முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“மண்டியிடுங்கள் தந்தையே” - டால்ஸ்டாய் எனும் குரூரமான தந்தை பற்றின நுண்சித்திரம்



எஸ்.ராவின் இந்த புதிய நாவலின் தலைப்பு வெகு அழகானது. “மண்டியிடுங்கள் தந்தையேஎனும் கட்டளை. ஆனால் நாவலில் எங்குமே இக்கட்டளையை யாரும் பிறப்பிப்பதில்லை. ஆனால் டால்ஸ்டாய்க்கு குடும்ப உறவுக்கு வெளியே பிறந்த மகனான திமோஃபியின் உதடுகளில் சொல்லப்படாமல் தொக்கி நிற்கிற கட்டளை இது. கதையை வாசிக்கிற நாமும் டால்ஸ்டாயை நோக்கிமண்டியிடுங்கள் ஐயாஎனக் கேட்க நினைக்கிறோம், ஆனால் அவரது மகத்தான ஆளுமையை எண்ணி தயங்கி மௌனிக்கிறோம். இந்த கதையில், நம்மைப் போன்றே, திமோஃபி, அவனது தாயான அக்ஸின்யா, டால்ஸ்டாயின் பிள்ளைகள் ஆகியோரும் இதை நேரடியாக கோர முடியாமல் மௌனமாகி ஒதுங்கி நிற்கிறார்கள். ஆனால் டால்ஸ்டாயின் மனசாட்சி அவரை இறுதியில் மண்டியிடக் கோருகிறது. அது எப்படி நிகழ்கிறது, டால்ஸ்டாய் எப்படி எதிர்வினையாற்றுகிறார் என்பதே இந்நாவலின் ஒற்றை வரி. இத்தலைப்பின் மற்றொரு சிறப்பானது கதை இப்படியானது தான் எனும் உள்ளுணர்வை முதல் சில அத்தியாயங்களில் ஏற்படுத்தி விட்டு டால்ஸ்டாய் தனது மகனிடத்து மண்டியிடப் போகிறாரா இல்லையா எனும் புதிரை இறுதி வரை தக்க வைக்கிறது என்பது. ஆரம்ப நிலை வாசகர்களுக்கு ஒருவேளை இத்தலைப்பு ஒரு குழப்பத்தைக் கூட ஏற்படுத்தலாம். ஆனால் மேற்சொன்ன காரணங்களாலே எனக்கு இத்தலைப்பு பிடித்திருந்தது


கடந்த ஆண்டு எஸ்.ரா வெளியிட்ட ஒருவிடுமுறைக்கால காதல் கதையைப்போன்றே இந்நாவலும் சிறியது. ஒரே நாளில் நீங்கள் வாசித்து விடத்தக்கது. (விசித்திரமாக இரு நாவல்களையும் அந்தந்த ஆண்டுகளின் ஜனவரி 19 அன்று சரியாக வாசித்து முடித்திருக்கிறேன் என பேஸ்புக் மெமரீஸில் காட்டியது.) அந்த நாவலைப் போன்றே இதன் கதையமைப்பும் எளிமையானது; இதன் கதைக்கருவும் உறவுகள், தனிமனித வாழ்வில் வரும் தடுமாற்றங்கள், இழப்புகள், தனிமை, அதையும் மீறி மனிதன் போராடுவதைப் பற்றியது. திருடப் புகுந்த வீட்டின் இருட்டில் கள்வனின் கையில் கிடைத்த ரத்தினங்களைப் போல இரண்டு நாவல்களிலும் எஸ்.ராவின் அழகிய கவித்துவமான மொழித்தெறிப்புகள் தனியாக மிளிர்கின்றன. இந்த மொழிக்காகவே படிக்கலாம் என்று தோன்றுமளவுக்கு சிரத்தையெடுத்து அத்தியாயங்களை அவர் அமைத்துள்ளது தனியாக தெரிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்ய வாழ்க்கை, டால்ஸ்டாயின் குடும்ப உறுப்பினர்கள், யாஸ்னயா பண்ணை, அங்குள்ள நடைமுறைகள் குறித்த நுண்தகவல்களை அவர் உறுத்தாத விதம் அங்கங்கே கோர்த்துள்ள விதம் நம்மை கவர்கிறது.


