எல்லா காலத்திலும் எல்லா வகையான மனிதர்களும் இருப்பார்கள் என்பதை அறிவேன். ஆனால் சில குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட வகை மனிதர்கள் அதிகமாகத் தோன்றுகிறார்கள். அந்தந்த நேரத்தின் அரசியல் சமூக பண்பாட்டு சூழலின் பிள்ளைகள் இவர்கள். ஒரு உதாரணத்துக்கு, இன்று மனிதர்களை “டீல்” செய்பவர்கள் அதிகமாகி உள்ளார்கள். இவர்கள் ஒருவித பலூன் மனிதர்கள். எனக்கு நன்கு பரிச்சயமான இலக்கிய உலகத்துக்கே வருகிறேன். தொண்ணூறுகள், ரெண்டாயிரத்தின் துவக்கம் வரை - அதாவது இணையதளங்கள், சமூவலைதளங்கள் பரவலாகும் வரை - எதிரும் புதிருமான இலக்கிய அரசியல் முகாம்கள் இங்கு அதிகமாக இருந்தன. இன்றும் தான் இருக்கின்றன. என்ன வித்தியாசம் என்றால் அன்று யாரை சந்தித்தாலும் விவாதம் நடக்கும், முரண்படுவார்கள், அது கைகலப்பில் கூட போய் முடியும். அல்லது மணிக்கணக்காய முரண்பட்டுவிட்டு நட்புடன் கைகுலுக்கி பிரிவார்கள். ஆனால் இந்த எதிர்ப்பும், ஆதரவும் கருத்தியல் ரீதியானதாக வெளிப்படையானதாக இருந்தது. இலக்கிய பண்பாட்டு வெளியானது ஒரு சதுரங்க பலகையில் அணிவகுக்கப்பட்ட காய்களைப் போன்றதாக இருந்தது. யார் எங்கும் நிற்கிறார்கள் என்பது எல்லாருக்கும் வெளிப்படையாக இ...