Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

மரணமும் குடும்பம் எனும் அபத்தமும்



மரணம் பல அபத்தங்களை அம்பலப்படுத்தக் கூடியது, படிப்பினைகளை தரக் கூடியது. எனக்குத் தெரிந்த ஒரு மத்திய வயதுப் பெண். தனியாக போராடி தன் மகளை படிக்க வைத்து அவளது திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். நகைகள் வாங்கி, மகளுடன் இரவுணவு அருந்தி விட்டு தூங்கியவர் காலையில் மாரடைப்பு வந்து மரணமடைகிறார். இத்தனை வருடங்களும் தன் மகளுக்காக வாழ்ந்ததற்கான பொருள் என்ன என இதைக் கேள்விப்பட்டதும் யோசித்தேன். 


இன்னொரு பக்கம், மிக அதிகமான துயரங்களை நமக்குத் தருவதும் நெருக்கமான உறவுகளும் குடும்பமுமே. நமக்கு அதே நேரம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தருவதும் இவர்களே. எனில் இதன் பொருள் என்ன? மகிழ்ச்சியை தரும் ஒன்று எப்படி துன்பத்தையும் தர முடியும்? நெருப்பு ஒரு நொடி சுடும், மறுநொடி குளிரும் என்றிருப்பதுண்டா? 


நம் சமூகத்தில் பெரும்பாலானோரின் உலகம் குடும்பம், உறவுகள் என்பதைத் தாண்டி சுழல்வதில்லை. வேலை, குடும்பம், சிறிது பொழுதுபோக்கு என்றே முடிந்து விடுகிறது வாழ்க்கை. ஆனால் இதற்குள் இருந்தே அவர்களுடைய பெரும்பகுதி ஏமாற்றங்களும் கசப்பும் ஏற்படுகின்றன. ஆனால் நிறைய பணமும் அதிகாரமும் இல்லாத பட்சத்தில் அவர்களுடைய பங்களிப்புக்கு, அர்ப்பணிப்புக்கு, தியாகத்துக்கு நிரந்தரமான ஒரு அங்கீகாரம். பலன் கிடைக்கப் போவதில்லை. ஒரு ஸ்விக்கி டெலிவரி பாயைப் போலத் தான் நம் குடும்பம் அவர்களை நடத்துகிறது. நேரத்துக்கு பொருள் கிடைக்காவிட்டால் திட்டும், கிடைத்தால் சில நேரம் டிப்ஸ் கொடுக்கும். அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், மாமா என எந்த உறவுக்கும் அவ்வளவு தான் முக்கியத்துவம் - குடும்பத்துக்குள்ளும் காலத்திலும். பாதி கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது “நீ புடுங்கினது போதும்” என மரியாதையில்லாமல் காலமே தலையில் தட்டி அனுப்பி விடுகிறது. 

அதுவரை நம்மை நம்பியிருந்தவர்கள் சில வாரங்கள் அழுவார்கள், அடுத்து தத்தம் வேலையை பார்க்க கிளம்பி விடுவார்கள்.

ஒருவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கைப் பங்களிப்பும் ஒரு நொடியில் மறைந்து விடுகிறது. ஒரு படத்தில் நீங்கள் சிரமப்பட்டு நடித்த 20 நிமிடங்களை மொத்தமாக எடிட் செய்து இயக்குநர் தூக்கி விட்டு கிரெடிட்ஸிலும் உங்கள் பெயரை இடாதது போல. 

மனிதர்கள் எவ்வளவு சுயநலமும் குரூரமும் மிக்கவர்கள் என்பதை நான் மரணங்களின் போது அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். ஒரு உடல் நலிவுற்ற வயதான அம்மாவை பார்த்துக் கொள்ள விருப்பமில்லாமல் “குளிப்பாட்டி” கொன்று விடுகிறார்கள். ஆனால் அதன் பிறகு உண்மையை அறிந்த, அவர் உயிருடன் இருந்த போது அநியாயத்துக்கு பாசம் காட்டிய, அவரது பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ கோபம் கொள்ளாமல் அதை இயல்பாக எடுத்துக் கொண்டு கடந்து விடுகிறார்கள். இதுவே தம் சொந்த குழந்தைக்கு மருத்துவமனை தவறாக சிகிச்சை அளித்து கொன்றதாக தெரிந்தால் கூலாக எடுத்துக் கொள்வார்களா? மாடடார்கள். 


