முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திராவிட இயக்க அரசியலும் தலித்துகளின் கோபமும்

 




தலித் ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள், மற்றும் போராளிகளில் ஒரு பகுதியினர் திராவிட இயக்கத்தை தொடர்ந்து விமர்சித்தும் கேலி செய்தும் சாடியும் வருவதை அறிவோம். அதற்கான காரணங்களின் நியாயத்தைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இது ஒரு சுருக்கமான மீள்கூறல் தான்.


  1. அதிகாரம், பொருளாதாரம், நிலவுடைமை ஆகியவற்றில் தலித்துகள் தொடர்ந்து நேரடியாக ஒடுக்கப்படுவது பிராமணர்களால் அல்ல, மத்திய சாதிகளாலே. இந்த சாதியமைப்பின் மூலகர்த்தா யாரெனும் விவாதத்துக்கு தொலைநோக்கு பயன்கள் இருக்கலாம், ஆனால் அன்றாடத்தில், உடனடி விவகாரங்களில் இல்லை.

அதனாலே மற்ற சமூகங்களைப் போன்றே தம்மையும் இந்த அமைப்புக்குள் இருந்து ஒன்று திரட்டிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படித்தான் முன்னேற முடியும் என்கிறார்கள். அப்படித் திரட்டிக் கொள்ள உந்துசக்தியாக எது இருக்கும்? பொருளாதாரத் தேவைகள், லாபங்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ஒரு பொது எதிரி

தமிழகத்தில் அப்படித்தான் மற்றமையை ஒன்று - பிராமணர்கள், ஆரிய மதம், வட இந்திய ஆதிக்கம், இந்தி என - உருவாக்கப்பட்டு ஒரு பேரியக்கம் உருவாக்கப்பட்டது. ஒரு இயக்கத்துக்கு தான் யாரென அடையாளப்படுத்த பொது எதிரி அவசியம். சாதி உள்ளிருந்து கொல்ல வேண்டிய எதிரி. ஆனால் அப்படி அதை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது என்பதே சிக்கல். எப்படி அன்று பிராமணர்கள், வைதீகர்கள், இந்தி, இந்திய தேசியவாத ஆதரவாளரக்ள் பிராமணரல்லாதோருக்கு எதிரிகளாகத் தேவைப்பட்டார்களோ அவ்வாறே இன்று தலித்துகளில் ஒரு பகுதியினருக்கு மத்திய சாதிகள் தேவைப்படுகிறார்கள். இருமை இல்லாமல் இயக்கங்கள் உருவாவது சிரமம்.


மீண்டும் சொல்கிறேன் - இப்படி இருமைகள் உருவாவதற்கான எல்லா வரலாற்று, நடைமுறை நியாயங்களும் இருக்கும். அந்த எதார்த்தத்தின் மீது நின்று தான் இந்த அரசியலை ஒரு கூட்டம் பேச முடியும்.


இன்னொரு விசயம் - இந்த துவேசமானது பண்பாட்டளவில் தான் இருக்கும். பிராமணர்கள் மீது பொதுமக்கள் இன்றும் அன்புடன், மரியாதையுடன் தான் இருக்கிறார்கள். ஆனால் மனதுக்குள் ஒரு வருத்தம் இருக்கிறது, அது பண்பாட்டிலும், அரசியலிலும் மட்டும் உயிர்கொள்ளுகிறது. அந்த தளங்களில் முடிந்தளவுக்கு பிராமண எதிர்ப்பு வெளிப்படுகிறது, அதே நேரத்தில் பிராமண பிரியமும் மதம், வழிபாடு, சமஸ்கிருதமயமாக்கல் எனும் வடிவங்களில் தழைக்கிறது. தலித்-மத்திய சாதி எதிரிடை ஒன்று வலுவாக தோன்றும் பட்சத்தில் அதுவும் இப்படியே இருக்கும்.


