Skip to main content

ஹிருதயம்: திருட்டுக் காட்சிகளும் ஒரிஜினலான தருணங்களுமான கலவை

 




"ஹிருதயம்" எனும் மலையாளப் படத்தைப் பார்த்த போது என்னை வெகுவாக ஒரு விசயம் ஆச்சரியப்படுத்தியது. இப்போது மலையாள சினிமாவில் ஒரு புதிய அலை உண்டாகி இருக்கிறது. அலை என்றதும் பெரிதாக ஒன்றும் நினைத்து விட வேண்டாம். ஒரு படத்தில் இருந்து மொத்தமாகத் திருடினால் பிடிபடுவோம் என்று பல படங்களிலாக ஒவ்வொரு காட்சியாக எடுத்து கோர்த்து நடுநடுவே தமது சொந்தக் கதையையும் வழுக்கைத் தலையில் எண்ணெய் தடவியதைப் போல சேர்த்து ஒரு படமாக உருவாக்கி விடுகிறார்கள். ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களின் பார்முலாக்களின் அடிப்படையை கொண்ட காட்சிகள் இருப்பதனாலோ என்னவோ இப்படங்கள் நன்றாக ஓடியும் விடுகின்றன. சர்வதேச சட்டை பிரேண்டுகளின் போலிகள் சந்தையில் விற்பனையாவதில்லையா அது போல.


 இந்த அலையின் ஒரு முக்கியமான அம்சம் வெளிநாட்டுப் படங்களுக்குப் பதிலாக இந்திய படங்களில் இருந்து, குறிப்பாக தமிழ்ப் படங்களில் இருந்து, திருடுகிறார்கள் என்பது. இதில் மேலுமொரு சிறப்பு என்னவென்றால் தமிழர்களே இந்த டூப்ளிகேட் படங்களைக் கண்டு "செமையா இருக்கில்ல மச்சான்" என மெச்சி பேஸ்புக்கிலும் புரொமோட் பண்ணுகிறார்கள் என்பதே. ஒரு நண்பர் நம் வீட்டில் இருந்து சோபாவை, டிவியை, ஆபரணங்களைத் திருடி தன் வீட்டில் கொண்டு போய் வைத்து விட்டு நம்மையே தன் புதுமனை புகுவிழாவுக்கு அழைக்கிறார். நாம் அங்கே போய் நின்று "மச்சான் இந்த சோபா செமையா இருக்கே, உன் மனைவியின் கழுத்து ஆபரணங்கள் ரொம்ப அழகா இருக்கே" என்று பாராட்டுவதைப் போன்றது இது. அதுவும் சேட்டன்கள் தான் தமிழ்ப் படங்களை திருடித்திருடி படமெடுக்கிறார்கள் என்றால் கன்னடர்களும் ஒன்றும் மோசமில்லை. "கருட காமன விரிஷப வாஹன" என்றொரு படம் பார்த்தேன். ராஜ் பி ஷெட்டி நடித்து இயக்கியது. "சுப்பிரமணியபுரம்" (மிக அதிகமாக காப்பி அடிக்கப்பட்ட படம் இதுதான்) மற்றும் "பிதாமகனில்" இருந்து நிறைய உருவி இருந்தார். இந்த வரிசையில் அண்மையில் வந்திருக்கும் படம் தான் வினீத் ஶ்ரீனிவாசனின் "ஹிருதயத்தில்" எனக்குத் தெரிந்தே ஆறு மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் இருந்து காட்சிகளை உருவியிருக்கிறார்கள். (கூடுதலாகவும் இருக்கலாம்.) பட்டியலை கீழே தருகிறேன்:


1) ஆட்டோகிராப் - திருமணத்தில் காதலி வருவது போல பல காட்சிகள்

2) 96 - பள்ளிக்குப் பதிலாக கல்லூரிக்குப் போய் நினைவேக்கத்தில் உருகுவது; அதே போல வயலினை இழுப்பது

3) நண்பன் - விருப்பமில்லாமல் பொறியல் படித்து / பொறியியலாளனாக வேலை பார்த்து அதை விட்டுவிட்டு புகைப்படக் கலைஞன் ஆவது.