ரொம்ப சிரமப்பட்டு வளர்த்த பெற்றோர்களை வளர்ந்து வேலை கிடைத்ததும் அந்நியர்களைப் போல நடத்தும் பிள்ளைகளை நிறைய பேரை கண்டிருக்கிறேன். அதே நேரம் அம்பானிகளுக்கு, ஷாருக்கான்களுக்கு இப்பிரச்சனை ஒரு போதும் வராது. இறுதி வரை அவர்களுடைய பிள்ளைகள் மரியாதையும் அன்பும் காட்டத் தவற மாட்டார்கள். எனில் பணத்தைத் தாண்டி எந்த உணர்வுக்கும் நீடித்த மதிப்பில்லையா? எனில் எதற்காக இவ்வளவு போராட்டம்?


நான் சாருவிடம் பேசிய சில சந்தர்பங்களில் அவர் என்னிடம் மறைமுகமாக இதையே உணர்த்த முயன்றிருக்கிறார். உறவுகளின் திருப்திக்காக, மகிழ்ச்சிக்காக நேரத்தை செலவிடுவது ஒரு அபத்தம் என்று. இந்த உலகில் எது நடந்தாலும் இல்லாவிட்டாலும் மனிதன் தன்னுடைய மகிழ்ச்சிக்காக மட்டுமே நீடித்திருக்கிறான், அவன் தனக்குத் தேவையானதை நாடி அடைவதே முக்கியம், அதில் இருந்து அவனுடைய கவனத்தைத் திருப்பவே இந்த அமைப்பும், அதை ஒட்டிய செண்டிமெண்டுகளும் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன என. சாரு சொன்னதன் முழுமையான பொருள் எனக்கு மேற்சொன்ன மத்திய வயதுப் பெண்ணின் மரணத்துடன் தான் புரிந்தது. கூடவே அண்மையில் எனக்கு கிடைத்த சில அனுபவங்களும் உதவின.


இது இப்படி என்றால், ஒரு எழுத்தாளனாக என்னுடைய பங்களிப்பு இந்த நொடி நான் இறந்தாலும் அப்படியே காணாமல் போய் விடுமென நான் நம்பவில்லை. அது மட்டுமல்ல, என்னுடைய எந்த வாசகரும் எனக்கு ஒரு துளி கூட வருத்ததை, கசப்பை தந்ததில்லை. அவர்களுடைய அன்பு என்றும் மாறாததாக இருக்கிறது. நம்முடைய வளர்ப்புப் பிராணிகளும் அப்படியே இருக்கின்றன - நாம் கொடுக்கும் ஒரு நொடி அன்புக்கு பல மணிநேர பிரியத்தை அள்ளித் தருகின்றன. நாம் கண்டுகொள்ளாமல் விட்டாலும் நம்மை பழிவாங்க அவை திட்டமிடுவதில்லை. ஆனால் நம்முடைய பக்கத்து வீட்டார் கூட நம்மைப் பற்றி சரிவர புரிந்து கொள்ளாமல் வெறுக்கத் தொடங்கி விடுகிறார்கள். நாம் யாரென்று அறியாத அந்நியரிடம் கூட நன்மதிப்பைப் பெற கடுமையாகப் போராட வேண்டி உள்ளது. அப்படிப் பெறும் நன்மதிப்பை கூட ஒரு நொடியில் மறைந்து போய் விடக் கூடியதே. காரணம் இந்த அண்டை வீட்டாரும் அந்நியரும் நாமும் ஒரே வெளியை பகிர்கிறோம் என்பது. இது இவ்வுறவை ஒரு நீட்டிக்கப்பட்ட குடும்ப உறவாக்குகிறது.


