“இந்து சமூகம் இன்று நிலைக்கிறது என்றால் அது சாதிய அமைப்பின் மீது நிறுவப்பட்டுள்ளதாலே என நான் நம்புகிறேன்… சாதி அமைப்பை ஒழித்து, அந்த இடத்தில் மேற்கத்திய ஐரோப்பிய சமூக அமைப்பு ஒன்று வருவதென்றால் இந்துக்கள் சாதி அமைப்பின் ஆன்மாக விளங்குகிற பிறப்பின் அடிப்படையிலான தொழில்கள் எனும் கொள்கையை துறந்திட வேண்டும். பிறப்பின் அடிப்படையிலான கொள்கை ஒரு சாஸ்வத கொள்கையாகும். அதை மாற்றுவதானது சீர்கேடுகளை விளைவிக்கும். ஒரு பிராமணனை என்னால் பிராமணன் என நிரந்தரமாக அழைக்க முடியாவிடில் அவனால் எனக்கு என்ன பயன்? தினமும் ஒரு பிராமணன் சூத்தியரனாகவும், ஒரு சூத்திரன் பிராமணனாகவும் மாறுவதென்றால் அது பெருங்குழப்பத்துக்கு இட்டுச் செல்லும். … இந்த சாதி அமைப்பை அழிக்க நினைப்பவர்களின் எதிரியே நான்” - மகாத்மா காந்தி, 1921
“முசோலினியின் பல சீர்திருத்தங்கள் என்னைக் கவர்ந்துள்ளன. விவசாய குடிகளுக்கு அவர் நிறைய செய்துள்ளார். … அவருடைய நிர்தாட்சண்ணியமான குணத்துக்கு பின்னால் மக்கள் தொண்டே நோக்கமாக உள்ளது. … பெரும்பாலான இத்தியாலிய மக்கள் முசோலினியின் சர்வாதிகார ஆட்சிமுறையை விரும்புகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.”
- பாசிஸத்தின் தந்தையான முசோலினி குறித்து மகாத்மா காந்தி, 20.12.1931
“காந்தியை நம்ப முடியாது. அவர் ஆங்கிலத்தில் நடத்தும் ஏடுகளில் சர்வதேச நிலையை கருத்திற் கொண்டு தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என எழுதுவார். ஆனால் குஜராத்தியில் அவர் நடத்துகிற நவஜீவன் பத்திரிகையில் அவருடைய எழுத்துக்களை ஆங்கில வாசகர்கள் படித்ததில்லை. அதில் அவர் மிக மோசமான சனாதன ஆதரவு கருத்துக்களை எழுதுவார். காந்தி தன் இருக்கிற இடத்தைப் பொறுத்து, அனுகூலங்களுக்காக தன் கருத்துக்களை மாற்றி மாற்றி பேசக் கூடியவர். அதனாலே நான் அவரை ஒரு டபுள் ஏஜெண்ட் என்கிறேன்.” - அம்பேத்கர் தன் ஒலிவடிவ பேட்டி ஒன்றில்.
“இவ்விதக் கிளர்ச்சிகளையெல்லாம் காங்கிரசின் பேரால் காந்தியவர்கள் சென்ற இரண்டு வருஷங்களுக்கு முன் ஆரம்பித்த காலத்திலேயே இதை (இந்த சட்ட மறுப்பு உப்பு சத்தியாக்கிரகம்) எதற்காக ஆரம்பிக்கின்றேன் தெரியுமா? என்று சர்க்காருக்கும் மற்றும் முதலாளிமாருக்கும், உயர்ந்த ஜாதியாராகிய சோம்பேறிக் கூட்டங்களுக்கும் தெரியும்படியாக, ஒரு விளம்பரம் வெளிப்படுத்தி இருக்கிறார். அவ்விளம்பரம் என்ன என்று ஞாபகப் படுத்திப் பார்த்தால் இதன் இரகசியம் இன்னதென்று விளங்கிவிடும்.அதென்னவென்றால்,
“நான் இன்று இந்தக்கிளர்ச்சி (உப்பு சத்தியாக்கிரகம்) ஆரம்பிக்கா விட்டால் இந்தியாவில் பொது உடமைக் கிளர்ச்சி ஏற்பட்டுவிடும். ஆகையால் (அதை அடக்கவும் மக்கள் கவனத்தை அதில் செல்லவிடாதபடி வேறு பக்கத்தில் திருப்பவும்) இதை (உப்பு சத்தியாக்கிரகத்தை) ஆரம்பிக்கின்றேன்” என்று சொல்லியிருக்கிறார்.