4) ஆயுத எழுத்து - செல்வாவின் பாத்திரம் "ஆயுத எழுத்தில்" சூர்யா நடித்த மைக்கேலின் பாவமான நகல்.

5) அர்ஜுன் ரெட்டி - காதல் பிரிவிற்குப் பின்னர் ஹீரோ தாடி வளர்த்துக் கொண்டு வன்முறையாளனாக, பெண்களைக் கண்டதும் படுக்கைக்கு அழைப்பவனாக மாறுவது.

6) பிரேமம் - கிரிராஜன் கோழி எனும் பாத்திரத்தை இதில் கேதராக மாற்றி இருக்கிறார்கள். கிரிராஜன் கோழி கடைசி வரை காதலி கிடைக்காமல் பந்தா பண்ணிக் கொண்டு அவமானப்பட்டுப் போகிறான் என்றால் கேதார் 12 வருடங்களாக பல பெண்களிடம் ஒரே இடத்தில் வைத்து அறை வாங்குகிறான். அந்த காபி ஷாப் கூட "பிரேமத்தில்" வரும் காட்சியை நினைவுபடுத்துகிறது. கேதார் தன் நண்பர்களுடன் அருணை அடிக்க வந்துவிட்டு அது அருண் தான் என அறிந்ததும் நொந்தபடி ஓடிச் செல்வது ஏதோ ஒரு தமிழ்ப்படக் காட்சியை நினைவுபடுத்துகிறது. எதுவென்று நினைவுபடுத்த முடியவில்லை (ஒண்ணு ரெண்டா இருந்தா தானே சட்டுன்னு நினைவுக்கு வரதுக்கு.)


ஆனால் இப்படத்தில் ரசிக்கத்தக்க இடங்கள் இரண்டு:


  1. அருண் தர்ஷனாவை காதலித்து அவளுடைய மனதையும் வென்ற பிறகு தன் நண்பன் ஆண்டனியுடன் அவனது காதலியை சந்திக்கப் போகிறான். அப்போது அக்காதலியுடன் வரும் ஒரு பெண் அருணை வெகுவாக ஈர்க்கிறாள். "உனக்கு காதலி உண்டா?" என்று அவள் கேட்க அவன் சபலப்பட்டு இல்லை என்கிறான். பின்னர் அவளுடன் நெருக்கமாக இருப்பதற்காக செல்ல அங்கே கலாச்சார காவலர்கள் வந்து எல்லா காதலர்களையும் துரத்துகிறார்கள். இதை பின்னர் தன் காதலியிடம் அவன் சொல்லவும் செய்கிறான். அவளோ கோபப்பட்டு அவனை துரத்தி விடுகிறாள். பின்னர் அவள் அருண் வேறு பெண்களுடன் இருக்கையில் மிகவும் பொறாமைப்படுகிறாள், அவனுக்காக ஏங்கிகிறாள். அதே சமயம் அவனிடம் நேரடியாக காதலைத் தெரிவித்து உறவை புதுப்பிக்கவும் அவள் தயாரில்லை. அவளுக்கு அவனித்து ஆசை உள்ள அளவுக்கு நம்பிக்கை இல்லை. அதுவும் அருணின் திருமணத்துக்கு வருகை தரும் அவள் அவனது முதலிரவு அறையை பார்வையிடுகிறாள். அங்கு அவனுக்கு மனைவியாகப் போகிறவளின் கவுனைப் பார்க்கிறாள். மேஜையில் இஸ்திரி பெட்டி காய்ந்து கொண்டிருக்கிறது. இரண்டையும் மாறி மாறிப் பார்க்கிறாள். அவள் ஒன்றும் செய்யாமல் திரும்பி வந்து விடுகிறாள். படத்தின் சிறந்த காட்சிகளில் ஒன்று இது. தனது திருமணத்துக்கும் அவள் பின்னர் அருணையும் குடும்பத்தையும் அழைக்கிறாள். அங்கு அருணின் மனைவியின் முன்பு அவன் மீது அவள் உரிமை கொண்டாடும் நோக்கில் தொட்டுத்த்தொடு பேசும் இடமும், தன் அவல நிலையை உணர்ந்து மனம் உடைந்து போவதும் கூட நன்றாக உள்ளது. தன் திருமணத்துக்கு முந்தின இரவு வரை அவள் அவன் தன்னிடம் வந்து விட மாட்டானா என ஆசைப்பட்ட படி இருக்கிறாள். ஆனால் அப்படி வந்தால் அவனை நிராகரித்து விடுவாள் என்பது வேறு விசயம்.

