முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம் முன்னோர்கள் ஒன்று முட்டாள்கள் இல்லையோ?


ஒரு எழுத்தாளன் தன் சமூகத்துக்காக, பண்பாட்டுக்காக குரல் கொடுப்பவனாக, சில நேரங்களில் அரசியல் பேசுகிறவனாக, போராடுகிறவனாக, எதிர்க்கலாச்சார முகமாக இருக்க வேண்டும் என்பதை நான் ஏற்கிறேன். நானே அப்படி இருக்கத் தான் முயல்கிறேன். ஆனால் இதில் ஒரு ஆபத்து உள்ளது -

எழுத்தாளர்களின் அரசியல் உவப்பில்லாமல் போகும் போது அவர்களுடைய அரசியலற்ற எழுத்தைப் படிக்கவும் தயக்கம் வருகிறது; அவர்களுடைய அரசியலுடன் முரண்படும் நாம் அவர்களுடைய இலக்கிய இடத்தை மறுக்கவும் தலைப்படுகிறோம். நீங்கள் ஜெயமோகனின் முகாமை சேர்ந்தவர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் இடதுசாரி படைப்பாளிகளை முற்றிலுமாக ஒதுக்குகிறார்கள்; ஒரே காரணம் அவர்களுடைய வெளிப்படையான அரசியல் அவர்களுடைய பிரதிகளை அணுக இவர்களுக்குத் தடையாகிறது. இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாமல் “சோவியத் பிரச்சார நெடி வீசுகிறது” என கதையளப்பார்கள். இன்னொரு பக்கம் கடந்த இரு பத்தாண்டுகளாக வலதுசாரி அரசியல் பேசி வரும் படைப்பாளிகள் சிலருடைய புதினங்கள், கதைகள் மீதே ஒரு ஒவ்வாமை நமக்கு ஏற்படுகிறது. நான் அதையும் மீறி அவர்களை படித்து ரசிக்க தலைப்படுகிறேன். ஆனாலும் ஒவ்வாமை அப்புத்தகங்களை நெருங்குவதில் ஏற்படுவதை ஏற்கிறேன்.

என்ன தன் அவருடைய மொழிநடையும் ஸ்டைலும், கதைகளின் நுட்பமும் பிடிக்கும் என்றாலும் நான் சுஜாதாவின் கட்டுரைகளில் வரும் கருத்துக்களால் எப்போதுமே கசப்படைவேன். என்னால் ஒரு தமிழவன், ராஜ் கௌதமன், ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை கருத்துக்களுடன் உடன்படுவதைப் போல பாரதியார், பு.பி, சுஜாதா, பாலகுமாரன் ஆகியோரின் கருத்துக்களை ஏற்க முடிவதில்லை. சுஜாதாவும், பாலகுமாரனும் இன்று வரை வாழ்ந்து டிவி விவாதங்களிலும் சமூகவலைதளங்களிலும் நடப்பு செய்திகளைப் பற்றி கருத்து தெரிவித்திருந்தால் கடுமையாக வெறுக்கப்பட்டிருப்பார்கள், அது அவர்களுடைய புனைவு எழுத்து மீதும் ஒரு இருட்டைப் போலப் படிந்திருக்கும் என உறுதியாக சொல்கிறேன். நல்லவேளை நேரத்தோடு போய் சேர்ந்து விட்டார்கள்!

இப்பிரச்சனை மேற்கிலும் எழுத்தாளர்கள், தத்துவவாதிகள் குறித்து எழுப்பப்படுவதுண்டு. ஷேக்ஸ்பியரில் இருந்து கிப்ளிங், டிக்கன்ஸ் போல பலர், தத்துவத்தில் பிளேட்டோவில் (பாசிச ஆதரவு என) இருந்து ஹைடெக்கர், நீட்சே வரை இனவாத துவேசம் வெளிப்படுவதாக குற்றச்சாட்டுகள் உண்டு. ஹைடெக்கரின் நாஜி சார்புநிலை குறித்து நிறைய விவாதங்கள் நடந்ததுண்டு. இத்தனைக்கும் இவர்கள் அரசியல் பற்றி நேரடியாக எதையும் எழுதவில்லை. புனைவுக்குள்ளும் தத்துவத்துக்குள்ளும் நோண்டி எடுத்தே இவ்வளவு விவாதிக்கிறார்கள். இவர்கள் நேரடியாக அரசியல் பேசியிருந்தால் என்ன கதிக்கு ஆளாகி இருப்பார்கள்?

ஆனால் அதையும் மீறி அவர்களை ஆழமாக வாசித்து உள்வாங்குகிற வாசகர்களும் விமர்சகர்களும் அங்கு இருக்கிறார்கள். நம்மூரிலோ இந்த புறவயமாக, நிதானமாக, உணர்வு சமநிலையுடன் ஒரு இலக்கிய / தத்துவ பிரதியை வாசிக்கும் பண்பாடே கணிசமாக இல்லை. நாம் ஒரு சார்பை எடுத்து விட்டுத்தான் ஒரு பிரதிக்குள் போகிறோம். அல்லது சார்பை எடுத்து விட்டு அந்த பிரதியை நோக்கி கதவை அடைத்து விடுகிறோம். விருது, அங்கீகாரம், பாராட்டு என என்ன வந்தாலும் இந்த சார்புநிலை ஒரு பெரும் சுவராக எழுப்பப்பட்டு விடுகிறது. ஒரு நவீனத் தீண்டாமையைப் போல இது பண்பாட்டு வெளிக்குள் நெளிந்து நெளிந்து நுழைந்து விடுகிறது.