2) எதிர்காலத்துக்கான - என்றோ வரப்போகிற ஒரு மாற்றத்துக்கான - லட்சியமா, இன்றைக்கான முன்னேற்ற மார்க்கமா என்றால் பெரும்பாலானோர் பின்னதைத் தான் தேர்வார்கள். தலித்துகளுக்கு இடமளிப்பதில், அங்கீகாரம், பொறுப்பு, அதிகாரம் வழங்குவதில் பிராமணர்கள் முதலிலும், இந்துத்துவர்கள் அடுத்தும் முன்னிலை வகிக்கிறார்கள். இதன் அரசியல் தேவைகள் வேறு. ஆனால் எதார்த்தம் இதுவே. மத்திய சாதிகளால் ஆன பண்பாட்டு இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள், கட்சிகளில் இந்தளவுக்கு வரவேற்பு தலித்துகளுக்கு கிடைப்பதில்லை. ஆக இயல்பாகவே அவர்களில் ஒரு பகுதியினர் பிராமணர்களுக்கும் இந்துத்துவர்களுக்கும் பின்னால் திரள விரும்புகிறார்கள். அவர்களுடைய சமூகத்தில் இருந்து வேகமாக இந்துத்துவ கட்சியில் சில அமைச்சர்கள், மாநிலத் தலைவர்கள் தோன்றுவதைக் கண்டு பெருமிதம் கொள்ளுகிறார்கள். இந்த இடைவெளியை பாஜக சிறப்பாக அடையாளம் கண்டு பயன்படுத்தி சில மாநிலங்களில் ஏற்கனவே பெரும் கட்சிகளை காலி பண்ணி விட்டது. அவர்களுடைய சோஷியல் என்ஜினியரிங்கைக் கண்டு அஞ்சும் அதே வேளையில் இக்கட்சிகள் அதற்கு ஈடுகொடுக்கும் காரியங்களை பண்ணவும் தயாராக இல்லை


3) இப்போதைக்கு திமுக செய்ய வேண்டியது அது ஒரு மத்திய சாதிகளின் கட்சி எனும் பிம்பத்தை மாற்றுவது. அதற்கான சின்னச்சின்ன முயற்சிகளை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். ஆனால் அவை போதாது. அமைச்சரவையில் தலித்துகளின் பிரதிநுத்துவத்தை அதிகப்படுத்துவது, முக்கிய பொறுப்புகளில் அவர்களை அமர்த்துவதும், அதை பெரிய அளவில் பிரச்சாரம் செய்வதும் அவசியம்


4) இந்த உடனடி அதிகாரம் நாடும் தலித்துகள் வி.சி.கவை அதிகமாகச் சாடுவதும், நாங்கள் எப்போதும் சாதி ஒழிப்பைப் பேசி பத்தினித்தனத்தை நிரூபிக்கத் தேவையில்லை எனக் கொந்தளிப்பதும் மேற்சொன்ன இருமையை கட்டமைக்கத் தான். இது ஒரு ஆபத்தான அரசியல். தலித் vs மத்திய சாதிகள் எனும் இருமை அவர்களுக்கு பலனளிக்கும். ஆனால் தலித்துகள் vs தலித்துகள் எனும் உள்யுத்தம் அவர்களையும் மத்திய சாதியினரையும் ஒருசேர பலவீனப்படுத்தும். பாஜக தலித்துகளை தனித்தனியாக உடைத்து வாக்குவங்கியாக்க முயன்று தமிழகத்தையும் பலவீனப்படுத்தும். அதற்குப் பதிலாக ஒன்றிணைந்து ஒரே திரளாக இயங்குவதும், தமக்குள் இருக்கும் முரண்களை உள்வட்டங்களில் பேசித் தீர்ப்பதுமே சரியானது


5) மற்ற சாதியினரைப் போல் தலித்துகளும் வெளிப்படையாகத் திரண்டு முன்னேற்றத்துக்கு முயல்வது (வணிகத்தில், கலையில், இயக்கங்களில்) பாராட்டத்தக்க ஒன்றே. அதே நேரத்தில் தேவையான நேரத்தில் பிரிந்தும் தேவைப்படும் போது ஒன்றிணைந்தும் அரசியல் செய்வதே அவர்களை வலிமையான சக்தியாக்கும். கடந்த காலங்களில் மத்திய சாதிகளின் அரசியலும் அது தானே. இதை இந்த எதிர்-வி.சி., இந்துத்துவ ஆதரவு, இந்துத்துவத்தையும்-திராவிடத்தையும்-ஒருசேர-எதிர்க்கிறோம் எனும் பல பிரிவுகளை சேர்ந்த தலித் ஆர்வலர்கள், போராளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...