முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போஹோ




வாஸ்தோவின் “போஹோவை” ஒரு மாதிரி ஹிப்பி நாவல் என்று கூறலாம். இவ்வகை நாவல்களில் நகர / கிராமிய மத்திய வர்க்க வாழ்க்கை சற்று எதிர்மறையாகவும், எந்த பிடிப்புமில்லாத பயண / சாலை வாழ்க்கை உன்னதமாகவும் காட்டப்படும். சமூக வாழ்க்கையின் காயங்களை சமூக பந்தமற்ற ஒரு வாழ்க்கை குணப்படுத்தும் என்றும் இவ்வகை கதைகளில் சொல்லப்படும். வாசகர்களில் பலரும் உள்ளூர ஏங்குவது எல்லாவற்றையும் அறுத்துப் போட்டுவிட்டு ஓடி விடவேண்டும் என்பதையே, ஆனால் அவர்களால் அதை செய்ய முடியாது. அதனாலே இத்தகைய கதைகளுக்கு எப்போதும் மவுசிருக்கும், விட்டு விடுதலையாகும் சாகச வாழ்க்கை திரும்பத் திரும்ப ரசிக்கப்படும். ஆனால் வாசகன் சமூகத்துக்குள் இருப்பவன் என்பதால் இக்கதைகளில் நாயகன் திரும்ப ஊருக்கு வருவான். (அல்லது சமூகத்தில் இருந்து புறவெளிக்கு எதிர்காற்றில் மயிர்க்கற்றைகள் அலைய பைக்கில் பிறந்து போவான்.) அதுவே நாவலுக்கு ஒரு முழுமையை கொடுக்கும். இறுக்கம்-கசப்பு-விடுதலை-திகைப்பு-மீண்டும் திரும்புதல் என்பதே ஹிப்பி நாவலின் இலக்கணம். வாஸ்தோ இந்த கதையமைப்பை காதல், மனமுறிவு, குற்றம், தப்பித்து ஓட்டம், பைக் ரைடிங் அனுபவங்கள், மனம் ஆற்றுப்படுதல் எனும் போக்கில் கோர்த்திருக்கிறார்.


வாஸ்தோவின் இந்த நாவலில் சில குறைகள் உள்ளன, ஆனால் அவற்றையும் மீறி இது எனக்குப் பிடித்திருக்கிறது. 


ஏனென்றால், தமிழில் இம்மாதிரி மனநிலையை பேசுகிற நாவல்கள் அரிது. அடுத்து, வாஸ்தோவிடம் இயல்பான நகைச்சுவை உண்டு. 


அது அவரது நடைக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. உ.தா., ஓவர் தித்திப்பான ஒரு காதல் காட்சியை தன் அங்கத உணர்ர்வு, நகைச்சுவை தொனி மூலம் அவர் எதார்த்தமாக்கி விடுகிறார். ஒரு கொடூரமான பலாத்கார காட்சியை எழுதிவிட்டு அதை செய்தவனை நுட்பமாக பகடி செய்து, அவனுக்குள் இருக்கிற குழந்தைத்தனம், அதன் அபத்தம் என்று இன்னொரு பக்கத்தை காட்டி அப்பாத்திரத்தை உயிரோட்டம் கொள்ள செய்கிறார். 


“அலைக்கழிப்பு மிகுந்த ஐந்தாவது நாளின் அனுபவங்கள்” என்றொரு அத்தியாயத்தை மிக நன்றாக எழுதியிருக்கிறார். மாறுபட்ட பாத்திரங்களின் வாழ்வில் வரும் ஒரு சம்பவத்தை அந்த ஒரே அத்தியாயத்துக்குள் கலந்து எழுதும் போது அது பொருத்தமின்மைகள் இன்றி சரியாக இயைந்து போவதைக் கண்டு அசந்து போனேன்.


 வாஸ்தோவின் நடையிலும் ஒரு தனித்துவம் உள்ளது. ஆனால் அது அவர் தன்னுடைய கதையை எழுதும் போது மட்டும் தான்; குற்றவாழ்க்கை பற்றி எழுதும் போது செயற்கையாக, சினிமாத்தனமாக மாறிவிடுவதுடன் அந்த நடையும் காணாமல் போய் விடுகிறது.


 சிலரைப் படிக்கும் போதே நமக்குத் தெரிந்து போகும், இந்தாளுக்கு பெரிய சிக்கல்களின்றி எழுத வருகிறது என்று, வாஸ்தோ அப்படியான ஒருவர்.


