முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்வின் ஆக மகிழ்ச்சியான நாள்




இன்று என் வாழ்வின் சிறந்த நாட்களில் ஒன்று. அதன் பிறகு என்ன தான் கசப்பாக நடந்தாலும் நாள் முழுக்க மனதுக்குள் இனித்துக் கொண்டே இருக்குமே அப்படியான ஒரு நாள். ஏனென்றால் இன்று என்னுடைய நாவலை எழுதி முடித்தேன்.

 கடைசி அத்தியாயத்தின் சில காட்சிகளை நேற்றிரவு துவங்கி இன்று காலை ஐந்தரை வரை எழுதி ‘முற்றும்’ போட்ட போது ஒரு மிகப்பெரிய திருப்தி ஏற்பட்டது. அங்கங்கே ஆரம்பித்து விட்ட இளகுமுனைகளை (loose ends) இறுதி அத்தியாயங்களில் முடிச்சிட்ட போது நிறைவாக இருந்தது. நாவலின் முடிவு நான் ஏற்கனவே திட்டமிருந்தது தான் என்றாலும் ஒரு நுட்பமான சிறிய மாற்றத்தை இன்று எழுதும் போது கடைசி பத்தியில் புதிதாக கொண்டு வந்தேன்.


கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி எழுத ஆரம்பித்து இவ்வருடம் ஜனவரி மாதத்தில் சரியாக மற்றொறு ஆறாம் தேதி அன்று முடித்தேன். சரியாக 11 மாதங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் ஒரு லட்சத்து பத்தாயிரம் சொற்கள்.


 நாவலின் 70% முதல் 6 மாதங்களில் எழுதி முடித்து விட்டேன். அதன் பிறகு திரும்பப் படித்து தேவையில்லையெனத் தோன்றிய 6 அத்தியாயங்களை அழித்து விட்டு பாதியில் இருந்து நாவலை திருத்தி எழுதினேன். இது போதாதென்று நடுநடுவே நிறைய திருத்தங்களை செய்ய வேண்டி வந்தது - பின்னர் வரும் ஒரு தகவல், பாத்திரம், சம்பவத்திற்கான குறிப்பை, நியாயத்தை ஆரம்ப அத்தியாயங்களில் நுழைக்க வேண்டி வந்தது அல்லது ஆரம்பத்தில் வரும் ஒரு வசனத்திற்கு நியாயம் சேர்க்கும்படியாக ஒரு சம்பவத்தை பிற்பாடு வரும் அத்தியாயம் ஒன்றில் எழுதத் தேவையானது. 


நான் pantser பாணியில் எழுதும் புனைகதையாளன். (இருக்கையில் நுனியில் இருந்து கற்பனை போகிற வழியில் கதையை இட்டுச் செல்லும் பாணி.) அன்றன்றைக்கு என்ன தோன்றுகிறதோ அதுவே அன்றைய அத்தியாயம். நாவலின் இறுதிக் காட்சியைத் தவிர வேறெதையுமே சுத்தமாக திட்டமிடாமல் எழுத எனக்குப் பிடிக்கும். ஆனால் இந்த நாவலில் தான் முதன்முதலாக ஒரு plotter ஆக (ஏற்கனவே உருவாக்கப்பட்ட கதைத்திட்டத்துக்கு ஏற்ப ஒழுங்குபட எழுதுவது) ஒட்டுமொத்த நாவலையும் முன்னுக்குப் பின்னாக, நடுவில் இருந்து முன்னுக்காக கதையின் போக்கை சிந்தித்து திட்டமிட்டு எழுதினேன். அதுவும் ஒரு சுவாரஸ்யமான அனுபவம் தான், என்னை ஆட்கொள்ளுகிற பித்து தான் - இது எந்தளவுக்கு சென்றதென்றால் ஒருநாள் அலுவலகத்தின் கழிப்பறையில் முகம் கழுவிக் கொண்டிருந்த போது ஒரு அத்தியாயத்தின் குறிப்பிட்ட பகுதியொன்றை அழித்துவிட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். என் மனம் திரும்பத் திரும்ப select and delete என்று சொல்லிக் கொண்டிருந்தது. அப்படி யோசித்திருக்கையில் இமைக்கும் முன் கீழே விழுந்து விட்டேன். ஏனென்றால் நான் நடக்கிறேன் என்பதையே மறந்து போனேன். 


