Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

நாய்களால் முடிவது ஏன் மனிதனுக்கு முடிவதில்லை?


மனிதர்கள் அடிப்படையில் ரகசியப் பிறவிகள். அவர்கள் தமது உறவுகளுக்குள் சில படிநிலைகள் வைத்திருப்பார்கள். ஹாய், ஹலோவுக்கு சில நட்புகள், உதவிக்கு, பேச்சுத்துணைக்கு ஒரு கும்பல், பணத்துக்கு, வேலையில் முன்னேற்றத்துக்கு ஒரு சில நட்புகள், முகப்பழக்கத்துக்கு சிலர், விளையாட, குடிக்க, சிகரெட்டுக்கு, பயணிக்க, (செக்ஸுக்குக் கூட) சில நட்புகள், நெருக்கமான உறவுகள், அவர்கள் மத்தியிலும் பிரிய முடியாதளவுக்கு இணக்கமாக மிகச்சிலர். இந்த படிநிலைக்குள் இன்னின்னாரிடம் இவ்வளவு தகவல்களை தன்னைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என ஒரு வரைமுறை வைத்திருப்பார்கள். நவீன வாழ்க்கையின் ஒரு விசித்திரம் என்னவெனில் நாம் இந்த எல்லா படிநிலையை சேர்ந்தோரிடமும் ஒரே வகையாக அன்பும் அக்கறையும் காட்டுவதது போல நடிக்கிறோம் என்பது. பொதுவில் பார்த்தால் யார் நண்பர், யார் முகப்பரிச்சயம், யார் கூடச் சுற்றுவதற்கு மட்டுமானவர், யார் வெற்று அரட்டைக்கானவர் எனக் கண்டுபிடிக்கவே முடியாது. அதற்கு நாம் அவர்களுடைய உரையாடலை உற்று கவனிக்க வேண்டும்


மற்றொரு விசித்திரம் மனிதர்கள் தமக்கு மிக மிக இணக்கமாக இருப்பவர்களிடம் கூட தம் ரகசியங்களை வெளிப்படுத்துவதில்லை என்பது. இதற்கும் கல்விக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. எந்தளவுக்கு அதிக கல்வி, புத்திசாலித்தனம், நாகரிகம் வருகிறதோ அந்தளவுக்கு கூடுதலாக ரகசியம் பேணுகிறவர்களாக மாறுகிறோம். இந்த ரகசியங்கள் மிக மிக அற்பமானவையாக இருக்கும், ஆனால் அவற்றை நமக்குள்ளே வைத்திருப்பதில் கிளுகிளுப்படைகிறோம். அதனாலே மனிதர்கள் ரகசியப் பிறவிகள் என்றேன்


நாய்கள் இவ்விசயத்தில் நேர்மாறானவை. நாய்களுக்கும் மேற்சொன்ன படிநிலைகள் உண்டு. எல்லா நாய்களையும் ஒரு நாய் தன் உற்ற தோழனாக, புணர்ச்சித் துணையாக, வழித்துணையாக ஏற்பதில்லை. ஆனால் அவற்றுக்குள் எந்த ரகசியமும் இருப்பதில்லை. ஏனென்றால் நாய்கள் உடல்மொழியையோ, பேச்சுமொழியையோ நம்மைப் போல் முழுக்க நம்பி இருப்பதில்லை. இன்று என்னுடைய நாயை வெளியே அழைத்து சென்றிருந்தேன். அப்போது ஒரு பெட்டை நாய் மெதுவாக வந்து  அவனுடைய முகத்தை, காதுகளை முகர்ந்து பார்த்தது. என்னுடைய நாயும் அதை அவ்வாறே திரும்ப முகர்ந்தது. அதன் பிறகு கூச்சம் காரணமாக அது விலகிப் போய் விட்டது. இன்னும் சற்று தைரியமான நாய் என்றால் இருவரும் தத்தமது புட்டங்களையும் முகர்ந்திருப்பார்கள். இப்படிச் செய்வதன் வழி ஒரு நாயால் சில வினாடிகளிலே மற்றொரு நாய் அன்று என்ன சாப்பிட்டிருக்கிறது, அதனுடைய உடல்நிலை எப்படி இருக்கிறது, அதன் மனநிலை எப்படி இருக்கிறது, ஹார்மோன்கள் ஒழுங்காக செயல்படுகின்றனவா, கடைசியாக அது எப்போது புணர்ந்தது என பல ரகசியங்களை / விசயங்களைத் தெரிந்து கொள்கிறது. உடம்பில் இருந்து வெளிப்படும் உயிரி-ரசாயானங்களை தம் நுகர்வுத்திறனால் அலசி ஆராய்ந்து அவற்றால் இவ்வளவு தகவல்களை உள்வாங்க முடிகிறது. நம்மால் ஒருவருடைய பேஸ்புக் கணக்கை பல மணிநேரம் ஆராய்ந்தே அவருடைய பால் அடையாளம் என்னவெனத் தெரிந்து கொள்ள முடியாது. நம் பக்கத்து வீட்டுக்காரர் கொள்ளையரா, வியாபாரியா, கொலைகாரரா, உத்தமாரா என அவருடன் பல வருடங்கள் பழகிக் கூட கண்டுபிடிக்க இயலாது


சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் இது. நான் இதை அடிக்கடி நினைத்துப் பார்த்து சிரித்துக் கொள்வேன்

என் சக ஊழியர் ஒருவர். பெண். அவருக்கும் தத்துவத்தில் ஆர்வமுண்டு என்பதால் நாங்கள் நட்பானோம். நாங்கள் மனம் விட்டுப் பேசுவோம். இருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருந்தோம். ஆனால் அவரை வேலையை விட்டு நீக்கப்பட்ட தகவலை என்னிடம் உடனடியாகச் சொல்லவில்லை. அவருடைய கடைசி நாளுக்கு ஒரு வாரம் முன்பே என்னை அழைத்துக் கூறினார். நான் அவருடைய தயக்கத்தையும் வருத்தத்தையும் புரிந்து கொண்டேன். இறுதி நாள் அன்று வேலையிட வளாகத்தில் சுற்றி வந்தோம். எங்களுக்கு ஒவ்வொரு இடம் குறித்தும் ஒரு நினைவு இருந்தது. அதைப் பகிர்ந்து கொண்டோம். அப்போது சில சக ஊழியர்களைளை எதிர்கொண்டோம். அவர்களுடன் அந்த தோழி மிக நெருக்கமாக தினமும் பேசுவார் என்பது எனக்குத் தெரியும். பார்க்க இணைபிரியா தோழிகளைப் போலத் தெரியும். ஆனால் அவர்களுக்கு இவர் வேலையை விட்டுப் போகிற விசயம் தெரியாது. கையைப் பற்றி பரஸ்பரம் நலம் விசாரித்து கொஞ்சி விட்டுப் பிரிந்தனர். என்னிடம் சொன்ன தகவலை அனேகமாக தினமும் தான் சந்தித்து உரையாடும் தோழிகளிடம் அவர் ஏன் பகிர்ந்து கொள்ளவில்லை? நாளையும் அதற்கு அடுத்த நாட்களும் இவரைப் பார்க்கவில்லை என்றால் மிஸ் பண்ண மாட்டார்களா? ஆனால் அவருடைய கணிப்பு சரிதான். இந்த தோழிகள் அதற்கடுத்த நாட்கள் இவரைக் காணாதத்தைப் பற்றி எந்த கவலையும் படவில்லை

மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ஒரு நாய் ஒரு இடத்துக்குச் சென்றதும் அங்கு வேறெந்த நாய்கள் எல்லாம் வந்து போயிருக்கின்றன என்பதை சில வினாடிகளில் அறிந்து கொள்கின்றன. தன்னிடம் உறவாட வரும் ஒரு வாய் அதற்கு முன் எந்த நாயுடன் எல்லாம் போயிருக்கிறது எனத் தெரிந்து கொள்கிறது. ஆனால் நமக்கு நம் வீட்டில் ஒரு மணிநேரத்துக்கு முன் யாரெல்லாம் வந்திருந்தார்கள், பத்து நிமிடத்துக்கு முன் நம் காதலியிடம் யார் பேசினார்கள் என்று தெரியுமா? நம் நண்பர்கள், காதலர்கள், கணவர் / மனைவியரின் உடல்நலன் பற்றி ஏதாவது தெரியுமா? ஒரு நாய்க்கு தன்னுடன் இருப்பவர் மரணடமடையப் போவது, அவருக்கு புற்றுநோய் வந்திருப்பது கூடத் தெரியும் என்கிறார்கள். ஆனால் ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு தம் முன் மேடையில் நின்று பாடிக் கொண்டிருந்தவர் சட்டென மாரடைப்பு வந்து சுருண்டு விழும் போது வியப்பாக இருக்கிறது, அவர்களுக்கு ஒன்றுமே புரிவதில்லை. “நல்லா தானே இருந்தார்?” என அதிர்ச்சியடைகிறார்கள். ஆனால் ஒரு நாய்க்கு இப்படியான குழப்பங்கள் இல்லை. அவர்களுடைய உலகில்திரைமறைவுகள்இல்லை. நமது பிரச்சனை தான் என்ன?