அன்றியும் இவ்வித கிளர்ச்சிகளால் சர்க்காருக்கு ஏதாவது கெடுதி ஏற்பட்டதா அல்லது அவர்களின் நிலைமைக்கு ஏதாவது குறைவு ஏற்பட்டதா என்று பார்த்தால் யாதொரு குறைவும் ஏற்பட்டுவிடவில்லை. அதுபோலவே தோழர் காந்திக்கும் ஏதாவது கெடுதியோ குறைவோ ஏற்பட்டதா என்று பார்த்தால் அதுவும் ஒரு சிறிதுமில்லை. அதற்கு பதிலாக காந்திக்கு உலகப் பிரசித்தமான பெரிய பேர் ஏற்பட்டு விட்டது. உலகத்திலுள்ள பாதிரிகளும் செல்வவான்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் புகழ்ந்த வண்ணமாகவே இருக்கிறார்கள். காந்தியவர்கள் சிறைப்பட்டதிலாவது அவருக்கு ஏதேனும் கெடுதி ஏற்பட்டதா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. சிறையில் அவருக்கு ராஜபோகத்தில் குறைவில்லை. ….
ஒரு அறிவாளி நடுநிலைமையாளி இந்த சுமார் 2 வருஷ காலமாக இந்தியாவில் நடைபெற்ற காந்தி திருவிளையாடல்களை நன்றாய் கூர்ந்து கவனித்து இருப்பானே யானால் தோழர் காந்தி பிரிட்டிஷ் கவர்ன்மெண்டு என்று சொல்லப்படும் முதலாளி ஆதிக்கத்திற்கு ஒரு ஒற்றராக கவர்ன்மெண்டாருடைய ஒரு இரகசிய அனுகூலியாக இருந்து வந்தவர் என்றும் ஏழை மக்கள் சரீரத்தால் பாடுபட்டு உழைக்கும் மக்களுக்கு துரோகியாய் இருந்து வந்திருக்கிறார் என்றும் சொல்ல வேண்டுமே ஒழிய வேறு ஏதாவது சொல்லமுடியுமா என்று கேட்கின்றோம். … காந்தியாரின் சுயராஜ்ஜியக் கொள்கைகளில் முக்கியமானது வருணாசிரம தர்மமும், ஜாதிமுறையும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதாகும். ‘காந்தியின் வருணாச்சிரம கொள்கைக்கு வேறு அருத்தம்’ என்று சிலர் சொல்லுவதானாலும் அந்த வேறு அர்த்தம் இன்னது என்பதை காந்தியாரே பல தடவை சொல்லியிருக்கிறார். அதாவது பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என நான்கு வருணம் பிறவியில் உண்டு என்றும் அவர்கள் ஒவ்வொருவரும் முறையே அறிவு பலம் வியாபாரம் சரரத்தினால் உழைப்பு ஆகியவைகளிலேயே ஈடுபடவேண்டியவர்கள் என்றும் சொல்லுகிறார். ஜாதி முறைக்கும் காந்தியார் கூறும் தத்துவார்த்தமானது தொழில்களுக்காக ஜாதிமுறை ஏற்பட்டதென்றும் அந்த ஜாதி முறையும் பிறவியிலேயே ஏற்பட்டதென்றும் அந்தந்த ஜாதியானுக்கு ஒரு பிறவித் தொழில் உண்டென்றும் அந்தந்தத் தொழிலையே-அவனவன் ஜாதிக்கு ஏற்ற தொழிலையே அவனவன் செய்து தீர வேண்டும் என்றும் சொல்லுகின்றார்.