இது நான் எழுதி முடித்த நான்காவது நாவல். என்னுடைய மூன்றாவது நாவலுக்கும் இந்த நான்காவதுக்கும் இடையே ஏழாண்டுகள் கடந்து விட்டன. இந்த ஆண்டுகளில் நான்குக்கும் மேற்பட்ட நாவல்களை 80% எழுதி கைவிட்டு விட நேர்ந்தது. ஏனென்னால் நாவலொன்றை எழுதி முடிக்க முடியவில்லை என்பது ஒரு புதிராகவே இருந்தது. இத்தனைக்கும் எனக்கு எழுத்து சோம்பலில்லை. பாதியில் ஆர்வம் இழந்து ஒரு புத்தகத்தை அனாதையாக்க மாட்டேன். ஆனால் ஒரு தவறை மட்டும் திரும்ப திரும்ப செய்து வந்தேன்:


 ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு மைய நெருக்கடி இருக்கும். நான் எழுதத் தொடங்கி முதல் 50 பக்கங்களைக் கடந்ததும் அந்த மைய நெருக்கடியை விட்டுவிட்டு வேறு புது பிரச்சனைகளை உருவாக்கி அவற்றை நோக்கி கதையை செலுத்தத் தொடங்கி விடுவேன். 60,000-70,000 பக்கங்களை எழுதிவிட்டுப் பார்க்கையில் அதனுள் மூன்று, நான்கு சிறிய நாவல்கள் சரியாக உருப்பெறாமல் இருக்கும். அடப்போடா என களைத்துப் போய் விட்டு விடுவேன். இந்த கெட்டப் பழக்கத்தைப் புரிந்து கொண்டு அதில் இருந்து பிரக்ஞைபூர்வமாக உடைத்துக் கொண்டு வர நான் நிறைய யோசிக்க, திட்டமிட வேண்டி இருந்தது, தொடர்ந்து என்னையே எச்சரித்து கடிவாளம் போட்டு வழிநடத்திட வேண்டியிருந்தது.


இந்த பின்னணியில் தான் இந்நாவல் எனக்கு ஒரு முக்கியமான திருப்புமுனை. நான் ஏற்படுத்திக் கொண்டிருந்த எல்லைகளை எனக்குள் நானே போராடி கடந்து வர உதவிய படைப்பனுவம் இது. 


ஒரு வாசகன் இந்த நாவலை தொடர்ச்சியாக மூன்று நான்கு நாட்களில் படித்து முடிப்பதே ஒரு முழுமையான அனுபவத்தைத் தரும். குறிப்பாக, பின்னிருந்து முன்னாக கதையோட்டத்தை மனதில் தொகுத்து, துவக்கத்தில் இருந்தே நான் அங்கங்கே விட்டுப்போகும் மர்மங்களுக்கான பதில்களை கண்டடைய இது அவசியப்படும். அப்போது புதிர்களின் முடிச்சுக்களை அவிழ்த்து, அதைக் கொண்டு நாவலின் உபபிரதியான அதன் தர்க்கத்தை, பார்வையை தமது கோணத்தில் புரிந்து கொள்ளும் திகைப்பான அனுபவத்தை ஒரு வாசகன் பெற முடியும். தனித்தனி அத்தியாயங்களாக இடைவெளி விட்டுப் படித்தால் குழப்பங்கள் எஞ்சவே வாய்ப்பதிகம்.


இருந்தாலும், ஒரு நாவல் தொடர்கதையாக வெளியாகும் போது - ஒரு நாவலுக்குக் கிடைப்பதை விட - முற்றிலும் மாறிபட்ட வாசகர் கூட்டமொன்று அதை நோக்கி வருவார்கள். அந்த வாய்ப்புக்காக நான் பிஞ்ச் செயலிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 


இது இவ்வருட முடிவில் நாவலாக பிரசுரமாகும் முன்பு மேலும் ஆய்வு செய்து சில கூடுதல் தகவல்களை சேர்த்து, மொழியை இன்னும் செறிவூட்டி, வடிவத்தில் உள்ள பிசுறுகளையும் களைவேன். இந்த இறுதிகட்ட திருத்தங்களை நாவலின் அடிப்படையான அமைப்பு குலையாமலே செய்வேன். அதன் பிறகே எனது அடுத்த நாவ்ல்களை நோக்கி கவனத்தை செலுத்துவேன்.


