முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரே புனிதப்பசு (இல்லை இரண்டு புனிதப்பசுக்கள்)



இதைக் கேட்க வினோதமாக இருக்கும் - தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய புனிதப்பசு காந்தி தான். 

பெரியாரின் குடியரசு பத்திரிகை கட்டுரைகளின் தொகுப்பை படிக்கையில் அவர் எத்தனை இடங்களில் காந்தியை விமர்சித்திருக்கிறார் என ஒரு பட்டியல் எடுத்தேன். 13 கட்டுரைகளில் பெரியார் காந்தியை கடுமையாக விமர்சிக்கிறார். மிக முக்கியமான கருத்துக்கள் அவை. ஆங்கிலத்தில் அம்பேத்கர் காந்தியை பற்றி எழுதிய விமர்சனங்களுடன் பொருந்திப் போகிறவை அவை. அது மட்டுமல்ல, அருந்ததி ராயின் “டாக்டரும் புனிதரும்” நீள்கட்டுரைக்கும் இணக்கமானவை பெரியாரின் காந்தி விமர்சனங்கள். 

ஆனால் பெரியாரால் எப்படி தமிழர்களின் வைதீக கடவுள் பக்தியை முழுக்க ஒழிக்க முடியவில்லையோ அப்படியே காந்தி பக்தியையும் அவரால் சீண்டக் கூட முடியவில்லை. ஏனென்றால் காந்தியை புனிதராக முன்னெடுத்து ஆங்கிலத்தில் பல லட்சம் பக்கங்களை எழுதி சினிமாக்கள் எடுத்து அவரை ஒரு நவீன ஏசுநாதராக கட்டமைத்து விட்டனர். தமிழில் எழுத்து இதழின் காலகட்டத்தில் இருந்தே ஏகப்பட்ட காந்தி பஜனை கட்டுரைகள், நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த பஜனை மடத்தில் இருந்து தோன்றிய இலக்கிய மனங்களுக்கு காந்தி சொன்ன பல மதவாத, பிற்போக்கு கருத்துக்களை மேற்கோள் காட்டினாலே கோபம் வருகிறது. “டாக்டரும் புனிதரும்” கட்டுரை கூட தமிழில் மொழியாக்கம் பெற்று வந்திருக்கிறது. ஆனால் எந்த அறிவுஜீவியும் அதை படித்ததாக கூட காட்டிக் கொள்ள மாட்டார்கள். தமிழில் நீங்கள் எந்த சிறு, நடுநிலை, அச்சு, இணைய பத்திரிகையிலும் காந்தியை மிகச்சற்று விமர்சித்து அவருடைய எழுத்துக்களில் இருந்து மேற்கோள் காட்டிக்கூட ஒரு கட்டுரையை வெளியிட முடியாது. ஆனால் நீங்கள் இங்கே கடவுளை கடுமையாக சாடி எழுதலாம், இங்கே நீங்கள் எந்த சிந்தனையாளரையும், தலைவரையும் விமர்சிக்கலாம், திராவிடத்தை, தமிழ் தேசியத்தை, வைணவத்தை, சைவத்தை விமர்சிக்கலாம். ஆனால் காந்தியை மட்டும் தீண்ட முடியாது. அவர் கடவுளுக்கு அப்பாலான கடவுளாக இங்கு கட்டமைந்திருக்கிறார். 


தமிழ் இலக்கிய சூழலில் முழுமையான கடவுள், மத, மரபு மறுப்பாளராக இருக்க முடியாமல், அதே நேரம் அவற்றில் ஈடுபடவும் முடியாமல் நடுவில் தொக்கி நிற்கிறவர்கள் அநேகம் பேர் உள்ளனர். அவர்களுக்கு காந்தி தான் ஒரே புகலிடம். நடுங்கியபடி மழைக்கு ஒதுங்கி நிற்பவரை திரும்ப பிடித்து மழையிலே தள்ளியதைப் போல் ஆகிறது இவர்களுக்கு நாம் காந்தியை விமர்சித்தால். 


