முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாணிக் காயிதம்



தமிழில் எடுக்கப்பட்ட சிறந்த படங்களில் ஒன்று என இதை மனம் திறந்து பாராட்டுகிறேன். அதற்கான காரணங்கள் இவை:
1) ஒவ்வொரு சட்டகமாக இவ்வளவு அழகாக, அர்த்தம் பொருந்தியதாக ஒரு படத்தைப் பார்த்து சில வருடங்கள் ஆகின்றன (கடைசியாக மிஷ்கினும், ராமும், ரஞ்சித் “காலாவிலும்” செய்திருந்தார்கள்.) முதல் காட்சியின் சட்டகத்தில் இருந்து கடைசிக் காட்சித் துளி வரை ஒரு தொடர்ச்சி இருக்கிறது. ஒரு நேர்த்தியான, திட்டவட்டமான காட்சி மொழி இருக்கிறது. குறிப்பாக, துவக்கத்தில் இருந்தே (அதாவது பழிவாங்கும் படலம் துவங்கும் போதிருந்தே) பொன்னியும் சங்கையாவும் ஒரு சதுர சட்டகத்தின் வழியாகவே உலகைப் பார்க்கிறார்கள். அது ஒரு ஜன்னலாகவோ கார் ஜன்னலாகவோ இருக்கிறது. மற்றொரு காட்சியில் வில்லனின் ஆட்கள் தொலைநோக்கி வழியாக கடலில் நின்றெரியும் படகைப் பார்க்கையில் அந்த சட்டகம் வட்டமாக இன்றி சதுரமாக இருக்கிறது. இது எதார்த்தமில்லையே என சிலருக்குத் தோன்றலாம். ஆனால் இப்படத்தின் கூறுமொழி ஒரு மீஎதார்த்தத்தினால் ஆனது. இந்த இடத்தில் இவர்களும் பொன்னியையும் சங்கையாவையும் போன்றே பழிவாங்கும் தூய்மையான, நோக்கமற்ற வன்முறைக்குள் வந்து விட்டார்கள் என்று இயக்குநர் உணர்த்துகிறார்.
மற்றொரு காட்சியில், ஒரு நிழல் கவிந்த சுவர் ஓரத்தை காட்டுகிறார்கள். அதை அடுத்து அங்கு பொன்னி, சங்கையாவின் மெட்டாடர் வேன் வந்து நிற்பதைக் காட்டுகிறார்கள். பெரும்பாலான படங்களில் இது ரிவர்ஸாகவே இருக்கும். ஆனால் இங்கோ ஏற்கனவே ஒளியும் இருளும் கலந்த உலகினுள் அவர்கள் வந்திறங்குவதைக் குறிக்கும் நோக்கில் இப்படி சித்தரிக்கிறார்கள். இப்படியே எத்தனையோ தருணங்கள் படத்தில் உள்ளது. ஒவ்வொன்றையும் பற்றி எழுதினால் நூறு பக்கங்களாவது வரும். அந்தளவுக்கு மெனக்கெட்டிருக்கிறார் அருண் மாதேஸ்வரன்.
2) படத்தில் குடும்ப செண்டிமெண்டுகள், பாடல்கள் இல்லை. நகைச்சுவை இல்லை. பின்னணி இசை தேவையான இடங்களில் மட்டுமே உள்ளது. இதை இனி வரும் படங்களிலும் இயக்குநர்கள் பின்பற்றினால் நன்றாக இருக்கும். பாடல்களை தனி ஆல்பமாக வெளியிடுவதே சிறந்தது. ஏனென்றால் பெரும்பாலான படங்களில் பாடல்கள் உணர்ச்சிகளை மிகைப்படுத்த, கதையோட்டத்தை தடைசெய்யவே பயன்படுகின்றன. குடும்ப செண்டிமெண்ட் காட்சிகளும் அப்படித்தான்.
3) பொதுவாக பிளேஷ்பேக்குத் தான் கறுப்புவெள்ளை வண்ணத்தை பயன்படுத்துவார்கள். ஆனால் அருண் இரு முக்கிய பாத்திரங்கள் முழுக்க வன்முறையில், கசப்பில், ஆறாத வடுக்கள் பற்றின நினைவுகளில் மூழ்குவதைக் காட்ட பயன்படுத்துகிறார். இது ஏற்படுத்தும் அதிர்ச்சியும், தாக்கமும் வலுவானது. கறுப்பு வெள்ளைக் காட்சிகள் வரும்போதெல்லாம் யாரோ ஊசியால் என்னைக் குத்துவது போன்ற உணர்வு ஏற்பட்டது.
3) மோனோகுரோம் நிற அமைப்பும் பாராட்டத்தக்கது. இது பல பின்நவீன படங்களில் வருவது தான் என்றாலும் இப்படத்தில் பாத்திரங்களின் உளவியலை உணர்த்த சரியாக கொண்டு வரப்பட்டுள்ளது.