 பெரும்பாலான அத்தியாயங்களை டால்ஸ்டாயின் வாழ்வில் வரும் ஒரு நெருக்கடி அல்லது அவரது பண்ணைக்கு வரும் புதிய நபர்கள் அல்லது அவர் மேற்கொள்ளும் பயணம், இந்த பின்னணியில் டால்ஸ்டாயின் மனைவி சோபியா, திமோஃபி ஆகியோரின் மனநிலையில் ஏற்படும் மாற்றம் அல்லது அவர்களுக்கு ஏற்படும் ஒரு திருப்பம் என சித்தரித்து ஒருவித அழுத்தத்துடன் முடிக்கிறார். அல்லது கொந்தளிப்பான காட்சியொன்றுடன் அத்தியாயத்தை ஆரம்பித்து விட்டு ஒரு அழகான அமைதியான இயற்கைக்காட்சி அல்லது மனிதர்களின் நன்மையை, அழகை சித்தரிக்கிற ஒரு பிம்பத்துடன் அதை முடிக்கிறார். இது நாவலின் அத்தியாயங்களுக்கு ஒரு முழுமையை, நிறைவை அளிக்கிறது. இதை ஒரு பாணியாக நாவல் முழுக்கவே கையாண்டிருக்கிறார்


இலக்கிய / கலை ஆளுமைகளின் வாழ்க்கையில் இருந்து தகவல்களை எடுத்து அல்லது சில சம்பவங்களால் ஊக்கம் பெற்று, அந்த ஆளுமைகளை பாத்திரமாக்கி ஒரு நாவலை எழுதுகையில் நான்கு வகைகளில் அதை  எழுத முடியும்.

 

1) அந்த கலைஞனைக் குறித்த தொன்மத்தை எடுத்து அதை நிறைய படைப்பு சுதந்திரத்துடன் விரித்தெடுத்து ஒரு வாழ்க்கைப் பார்வையை, தத்துவத்தை பேசுவது, ஒரு விவாதத்தை உண்டு பண்ணுவது. அதாவது கருத்தியல் தளத்தில் ஒரு கலைஞனின் வாழ்வை அலசுகிற நோக்கத்தில் நாவலை படைப்பது. ஓவியர் கௌகுயினின் வாழ்க்கையை சித்தரிக்கிற விதமாக சாமர்ஸெட் மாம் எழுதிய The Moon and Sixpence நாவலை உதாரணமாக சொல்லலாம். எனக்குப் பிடித்த நாவல்களில் ஒன்று இது. முழுக்க  ஒரு திட்டமிட்ட நோக்கத்துடன், விமர்சன நோக்கம் அல்லது பிரச்சார தொனியுடன் தமிழ் படைப்பாளுமைகளைப் பற்றி ஜெயமோகன் எழுதியுள்ள அஞ்சலிக் கட்டுரைகள் (அவற்றில் உள்ள கற்பனையை வைத்து), தி.ஜா, சு.ரா போன்றோரை தன்னுடைய கோணத்தில், அரசியல் பார்வையில் சித்தரிக்கிற நாவல்கள், சிறுகதைகளையும் இந்த வகைமையின் மோசமான உதாரணங்களாக குறிப்பிடலாம். அதேநேரம் இத்தகைய காழ்ப்புணர்வு இல்லாமல் அவர் சில அரசியல் மற்றும் சமூகப் போராளிகளைப் பற்றி எழுதி தனது அவரதுஅறம்தொகுப்பில் சேர்த்துள்ள லட்சிய உணர்வெழுச்சி மிக்க கதைகள் இவ்வகைமையில் வரக்கூடிய சிறப்பான உதாரணங்கள்.


2. இதே போல புறவயமாக ஒரு கலைஞனின் வாழ்க்கையை அணுகி அதை ஒரு உளவியல் அலசலாக, குறுக்குவெட்டுத் தோற்றமாக முன்வைக்கிற சிறுகதைகள் உண்டு. இந்த படைப்புகளில் படைப்பாளுமையின் சித்திரம் அவரைப் பற்றிய பொதுச்சித்திரத்தில் இருந்து பெரிதும் மாறுபடாமல், அரசியல், லட்சியவாத குறுக்கீடுகள் இல்லாமல் உருவாக்கப்பட்டிருக்கும். ஜி.நாகராஜன் குறித்து எழுதப்பட்ட சிறுகதைகளான அசோகமித்திரனின்விரல்’ (1984), திலீப்குமாரின்ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும்’ (1985), பிரபஞ்சனின்ஒருநாள்’ (1993), சுந்தர ராமசாமியின்நண்பர் ஜி.எம்.’ (2004), சி.மோகனின்விலகிய கால்கள்’ (2015) மற்றும் .ராமசாமி எழுதிய நாடகத்தை இங்கு குறிப்பிடலாம்.


