்கரைப் பாகை காய்ச்சுகிறார்கள். ஏன் எதற்கு, இதற்கும் அடுத்த நாள் விளையாட்டுக்கும் என்ன தொடர்பு எனத் தெரியவில்லை. ஆனால் அந்த பெண் கீழே இறங்கி பாதுகாப்பாக மீளும் வரை நமக்கு பக்குபக்கென இருக்கிறது. இப்படித்தான் ஒன்றுமில்லாத விசயத்தை வைத்து பரபரப்பை உண்டு பண்ணியிருக்கிறார்கள். இந்த தொடரில் சீக்வென்ஸ்கள் நிறைய இப்படி குட்டிக்குட்டியான கனமற்ற திகில் காட்சிகள் உள்ளன. முதல் முறை பார்க்க செமையாக இருக்கும்.


4) தேய்வழக்கான சங்கதிகள் அதிகம் என்றாலும் உள்ளீடாக (Shawshank Redemptionஇக் போல) ஒரு இருத்தலிய சரடு ஓடுகிறது. அது இத்தொடருக்கு ஒரு விழுமியத்தை, “ஆழத்தை” அளிக்கிறது.


5) இந்த தொடரில் நல்லவன் என யாருமே இல்லை. நாயகனிடம் அவன் தவறு செய்யும் போதும் ஒரு சின்ன தத்ததளிப்பு இருக்கிறது. அது அவனை களங்கமற்றவனாக காட்டுகிறது. இதை வைத்து ஒரு எதிர்-நாயக பாத்திரமாக ஆகாமல் அவனை நாயகனாக மாற்றி இருக்கிறார்கள் - அதற்கென்றே சில பல காட்சிகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். நூலில் நடப்பது போன்ற காரியம் இது. ஜெயித்திருக்கிறார்கள். விளையாட்டுகளில் தன் பாதுகாப்புக்காக மற்றவரைக் கொன்றே நாயகன் கடைசி வரை நீடிக்க முடியும், வெல்ல முடியும். ஆனால் அப்படி அவன் சாதிக்கும் போது நமக்கு அவனிடத்து வெறுப்பு வராதபடி காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது “புதுப்பேட்டை” உலகத்தினுள் “வேலையில்லா பட்டதாரி” தனுஷை நுழைத்தது போன்ற ஒரு திரைக்கதை இது.


6) இதில் ஒரு துப்பறிவாளர் வருகிறார். காணாமல் போன தன்னுடைய சகோதரனைத் தேடி விளையாட்டு நடக்கும் தீவுக்கு வருகிறார். அந்த பகுதி முழுக்க திராபையாக உள்ளது. Frontman எனப்படும் வில்லன் அவருடைய சகோதரன் என மொக்கையான திருப்பம் வேறு. இந்த துப்பறிவாளரை தீவுக்கு வெளியே விசாரிக்க செய்து இந்த விளையாட்டுகளை நடத்தும் கும்பலை அம்பலபடுத்த முயல்வதாக இருந்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக கதை அமைந்திருக்கும்.


7) இத்தொடரின் கிளைமேக்ஸின் திருப்பங்கள் இன்னும் மொக்கையானவை. திரைக்கதையை எழுதும் போது நூற்றுக்கு மேல் பங்கேற்பாளர்கள் கரணம் தப்பினால் மரணம் விளையாட்டுகள் நடக்கும் தீவுக்கு அனுப்பப்பட்டால் என்னவாகும் எனும் ஒற்றைக் கேள்வியை வைத்து களமிறங்கி விட்டார்கள். அதன் பிறகு விளையாட்டுக்கு வெளியே பெரிய நெருக்கடிகளை உருவாக்க இயக்குநர் Hwang Dong-hyukக்குக்கு தெரியவில்லை என நினைக்கிறேன். முக்கியமாக நாயகனின் பிரதான விழைவை, ஆன்மீக நெருக்கடியை கதையின் துவக்கத்தில் நிறுவவில்லை. அதனாலே விளையாட்டுகளில் நாயகன் பெரும் தொகையை ஜெயித்த பின் பொருத்தமான கிளைமேக்ஸை உருவாக்கவும் தெரியாமல் சொதப்பி விட்டார்.


8. இத்தொடர் ஆரம்பிக்கும் போதே நாயகனே ஜெயிக்கப் போகிறான் எனத் தெரிகிறது. அப்படியே நடக்கிறது என்பதால் பெரிய திகைப்பு காட்சிகளின் முடிவில் இல்லை. இதுவே நமது “புதுப்பேட்டையில்” என்றால் பல இடங்களில் தனுஷ் எதிலாவது மாட்டிக்கொள்ளும் போது பிழைக்கவே வாய்ப்பில்லை எனத் தோன்றும். அங்கிருந்து அவர் எதையோ ஒன்றை பறிகொடுத்து உயிரையும் கூடுதல் அதிகாரத்தையும் பெறுவதை செல்வராகவனும் பாலகுமாரனும் நன்றாக சித்தரித்திருப்பார்கள். அப்படியான கச்சிதமான சவால்-வீழ்ச்சி-மீட்சி எனும் காட்சி அமைப்புகள் இத்தொடரில் இல்லை. கொஞ்சம் முயன்றால் தமிழர்களாலும் தெலுங்கர்களாலும் கொரியர்களை விஞ்ச முடியும் என எனக்கு இத்தொடரை பார்க்கும் போது தோன்றியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...