இவ்வளவோடு மாத்திரமல்லாமல் “இந்தமாதிரியான வருணாச்சிரம மர்ம முறையையும், ஜாதி முறையையும் நிலைநிறுத்தவே சுயராஜ்ஜியத்திற்கு பாடுபடுகிறேன்” என்றும் கூறுகிறார். இந்த முறையில் காந்தியாரால் யாருக்கு லாபம் யாருக்கு சுகம் என்பதையும் யாருக்கு நஷ்டம், யாருக்கு கஷ்டம் என்பதையும் வாசகர்களையே சிந்தித்துப் பார்த்து முடிவு செய்துகொள்ளும்படி விட்டுவிடுகின்றோம்.” - தந்தை பெரியார், குடி அரசு – தலையங்கம், ரகசியம் வெளிப்பட்டதா? 19.02.1933
“வர்ணாசிரம தர்மம் வேண்டும் ஆனால் எனது வர்ணாசிரமம் வேறு” என்பார்,
“ராம ராஜ்யத்துக்காக நான் பாடுபடுகிறேன் ஆனால் எனது ராமன் வேறு” என்பார்
“ஜாதி பாகுபாடுகள் இருக்க வேண்டும். ஆனால் ஜாதி என்பதற்கு எனது கருத்து வேறு” என்பார்,
“ராஜாக்கள்,ஜமீன்தார்கள் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஏழைகளுக்காக இருக்கவேண்டும்” என்பார்,
“பிரிட்டிஷாருக்கு இந்திய அரசியலில் சில பாதுகாப்புகள் இருக்க வேண்டும். ஆனால் அது இந்தியாவின் நன்மைக்காக இருக்க வேண்டும்” என்பார்,
“ஏழைகள், தொழிலாளர்கள் ஷேமமாக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பெட்டியில் பணம் இருக்க கூடாது” என்பார்,
“தீண்டாமை ஒழிய வேண்டும் .ஆனால் தீண்டப்படாதவர்கள் சூத்திரர்களுக்கு சமானமாய் கருதப்படவேண்டும்” என்பார்,
“தீண்டத்தகாதவர்களுக்கு கோவிலுக்குள் சமஉரிமை இருக்க வேண்டும். ஆனால் கோவிலுக்குள் சூத்திரர்கள் இருக்கும் இடத்தில் தான் அவர்கள் இருக்க வேண்டும்” என்பார்.
இந்தப்படி எந்த விசயமானாலும் “ஆனால்” போட்டு திருப்பிவிடுவது அவரது சாமர்த்தியம் என்பதை தோழர் காந்தியாரை ஒரு மனிதர் என்று கருதியிருக்கும் யாவரும் அறிவார்கள்.”
– தந்தை பெரியார், ஜவஹர்லாலும் பொதுஉடைமையும், புரட்சி – தலையங்கம் – 17.12.1933
“ஜமீன்தாரர்களின் கோஷ்டியொன்று, தங்களுடைய நன்மைகளைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்காக திரு. காந்தி அவர்களை, இம்மாதம் 10-ந் தேதி பம்பாயில் கண்டு கேட்ட பொழுது, “ஜமீன்தாரர்க ளுடைய சொத்துரிமைகளுக்குத் தீங்கிழைக்க நான் கனவிலும் கருத வில்லை”யென்று சொல்லி யிருக்கிறார்.
இதனாலேயேதான் வருணாச்சிரமதருமம், பிறவியிலானாலும் சரி தொழில் முறைமையிலானாலும் சரி, அடியோடு ஒழிக்கப் பட்டாலொழிய சமதர்மமேற்பட முடியாதென உரைக்கின்றோம். ஆனால் திரு. காந்தியவர் களோ இந்த “வருணாச்சிரமமென்பதைத் தொழில் முறையில்தான் நான் சொல்லுகிறேன்” என்பதாகச் சொல்லிவிட்டு, உடனேயே அதற்கடுத்த வாக்கியத்தில் ஆனால் “தொழில் முறையென்பது பரம்பரைக்கிரமமாக இருக்க வேண்டு”மென்று சொல்லி வருகின்றார். இதற்கும் காரணம் சொல்லும் பொழுது இந்தப்படி அதாவது “தொழிலானது, பரம்பரைத்தொழில் முறையைக் கொண்டதாயிருந்தால்தான் உலகம் கிரமமாய் நடைபெற முடியும், தொழிலுமொழுங்காய் நடைபெறு”மென்று சொல்லி வருகிறார்.
