இந்த ஆண்டு எனக்கு சற்று கூடுதல் தெளிவு மனிதர்களைப் பற்றி கிடைத்திருக்கிறது. அது என் வாசிப்பிலும் அனுபவத்திலும் இருந்து கிட்டியது. நாமே தேடிச் செல்லாவிட்டாலும் துன்பம் வரும் போது கூடவே உதவிக்கு நண்பர்களும் வருவார்கள் எனும் இதமான நம்பிக்கையும் கிடைத்தது. பெங்களூருக்கு வந்த பிறகு பலவிதமான நண்பர்களை, வாசகர்களை, மனிதர்களை சந்தித்து அளவளாவுவது வெகுவாக குறைந்து போனாலும் நிறைய வாசித்திருக்கிறேன். குறிப்பாக தத்துவத்திலும் இலக்கியத்திலும். அந்த விதத்தில் மகிழ்ச்சி. புதிய விசயங்களைக் கற்றுக் கொள்வது எப்போதும் தித்திப்பானது அல்லவா! கூடவே ஒரு பிரச்சனையை தர்க்கரீதியாக பகுப்பாய்வு செய்ய தத்துவ வாசிப்பு உதவியுள்ளது. இலக்கியத்தில் ஐரோப்பிய, அமெரிக்க, பின்நவீன இலக்கியம் நோக்கி கவனத்தை செலுத்தினேன். இதை அடுத்து, கதைத்தொழில் நுட்பம் சார்ந்து நிறைய வாசித்தேன், சிந்தித்தேன்; இயன்றால் அடுத்த வருடத்திற்குள் நாவல், திரைக்கதை ஆகிய வடிவங்களின் கதைத்தொழில் நுட்பத்தை விளக்குகிற புத்தகங்களை எழுதுவேன். அதே போல 2022-23 ஆண்டுகளில், அமெரிக்க பல்கலைகளில் உள்ள BFA in Creative Writing பாணியில் நாவல், சிறுகதை, த...