முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சஹஹிருதயர்கள்


நான் எந்த தீவிர படைப்பாளிக்கு, சிறுபத்திரிகை மரபுக்கு, இலக்கியத்துக்கு பங்களித்த படைப்பாளிக்கு தேசிய விருது கிடைத்தாலும் அதை ஆதரித்து வாழ்த்தி இருக்கிறேன். ஏன் இவருக்கு, அவருக்குக் கொடுக்கவில்லை என்று புலம்பியதில்லை. சரியான ஆட்களுக்குக் கொடுக்கிறார்கள் என்றால் மிகச்சரியானவர்களுக்கும் ஒருநாள் வந்தே ஆகும் என நம்புகிறேன். லாபி செய்தாலும் இல்லாவிட்டாலும் கிடைக்க வேண்டியது கிடைத்தே ஆகும். நான் எந்த லாபியும் பண்ணினதில்லை, என்னைப் போல கடுமையான விமர்சனங்களை சக படைப்பாளிகள், மூத்த படைப்பாளிகள், சமூகம், ஆட்சியில் உள்ள அரசியல் இயக்கங்கள் மீது வைத்தவர்கள் என் வயதில் எத்தனை பேர் உண்டு? இப்படிப்பட்ட எனக்கே இரு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. நண்பர் பாவெல் சக்தி தினம் தினம் எழுதுவதன் லாஜிக் படி எனக்கெல்லாம் ஒரு சொப்பு சாமான் கூட கிடைத்திருக்கக் கூடாதே. அவர் பேஸ்புக்கில் வீசும் கத்தியை அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பே நான் காத்திரமான விமர்சனமாக வீசியிருக்கிறேனே. வெறும் மீம் போடாமல் பல்லாயிரம் பக்கங்கள் எழுதியிருக்கிறேனே. என்னை என்ன ஒதுக்கி வைத்து விட்டார்களா? நான் கடுமையாக விமர்சித்த ஜெயமோகன் தான் என்னை தன் விஷ்ணுபுரம் அரங்குக்கு பேச அழைத்தார். நான் அதன் பின்னர் ஒரு நூறு பக்கங்களாவது அந்த அமைப்பை விமர்சித்து எழுதினேன். அந்த சுதந்திரம் இங்கு எல்லாருக்கும் உள்ளது. அதை பயன்படுத்துவது நம் உரிமை, நம் பொறுப்பு. இங்கே ஏதோ ஜால்ராவால் தான் எழுத்தாளன் பிழைப்பதாக நினைப்பது எல்லாம் நமக்கு ஏற்படும் மனபிராந்தி மட்டுமே.
நாம் தொடர்ந்து வேலை செய்தால் நமக்கான அங்கீகாரம், விருதுகள் வந்தே தீரும். அதைச் செய்வதற்கான அச்சம், தயக்கமே நம்மை பல சதியாலோசனைகளை கற்பனை பண்ண வைக்கிறது. இவர்கள் பேசும் சதியாலோசனைகள் நடைமுறையில் எங்கும் இல்லை. நம்மைக் கண்டு சக எழுத்தாளர்கள் வெறுப்பில் முகம் சுளிப்பதாகக் கருதுவதும் ஒரு கற்பனை. நாம் அவர்களை வெறுப்பதாக நினைத்து அவர்கள் ஒதுங்கிப் போவதே உண்மை. இந்த பரஸ்பரம் பயம், பயத்தினால் வரும் வெறுப்பு தமிழ் இலக்கியத்தின் சாபக்கேடு.
உண்மையில் நம்மை பழிவாங்க எந்த இலக்கியவாதியும் திரிவதில்லை. நம்மைக் கொல்ல வேண்டும் என மனதில் கத்தியோடு திரிபவர்கள் நம் மனைவி, சகோதர சகோதரிகள், உறவினர்கள் மட்டுமே. எழுத்துலகம் மிக பாதுகாப்பானது. இதுவரை சொத்துக்காகவோ துரோகத்தின் பேரிலோ ஒரு கொலையோ விவாகரத்தோ கூட இலக்கிய உலகில் நடந்ததில்லை. ஆனால் இந்த கேள்விகளை உங்களுடைய மனைவியை நோக்கி கேட்க முடியுமா? மாட்டீர்கள். கேட்டால் இரவில் அம்மிக்குழவியை தூக்கி தலையில் போட்டு விடுவார்களோ என பயம். குழந்தைகளை நோக்கிக் கேட்டால் “போடா” என்று சொல்லி விடுவார்களோ என் பீதி. உறவினர்களிடம் தகராறு பண்ணினால் ஊரை விட்டு ஒதுக்கி விடுவார்கள். உண்மையில் சக இலக்கியவாதிகள் உங்களை பழிவாங்க சதியில் எல்லாம் ஈடுபடுவதில்லை. உங்களை ரொம்பவெல்லாம் துன்புறுத்துவதில்லை. நீங்கள் கொஞ்சிக் குலவினாலும் எதையும் தூக்கிக் கொடுக்க மாட்டார்கள். நீங்கள் தொடர்ந்து தீவிரமாக இயங்கும் போது, சந்தர்ப சூழல் கூடி வந்தால் விருதுகள், அங்கீகாரங்கள் வரும். இதுவே எதார்த்தம். பாவெல் அண்ணே, எனக்குத் தெரிந்து நான் ஒருமுறை கூட பேசியிராத இலக்கியவாதிகள் கூட என்னிடம் அன்பையும் மரியாதையும் அளித்திருக்கிறார்கள். உங்களுக்கும் அது கிடைக்கும். யுத்தம் வருமுன்னே கோட்டைக் கதவுகளை இழுத்து சாத்தாதீர்கள். என் அனுபவத்தில் சொல்கிறேன்: உங்கள் மொத்த குடும்பமும் உங்களை கைகழுவும் நாள் ஒன்று வரும். ஆனால் நீங்கள் காறித்துப்பும் நாங்கள் உங்களுடன் இருப்போம். சாரு சொல்வதைப் போல எழுத்துலகமே சஹஹிருதயர்களால் ஆனது. ரத்த உறவுகளும் கூட இருப்பவர்களும் ரத்தக் காட்டேறிகள்.

கருத்துகள்

தியானி - Dhyaani இவ்வாறு கூறியுள்ளார்…
ச(ஹ)ஹ்ருதயர்கள், காட்டேறிகள் - very much liked and laughed out loud on these intended puns. Your views on this issue are fair and square.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...