ஒரு நாவலில் தினமும் வேலை செய்வது எந்தளவுக்கு உன்னதமான அனுபவமோ அந்தளவுக்கு மிக சிரமமானதாக, சவாலானதாக அது சில நேரங்களில் இருக்கும்.

 சில நாட்களில் எழுத்து பீறிட்டு வரும், சில நாட்களில் ஒரு பத்தியை எழுதவே ஏழெட்டு மணிநேரங்கள் காத்திருக்க நேரிடும். சில நாட்களில் கதையின் ஒரு முக்கியமான கட்டத்தை எப்படி ஏற்கத்தக்க வகையில் உருவாக்குவது, ஒரு நம்பத்தகுந்த தர்க்கத்தை கதைக்கு எப்படிக் கொடுப்பது என சிந்தித்திருக்க வேண்டி வரும். எவ்வளவு யோசித்தாலும் தீர்வே கிடைக்காமல் போகலாம். பின்னர் வேறு ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கையில் மூளையில் சட்டென விளக்கெரியும். உடனே நாவலுக்குத் திரும்பி அந்த மாற்றத்தை செய்து கதையோட்டத்தை சீர் செய்யலாம். சில நேரத்தில், ஒரு வாரத்துக்கு மேல் மிகவும் ரசித்து எழுதிய ஆயிரக்கணக்கான சொற்கள் தேவைப்படாது எனத் தோன்றி பின்னர் அழித்திருக்கிறேன். ஆனால் இப்படி தினமும் அம்மையப்பனை சுற்றி உலகையே சுற்றி வரும் எழுத்துப் பயணத்துக்கும் இறுதியாக உருவாகும் நாவலும் ஒன்றாக தாயும் சேயுமாக இருக்க வேண்டியதில்லை. நாவலின் முடிக்கப்பட்ட பிரதியானது ஒரு மாரத்தான் ஓட்டத்தின் இறுதி இலக்கை போன்றது.  நாவல் சிறப்பாக எழுதி முடிக்கப்பட்டால் அது எழுத்தாளனை விட வாசகனுக்கே அதிக பயனளிக்கும். ஆனால் எழுத்தாளனுக்கோ தினமும் ஒரு உலகத்துக்குள் இறங்கி நடந்து பயணித்தபடி அங்கு புதுப்புது வீதிகளை, மாடமாளிகைகளை கட்டியெழுப்பி, அங்கு உலவும் புதுவிதமான மனிதர்களை, அவர்களுடைய விசித்திரமான பிரச்சனைகளை, அப்பிரச்சனைகளால் உருப்பெறும் புதிய சுபாவங்கள் என ஒவ்வொன்றாக கண்டுபிடித்து உருவாக்கியபடியே இருக்க வேண்டும். அதாவது அவன் தினமும் சிறுக சிறுக கட்டியெழுப்பும் ஒரு நகரத்தில் தான் அவன் ஒரு சிறிய இடத்தை தேர்ந்தெடுத்து வசிக்கவும் வேண்டும். தினமும் நாவலில் மூழ்கும் அந்த நான்கைந்து மணிநேரங்களில் நாவலாசிரியன் தனது அன்றாட உலகின் அத்தனை பிரச்சனைகள், குறைகளையும் மறந்து போகலாம். முற்றிலும் ஒரு புதிய மனிதனாக மாறிப் போகலாம்.

 அதனாலே ஒரு நாவலை எழுதி முடிக்கையீல் என்னதான் பெரியதொரு நிம்மதி, புளகாங்கிதம் கிடைத்தாலும், மனம் நிறைவை இறுதியாக உணர்ந்தாலும், அது சில நாட்களுக்கே நீடிக்கும். விரைவில் நாவலாசிரியன் தான் உருவாக்கி புழங்கி வந்த அந்த உலகை மிஸ் பண்ண ஆரம்பிப்பான். அவன் ஒரு கடுமையான வெறுமையை, கசப்பை தன் வாழ்வில் உணர்வான். 

நான் அடுத்து எதிர்கொள்ள வேண்டிய சவால் அது தான். இனி முடிந்தளவுக்கு, வேறு நீண்ட காலம் எடுக்கும் எழுத்துப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். புதிய ஏதாவது ஒரு திறனைக் கற்க வேண்டும். என்னை புத்துருவாக்க வேண்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...