ஒரு உதாரணத்துக்கு, மனுஷ்யபுத்திரன் கடந்த இரு ஆண்டுகளாக மிக அதிகமாக காதல் கவிதைகளே எழுதி வருகிறார். இவற்றை நான் அவருடைய ‘மெய்யியல்’ கவிதைகள் எனப் புரிந்து கொள்கிறேன். அவர் இவற்றை சமூக உளவியல் கவிதைகள் என நம்புகிறார். ஆனால் அவர் கவிதை எழுதி முடித்து விட்டு தன் ஷாட் கன், அருவா சகிதம் அரசியல் டிவி விவாதங்களுக்கு கிளம்பி விடுவார். அங்கே அவருடைய கருத்துகளை வெறுப்பவர்கள், அவற்றால் கடுப்பாகிறவர்கள் அவருடைய கவிதைகள் மீதும் அந்த துவேஷத்தைக் காட்டுவார்கள். நாளை அவருக்கு ஒரு தேசிய விருது கொடுக்கப்பட்டால் ‘திமுக கவிஞர்’ என அவர் மீது முத்திரை குத்தி திட்டுவார்கள். இது நிச்சயமாக நடக்கும். ஆனால் இரண்டுமே அவரது வெவ்வேறு முகங்கள். (தனிப்பட்ட முறையில் அவருக்கு வேறு முகங்களும் உண்டு.) இது நம் மூளைக்குள் ஏறுவதில்லை.

இன்னொரு பிரச்சனை அரசியல் சமூகக் கருத்துக்களுக்காக கடுமையாக ஒரு படைப்பாளியை சாடுகிறவர்கள் அவருடைய புத்தகங்களை ஒரு போதும் படிப்பதில்லை என்பது. இது எனக்கு விசித்திரமாக இருக்கிறது. தமிழ் மண்ணுக்கே உரித்தான பிரத்யேக சுபாவம் இது - ஒரு ஜெயமோகனோ சாருவோ எழுத்தாளர்கள் அல்லாமல் இருந்து ஒரு கருத்தை சொன்னால் இவர்களுக்கு எரிச்சல் வராது. ஆனால் எழுத்தாளன் எனும் அடையாளத்தின் கீழ் சொல்லும் போது கொலைவெறி வருகிறது. ஏன் இந்த அடையாளம் இவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது?

எழுத்தாளனை ஒரு பண்பாட்டின், அறிவியக்கத்தின் அடையாளமாக, சமூகத்தை வழிநடத்தும் ஆசானாகப் பார்க்கிறார்களா? எனில் ஏன் அவனைப் படிக்க மாட்டேன் என்கிறார்கள்? வாத்தியாருடைய வகுப்பில் உட்கார மாட்டோம், ஆனால் அவர் நாங்கள் சொல்வது படி நடந்து கொள்ள வேண்டும், எங்கள் நம்பிக்கைபடி சிந்திக்க வேண்டும் என்றால் அது என்ன விதமான குழப்பமான நிலைப்பாடு? இத்தனைக்கும் பள்ளி, கல்லூரி பட்ட படிப்பு முடித்து நல்ல வேலையில் இருக்கிறவர்கள் தாம் இப்படி நடந்து கொள்கிறார்கள். அதனால் தான் குழப்பம் அதிகமாகிறது. அவன் எழுதுறதை படிக்கவும் மாட்டேன், ஆனால் அவன் நான் ஏற்கிற அரசியல் சமூக அறத்தின் படி தான் நடந்துக்கணும், பேசணும், அது தான் அறம் என்றால், படிப்பதும் அதை ஒட்டி நடந்து கொள்வதும் அறம் ஆகாதா? எழுத்தாளனுக்கு அறம் அவசியம் என்றால் உங்களுக்கு அந்த அறம் வேண்டாமா? உங்களிடையே சமூக விரோத அரசியல் பேசுகிறவர்களாக உங்கள் சொந்தக்காரர்கள், உங்கள் மனைவி, குழந்தைகளே இருப்பார்களே, அவர்களுடன் உறவைத் துண்டித்து விட்டீர்களா?

ஒரு சினிமா நடிகனிடம் இதை எதிர்பார்ப்பதில் கூட நியாயம் உள்ளது. அவன் உங்களுடைய பணத்தில், புகழில் வாழ்கிறான். ஆனால் எழுத்தாளனுக்குத் தான் நீங்கள் அஞ்சு பைசா கொடுப்பதில்லையே. அவன் என்ன பேச வேண்டும் எனக் கோர உங்களுக்கு அந்த அடிப்படை அருகதை கூட இல்லையே.

இப்படி தமிழ் எழுத்தாளன் அந்த காலத்து தேவதாசிகளைப் போல் ஆகி விட்டான் - ஊருக்கே பொண்டாட்டி, ஆனால் யாருக்கும் மனைவி இல்லை. தேவதாசிகளுக்காவது நகை, பணம், சொத்து கொடுத்தார்கள். எழுத்தாளனுக்கு அதுவும் இல்லை.

இதையெல்லாம் பார்க்கும் போது நமது முன்னோடிகளான சி.சு செல்லப்பாவில் இருந்து இன்றைய இன்றைய தேவதச்சன், யுவன், எஸ்.ரா போன்ற மகத்தான எழுத்தாளர்கள் செய்வதைப் போல எந்த அரசியல், சமூகப் பிரச்சனைகளிலும் நேரடியாக கருத்து சொல்லாமல் இலக்கியம், மெய்யியல், அவதானிப்புகள், படைப்பாக்கம் என ஒற்றையடிப் பாதையில் நடையிடுவது தான் நல்லதோ எனத் தோன்றுகிறது. நம் முன்னோர்கள் ஒன்று முட்டாள்கள் இல்லையோ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...