Skip to main content

பெற்றோர்களின் அட்ராசிட்டிகள்

 

ஒரு செய்தியைப் படித்தேன். தமிழகத்தின் சிறுநகரம் ஒன்றை சேர்ந்த இரு இளம்பெண்கள். தன்பால் விழைவாளர்கள். கல்லூரியில் ஒருவர் நர்ஸிங் படிக்க மற்றொருவர் ஆங்கில இலக்கியம் இளங்கலை முதலாமாண்டு படிக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். சேர்ந்து வாழ முடிவெடுத்து சென்னைக்கு ஓடி விடுகிறார்கள். பெற்றோர்கள் போலீஸில் வழக்கு கொடுத்து இப்பெண்களை பிடித்து கொண்டு போய் விடுகிறார்கள். “போலிசார் இப்பெண்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்என சன் நியுசில் சொன்னார்கள். அப்படி அறிவுரை சொல்லும்படி என்ன குற்றம் பண்ணினார்கள்? காதலிப்பது குற்றமா? லெஸ்பியனாக இருப்பது குற்றமா? இந்த பாலின அரசியல் புரிதலற்ற போலிசாரை திருத்த முடியாது. அதை விடுங்கள். உண்மையான பிரச்சனை இனிமேல் தான் ஆரம்பிக்க இருக்கிறது. அடுத்தடுத்து இப்பெண்களின் பெற்றோர்கள் என்ன செய்வார்கள் என சொல்லி விடுகிறேன். ஏனென்றால் இதைப் போல நிறைய கேஸ்களைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்:


  1. இப்பெண்களை அவரவர் குடும்பங்களில் இருந்து சில போலி உளவியலாளர்கள், மருத்துவர்களிடம் அழைத்துப் போவார்கள். எதற்கு? தன்பால் விழைவு தப்பு என மூளைச்சலவை செய்ய. அது எடுபடாது. அதானால் அடுத்து இவர்களுடைய உடம்பில் எஸ்டிரஜன் ஹார்மோனை அதிகமாக்க மருந்துகளை ஏற்றுவார்கள். இந்த சிகிச்சைக்கென கணிசமான ஒரு தொகையை இம்மருத்துவர்கள் வசூலிப்பார்கள் (இப்படி ஒருவர் முன்பு ஜு.வியில் பத்தி ஒன்றைக் கூட எழுதிக் கொண்டிருந்தார்.) இந்த சிகிச்சையும் பலன் தராது.
  2. இந்த பெண்கள் தம் பெற்றோரை ஒருவழியாக ஏமாற்றி பட்டப்படிப்பை முடிப்பார்கள். ஒன்று அவர்களுடைய பழைய காதல் முறியும், புது காதல்கள் பிறக்கும், அல்லது பழைய காதலையே தொடர்வார்கள். படிப்பு முடிந்ததும் பெற்றோர்கள் இவர்களுக்கு வரன் பார்க்க ஆரம்பிப்பார்கள். உடனே கல்யாணம் பண்ணிக்கோ என நச்சரிப்பார்கள். இப்பெண்களுக்கும் பெற்றோருக்கும் மோதல் வெடிக்கும். “நாங்க கேட்கிறது படி கல்யாணம் பண்ணிக்கோ, அதன் பிறகு என்ன எழவுன்னாலும் பண்ணித்தொலைஎன்பார்கள். ஒரு மறைமுக ஒப்பந்தம். அதைத் தொடர்ந்து திருமணம் நடக்கும்.
  3. தான் மணப்பது ஒரு தன்பால் விழைவாளரை என்று உணராமலே ஒரு மரமண்டை இவர்களை கல்யாணம் பண்ணிக்கும். அடுத்து தாம்பத்ய வாழ்வில் பல பிரச்சனைகள் வெடிக்கும்.
  4. சொல்லி வைத்தது போல ஆறு மாதத்தில்லோ ஒரு வருட முடிவிலோ அந்த பெண் மூட்டை முடிச்சை தூக்கிக் கொண்டு தன் பெற்றோரின் வீட்டுக்கு வந்து விடுவார். முதலில் போலீஸ், மருத்துவர்கள் என தய்யத்தக்கா என குதித்த பெற்றோர் இப்போது அமைதியாக / கமுக்கமாக தம் மகளின் முடிவை ஏற்றுக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்களுக்குத் தேவை சமூகத்தின் வாயை மூட ஒரு கல்யாணம் பண்ணி வைப்பது. தம் மகளிடம்குற்றமில்லைஎன்று ஊருக்கு காட்டுவது. இதனால் அப்பாவி ஆண் ஒருவனின் வாழ்க்கை நாசமாவதைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை.
  5. அடுத்தது, பெற்றோர் தம் பெண்ணுக்காக விவாகரத்து நோட்டீஸ் அனுப்புவார்கள். அதில் கணவன் அவளை கொடுமை செய்தான், தாம்பத்ய சுகம் அளிக்கவில்லை, உளநெருக்கடி கொடுத்தான் என குற்றச்சாட்டுகளை அடுக்குவார்கள். அவர்கள் தரப்பில் சுமூகமான விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் வருடக்கணக்கில் இப்பிரச்சனை ஓடும். பெரும்பாலும் சீக்கிரமாகவே முடித்து விடுவார்கள்
  6. இப்பெண்கள் இப்போதுவிடுதலைபெறுவார்கள் - வேலை ஒன்றை தேடிக் கொண்டு சுதந்திரமாக இருப்பார்கள். தம் காதலியுடன் சேர்ந்து வாழ்வார்கள். பெற்றோர் இதை கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால் இவர்கள் இடையே மாட்டி சில ஆண்கள் வாழ்வை இழப்பார்கள். எப்படி இருக்கிறது இவர்களுடைய அறம்?