4) அந்த கடற்கரை ஷாட்டுகள், அதில் சிறுவயது பொன்னியும் அவள் அம்மாவும் தனியாக நடந்து போவது, சங்கையா ஒரு சிறுவனாக ஒரு மணற்குன்றின் மீதேறி அவர்களைப் பார்ப்பது, ஷாட் மெல்ல மெல்ல விரிந்து அதன் ஓரத்தில் சங்கையா வந்து தேய்ந்து மறைவது அற்புதமான காட்சி. சில நொடிகளில் அவர்களுடைய வாழ்வின் விளிம்பில் அவன் இருக்க விரும்புவதும், ஆனாலும் மறைய நேர்வதும் காட்டப்படுகிறது. (ஹிந்து விமர்சனத்தில் ஶ்ரீவத்ஸன் சொல்லுவதைப் போல பெர்க்மேனின் சாயல் இதில் உள்ளது தான்.) பல இயக்குநர்கள் இதைக் காட்ட வசனங்கள், ஒரு “ஓஓஓ” என்று ஒப்பாரிக் குரலில் பாடல், கண்ணீர்த் துளிகள் திரண்ட கன்னங்கள் என (விஜய் டிவி பாணியில்) பெரும்பிரயத்தனம் செய்திருப்பார்கள். அருணுக்கு இந்த எக்ஸ்டிராஸ் இல்லாமல் ஒளிப்பதிவை மட்டும் கொண்டு சிக்கனமாக கதை சொல்லத் தெரிகிறது.
5) பிளேஷ்பேக்கை தமிழ் சினிமாவில் மிக மோசமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என முன்பு ஒருமுறை எழுதி இருந்தேன் அல்லவா, இப்படத்தில் பிளேஷ்பேக் அட்டகாசமாக உள்ளது. இரண்டு பிளேஷ்பேக்குகள் வருகின்றன: அ) பொன்னிக்கு நடக்கும் பாலியல் தாக்குதல், அவளது குடும்பம் உயிருடன் எரிக்கப்படுவது. ஆ) பொன்னியும் அவளது அம்மாவும் அவளது அப்பாவின் முதல் மனைவியால் துரத்தப்படுவது, சாபத்துக்குள்ளாவது. இதை நான்லீனியராக படம் முழுக்க சொல்கிறார்கள். இது பிளேஷ்பேக் கதைகூறலுக்கு இடைஞ்சலாகாமல் இருக்க உதவுகிறது. அடுத்து மொத்த படத்தையும் பொன்னியின் நினைவுகூறலாகப் பார்க்க வழிவகுக்கிறது. அதாவது பிளேஷ்பேக்குக்குள் பிளேஷ்பேக்குக்குள் பிளேஷ். எப்படி!
6) படத்தில் உள்ள தூய்மையான, தர்க்க நியாயமற்ற வன்முறை பற்றி சொன்னேன் அல்லவா, இது எதார்த்த சினிமாவுக்கு விரோதமான ஒன்று என்பதால் தமிழில் வெகு அரிதாகவே இது காட்டப்படுகிறது. பொன்னியையும் அவளது குடும்பத்தையும் வில்லன்கள் தாக்குவதற்கு, அழிப்பதற்கு எந்த காத்திரமான, தர்க்கரீதியான காரணமும் இல்லை. முகத்தில் துப்பியதற்கான எவனாவது ஒரு குடும்பத்தை நெருப்பிட்டு கொளுத்தி, ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் பண்ணுவானா? பண்ணுகிறவர்கள் இருக்கிறார்கள் நம் நாட்டில். சொல்லப் போனால் 99% வன்முறையும் எந்த தர்க்கத்துக்கும் உடன்படாததே - சினிமாவில் மட்டுமே ஒரு காரணத்தை வலிந்து புனைகிறார்கள். அருண் சாதியத்தையும், காமத்தையும், ஆண் மீதான வன்மத்தை பெண்ணுடலில் செயல்படுத்திப் பார்க்கும் விருப்பத்தையும் இந்த காட்சிகளில் கோர்க்கிறார். இது நம் நெஞ்சில் வந்து அறைகிறது.
அதே போல பொன்னியும் அவளுடன் அவள் அண்ணன் சங்கையாவும் பழிவாங்கலாம் என முடிவெடுக்கும் தருணம் வெற்றிமாறனின் “அசுரனில்” போல இனிமேல் ஓட இடமில்லை எனும் நிலையில் அல்ல. வில்லன்கள் வக்கீல் மற்றும் போலீசின் துணையுடன் தப்பித்துப் போகிறார்கள். அவ்வளவு தான், இனி நானே கொல்லுகிறேன் என பொன்னி முடிவெடுக்கிறாள், அவளுடன் சங்கையாவும் கைகோர்க்கிறான். எவ்வளவு எளிதாக அந்த தருணத்தை காட்டி விட்டார் இயக்குநர். தேவையில்லாத டிராமா, கண்ணீர், கொந்தளிப்பு இல்லை. இவ்விதத்தில் “சாணிக் காயிதம்” எனக்கு புரூஸ் லீயின் Return of the Dragonஐ நினைவுபடுத்தியது.