 நான் மட்டுமல்ல சமூகத்துக்கு, மொழிக்கு, பண்பாட்டுக்கு பயனளிக்கும் பணியில் ஊதியம் இன்றி ஈடுபடுகிறவர்கள் என்றுமே முக்கியமானவர்களாக இருப்பார்கள். கால்டுவெல்லைப் பற்றி நாம் இன்றைக்கும் நினைக்கவில்லையா? அயோத்திதாசரை அவருடைய குடும்பத்தினரை விட அதிக அக்கறையையுடன் கருதி வாசித்து வரும் வாசகர்கள் இல்லையா? பெரியாரின், அம்பேத்கரின், தகாதகதரின் சொற்கள் இன்றும் நம்முடன் இல்லையா? வள்ளுவருக்கு, இளங்கோ அடிகளுக்கு, ஒரே ஒரு அகத்திணை, புறத்திணை பாடல் எழுதிய கவிக்கும் இது பொருந்தும். எம்.ஜி.ஆரும், ரஜினியும் கூட ஒரு காலகட்டத்துக்குப் பிறகு மறக்கப்படுவார்கள். ஆனால் அவர்களுடைய குடும்பமும் உறவினர்களும் அவர்களை நினைவில் வைத்திருந்ததை விட அதிக காலம், அதிக பாசத்துடன் அவர்களுடைய ரசிகர்கள் அவர்களை நினைவிற் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்த காலம் முழுக்க தம் குடும்பத்தையும், உறவுகளையுமே ரசிகர்களை விட அதிக முக்கியமாக நினைத்து கூடுதல் நேரமும் உழைப்பு அவர்களுக்காக செலவிட்டிருப்பார்கள். 


ஆனால் சமூகம் தன்னுடைய சுயநலத்துக்காக நம்மை அபத்தமான ஒன்றுக்காகவே மொத்த வாழ்வையும் அர்ப்பணிக்க வைக்கிறது என்பதே அவலம். நமக்கும் வேறு வழி இருப்பதில்லை. குடும்பத்துக்கு வெளியே நின்று சிந்திக்கும் வக்கற்றவர்களாகவே இந்த சமூகம் நம்மை மாற்றி வைத்திருக்கிறது. ஒருவேளை துறவில் இதற்கு ஒரு தீர்வு இருந்திருக்கலாம். ஆனால் இந்திய சமூகத்தில் பகவத் கீதை தோன்றிய, பக்தி இயக்கம் செழித்த காலகட்டங்களுடன் துறவுக்கான முக்கியத்துவம் ஒழித்துக் கட்டப்பட்ட, குடும்பஸ்தனே உன்னதமான அடையாளம் என்பது நிறுவப்பட்டு விட்டது. அதே நேரம் துறவு என்பதற்கு முன்பிருந்த பொருள் இன்றில்லை.


 துறவறத்தின் நடைமுறை, நோக்கம் முழுக்க மாறி விட்டது. இன்று துறவறம் ஆசிரம அமைப்பினுள் மட்டுமே சாத்தியம். அதற்குள் குடும்பத்தை விட கராறான எந்திரத்தன்மை வந்து விட்டது. இன்னொரு பக்கம் கறுப்புப்பணமும், கார்ப்பரேட் மனப்பான்மையும் துறவு வாழ்க்கையை குடும்ப வாழ்க்கைக்கு இணையானதாக மாற்றி விட்டன. இதைப் பற்றி ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் முற்றிலும் வேறொரு பார்வையை அளித்தார். அவருடைய கருத்துப்படி துறவிகளாக செல்பவர்களுக்கு உள்ள பெரிய பிரச்சனை எந்திரத்தனமான அன்றாட உலகின் அலுப்பும், அங்கு அவர்கள் உணரும் மிகப்பெரிய தனிமையும். இளமையில் ஓரளவுக்கு குடும்பத்துடன் அவர்களுக்கு ஒரு தொடர்பு இருக்கும். தனிமையை எதிர்கொள்வதற்கான உடல் திராணியும் இருக்கும். ஆனால் வயதாக ஆக அவர்கள் தம் குடும்பத்துடன் இருந்து துண்டிக்கப்பட்டு விடுவார்கள். அவர்களால் அப்போது தனிமையின் உக்கிரத்தை தாங்கவொண்ணாமல் போகும். “நம்மை விட அதிகத் தனியாக அவர்கள் இருக்கிறார்கள். அதை நினைவு கொள்வதைத் தவிர்க்கவே இவ்வளவு ஆவேசமாக மதச்சடங்குகளில், அதிகார போட்டியில் ஈடுபடுகிறார்கள்” என்றார்.


நம் சமூகம் ஒட்டுமொத்தமாக குடும்பத்துக்கு மாற்றான ஒரு வாழ்க்கை முறையை சிந்தித்து கண்டுபிடிக்காத வரையில் நாம் இந்த அபத்தத்துக்குள் மாடிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...