மனிதன் தன்னுடைய பரிணாம வளர்ச்சியின் போது இத்தகைய திறன்களை இழந்து பார்வைப் புலன் சார்ந்தவனாக மாறி இருக்க வேண்டும். அடுத்து மொழி வளர்ச்சி வருகிறது. இப்போது அவன் முழுக்க மொழியை நம்பி இருக்கத் தொடங்குகிறான். மொழியின் ஒரு பெரிய பிரச்சனை என்னவெனில் எதையும் பலவாறாகப் புரிந்து கொள்ளும் தன்மை அவனுக்கு அளிக்கிறது. அடுத்து, மொழிக்குள் பல அர்த்த அடக்குகள் உள்ளதால் உண்மை என்பது மறைந்து மறைந்து விளையாடுகிறது. நாம் உண்மையை விட போலச் செய்யப்படும் உண்மைகளையே எதிர்கொள்கிறோம். சொல்லப் போனால் இந்த உண்மைத் தோற்றங்களைக் கூட நாம் சரியாக எதிர்கொள்வதில்லை. ஒன்று புலப்படும் முன் நாம் மற்றொன்றை நோக்கித் தாவுகிறோம். இரண்டு புலப்படல்களுக்கு இடையே ஒரு அகத்தாவல், அதன் கிளர்ச்சி, தித்திப்பு நமக்கு சாத்தியமாகிறது. இதற்காகவே நாம் அனுதினமும் பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும், அடுத்தவர்களுக்கு காதையும் கண்ணையும் கொடுத்துக் கொண்டும் இருக்கிறோம். மொழியின் வசீகரமே நம்மை அது எதையும் நேரடியாகப்பார்க்க விடாமல்திசைதிருப்புவதில் இருக்கிறது.


 இரண்டு பேர் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்கையில் பாருங்கள் - அந்த மகிழ்ச்சியானது பரஸ்பரம் அறிந்து கொள்ளும் போதல்ல, கிட்டத்தட்ட அறிந்து கொள்ளும் போதே, அறிந்து கொள்வதற்கு முன்பே வருகிறது. அறிதலை நெருங்கும் போது நாம் மற்றொன்றுக்குத் தாவுகிறோம். சில நேரங்களில் ஒருவர் யார் என்று தெரிந்து கொள்ளும் முன்பே நெருங்கிப் பழகி விடுகிறோம். என்னுடைய தோழி ஒருவர் ஒரு நண்பரின் பெயரைக் குறிப்பிட்டுஎனக்கு அவரை நன்றாகத் தெரியும், ஐந்து வருடங்களாகப் பழக்கம்என்றார். “சரி அவர் எந்த ஊரில் பிறந்தார், அவருடைய கல்விப்பின்னணி என்ன, இப்போது என்ன வேலை செய்கிறார், கடந்த வருடம் அவர் நேர்கொண்ட நெருக்கடி என்ன, அவருக்கு என்னவெல்லாம் நோய்கள் உண்டு, அவருடைய உணவுப்பழக்கம் என்ன?” என்று ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டேன். அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை, ஆனால் அவரை நன்றாகத் தெரியும் என்றார். அந்த நண்பரிடம் இரண்டு முறைகளே பேசியிருக்கிறேன். எனக்குத் தெரிந்த இந்த தகவல்கள் அவருடன் நாட்கணக்காகப் பேசிய இத்தோழிக்கு ஏன் தெரியவில்லை. ஏனென்றால் நமது உரையாடல்களின் நோக்கமே அறிதல் அல்ல


இதை ஒரு குறையாக நான் சொல்லவில்லை, மாறாக இதுவே நாகரிக மனிதனின் இயல்பு என்கிறேன். நாம் சதா உண்மைகளில் இருந்து விலகிச் செல்லும் ஜென்மங்கள். விலக விலக நாம் அதிக மகிழ்ச்சியாக உணர்கிறோம். விலக விலக நாம் தட்டையானவர்களாக, தனியர்களாகவும் மாறுகிறோம். மொழியை முழுக்க சார்ந்திருப்பதைக் குறைத்து, அடிப்படைகளில் கவனம் செலுத்துவது, உரையாடல்களை உண்மையை நோக்கி நகர்த்துவது, கூர்மைப்படுத்துவது நமது நாய் நண்பர்களின் திறமைக்குப் பக்கத்தில் செல்ல நமக்கு உதவலாம்.


Comments

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...