3. எழுத்தாளன் தான் விரும்பும் வகையில் அந்த கலைஞனின் ஆளுமையை உருமாற்றி முழுமையான ஒரு கற்பனைப் பாத்திரமாகவே ஆக்கி விடுவது. நான் தனிப்பட்ட முறையில் சிறந்த தேர்வு என எண்ணுவது இந்த பாணியைத் தான். ஜெ.எம். கூட்ஸி எழுதிய The Master of Petersburg (1994) இவ்வகையில் என்னை மிகவும் கவர்ந்த நாவல். கூட்ஸியின் படைப்பில் நாம் காணும் தஸ்தாவஸ்கி நாம் தஸ்தாவஸ்கியின் நாவல்களில் காணும் மனிதரல்ல, நாம் வாழ்க்கைக் குறிப்புகளில் எதிர்கொண்டுள்ள மனிதரல்ல. தனது Disgrace (தமிழில்மானக்கேடுஎன ஷஹிதாவால் மொழியாக்கப்பட்டிருக்கிறது.)  எனும் நாவலின் பிரதான பாத்திரமாக வரும் டேவிட் ரூரியின் அதே அமைப்பில் தான்பீட்டர்ஸ்பெர்கின் நாயகன்நாவலில் கூட்ஸி தஸ்தாவஸ்கியையும் மீளுருவாக்குகிறார். நாம் முற்றிலும் இதற்கு கண்டிராத மற்றொரு மனிதராக இதில் அவர் பீட்டர்ஸ்பெர்க் தெருக்களில் நடமாடுகிறார். பெண்ணுடலை இச்சிக்கிறார், கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகிறார், பிளவுண்ட மனநிலையில் இருந்து உலகைப் பார்க்கிறார். இந்த தஸ்தாவஸ்கி நிஜ தஸ்தாவஸ்கி அல்ல; சல்மான் ரஷ்டி தனது கட்டுரை ஒன்றில் ஆப்பிள் கம்பனி விளம்பரத்தில் வருகிற காந்தி ஒரு சாரமற்ற குறிப்பான இருக்கிறார் என்று கூறுகிறார் அல்லவா, அத்தகைய ஒரு பின்நவீன தோற்றமாக தஸ்தாவஸ்கி கூட்ஸியின் நாவலில் இருக்கிறார். அதே நேரம் எதார்த்த நாவலாகவும் கூட்ஸி இதை தக்க வைக்கிறார்.


4. இறுதியாக, ஒரு ஆளுமையை அவரது படைப்புகளிலும், வாழ்க்கைக் கதையிலும் வரும்படியே மீளுருவாக்குவது, அதே நேரம் சொல்லப்படாத ஒரு கதையை மட்டும் பெரிய உறுத்தல்கள் இல்லாதவிதம் வெகு கௌரவத்துடன் சொல்லிச் செல்வது. எஸ்.ராவின் நாவல் இவ்வகைப்பட்டது. வண்ணதாசன் தனது பேஸ்புக் குறிப்பொன்றில் சொல்லியதைப் போன்றுமண்டியிடுங்கள் தந்தையேநமக்கு மலையாள எழுத்தாளர் பெரும்பாவூர் ஶ்ரீதரனின்ஒரு சங்கீர்த்தனம் போலேஎனும் தஸ்தாவஸ்கி பற்றின நாவலை நினைவுபடுத்துகிறது. ஆனால் எழுத்தின் தரத்தைப் பொறுத்தமட்டில் எஸ்.ராவின் நாவல் பலமடங்கு மேலானது. ஶ்ரீதரனின் நாவலில் தஸ்தாவஸ்கி கேரளாவில் லுங்கியை மடித்துக்கட்டிக் கொண்டு பீடி புகைக்கிற ஒரு நாயரைப் போலத் தோன்றுவார். ஆனால் எஸ்.ராவின் டால்ஸ்டாய் எந்த தமிழ்ப்படுத்தப்படாமல் நேர்மையாக உருவாக்கப்பட்டுள்ளார்


இந்நாவலின் குறைகள் என்று இரண்டு விசயங்களைக் குறிப்பிடலாம்:


1) அந்த காலத்து சமூகச்சூழல் மற்றும் குடும்ப அமைப்பின் அழுத்தங்களால், தன்னலத்தால் டால்ஸ்டாயால் தனது மகனான திமோஃபியை  ஏற்க முடியாமல் போகிறது. திமோஃபிக்கு இது சிறுவயது முதலே மனதில் ஆறாத ரணமாக இருக்கிறது. அவனை ஒரு முரடனாக, தன்வெறுப்பாளனாக, தன்னிரக்க மிக்கவனாக இது மாற்றுகிறது. இதன் பின்னர் அவன் தன் பயணங்களால் உருமாறி முதிர்ச்சியானவனாகிறான். அவனுடைய வாழ்வில் அடுத்தடுத்து வரும் துன்பியல் நிகழ்வுகள் அவனை பின்னுக்குத் தள்ளுகின்றன. அடுத்து ரஷ்யாவில் கடும் பஞ்சம் வருகிறது. பல்லாயிரம் ஏழைகள் கொத்துக்கொத்தாய் பட்டினி கிடந்து சாகிறார்கள், அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது, டால்ஸ்டாய் களத்தில் இறங்கி தன்னாலான உதவிகளை மக்களுக்கு செய்கிறார். இந்த தொண்டு நடவடிக்கைகளில் டால்ஸ்டாய்க்கு உதவுகிறவனாக திமோஃபி இருக்க, அது அவன் பால் டால்ஸ்டாய்க்கு அணுக்கத்தை, பாசத்தை ஏற்படுத்துகிறது. அதாவது தனக்கு குடும்பவழியாக பிறந்த பிள்ளைகளுக்கு அவர் அங்கீகாரத்தைக் கொடுக்கிறார்; திமோஃபிக்கு அவர் அதைத் தரவில்லை என்றாலும் தன் மனதுக்கு நெருங்கியவனாக அவர் அவனைக் கருதுவதுடன் நாவல் முடிவுக்கு வருகிறது.

 இன்னொரு பக்கம், டால்ஸ்டாயின் வயோதிகம், அவருடைய லட்சியவாதம், ஆன்மீக நம்பிக்கைகள் ஆகியவை அவரின் பால் பிறருக்கு ஏற்படுத்துகிற முரண்பாடுகள், விரோதம், வாழ்வின் பல அழகுகள், சுவாரஸ்யங்கள் மீது அவர் ஒரு கட்டத்தில் ஆர்வம் இழந்து மிகவும் வெறுத்துப் போவது, கடைசியில் இயற்கையிடம் திரும்புவதே தனக்கு மீட்சி தரும் என புரிந்து கொள்வது (இந்த இடம் தோரோவின் எழுத்தை நினைவுபடுத்துகிறது) நாவலின் இன்னொரு முக்கியமான உபகதையாகிறது.


 அப்பா-மகன் முரண், அவர்களின் இருவரின் வாழ்விலும் தோன்றும் சிக்கல்கள், நெருக்கடிகள், வாழ்க்கை மீது அவர்கள் கொள்ளும் அவநம்பிக்கை, அதைக் கடந்து வரும் அவர்கள் முதிர்ச்சி பெறுவதே நாவலின் கதையமைப்பாகிறது. ஆனால் ஒன்று இதை எஸ்.ரா ஒரு 80 பக்க குறுநாவலாக எழுதியிருக்க முடியும். அல்லது 248 பக்கங்களிலும் இந்த சிக்கல்களை நோக்கியே நாவலை செலுத்தி தீவிரமாக, பிசிறின்றி எழுதியிருக்க முடியும். ஆனால் நாவல் ஆரம்பித்த சில அத்தியாயங்களில் - துல்லியமாக சொல்வதானால் 58வது பக்கத்தில் இருந்து 167ஆம் பக்க வரை - கதையோட்டத்தை மீறி நாவலை அவர் வேறெங்கோ அழைத்து செல்லுகிறார். டால்ஸ்டாயின் வாழ்க்கையின் சுவாரஸ்யமான சம்பவங்கள், அவருடைய இயல்பு, நடைமுறை, சிந்தனைகள் என்று எஸ்.ரா விவரித்தபடி செல்கிறார். சோபியாவின் மனவமைப்பை சித்தரிக்கிற நாட்குறிப்புகள் வெகுசிறப்பாக இருந்தாலும், அவையும் டால்ஸ்டாயின் வாழ்க்கையைப் பற்றின சுவாரஸ்யமான சேதிகளும் நாவலின் கதைவளர்ச்சிக்கு எந்தவிதத்திலும் பயன்படவில்லை