ஆகவே, எந்தக் காரணத்தைக் கொண்டானாலும் சரி, எந்த முறை மையிலிருப்பதானாலும் சரி, வருணாச்சிரம தருமமென்பதை அடியோடு ஒழித்தாக வேண்டியதுதான் மக்களின் முக்கியக் கடமையாகும். வருணாச் சிரமமொழிந்த இடந்தான் விடுதலை – சமதர்ம நிலையமாகும்.” - தந்தை பெரியார், குடி அரசு – தலையங்கம் – 21.06.1931
காந்தியை விமர்சிப்பது இந்துத்துவாவை வலுப்பெற வைக்காதா என ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். நான் அவரிடம் சொன்னேன், “இந்திய சுதந்திரத்துக்கு முன்பான வரலாற்றை நாம் படித்தால் காந்தியம் vs இந்துத்துவா எனும் இருமை பொய்யானது எனப் புரிந்து போகும். குறைந்த பட்சம் அம்பேத்கர் காந்தியை அம்பலப்படுத்தி பேசியுள்ளதை கவனித்தாலே போதும். அவர் தெளிவாக காந்தியை ஒரு double agent என்கிறார். அதன் பொருள் அவர் எப்போதும் ஆளும் வர்க்கத்துக்கும் சனாதனவாதிகளுக்கும் சாதகமாக செயல்பட்டவர், அதே சமயம் அது வெளிப்படையாக தெரியாத வண்ணம் மாற்றி மாற்றி முன்னுக்குப் பின் முரணாக பேசியவர். ஒருநாள் இந்து-முஸ்லீம் ஒற்றுமை அவசியம், கிறித்துவத்தை மதிக்கிறேன் என்பார், ஆனால் அடுத்த நாள் இந்தியர்கள் இந்துக்களாக மட்டுமே இருந்தாக வேண்டும், இஸ்லாமியரும் கிறித்துவர்களும் எப்போதும் மதமாற்ற நோக்கத்துடனே திரிகிறவர்கள் என சிறுபான்மையினரை இந்து விரோதிகளாக சித்தரிப்பார். இவ்விதம் செயல்பட்ட காந்தியின் தாக்கத்தினாலே தொடர்ந்து காங்கிரஸினுள் மிதவாத வலதுசாரிகள் வலுவாக நிறைந்திருந்தார்கள். குறிப்பாக மொழிவழி தேசியங்கள் இந்தியாவில் தோன்றாமல் போனதில், இந்தி நமது தேசிய அரசியல் மொழியாக முன்வைகக்ப்பட்டதில், தலித்துகளுக்கு தனி வாக்குகள் அமையாமல் போனதில் காந்தியின் பங்கு அளப்பரியது. எந்த பக்கம் நின்று ஆடுகிறார் என்பதே தெரியாமல் சரியான நேரத்தில் வலதுசாரிகளின் பக்கம் போய் கோல் அடிக்கிற புத்திசாலி அவர்.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை சர்ச்சையை எடுத்துக் கொள்வோம். ஆரம்பத்தில் இஸ்லாமியர் பிரிந்து போய் தனி தேசத்தை அமைக்கலாகாது என்றே காந்தி விரும்பினார். ஆனால் பிரித்தானிய அரசு பிரிவினையை விரும்புகிறது, அது ஜின்னாவின் பின் நிற்கிறது எனப் புரிய வந்ததும், அதனாலே வங்காளத்திலும் பஞ்சாபிலும் இரு பக்கமும் உள்ள வலதுசாரி குண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டு மக்களைக் கொல்ல அனுமதித்தது எனப் புரிந்ததும் அவர் பிரிவினை கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். எந்த இடத்திலும் தன் பிரித்தானிய எஜமானர்களின் இந்த சதியை அவர் அம்பலப்படுத்தவோ விமர்சிக்கவோ இல்லை. ஆரம்பத்திலேயே பாகிஸ்தானின் தோற்றத்தை காங்கிரஸார் அனுமதித்திருந்தால் பிரிவினை இடப்பெயர்வின் போதான அவசர நிர்வாகத்தின் விளைவாகவும் ஏற்கனவே ஏற்பட்டிருந்த வெறுப்பினாலும் ஏற்பட்ட பல லட்சம் மக்களின் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம்; இடப்பெயர்வை சுமூகமாக நிகழ்த்த ஒரு பத்தாண்டுக்கு மேல் அவகாசம் இருந்திருக்கும். இடப்பெயர்வை நியாயமாக நடத்திய பின்னரே இந்தியாவுக்கு சுதந்திரம் என காந்தி கோரியிருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை. குறைந்தது பத்தாண்டுகளுக்கு மேலாக இழுபறியிலே காலம் வீணானது. அதனால் நிலைமை கைவிட்டுப் போனது. அதுவே பின்னர் இந்தியா-பாகிஸ்தான் வெறுப்பரசியலுக்கு வழிவகுத்து, காஷ்மீர் ஒரு தீராத காயமாக நீடிக்க காரணமாகியது.