7) அதே நேரம் மலையாளப் படமான “களாவில்” (கூடவே சில உலகப்படங்களில்) நாம் கண்ட தூய்மையான வன்முறை இப்படத்தில் இல்லை, இதைப் போய் ஏன் அதிக வன்முறை என்று மக்கள் முத்திரை குத்துகிறார்கள் எனப் புரியவில்லை. நான் பார்த்ததிலேயே மிகக்குறைவான வன்முறை கொண்ட படம் இது தான். தனியாக உருளும் தலை, மெல்ல மெல்ல அடங்கும் உடல் என எதையும் காட்டவில்லை. பொன்னி பார்க்க, நினைக்க விரும்பும் வன்முறை தருணங்கள் மட்டுமே படத்தில் வருகின்றன.
8) மகாபாரதக் கதையின், பாரதியின் “பாஞ்சாலி சபதத்தின்” இன்னொரு வடிவமே “சாணிக் காயிதம்”. ஆனால் நீதிக்கான கொந்தளிப்புகள், கூக்குரல்கள் இல்லாத வடிவம். சொல்லப் போனால் மகாபாரதக் கதையில் கூட நாம் இன்று பேசுகிற அறம், நீதி போன்றவை இல்லை. இதை உணர்த்தும் நோக்கில் மூன்று தருணங்கள் வருகின்றன:
அ) பொன்னியும், சங்கையாவும் தம் பட்டியலில் உள்ளவர்களைக் கொன்று விட்டு அடுத்து என்ன பண்ணலாம் என்று பேசிக் கொள்வது. அப்போது சுட்டப்படும் வெறுமையானது பாரதப் போருக்குப் பின்னர் பாண்டவர்களும் மீதமாகும் (திருதராஷ்டிரர் உள்ளிட்ட) கௌரவர்களும் உணரும் வெறுமையே.
ஆ) திருதராஷ்டிரரை உணர்த்துவதற்காக சுடலை எனும் பார்வையற்ற சிறுவனை கதைக்குள் கொண்டு வருகிறார்கள். அவர்கள் சதா யாரையாவது சார்ந்திருக்கிறான். முதலில் தன் குடிகார அப்பாவை, அடுத்து தன் அப்பாவைக் கொல்ல விரும்பிய, தன்னையே கொல்ல நினைக்கிற சங்கையாவை. அவனுக்கு யாரிடத்தும் ஒரு பிடிப்பு உள்ளதாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு மோசமான நிகழ்வை அவன் தன் பார்வையற்ற கண்களால் ‘பார்த்திருக்க’ நேர்கிறது. அவன் அப்போது தன்னால் இயன்ற நன்மையை செய்ய முயல்கிறான், ஆனால் அவனால் அது இயல்வதில்லை. இது படத்தின் கிளைமேக்ஸில் காட்டப்படுகிறது. இந்த அத்தியாயத்துக்கு அருண் “ஆயிரம் பார்வைகள்” என பெயரிட்டிருக்கிறார். இதன் வழி திருதராஷ்டிரர் தன் சபையில் பாஞ்சாலி அவமதிக்கப்பட்ட போது உணர்ந்த மனநிலையை மீள்வாசிப்பு செய்திருக்கிறார்கள். நீதியின் கண்கள் எப்போதும் பார்வையற்றவை தாம், ஆனால் அதையும் மீறி அதில் சிறிது கருணை இருக்கலாம் என்கிறார். பொன்னி அவனை ஏற்கிற இடத்தை நியாயப்படுத்த இந்த உண்மை வெளிப்படும் தருணம் உதவுகிறது. அதே நேரத்தில் கதையின் மொத்த போக்குடன் பொருத்தப்படாமல் இருந்தாலும் முத்தாய்ப்பாக, மனதைத் தொடும், வாழ்க்கைக்கு அர்த்தம் அளிக்கும் விதமாக படத்தை முடிக்கவும் இது உதவுகிறது. எப்படி ஆயினும் பார்வையற்றவனின் ஆயிரம் பார்வைகள் எனும் உருவகம் தொடர்ந்து நம்மை தொந்தரவு செய்தவதாக உள்ளது. இந்த ஒரு இடத்துக்காக இப்படம் நமது வரலாற்றில் நீடித்திருக்க வேண்டும்.
இ) கடைசி வில்லனைக் கொல்லும் இடத்தில் புரொஜெக்டரின் ஒளியில் குருதித் துளிகள் பீய்ச்சியடிக்க சிவப்பு மழையில் நனைந்தபடி அனுபூதி அடையும் தருணம் அப்படியே துரியோதனனின் குருதியை தன் கூந்தலில் பாஞ்சாலி பூசும் இடத்தை நினைவுபடுத்துகிறது.
“சாணிக் காயிதத்தின்” ஒளிப்பதிவுக்காக நிச்சயம் யாமினிக்கு தேசிய விருது அளிக்கப்பட வேண்டும்.
இந்த படத்தை மிஸ் பண்ணாதீங்க!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...