 பாஜக முறியடிக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும், காந்தியை விமர்சித்தால் அது காங்கிரஸின் வாய்ப்பை கெடுக்கும் என நம்புகிறவர்களும் உண்டு. அன்னா ஹசாரே காங்கிரஸுக்கு எதிராக செய்த சர்க்கஸை நினைத்து இன்றும் பொதுமக்களிடையே காந்திக்கு பெரும் மதிப்புண்டு என நினைக்கிறவர்கள் உண்டு. எனக்கு இந்தியா காந்தியை கடந்து மிக நீண்ட தூரம் வந்து விட்டது எனத் தோன்றுகிறது. நான் ஏராளமான மாணவர்களிடம் உரையாடுகிறேன், அவர்களிடையே ஒரு காந்தியவாதியை கூட நான் கண்டதில்லை. மாறாக காந்திய கருத்துக்களை வகுப்பில் விவாதித்தால் கண்டமேனிக்கு அவரை இன்றைய மாணவர்கள் திட்டுகிறார்கள். எனக்கே பாவமாக இருக்கிறது என்றால் பாருங்களேன். ஹிந்த் ஸ்வராஜில் உள்ள ஒரு கட்டுரையை நான், காந்திக்கு ஆதரவாக, வகுப்பில் விவாதித்தால் கூட மாணவர்கள் காந்திக்கு ரெண்டு குட்டு விடாமல் இருக்க மாட்டார்கள். அவர்களுடைய மதிப்பீட்டின் படி காந்தி மிகவும் காலாவதியான ஒரு டினோசர். காந்தி தன் சபர்மதி ஆசிரமத்தில் காதலித்த பெண்களை மொட்டை அடிக்க வைத்து பொதுவில் மன்னிப்பு கேட்க சொன்னதைப் பற்றி லூயிஸ் பிஷர் எழுதி இருக்கிறார் (Life of Gandhi). இதை இங்கே குறிப்பிட்டால் நம் இலக்கிய காந்தியவாதிகள் வந்து “தப்பு தான். ஆனால் அதை அவருடைய காலகட்டத்துக்கு நம்பிக்கைகளின் பின்னணியில் வைத்து பார்க்க வேண்டும்” என எல்லாவற்றுக்கும் ஒரு “ஆனால்” போட்டு உருட்டுவார்கள். ஒரு அம்மிக்குழவி கூட தமிழ் இலக்கிய காந்தியவாதிகள் அளவுக்கு உருளாது. “காந்தியை கொஞ்சம் நியாப்படுத்துங்க” என்று சொல்லி விட்டு ஒரு துண்டு தேங்காயும் புளியும் மிளகாயும் பக்கத்தில் வைத்து விட்டால் உருட்டுகிற உருட்டில் நைசாக சட்னியே அரைத்து கொடுத்து விடுவார்கள். ஆனால் இன்றைய இளம் மாணவிகள் இச்சம்பவத்தை எடுத்து காட்டினால் பழைய செருப்பை எடுத்து காட்டி விடுகிறார்கள். அவர்கள் எல்லாம் காந்தி ஒரு புனிதப்பசு என பயப்படுவதே இல்லை. காந்திக்கு இன்று இந்தியாவில் இருக்கிற ஒரே செல்வாக்கு தமிழ் இலக்கியவாதிகளிடம் மட்டுமே.

எனக்கு இவர்களிடம் உள்ள ஒரே பிரச்சனை வேறு எல்லா விசயத்திலும் கரார்தன்மையை காட்டும், நிஜத்தை எதிர்பார்க்கும் நீங்கள் காந்தி விசயத்தில் மட்டும் ஏன் வேகவைத்த மரிச்சீனி கிழங்கைப் போல இப்படி குழைகிறீர்களே என்பது தான். இந்த மிகைப்படுத்தல், பக்தி, கண்ணீர் மல்கலை விட்டு விட்டு நிஜ காந்தியைப் பற்றி பேச மறுக்கிறார்கள் என்பதே. அண்மையில் போகனிடம் பேசும் போது தல்ஸ்தாயின் உண்மைப் பக்கத்தை, அவருடைய பல கீழ்மைகளைப் பற்றி பேசினால் தமிழில் பலர் புண்படுகிறார்கள், ஏனென்றால் தமிழில் அவரை அறிமுகப்படுத்தியவர்கள் மிகவும் புனிதப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்றார். இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் காந்தியின் குருநாதர் தான் தல்ஸ்தாய். சீடரை அம்பலப்படுத்தினாலே தாங்காதவர்கள் குருவைப் பற்றி பேசினால் மட்டும் பொறுப்பார்களா? தமிழ் இலக்கிய உலகம் இப்படி பல “தெய்வங்கள் வாழும் நிலமாக” இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...