 பெரும்பாலான ஆண்களுக்கும் பெண்களுக்கும் இப்படி மனம் தடுமாறுவது இயல்பானது. அதுவும் இளமையில் எந்த இணையுடனும் திருப்தியுற முடியாமல் அடுத்து அடுத்து என ஏங்கிக் கொண்டிருக்கும் மனது. இதை பெரும்பலான இந்திய சினிமாக்கள் காட்டி நான் பார்த்ததில்லை. (பா. ரஞ்சித்தின் "அட்டக்கத்தி", பாலுமகேந்திரவின் "ரெட்டை வால் குருவி" விதிவிலக்குகள்.) இந்த கோணத்தில் படம் சென்றிருந்தால் மிகப் பிரமாதமான ஒரு எதார்த்த படமாக இருந்திருக்கும். காதலைப் பற்றிய பகடியாகக் கூட மாறி இருக்கும். அல்லது இருவரை ஒரே அளவுக்கு ஒருவர் காதலிப்பதன் ஆன்மீகத்தைப் பேசுகிற தஸ்தாவஸ்கியின்அசடன்" நாவலைப் போல ஒரு படமாக்கி இருக்கலாம்


இது தான் "ஹிருதயத்தின்" ஒரிஜினல் கதை என ஊகிக்கிறேன். ஆனால் அந்த ஒற்றை வரியை கதையாக்க முடியாததாலோ அல்லது அது வியாபாரமாகாது எனத் தெரிந்தோ இப்படி நிஜத்துக்கு பக்கத்தில் வரும் தருணங்களை நிகழ்த்தி விட்டு உடனே வெற்றி பெற்ற நொஸ்டேல்ஜிக் படங்களை காப்பி அடித்து காட்சிகளை உருவாக்கி கதையை வளர்க்கத் தொடங்கி விடுகிறார் வினீத் ஶ்ரீனிவாசன்.


2) தனக்கு வாழ்க்கையில் கிடைத்த ஒரு திறப்பைப் பற்றி அருண் தன் காதலியிடம் படத்தின் முடிவில் சொல்லுகிறான். தன் மனைவி குழந்தையுடன் படுக்கையில் கிடப்பதை அருகில் இருந்து அவன் காணும் போது வாழ்க்கையின் அர்த்தமே அது தான் என அவனுக்குத் தோன்றுகிறது. வாழ்க்கை பல்வேறு கட்டங்களால் ஆனது; ஒரு கட்டத்தில் தனக்கு நிறைய காதலிகளும், சாகசங்களும் தேவைப்பட்டது; இப்போது தன் குழந்தையும் அவளை எனக்களித்த தன் மனைவியுமே என் வாழ்க்கையை அர்த்தம் பொருந்தியதாக்குகிறார்கள் என்று தர்ஷனாவிடம் அவன் சொல்கிறான். இந்த இடம் படத்துக்கு ஒரு முழுமையை அளிக்கிறது. வினீத் ஶ்ரீனிவாசன் நிச்சயமாக ரஷ்ய இலக்கியமெல்லாம் படித்திருக்க மாட்டார் என்றாலும், எனக்கு இந்த இடம் "போரும் வாழ்வில்" லெவின் நட்டாஷாவை திருமணம் செய்து குழந்தை பெற்ற பின்னர் உணரும் அமைதியை, நிறைவை நினைவுபடுத்தியது.