காந்தியின் ஒரு பிரச்சனை அவர் என்றுமே மக்களுக்கான தலைவராக வேடம் போட்டபடியே ஒரு வழக்கறிஞராக ஆளும் வர்க்க நலனுக்காக சமரசம் பேசிக் கொண்டிருந்தார், அதன் விளைவில் தன் தரப்புக்கு (மேல்சாதி இந்துக்கள்) லாபம் வரும்படி பார்த்துக் கொண்டார் என்பது.
காந்தியை நாம் centre rightist என்று கூறலாம். அதாவது மைய வலதுசாரி. இதை நீங்கள் பெரியாரின் தீவிர இடதுசாரி, அரசின்மைவாத அரசியலுடன் ஒப்பிட்டு புரிந்து கொள்ளலாம். பெரியாரைப் போன்ற ஒருவர் அன்று காந்தியின் இடத்தில் காங்கிரசில் அதிகாரத்துடன் இருந்திருந்தால் வரலாறு முழுக்க வேறாக இருந்திருக்கும்.
காந்தியத்தின் பிரச்சனை அது எந்நேரமும் வலதுசாரிகளுடன் கைகோர்க்க தயாராக இருக்கும் அரசியலைக் கொண்டது என்பது. உலகம் முழுக்க centre right அரசியல் என்றால் அப்படித்தான். தமிழகத்தில் அதிமுக அப்படி ஒரு மைய வலதுசாரி கட்சி. எம்.ஜி.ஆர் ஆரம்பத்தில் ஒரு காந்தியவாதி என்பதையும், திமுகவை உடைத்து அக்கட்சியை ஆரம்பிக்க அன்றைய காங்கிரஸ் ஒன்றிய அரசு எம்.ஜி.ஆருக்கு நிதியளித்தது எனும் குற்றச்சாட்டையும் கவனியுங்கள். எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து வெளியேறியதும் தன்னை வெளிப்படையான பக்திமானாக, வலதுசாரியாக காட்டுவதில் முனைப்பு காட்டினார். அவர் தன் கட்சியை இந்திய தேசிய கட்சியாக அறிவித்தார். அவருக்குப் பிறகு வந்த ஜெயலலிதாவும் தீவிர வலதுசாரி தான். புலிகள் மீதும், தமிழ் தேசியம் மீதும் அவருக்கு இருந்த ஒவ்வமையையும், அவர் 2003இல் பசுவதை தடை சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததை ஒட்டி, தமிழகத்தில் நாட்டார் வழிபாட்டுத் தலங்களில் ஆடு கோழிகளை பலியிடுவதை தடை செய்ததை கொண்டு வந்ததையும் வைத்தே இதை சொல்கிறேன். அவரது மரணத்துக்குப் பிறகு பாஜகவின் ஏவலாளாக எடப்பாடியாரும் ஒபிஎஸ்ஸும் மாறிப் போனதை கவனியுங்கள் - நான் அவர்கள் பணம் சம்பாதிக்க அடிபணிந்ததை சொல்லவில்லை, இன்றும் அதிமுக பேச்சாளர்கள் கருத்தளவில் இந்திய தேசியம், இந்துத்துவாவுடன் இணக்கமாகவே இருக்கிறார்கள். ஏனென்றால் அதிமுகவுக்கு அடிப்படையில் கருத்தியல் என ஒன்று இல்லை. எம்.ஜி.ஆரில் இருந்து ஜெயலலிதா வரை எப்படி முடிவெடுத்தார்கள் என்றாலும் மதம்-சாதி, தேசியமே அவர்களுடைய இரு கண்களாக திகழ்கின்றன. இந்த பின்னணியில் தான் ஏன் அன்றைய காங்கிரஸும் இன்றைய பாஜகவும் அதிமுகவுடன் இணக்கமாகவும் திமுகவுடன் கசப்புடனும் நடந்து கொண்டிருக்கிறது என யோசியுங்கள். (உடனே பாஜகவுடன் திமுக முன்பு கூட்டணி வைக்கவில்லையா எனக் கேட்காதீர்கள். தமிழக அரசியல் வரலாற்றை ஒட்டுமொத்தமாக பாருங்கள். கொள்கைகளை கவனியுங்கள்.) திமுக காங்கிரஸின் கூட்டணியில் இருந்த போது கூட எப்படியாவது அக்கட்சியை அழிக்க வேண்டும் என திட்டமிட்டே வழக்குகளில் சிக்க வைத்தது. பாஜக இன்னும் அதிமுக மீது அப்படி வழக்குகளை போடவில்லை என்பதை கவனியுங்கள். ஜெயலலிதா திமுகவின் வாக்குகளை சிதறடிப்பதற்காக மூன்றாவது அணியாக நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகளை உருவாக்கினார். அதன் பிறகு பாஜக கமலின் மக்கள் நீதி மையத்தை உருவாக்கியது. இந்த இரண்டு கட்சிகளும் மிதவாத வலதுசாரிகளே என்பதை கவனியுங்கள். ஏன் ஜெயாவோ இன்றைய பாஜகவோ இடதுசாரி, திராவிட சார்பு கொண்ட புதுக் கட்சிகளை மூன்றாவது அணியாக உருவாக்க முனையவில்லை?