இந்த நாவலின் பலவீனங்கள் மூன்று:

1. சரவணன் சந்திரனின் தாக்கம். அவரது ஆவி வாஸ்தோவுக்குள் அவ்வப்போது இறங்கி ஆட்டி வைக்கிறது. அதை விரட்டி தன் பாணியை முழுக்க அவர் கைகொள்ள வேண்டும். “போஹோவில்” ஒரு நல்ல விசயம் அவர் நாயகனை கடைசியில் பழனிக்கோ, சபரிமலைக்கோ அனுப்பவில்லை, ஒன்றிரண்டு சித்தர்களை குறுக்கமறுக்க நடக்கவில்லை என்பது. ஆனாலும் இறுதி அத்தியாயத்தில் ஒரு ஞானியை, பக்கிரியைப் போன்ற ஆசாமி வருகிறார், அவர் மிக கனிந்தவராக இருக்கிறார், அவரிடம் இருந்து நாயகன் ஒரு பாடத்தை கற்றுக்கொண்டு அமைதியாகிறான். இந்த இடத்தையும் வாஸ்தோ நன்றாக எழுதியிருந்தாலும், கதைக்கு ஒரு நிறைவைத் தர வேண்டும் என அவர் விரும்புகிறார் என்றாலும், அது எப்போதும் நாயகனின் அனுபவங்களில் இருந்து கிடைப்பதாக அமைவதே கூடுதல் சிறப்பாக இருக்கும். மற்றொன்று ஜேக் கெரவக்கின் On the Road போன்ற நாவல்களில் வருவதைப் போன்ற ஒரு ஆழமான பார்வையை (ஜென் பௌத்தம் சார்ந்து) இதில் கொண்டு வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். “சாதாரணர்களின் ஆன்மீகம்” எனும் சரவணன் சந்திரனின் பார்வையை தான் வாஸ்தோவின் இங்கு பயன்படுத்துகிறார் என்பது அவரது தனித்துவத்தை வெகுவாக குறைக்கிறது. 

2. மாறுபட்ட பாத்திரங்களின் உபகதைகளை பிரதான பாத்திரத்தின் அத்தியாயங்களுடன் கலந்து எழுதுவது ரொம்ப சவாலானது. ஏனென்றால் 200 பக்க நாவல்களில் ஏதாவது ஒரு பாத்திரத்தின் கதையை மட்டுமே முழுமையாக பேசி மற்றவை அரைகுறையாக முடித்து வைக்க வேண்டி வரும். அல்லது 400 பக்க நாவலாக எழுத வேண்டும். வாஸ்தோ இந்த வடிவத்தை ஓரளவுக்கு சமாளித்திருக்கிறார் என்றாலும், கோயில் கொடை நடக்கும் போது சில பாத்திரங்கள் சட்டென உக்கிரம் பெற்று சாமியாடிவிட்டு அப்படியே போதையில் சரிந்து விழுவதைப் போல உபபாத்திரங்கள் முடிந்து விடுகின்றன.  

3. கிளைமேக்ஸ் அத்தியாயம் சரியாக வரவில்லை. ஹிப்பி நாவலை நாம் இன்பியல் (comedy) வகையில் சேர்க்க வேண்டும். இவ்வகையில் கதையின் முடிவில் நாயகனுக்கு ஒரு பரிசோ, காதலியோ கிடைக்க வேண்டும், ஒரு சாதனையோ, பெரும் வெற்றியோ அமைய வேண்டும். இது நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்கலாம். அப்போதே வாசகர்களுக்கு நிறைவாக இருக்கும் என்று The Seven Basic Plots நூலில் கிறிஸ்டபர் புக்கர் சொல்லுகிறார். “ அட்டகத்தியின்” கிளைமேக்ஸுக்கு அடுத்த கிளைமேக்ஸில் ரஞ்சித் இதை சரியாக செய்திருப்பார். காதலிகளை இழந்து தன்னை நோக்கி சிரித்தபடி செல்லும் நாயகனின் பிற்பாடான வாழ்க்கையை ஒரு நிறைவானதாக சற்று பகடியுடன் காட்டி இருப்பார். வாஸ்தோவும் அப்படி ஒன்றை முயன்றிருக்க வேண்டும். (அல்லாவிடில் துவக்கத்தில் இருந்தே காதலற்ற மற்றொரு கதையாக இதை மாற்றியிருக்க வேண்டும்.)


ஆனாலும் எனக்கு இந்த நாவல் பிடித்திருக்கிறது. நீங்களும் படித்துப் பாருங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...