இது போல தன்பால் விழைவாளரான ஆண்களை வற்புறுத்தி மணமுடித்து வைக்கும் பெற்றோரும் உண்டு. அதனால் பெண்களின் வாழ்க்கை இன்னொரு பக்கம் நாசமாகிறது.


இதற்கு தீர்வு ஊடகங்களில் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி பிரச்சாரம் மேற்கொள்ளுவது, பெற்றோரைத் திருத்துவது, குழந்தைகளை வற்புறுத்தி மணமுடித்து வைக்கும் பெற்றோருக்கு ஐந்து வருடங்களாவது சிறைத்தண்டனை கொடுப்பது. இந்த போலி மருத்துவர்களுக்கு கடுமையான தண்டனை அளித்து அவர்களுடைய சான்றிதழ்களை பறிப்பது.


என்னவொரு காட்டுமிராண்டி சமூகம் இது!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

போலி அறச்சீற்றம்

  ஜெயமோகனின் அறச்சீற்றப் பதிவில் ஒரு அரசியல் உள்ளோட்டத்தைப் பலரும் கவனிக்கவில்லை. வைரமுத்து துணை-ஜனாதிபதியின் செல்வாக்கில் விருதை வென்றார் என ஒரு கூற்று. அதேசமயம் இதற்கு முன்பு வைரமுத்து இவ்விருதுக்காக முயன்றபோது தான் கடுமையாக எதிர்த்ததாகவும், விருது அவருக்கு நழுவிப் போனதாகவும் சொல்கிறார். இதன் பொருள் ஜெயமோகன் இங்கு பேசுவது வைரமுத்துப் பிரச்சினை அல்ல உட்கட்சி மோதல் பிரச்சினையைத் தான் என்பது. அதாவது. ஆர்.எஸ்.எஸ், பாஜகவுக்குள் இருக்கும் உட்குழுக்களில் எதையோ ஜெயமோகனைப் போன்றவர்கள் பிடித்து செல்வாக்கு செலுத்த முயல வைரமுத்து இவர்களையும் மீறி ராதாகிருஷ்ணனைப் பிடித்து காரியம் சாதித்துவிட்டார் என்று ஜெயமோகன் எண்ணுகிறார். இது அவரது குறிப்புக்குள் ஓடுகிற உள்ளோட்டம். வெளியே வைரமுத்து இலக்கிய மதிப்பற்ற சகதி, அவருக்கெல்லாம் தகுதியில்லை, அவருக்கு எதிராக நாம் திரண்டு வேலை செய்ய வேண்டும் எனும் உணர்ச்சிகரமான அறைகூவல் வருகிறது. நாம் இந்த அறைகூவலையே அதிகம் கவனிக்கிறோம். ஜெயமோகன் வேறு யாருக்கோ ஏதோ ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறார். அவர் தன்னை செல்வாக்கு மிக்க ஒரு அதிகார முகவராகக் காட்டிக் கொள்ள ...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...