இது கூட்டணி, நட்புறவு சம்மந்தப்பட்ட விசயம் மட்டுமல்ல - மைய வலதுசாரிக் கட்சியான காங்கிரஸால் சித்தாந்த ரீதியாக மொழிவழி தேசியங்களுடனோ பகுத்தறிவு சிந்தனையுடனே ஒரு போதும் இணங்க முடியாது. ஏனென்றால் மையவாத வலதுசாரித்தனம் குல்லா அணிந்த பொக்கை வாயால் புன்னகைக்கும் மென்மையான சாவர்க்கர் மட்டுமே.
இந்தி திணிப்பு, காஷ்மீரியர்களை ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஏமாற்றி, பண்டிட்டுகளை அப்பள்ளத்தாக்கில் இருந்து வெளியேற்றி, அங்கே இந்து-முஸ்லீம் வெறுப்பரசியலுக்கு இடமளித்தது, பாகிஸ்தானை எப்போதும் விரோதியாக பாவிக்கிற போக்கு, இந்தி திணிப்பு, சமஸ்கிருத வளர்ச்சிக்கு பல்லாயிரம் கோடிகளை தொடர்ந்து செலவிட்டது, ஈழத்தில் புலிகளை ஒழித்துக் கட்டியது, மொழிவழி தேசியர்களான சீக்கியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் தொடுப்பது, கட்சித்தலைமையை பெரும்பாலும் பிராமணர்களுக்கே அளிப்பது, நீட், ஆதார், நவதாராளவாத ஆதரவு என எந்த விசயத்தை எடுத்துக் கொண்டாலும் காங்கிரஸுக்கும் பாஜகவுக்குமான வித்தியாசம் அந்த கன்னத்தில் வைத்த மரு மட்டுமே. காங்கிரஸின் எந்தவொரு கொள்கை நிலைப்பாட்டையும் எடுத்துக்கொண்டால் அதற்கான வேரை காந்தியத்தில் காண முடியும் என்பது மிகையல்ல.
காந்தி நம் கமலைப் போன்றவர்: “நீங்க இந்தி கத்துக்கணுமுன்னு சொல்ல மாட்டேன், ஆனா கத்துகிட்டா நல்லா இருக்குமுங்கிறேன்” என்பார். “நீங்க இந்து மதவாதியாக இருக்க வேண்டியதில்லை, ஆனால் நீங்க கிறித்துவரோ இஸ்லாமியரோ ராமனையும் கிருஷ்ணரையும் கும்பிட்டால் நன்றாக இருக்கும் என்கிறேன், நீங்க உங்களுடைய தமிழ் மொழி மீது பற்றுடன் இருக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் இந்தியைக் கற்று இந்தியா மீது தேசப்பற்றுடன் இருக்கலாமே எனக் கேட்கிறேன்” என்பார். காந்தி நேரடியாக யுத்தம் தொடுக்க மாட்டார், ஆனால் தன் எதிரிகள் மீது அவர்களுடைய எதிரிகள் போர் தொடுத்தால் கண்டுங் காணாதது போல இருப்பார். ஏப்ரல் 8, 1929 அன்று பகத் சிங்கும் தோழர்களும் பாராளுமன்றத்தின் மீது குண்டு வீசி சரணடைந்து பின்னர் கைதாகி தூக்குதண்டனை விதிக்கப்பட்ட போது காந்தி அவர்களைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சொல்லப் போனால் “பகத் சிங்கும் அவரது தோழர்களும் பெரும் தேசபக்தர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவர்களுக்கு மரண தண்டனை அளிக்க ஆங்கிலேய அரசுக்கு எல்லாம் உரிமையும் உண்டு” என்று எழுதியவர் காந்தி. ஆனால் இதே மனிதர் தான் மரண தண்டனைக்கு எதிராக முன்பும் பின்பும் பேசியவர். இப்போது கொலைத்தண்டனை விதிக்க உங்களுக்கு உரிமை உண்டு என்கிறார். அவர் பகத் சிங்கை விடுவிக்க கோரி உண்ணாவிரதம் இருந்து தன் தொண்டர்களை திரட்டி போராடி இருந்தால் அதைத் தடுத்திருக்க முடியும். ஆனால் அவர் செய்யவில்லை. அதற்கு ஒரு காரணமிருந்தது.
