முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டீல் செய்வது



எல்லா காலத்திலும் எல்லா வகையான மனிதர்களும் இருப்பார்கள் என்பதை அறிவேன். ஆனால் சில குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட வகை மனிதர்கள் அதிகமாகத் தோன்றுகிறார்கள். அந்தந்த நேரத்தின் அரசியல் சமூக பண்பாட்டு சூழலின் பிள்ளைகள் இவர்கள். ஒரு உதாரணத்துக்கு, இன்று மனிதர்களை “டீல்” செய்பவர்கள் அதிகமாகி உள்ளார்கள். இவர்கள் ஒருவித பலூன் மனிதர்கள். எனக்கு நன்கு பரிச்சயமான இலக்கிய உலகத்துக்கே வருகிறேன்.


தொண்ணூறுகள், ரெண்டாயிரத்தின் துவக்கம் வரை - அதாவது இணையதளங்கள், சமூவலைதளங்கள் பரவலாகும் வரை - எதிரும் புதிருமான இலக்கிய அரசியல் முகாம்கள் இங்கு அதிகமாக இருந்தன. இன்றும் தான் இருக்கின்றன. என்ன வித்தியாசம் என்றால் அன்று யாரை சந்தித்தாலும் விவாதம் நடக்கும், முரண்படுவார்கள், அது கைகலப்பில் கூட போய் முடியும். அல்லது மணிக்கணக்காய முரண்பட்டுவிட்டு நட்புடன் கைகுலுக்கி பிரிவார்கள். ஆனால் இந்த எதிர்ப்பும், ஆதரவும் கருத்தியல் ரீதியானதாக வெளிப்படையானதாக இருந்தது. இலக்கிய பண்பாட்டு வெளியானது ஒரு சதுரங்க பலகையில் அணிவகுக்கப்பட்ட காய்களைப் போன்றதாக இருந்தது. யார் எங்கும் நிற்கிறார்கள் என்பது எல்லாருக்கும் வெளிப்படையாக இருந்தது. இன்று அப்படி இல்லை. இன்று எல்லாரும் எல்லாருடனும் இருக்கிறார்கள். ஏனென்றால் இன்று எல்லாரும் எல்லாரையும் ‘டீல்’ செய்ய முயற்சிக்கிறார்கள். அதிகார மிக்கவர்களும் அதிகாரம் குறைவானவர்களும் பரஸ்பரம் தமக்கு பயன்படுவார்கள் என இரு தரப்புமே இன்று நம்புகிறார்கள்.


இன்று கடுமையாக ஒருவரை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்றால் அதை வெளிப்படையாக முன்வைத்தபடி அவருடன் நல்லுறவை நிறுவ முடியாது. அதாவது நீங்கள் எழுதுகிற ஒரு பின்னூட்டம் போதும் ஒருவர் உங்களை வாழ்நாள் முழுமைக்கும் பிளாக் செய்ய. மாறாக, நீங்கள் கருத்தியல் ரீதியாக எதிர்க்கிற ஒருவரிடம் அதே எதிர்நிலைப்பாட்டின் பின்னணியில் நின்று கொண்டே நல்லுறவை பேண நீங்கள் இன்று ஒரே ஒரு காரியம் செய்தால் போதும் - பொதுவெளியில் அவரைப் பற்றி ஒன்றுமே பேசக் கூடாது. அவரிடம் இருந்து உதவி, சிபாரிசு உள்ளிட்ட பிரதிபலன்கள் வேண்டுமென்றால் அவருடன் நீங்கள் எல்லா இடங்களிலும் கூட இருந்தாலும் போதும். வெளிப்படையாக புகழவோ கொண்டாடவோ தேவையில்லை. அன்னாருடைய இலக்கிய விழாக்களில் போய் அமர்ந்து கொள்வதே போதுமானது. அவருடனான இணக்கத்தை ஒரு அதிகாரமாக காட்டிக்கொள்ள விழைந்தால் மட்டும் அவரைப் பற்றி பெரிய முரண்கள் இன்றி பேஸ்புக்கில் எழுதுவது, ஒரு கட்டத்தில் அவருக்கு முட்டுக்கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம். இத்தனை விசயங்களும் நடக்கையில் நீங்கள் அவருடன் கருத்தியல் ரீதியாக உடன்படவோ முரண்படவோ அவரை ஆதரிக்கவோ எதிர்க்கவோ மாட்டீர்கள். இது ஒரு விசித்திரமான கூட இருக்கிற, முகம் காட்டும் உறவு. ஊர்ப்பகுதிகளில் தெரிந்தவர், தெரியாதவர்களின் வீட்டு விசேசங்களுக்கு எல்லாம் தவறாமல் போய் ‘முகம் காட்டுவதைப்’ போன்றது.