இது இந்நாவலின் ஒரு முக்கியமான பலவீனம் - திமோஃபியின் ஒடுக்கப்பட்ட வாழ்க்கையை, அவனுடைய நெருக்கடியை, மீட்சியை பேசும் நோக்கில் எழுத ஆரம்பித்த எஸ்.ரா சட்டென டால்ஸ்டாய் பற்றின ஒரு பொதுவான வாழ்க்கைக்கதையாக இதை மற்றொரு திசையில் எடுத்துப் போய் விடுகிறார். அந்த 109 பக்கங்களை வெளியே எடுத்துவிட்டால் இது 141 பக்கங்களில் ஒரு கச்சிதமான நாவலாக உருப்பெற்று விடும்.


2) துன்பத்தை, தன்னிரக்கத்தை, சில நேரங்களில் சுயவதையை சிலாகிக்கிற, கவித்துவமாக உயர்த்திப் பிடிக்கிற கற்பனாவாத போக்கை நாம் ரெண்டாயிரத்து ஐந்துக்குப் பிறகான எஸ்.ராவின் கதைகளில், நாவல்களில் தொடர்ந்து காண்கிறோம். அதாவது சில படைப்பாளிகள் புரட்சியை, தனிமனித நாயக சாகசங்களை, காதலை ரொமாண்டிசைஸ் பண்ணினால் எஸ்.ராவோ துயரத்தின் பாணனாக தன்னை மாற்றிக் கொண்டு அதை மிகைப்படுத்தி மெலோடிராமா ஆக்குகிறார். அந்த குறைமண்டியிடுங்கள் தந்தையேநாவலில் உண்டு

ஆனால் எஸ்.ராவிடம் மட்டுமல்ல ஜெயமோகன் உள்ளிட பிற சமகால படைப்பாளிகள் மற்றும் இளம் எழுத்தாளர்களிடமும் நாம் இத்தகைய மெலோடிராமாவை இன்று அதிகமாக பார்ப்பதால் இது ஒருவேளை நமது இன்றைய பண்பாட்டின் ஒரு போக்கோ என்றும் யோசிக்க வேண்டி உள்ளது!


எஸ்.ராவின் பிற நாவல்களுடன் ஒப்பிடுகையில் கடந்த இரு வருடங்களாக அவர் வெளியிட்டுள்ள இரண்டு நாவல்களும் வாசிக்க சிக்கலற்றவை, சுவாரஸ்யமானவை, அளவில் சிறியவை. ஒரு நாளில் வாசித்து முடிக்கத்தக்கவை. சிறிய குறைகளைக் கடந்து  ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தை நல்குபவை. குறிப்பாகமண்டியிடுங்கள் தந்தையேநாவல் டால்ஸ்டாயை, சோபியாவை, திமோஃபியை தமிழ் மனதுக்கு அவ்வளவு நெருக்கமான மனிதர்களாக்குகிறது. டால்ஸ்டாய் என்றால் யாரென்றே அறியாத வாசகன் கூட இதைப் படித்து விட முடியும். அவனை பெரிய சிரமத்துக்கு உள்ளாக்காமல் 19ஆம் நூற்றாண்டின் ரஷ்ய உலகை அவன் முன்பு கொண்டு வருகிறார் எஸ்.ரா. நாவலின் மைய சிக்கலை திறம்பட இறுதி அத்தியாயங்களில் தீர்த்து வைத்து நமக்கு திருப்தியையும் நம்பிக்கையும் அளிக்கிறார். ஒரு பக்கம் லட்சிய மனிதனாக, சமூக சேவகனாக, நீதிவானாக, பெரும் படைப்பாளியாக இருக்கிற டால்ஸ்டாய் குடும்பம் உறவுகளைப் பொறுத்து, குறிப்பாக ஒரு தந்தையாகவும் கணவனாகவும், எந்தளவுக்கு குரூரமானவராக, நெஞ்சி ஈரமற்ற மனிதனாக இருந்திருக்கக் கூடும் என எஸ்.ரா காட்டுகிறார். இதற்காகவே எஸ்.ராவின் ஆரம்பநிலை வாசகர்களுக்கும், டால்ஸ்டாயின் ரசிகர்களுக்கும் இந்நாவலை பரிந்துரைக்கலாம்.


வெளியீடு: தேசாந்திரி பதிப்பகம்

விலை: ரூ 350


நன்றி: உயிர்மை, பிப்ரவரி, 2022



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.