பகத் சிங் சிறைப்பட்ட பின் அவருடைய புகைப்படங்கள் வட இந்திய மாநிலங்களில் காந்தியின் படங்களை விட அதிக எண்ணிக்கையில் விற்றன, அந்த காலத்தில் காந்தியை விட புகழ்பெற்ற தலைவராக பகத் சிங்க் மக்களால பார்க்கப்பட்டார் என அன்றைய பிரித்தானிய அரசின் புலனாய்வுக் துறையின் இயக்குநரான சர் ஹொரேஸ் வில்லியம்சன் சொல்லுகிறார். ஏன் காந்தி பக்த் சிங்கின் மரண தண்டனை ரத்துக்கு பெரிய முயற்சிகள் எடுக்கவில்லை என இப்போது புரிகிறதா? குழந்தை போல முகத்தை வைத்துக்கொண்டு ஏகப்பட்ட நாகராஜ சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ வேலைகளை செய்த வில்லாதி வில்லன் அவர்.
மாற்று மதங்கள், மொழிகள், மொழி வழி தேசியம், முற்போக்குவாதம், நவீன முன்னேற்றம் குறித்த அவருடைய கருத்துக்களை இப்போதும் தேடிப் படியுங்கள். வலதுசாரிகளுக்கும் அவருக்கும் வித்தியாசம் முன்னவர் கையில் கத்தியை வைத்திருப்பார்கள், பின்னவர் கீதையை வைத்திருப்பார் என்பது தான். மற்றபடி இருவருடைய சித்தாந்தங்களும் அனேகமாய் ஒன்றே. பாரதப் போரில் கிருஷ்ணர் கீதையை போதித்தபடி இருக்க அர்ஜுனன் யுத்தம் தொடுத்தான். அந்த கிருஷ்ணர் காந்தியம் என்றால் அர்ஜுனன் இந்துத்துவா. இந்துத்துவர்கள் அவரைக் கொன்றதாலே நாம் அவரை இந்துத்துவ விரோதி எனக் கருதத் தலைப்படுகிறோம். அவரை இந்துத்துவர்கள் கொன்றதற்கு காரணம் அவர் இந்துத்துவாவை எதிர்த்தார் என்பதல்ல. இந்து மகாசபையை தோற்றுவித்த மதன் மோகன் மால்வியாவை தீவிரமாக ஆதரித்து பேசியவர் காந்தி. பிரதானமான காரணம் காந்தி ஒரு double agent என்பதே. ரெண்டு பக்கமும் மாற்றி மாற்றி பேசினால் யாரோ ஒருவர் கையால் அடிவாங்குவதை தவிர்க்க முடியாது.