இப்படியாக பிரபலங்களை, அதிகார மையங்களை ‘டீலிங்’செய்பவர்கள் இன்றைய இளையதலைமுறையினர் இடையே அதிகமாகி விட்டார்கள் என்பதைக் காண்கிறேன். கொஞ்சம் அசந்தால் இவர்கள் நம்மையே ‘டீல்’ செய்து விடுவார்கள். எந்த விதத்திலும் நமக்கு ஆதரவாகவோ எதிராகவோ நிலைப்பாடு எடுக்க மாட்டார்கள், நமக்கு எதிரான கருத்தியலை மாற்றிக் கொள்ளவும் மாட்டார்கள், ஆனால் நம்முடன் ‘இருப்பார்கள்’. நம்முடைய எழுத்தை கடுமையாக வெறுப்பவர்களாக ஒரு பக்கம் காட்டிக்கொள்வார்கள். ஆனாலும் நம்முடனே ‘இருப்பார்கள்’. 


இவர்கள் இடதுசாரியம் பேசிக்கொண்டே வலதுசாரிகளுடன் கைகுலுக்கி தேநீர் அருந்தி அவர்களை டீல் செய்வார்கள். தலித்தியம் பேசிக்கொண்டே அதற்கு நேரெதிரான முகாமில் உள்ளோரை கையாள்வார்கள். இவர்கள் போலிசாக இருந்தால் கொடூரமான கொலைகாரர்களிடமும் மாமா மச்சானாக பழகுவார்கள். கடும் சாதி எதிர்ப்பாளர்களாக இருந்தால் தீவிர சாதி ஆதரவாளர்களை ‘புரோ’ என்று அழைத்து தோளை அணைப்பார்கள். இவர்கள் பாசாங்காளர்கள் அல்ல. நம்பாத ஒன்றை நம்புவதாக பாவிப்பதே பாசாங்கு. ஆனால் இவர்களோ ஒன்றை நம்பி அதற்கு தொடர்பில்லாமல் மற்றொன்றை செய்கிறார்கள்.


 இது ஒரு புதிய பின்நவீன அணுகுமுறை. இவர்கள் தம் கொள்கையில், சித்தாந்தத்தில், நிலைப்பாட்டில் தீவிர பிடிப்பு கொண்டவர்கள். நமக்கு இவர்களுக்கும் ஒரே வித்தியாசம் இவர்கள் ‘மனிதர்கள் வேறு கருத்தியல் வேறு’ என்று நம்புகிறார்கள் என்பது.


இதன் பொருள் இவர்கள் மனிதநேயர்கள் என்றல்ல. மனிதர்களை இவர்கள் மனிதவளமாக பாவிப்பார்கள். மனிதர்களுக்குள் கருத்தியலோ நம்பிக்கைகளோ சாரமாக இல்லை. கருத்தியலோ நம்பிக்கையிலோ மனிதர்கள் அணிகிற வேடங்கள் என நினைக்கும் இவர்கள் கருத்தியலும் நம்பிக்கைகளும் கூட சாரமற்றவை என நினைக்கிறார்கள். அதனாலே கருத்தியலை ஒரு அரூபமான வஸ்துவாக, வாழ்வுடன் தொடர்பற்ற சங்கதியாக, அதிகாரத்தை அடையும் கருவியாக பார்க்கிறார்கள். கருத்தியலை ஒரு ‘மிதக்கும் குறிப்பானாக’ இவர்கள் பாவிக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் ஒரு அடையாளப்பட்டி, ஒரு அரசியல் பதாகை, ஒரு அனுமதிச்சீட்டு. யாரும் யாரையும் பயன்படுத்தலாம், அதைக் குறித்து குற்றவுணர்வு கொள்ளத் தேவையில்லை, ஏனென்றால் பழைய அர்த்தத்தில் இன்று மனிதன் என யாருமே இல்லை என இவர்கள் நினைக்கிறார்கள். இவர்கள் நம்மில் ஒரு பகுதி தான். பேச்சை, எழுத்தை வெறும் தகவலாக, சமூகமாக்கல் மார்க்கமாக மட்டுமே பாவிக்கிற இன்றைய நடைமுறை, சூழல் இவர்களை உற்பத்தி செய்துள்ளது. 


ஒருவித பலூன் மனிதர்கள் இவர்கள். நாம் எங்கு போனாலும் கூடவே மிதந்து வருவார்கள். காற்று வீச வேண்டும், அது சாதகமான திசையில் அடிக்க வேண்டும். அவ்வளவு தான். அத்திசையில் மிதக்கத் தொடங்குவார்கள். இன்று நாம் மிகுந்த தனிமையில் இருக்கிறோம். நமக்கு இன்று இத்தகைய பலூன் மனிதர்கள் அதிகமும் தேவைப்படுகிறார்கள். நாம் போகுமிடமெங்கும் தலைக்கு மேல் இவர்கல் வருவது காண நமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.