முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எலி

 


எலி


நடைபாதையின் பாதாள சாக்கடை மூடி 

திறந்து கிடக்கிறது

ஒரு எலியின் சிறிய தலை 

எட்டிப் பார்க்கிறது

ஒரு பெரிய குப்பைத் தொட்டி

தளும்பி வழிகிறது

எலி கண்ணிமைக்கும் நேரத்தில் 

முழுமையாக தன்னை வெளிப்படுத்துகிறது

அதை விட வேகமாய் 

சுற்றுமுற்றும் விழிகளைத் திருப்பி விட்டு

ஒரே பாய்ச்சலில் ஒரு துண்டு சப்பாத்தியை எடுத்துக் கொண்டு

உறைவிடத்துக்குத் திரும்ப

நினைக்கிறது

கடைவாயிலில் ஒரு பழுப்பு நிற தெய்வம்

மேலே இருந்து நோட்டமிடுகிறது

எலி மீண்டும் துரிதமாக

பின்னால் கண்களை ஓட்டி விட்டு

தன் சிறிய கால்களால்

சாக்கடைக் குழாய்க்குள் திரும்புகிறது

தெய்வம்

மிக மெதுவாக நிதானமாக பதமாக 

ஒவ்வொரு படியாக தாவி இறங்குகிறது

ஓரிடத்தை தேர்வு செய்து

உட்கார்கிறது

நானே இந்த படிக்கட்டு

நானே இந்த நடைபாதை

நானே இந்த குப்பைத்தொட்டி,

நானே இந்த தெருமுனை,

நானே இங்கு கலகலக்கும் ஜனத்தொகை

இங்கு ஏமாறுகிறவர்கள் ஏமாற்றுகிறவர்களும்

நானே

இங்கு சாலையோரம் தேங்கிய நீரில்

மினுங்குகிற நட்சத்திரங்களும்,

நானே

 அதற்கு கீழும்

அதற்கு மேலும்

ஒளிரும் தெருவிளக்கும் நானே


நானே ஒவ்வொன்றையும் இங்கு

 செலுத்தும் ஆற்றல்

நானே ஒவ்வொன்றாலும்

 செலுத்தப்படும் ஆற்றல்


நானே வாழ்தல்

நானே மரணம்

நானே சர்வம்

நானே இன்மை


அதற்கு உட்கார்ந்து முதுகுவலிக்கிறது

அது அழகாக படுத்துக் கொண்டு

தன் நீட்டின முன்னங்கால்களில்

தலையை வைக்கிறது


நிமிடங்கள் சொட்டிச் சொட்டித்

தளும்புகின்றன

எலி இருட்டுக்குள் இருந்து

தன் கண்கள் மட்டும் உயர

நகரும் கூண்டின் கம்பிகளைப் போல

பின்னிப் பின்னி கடந்து போகும்

 பல கால்களின் நடுவே கிடக்கும்

சப்பாத்தித் துண்டை பார்த்தபடி இருக்கிறது

 தெய்வம் கொட்டாவி விடுகிறது

அது கவனமாக பார்த்தபடி இருக்கிறது

அதே சமயம் மற்றொரு கோணத்தில்

தெய்வம் அசையாமல் இருக்கிறது

தெய்வம் காலாதீதமாக இருக்கிறது

இதில் எதை நம்புவது

என எலிக்குப் புரியவில்லை


இத்தனை நூறு நூறு கால்களில்

ஒன்று கூட எப்படி என் உணவை 

மிதிக்காமல் இருக்கிறது?

இதை எப்படி நம்புவது?

எலிக்குப் புரியவில்லை

வயிற்றில் பசியின் கனலுடன்

அது எனக் காத்திருக்கிறது


எதிரே நிறைய மனிதர்கள்

நீரில் மிதக்கும் எண்ணெய்யில் தெரியும்

வண்ணங்களைப் போலத் தெரிகிறார்கள்

அவர்களில் ஒருவர்

ஒரு குடியிருப்பு வாயிற் கதவைப்

 பார்த்தபடி நிற்கிறார்

வெளியே ஒரு குடும்பம் வருகிறது

பைக்கில் கணவர்

குழந்தையுடன் மனைவி இருக்கையின் பின்னே

ஏறப் போகிறார்

அந்த மனிதரின் மனைவி 

இவரிடம் சென்று 

தன் ஊர், பெயர் விபரங்களைச் சொல்லி

தன் கணவருக்கு அங்கு

காவலாளி வேலை கிடைக்குமா

எனக் கேட்கிறார்.

அடுத்து தன் கணவர் மற்றும் குழந்தையுடன்

சாலை விளிம்பில்

 குத்திட்டு அமர்ந்து கொள்கிறார்.


மழை இடைவிடாமல் பேசுகிறது

ஒவ்வொருவர் தோளிலும் தலையிலும் முதுகிலும்

தட்டித் தட்டிப் பேசுகிறது


ஒரு சாட் கடையில்

தேநீர்க் கடை வாசலில்

ஏடிஎம்முக்கு முன்னால்

வரிசை வரிசையாக

மக்கள் முன்னேறுகிறார்கள்

ஒரு வயசாளியின் நீண்ட கை

நின்று நிச்சலமாக

 பிச்சை கேட்கிறது

ஒரு மதுக்கடையின் கல்லா முன்


அதே கை, அதே முகம்

கல்லா,

அதில் பணத்தை எண்ணும் மனிதனின்

முகத்தின் தீவிரம்

அசையாமல் நீண்ட நேரமாக


எலி இனிமேல் வரவே போவதில்லை

என தெய்வம் நினைக்கிறது

அதற்காக தான் நகரத் தேவையில்லை

வாயை முழுமையாகத் திறந்து

மெதுவாக கொட்டாவி விடுகிறது!

தெய்வம் நகர்ந்து விட்டது

என எலி நம்புகிறது

அது துணிச்சலாக வெளியே வருகிறது!


வாழ்க்கை உயிர்த்தெழுகிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.