காந்தியை விமர்சிப்பது இந்துத்துவத்துக்கு ஆதரவளிப்பதாகாது; மாறாக காந்தியம் தழைப்பதே இந்துத்துவா இங்கு வளர நிலத்தை ஈரமாக வைத்திருக்கிறது. இது உலகம் முழுக்க உள்ள எல்லா மைய வலதுசாரித்தன அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். 2014இல் பாஜக ஆட்சிக்கு வரக் காரணமாக இருந்த ஒரு முக்கிய சக்தி அன்னா ஹசாரே எனும் காந்தியவாதியே. தமிழகத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களாக யாரெல்லாம் இருந்தார்கள் எனப் பாருங்கள், நான் சொல்லுவது விளங்கும். இன்றும் பாருங்கள், பாஜகவின் இந்துத்துவாவுக்கு எதிராக தீவிரமாக பேசுகிறவர்கள் தமிழர்களே, கட்சியென்றால் திமுகவுமே. மேற்கு வங்கத்தில் ஒரு மொழிவழி தேசியம் வலுவாக உள்ளதால் அந்த மாநில முதல்வரான மமதா பேனர்ஜியும் இந்த பட்டியலில் வருகிறார் தான். ஆனால் பி.டி.ஆர் பழனிவேல்ராஜனுக்கும் பிற திமுக, தமிழக மார்க்ஸிய, முற்போக்கு தலைவர்களுக்கும் இணையாக மமதாவாலும் பாஜகவை விமர்சிக்க இயல்வதில்லை. கடந்த ஏழு ஆண்டுகளில் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் அளவுக்கு கடுமையாக பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தவர்கள் காங்கிரஸில் யாராவது உண்டா? ஓரளவுக்கு பா.சிதம்பரத்தை சொல்லலாம். ஏனென்றால் நாம் அன்றே காந்தியை கடுமையாக எதிர்த்து நின்ற பெரியாரின் மரபில் வருகிறோம். ஆனால் வடக்கே அப்படி ஒரு பாரம்பரியம் இல்லாததால், அவர்கள் காந்தியத்தின் சொக்குப்பொடியில் மயங்கிப் போனதால் கணிசமான காங்கிரஸ் தலைவர்கள் இன்றும் பாஜகவின் அரசியலுடன் மனதளவில் இணங்குபவர்களாக இருக்கிறார்கள். அந்த கவலையினாலே சோனியா காந்தி குடும்பத்துக்கு வெளியே ஒரு தலைமையை உண்டுபண்ண தயங்குவதாக சொல்லுகிறார்கள். காந்தியின் வளர்ப்பு அப்படி, அவர்களுடைய பாரம்பரியம் அப்படி. கொஞ்சம் கையை பிடித்து இழுத்தால் நடு இரவென்றாலும் ஆர்.எஸ்.எஸ், பாஜக பக்கம் போய் விடுவார்கள். அதிகாரம் காங்கிரஸிடம் திரும்பியதும் பாதி அவிழ்ந்த வேட்டியுடன் குல்லாவை மாட்டிக்கொண்டு திரும்ப வந்து விடுவார்கள். படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் என சொல்லுவார்களே அதை காங்கிரஸ் விசயத்தில் படிப்பது காந்தியம், இடிப்பது மசூதியை என்று சொல்லலாம்.
வலதுசாரி மதவாதத்தை ஒழிப்பதற்கு ஒரு போதும் காந்தியம் நமக்கு உதவாது. மாறாக அது நம்மை குழப்பி அதே வலதுசாரித்தன சேற்றில் தள்ளவே செய்யும். 2014இல் மிக எளிதாக, வேகமாக நாம் காங்கிரஸிடம் இருந்து மோடியிடம் ஆட்சியை ஒப்புக்கொடுத்தது இதற்கு ஒரு உதாரணம். காங்கிரஸ் good cop என்றால் பாஜக bad cop. ஒட்டுமொத்தத்தில் இருதரப்புமே பார்ப்பனீய போலீஸ் தான். வலதுசாரித்தனத்தை நம் ரத்த ஓட்டத்தில் கலக்கிற அரசியல் தான். இரண்டுமே பார்ப்பன மைய, சமிஸ்கிருத கலாச்சார இந்தியாவை கட்டமைக்கவே முயல்கின்றன. அவர்கள் கையாள்கிற உத்திகளில் தான் வித்தியாசமே ஒழிய, இலக்கில் அல்ல. ஆகையால் இந்துத்துவாவை எதிர்ப்பவர்கள் காந்தியத்தையும் எதிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக ஒன்றியத்தில் மொழிவழி தேசியங்களின் பகுத்தறிவுக் கூட்டணி ஒன்று உருவாகி ஆட்சி அமைப்பதைப் பற்றி கனவு காண வேண்டும். தீவிர மதவாதத்தை எதிர்க்க காந்தியம் நமக்கு இப்போது ஒரு அவசர குறுக்குவழியாக இருக்கலாம். ஆனால் அது திருடனுக்கு பயந்து முன்னங்கதவை இறுக்க மூடிவிட்டு பின்னங்கதவை மட்டும் திறந்து வைத்து தூங்குவது போல ஆகும் என்று வரலாறு திரும்பத் திரும்ப நிரூபித்துள்ளது.

Comments