முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்த பிறந்த நாளின் போதான எண்ணங்கள்



முந்தின வருடத்தை விட இந்த வருடம் எனக்கு மகிழ்ச்சியானதாக, நம்பிக்கையளிப்பதாக உள்ளது. எல்லா பிறந்த நாட்களிலும் நான் வழக்கமாக உற்சாகமாக இருப்பேன். கடந்த சில வருடங்களே விதிவிலக்கு. இவ்வருடம் நான் மீண்டும் அதே உற்சாகத்தை திரும்பப் பெற்றிருக்கிறேன். குறிப்பாக கடந்த ஒரு மாதமாக மனம் சற்று தெளிவாகி இருக்கிறது. சின்னச் சின்ன, சில நேரம் பெரிய பிரச்சனைகளைக் கூட அதிகம் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எடுத்துக் கொள்ளலாம் எனும் எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான ஒரு காரணம் எனக்கு அளப்பரிய அன்பைத் தரும் நண்பர்கள் என் நெஞ்சிற்கு இனியவர்களும். மற்றொரு முக்கிய காரணம் சற்று விசித்திரமானது:


பிறர் தமது அனுபவம், உள்ளுணர்வு வழியாக கற்கிற பாடங்களை நான் எப்போதும் வாசிப்பு வழியாகவே கற்கிறேன். ஒருவேளை ஒரு புத்தகம் தர்க்கரீதியாக பிசிறில்லாத கருத்தாக்கமாக ஒரு பாடத்தை அளிக்கும் போது அது சுலபத்தில் என் மனதில் போய் சப்பணமிட்டு அமர்ந்து கொள்கிறது என நினைக்கிறேன், ஆனால் உணர்வுரீதியான அனுபவங்களை நான் ஆர்ப்பார்ட்டமாக எதிர்கொள்ளும் போது இயல்பாகவே அவை என் மனக்கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடி விடுகின்றன. அவ்விதத்தில் அண்மையில் அரிஸ்டாட்டிலை தொடர்ந்து வாசித்தது, அவருடைய கருத்துக்களைப் பற்றி யோசித்து எழுதவும் செய்தது எனக்கு மிகவும் உதவி உள்ளது. அது எனக்குள் ஏதோ ஒரு மாயத்தை செய்து விட்டது. அவர் கவிதையியல், அறம் குறித்து சொல்லி உள்ள கருத்துக்கள் கூட இந்த உலகை, மனிதர்களை, வாழ்வை அறிவதை சற்று சுலபமாக்கி உள்ளது. நான் கடுமையான அழுத்தத்தில் இருந்த நாட்களில் இது எனக்கு மிகவும் தேவைப்பட்டது. இத்தனைக்கும் நீண்ட காலமாக அவரைக் குறித்து எனக்கு ஒரு எதிர்மறையான எண்ணமே இருந்தது, ஆனால் இப்போது அவர் என்னுடைய ஆசான்களில் ஒருவராகி விட்டார். 


இப்போது நான் இந்த வாழ்க்கையை ஒரு பிரம்மாண்டமான படப்பிடிப்பு தளமாகப் பார்க்கிறேன். ஒவ்வொரு சிறு பகுதியிலும் பலவிதமான படங்களின் ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது. நான் என் வாழ்க்கையின் திரைக்கதையிலும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினால், முடிந்தளவுக்கு பிறருடைய படப்பிடிப்பு உதவினாலும் போதும். ஒவ்வொரு பிரச்சனையும் தனிமனிதர் எனும் நடிகர்களாலோ அவர்களுடைய பாத்திரங்களாலோ அவர்களை உருவாக்கிய திரைக்கதையாலோ மட்டுமே விளைவதில்லை. எல்லாம் ஒன்றுக்கு ஒன்று கலந்ததாக, ஒன்றில் இருந்து மற்றொன்றை பிரித்துவிட முடியாதபடி பிணைந்ததாக இருக்கின்றன. ஆகையால் நான் என்னையோ பிறரையோ குற்றம் சொல்வதில் பொருள் இல்லை. திரைக்கதையின் நோக்கம் அர்த்தத்தை உண்டு பண்ணுவது, அர்த்தத்தின் நோக்கம் மகிழ்ச்சியை தருவது. ஆக, தொடர்ந்து ‘திரைக்கதையை’ செறிவாக்கும் பணியை மட்டும் நான் செய்திருந்தால் போதும் என கற்றுக் கொண்டேன். 


அண்மையில் எனக்கு காவல் நிலையம் செல்லும் அளவுக்கு ஒரு மோசமான அனுபவம் ஏற்பட்டது. அப்போது ஒரு ‘தவறான படப்பிடிப்பின்’ பக்கம் கூட தலைகாட்டக் கூடாது, ‘மோசமான இயக்குநர்கள்’, ‘அபத்தமான ‘திரைக்கதைகளிடம்’ இருந்து விலகி இருக்க வேண்டும், அவர்கள் யாராக இருந்தாலும் சரி, எவ்வளவு வற்புறுத்தி நம்மை ‘நடிக்கக்’ கேட்டுக் கொண்டலும் சரி எனப் புரிந்து கொண்டேன்.   


இந்த இனிய பிறந்த நாளின் போது என்னை வாழ்த்திய நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் ஆழ்மனதில் இருந்து அன்பையும் முத்தங்களையும் அளிக்கிறேன். அரிஸ்டாட்டில் எனும் அந்த மாமனிதனையும் இந்நாளில் வணங்குகிறேன். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...