ஐ தமிழ் யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கங்கை அமரன் “கோபப்பட்டதாக” நான் நம்பவில்லை. அது அவர் எடுத்த ஒரு வியூகம். கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பாமல் இருக்கையில் மக்கள் செய்வது சீறுவது, கத்துவது, திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லுவது. பேட்டியாளரின் அணுகுமுறையும் தவறே. “ஊரில் இப்படி சொல்றாங்களே அதுக்கு உங்க பதில் என்ன?” என்கிற கேள்வியே தவறு. தகவல்பூர்வமாக, ஆதாரத்துடன் ஒரு கேள்வியை வைக்கலாம். அதற்கு கேட்பவரே பொறுப்பேற்கவும் வேண்டும். அடுத்து பேட்டி அளிப்பவர் எதிர்கேள்வி கேட்டால் அதற்கு பதிலும் அளிக்க இயல வேண்டும். ஸ்டாலினும் திருமாவும் முற்போக்கு அரசியலை பேசுவதால் அவர்களை அம்பேத்கருடன் ஒப்பிடலாம், மோடியை அவ்வாறு செய்ய முடியாது எனத் தெளிவாகக் கூற வேண்டும். “ஒப்பிடுவது என் இஷ்டம், எனக்கு ஜாங்கிரி பிடிக்கும் என்றால் பிடிக்குமுன்னு தான் சொல்றேன்” என்று அவர் சொன்னால், ஜாங்கிரியும் அம்பேத்கரும் ஒன்றல்ல, இதை கருத்துரீதியான ஒப்பீடு, விருப்ப வெளிப்பாடு அல்ல என்று கூற வேண்டும். உரையாடல் இல்லாமல் என்ன பேட்டி?
அப்புறம், பேட்டியாளர் தான் பேட்டி எடுப்பவரை பேச விட வேண்டும். குறுக்கே வந்து திரும்பத் திரும்ப அதே கேள்வியை, கேள்விக்கான விளக்கத்தை தரக் கூடாது. “சதயம்” படத்தில் மோகன்லால் சொல்லுவார், நீதிமன்றத்தில் ‘நீ அந்த வழியே போய் இடப்பக்கம் திரும்பினாயா’ என்று கேட்டால் ஆம், இல்லை என்று மட்டுமே பதிலளிக்க வேண்டும். இடப்பக்கம் போய் வலப்பக்கம் திரும்பினேன் என்று சொன்னால் ஏற்க மாட்டார்கள்.” என்று. இந்த பேட்டியாளரின் அணுகுமுறையும் அப்படியே. அந்த விதத்தில் கங்கை அமரன் அவரைக் கையாண்ட விதமும் சரியே. உங்கள் பேச்சை மதித்து கேட்காதவரை ஒருமையில் கூட அழைக்கலாம், தப்பில்லை.
கடைசியாக, அவருக்கே இதைப் பற்றி பேச விருப்பம் இல்லையென்றால் ஏன் கேட்கிறீர்கள்? நீங்க பேட்டி எடுக்குறீங்களா இல்லை வழக்கு நடத்துறீங்களா? பேட்டி என்பது ஒருவரை உளவியல் ரீதியாக வதைப்பது அல்ல.
Comments