இது போக இப்படத்தின் வேறு சிறப்பம்சங்கள் (3) சிறு பாத்திரங்களைக் கூட தெளிவாக தீட்டியிருக்கிறார்கள் என்பது. விடுதி வார்டன், மெஸ்ஸில் வேலை செய்யும் குள்ளப் பாத்திரம், சீனியர் பெண்ணான ஜஸ்லீன் என ஒரு பட்டியலே போடலாம். (4) அருணுக்கும் நித்யாவுக்குமான திருமண வாழ்வில் உள்ள முதிர்ச்சி. ஆனாலும் அதிலும் இன்றைய பெண்களுக்கு ஆண்கள் மீதுள்ள எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்படியாக திருமணமான அருணின் இயல்பை வடித்திருக்கிறார். அதை செய்யும் போதே நள்ளிரவில் காதலியை காண செல்லும் கணவனைபோய் வாங்கஎன மனைவி புன்னகையுடன் அனுப்பி வைப்பதாக ஒரு காட்சியையும் வைத்திருக்கிறார். எனக்குத் தெரிந்து எந்த மனைவியும் இதை செய்ய மாட்டார். வினீத் ஶ்ரீனிவாசனின் மனைவி கூட இந்த இடத்தில் இருந்தால் துடைப்பத்தால் அவர் மண்டையில் சாத்தியிருப்பார்.


"ஹிருதயம்" ஒரு wish fulfillment (ஆசை நிறைவேற்றப்) படம். அதாவது இளமை முதல் முப்பதுகள் வரை நமது வாழ்வில் என்னவெல்லாம் நடந்திருந்தால் அழகாக, மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என நினைக்கிறோமோ அதை கற்பனையில் காட்டி நம்மை குளிர்விக்கும் படம். (பெரும்பாலான நினைவேக்கப் படங்கள் இவ்வகையே.) உதாரணமாக, கல்லூரியில் ரேக் செய்யும் சீனியர்களை எதிர்த்தடிக்க வேண்டும், அவர்கள் முன்னால் ஒரு பெண்ணை அணைத்தபடி நடக்க வேண்டும், பார்த்த உடனே பிடித்த பெண்களுக்கு நம்மையும் உடனே பிடித்துப் போய் விட வேண்டும், எல்லாரும் நம்மை நேசிக்க வேண்டும், பெற்றோர்கள் உத்தமர்களாக, நம்மை எல்லா விதங்களிலும் புரிந்து கொண்டு ஆதரிக்கிறவர்களாக இருக்க வேண்டும், தினமும் 9-5 வேலைக்கு சென்ற நொந்து நூடுல்ஸாகாமல் சொந்த விருப்ப்படி படைப்பூக்கமான ஒரு பணியை செய்து உடனடியாக அதில் வெற்றி பெற்று பெரும் பணம் ஈட்ட வேண்டும், பழைய காதலிகள் சில பத்தாண்டுகளுக்குப் பிறகும் நமக்காக ஏங்கிக் காத்திருக்க வேண்டும் …. இப்படி பல கனவுகள். ஆனால் எதார்த்த உலகம் இவற்றுக்கு நேர்மாறாக இருக்கும். இப்படி நடைமுறையில் உப்புசப்பற்றவனாக வாழ்ந்து கொண்டே கனவு கொண்டிருப்பவர்களுக்கு இவற்றை எல்லாம் ஹீரோ பண்ணுவதாகக் காட்டினால் இப்படத்தை கைதட்டி வரவேற்பார்கள் என தெளிவாக திட்டமிட்டு (பல படங்களில் இருந்து காட்சிகளை உருவி) படத்தை கொண்டு செல்லுகிறார் இயக்குநர். பல கேரள மாணவர்கள் தமது பொறியயல் மற்றும் கலைப்படிப்பை தமிழகத்தில் முடித்தவர்கள் என்பதால் அவர்களால் தொடர்புறுத்தும் வகையில் படத்தை தமிழகத்தில் நிகழ்வதாகக் காட்டி இருக்கிறார்கள்.



பிரணவ் மோகன்லாலுக்கு சுத்தமாக நடிக்க வரவில்லை. மரமூஞ்சி. ஆனால் அந்த காலத்து அப்பாஸைப் போல க்யூட்டாக, ரசிக்கும்படியாக இருக்கிறார், அதாவது நடிக்க முனையாதவரை


எல்லாம் போகட்டும், இந்த படத்தைப் போய் ஏன் ஒரு கிளாசிக் எனும் அளவுக்கு ஊடகங்கள், மலையாளிகள், சில தமிழ் பேஸ்புக்கர்கள் கொண்டாடினார்கள்? ஒருவேளை 96 கொண்டாடிய அதே குரூப்பாக இருக்குமோ? இவர்கள் என்று எதார்த்த உலகுக்கு வருவார்கள்?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...