முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுத்தாளனின் பகைவன்


“நம்மால் இந்த பெங்களூர் குளிரைத் தாங்கிக் கொண்டு எழுதவே முடியவில்லை, ஐரோப்பா போன்ற தேசங்களில் குளிர்காலங்களில் எழுத்தாளர்கள் எப்படி எழுதுகிறார்கள்?” என்பது எனக்கு புரிபடாத மர்மங்களில் ஒன்று. குளிர்காற்று அடிக்கும் போது ஒன்று கம்பளி அங்கியை அணிந்திருக்க வேண்டும், அல்லாவிட்டால் அடிக்கடி கைகளைக் கொண்டு உடம்பை நாமே அணைத்துக் கொள்ள வேண்டி வரும். சரி, அப்படியே கம்பளி உடை அணிந்திருந்தாலும் விரல்கள் குளிரில் விரைக்கிற உணர்வு வரும் போது தட்டச்சுவது சிரமம். கையுறை அணிந்து எழுதலாம் என்றால் விரலின் சருமம் பொத்தான்களில் படுகிற உணர்வு கூட இல்லாமல் என்ன எழுத்து? இது போக, அடிக்கடி உள்ளிருந்து குளிர் கிளம்பி வந்து காதுக்குள் கெக்கலிக்கும் போது ஒருவேளை நிஜமாகக் குளிர்கிறதா அல்லது நமக்குத் தான் ஜுரம் வந்து விடுகிறதா என சந்தேகம் வருகிறது. இந்த அவஸ்தைகள் தொடர்ந்து எழுத்தின் சரளத்தில் இருந்து நம்மை தடம் புரள வைக்கிறது. அதே நேரம் எழுத்து குழாயைத் திறந்ததைப் போல கொட்ட ஆரம்பித்து விட்டால் குளிரின் தாக்குதல் மறந்து போகும். “ரொம்ப நேரமா என்னை மறந்திட்டியா?” எனக் கேட்டபடி உடனே அது தன் ஜில்லென்ற விரல்களை நம் விலாவிலோ முதுகிலோ வைத்து திரும்பவும் கவனத்தை சிதறடிக்கவும் செய்யவும். 


சென்னையில் வியர்வை நெற்றியில் இருந்து ஒழுக, கழுத்துப் பக்கம் கசகசக்க எந்த கவலையும் இல்லாமல் என்னை மறந்து நான் எழுதியிருக்கிறேன். ஆனால் இந்த குளிர் அவ்வளவு அந்நியமாக இருக்கிறது. ஒருவேளை குளிரிலே பிறந்து வளர்ந்தவர்களுக்கு இதனுடன் ஒரு சினேகம் ஏற்பட்டு “வாப்பா பக்கத்தில் வந்து உட்காரு” என்று அழைத்து வைத்துக்கொள்ளும் அளவுக்கு அதனுடன் இணக்கமாக இருக்க முடியலாம். வெப்பத்தில் பிறந்த என்னைப் போன்றவர்களுக்கு அது சாத்தியமில்லை.


அப்புறம், சென்னையில் வெக்கை என்றால் அது எப்போதும் ஒரே போலத்தான் இருக்கும். இங்கோ பத்து நிமிடத்துக்கு முன் வீசிய குளிர் காற்றை இப்போது காணோம். லேசாக வெப்பம் மிதந்து வருகிறது. காலையில் ரொம்ப குளிர்கிறது என்று கம்பளி அணிந்து வந்தால் பத்து மணிக்கு மேல் வெயில் உறைக்கிறது. சரி ரொம்ப வெயில் போல என ஹய்யா என்று உட்கார்ந்தால் குளிர் பதுங்கியிருந்த சீரியல் கில்லரைப் போல பாய்ந்து வருகிறது. சற்றும் கணிக்க முடியாத, முரண்படும் உணர்வு வெளிப்பாடுகளால் ஆன ஒரு உறவைப் போல இது இருக்கிறது. அவ்விதத்தில் “காதலில் சொதப்புவது எப்படி?” படத்தின் அமலா பாலைப் போல இருக்கிறது பெங்களூர்.


ஒரு காலத்தில் குளிர்மையை மிகவும் ரொமாண்டிசைஸ் பண்ணியிருக்கிறேன். இப்போது தான் எஸ்.ரா ஏன் வெயிலைப் பற்றி மருகி மருகி தன் நாவல்களில் எழுதுகிறார் எனப் புரிகிறது. வெயிலின் பிள்ளைகளால் குளிரின் சித்தி கொடுமையை தாள முடியாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...