முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ப்ரியா கல்யாணராமன் - அஞ்சலி



நான் பரவலாக எழுத ஆரம்பித்து 14 வருடங்கள் ஆகின்றன. எனக்குப் பின்னர் எழுத வந்தவர்களே அதிகமாக வெகுஜன இதழ்களில் கதைகளும் தொடரும் எழுதி விட்டார்கள். மிக மிக அண்மையாக இலக்கிய உலகில் நுழைந்து ஒரே புத்தகம் எழுதியவர்களுக்கு கூட வணிக இதழ்களில் தொடர் எழுத வாய்ப்பு கிட்டி விட்டது. நான் மட்டுமே விதிவிலக்கு. வணிக இதழ்களில் அவ்வப்போது கட்டுரை எழுதக் கேட்பதோடு சரி, நான் அப்பரப்பில் ஒரு தற்காலிக சஞ்சாரி மட்டுமே. எனக்கு சாகித்ய அகாடெமி யுவபுரஸ்கார் கிடைத்த முதற் சில மாதங்களில் மட்டுமே நாளிதழ்களில் என்னுடைய பேட்டிகளும், சிறு குறிப்புகளும் வந்தன. அப்போது வாராந்தரிகள் என்னைக் கண்டுகொள்ளவில்லை. அப்போது சமூகவலைதளங்கள் இவ்வளவு வலுவாக இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். இத்தனைக்கும் என்னுடைய மொழியானது வெகுஜன பரப்புக்கும் ஏற்றதே. என்னால் விளையாட்டு, சினிமா, அரசியல், சமூகத்தில் இருந்து உளவியல், தத்துவம் வரை அறிமுகப்படுத்தி எழுத முடியும். இந்த பன்முகமான தளங்களில் எளிய மொழியில் வெகுஜனத்துடன் பேச ஒரு எழுத்தாளர் நிச்சயமாக நமது பிரபல இதழ்களுக்குத் தேவை. ஆனால் இதுவரை யார் கண்ணுக்கும் நான் பட்டதில்லை. (இப்படி சரியாக பயன்படுத்தப்படாத தகுதியான இன்னும் ஒரு பத்து சமகால எழுத்தாளர்களையாவது என்னால் பட்டியலிட முடியும்.)
ஒரு காரணம் நான் லாபி பண்ணுவதில்லை. மற்றொன்று துணிந்து விமர்சித்து ஏதாவது ஒரு சர்ச்சையில் மாட்டிக் கொள்ளும் வழக்கம் எனக்கு இருந்தது. சில நேரம் சிக்கலான விசயங்களை ஆய்வு மொழியில் நான் எழுதியதும் உண்டு. அப்புறம், நீங்கள் எடிட்டர்களிடம் நேரடியாகவோ துணை ஆசிரியர்கள் வழியாகவோ தயங்காமல் வாய்ப்பு கேட்க வேண்டும். நான் 2015 வாக்கில் கல்கி ஆசிரியரிடம் அப்படி கேட்டேன். அவர் என்னை தொடர்ந்து எழுதச் சொன்னார். ஒரு வருடத்திற்கு மேல் நான் கல்கியில் வாராவாரம் எழுதினேன். ஆனால் அதன் பிறகு நான் யாரையும் நேரில் சென்று கேட்கவில்லை. ஒரு எழுத்தாளனிடம் ஆசிரியர்கள் எழுதக் கேட்பதே மரியாதை என்றும் தோன்றுகிறது. இதெல்லாம் சேர்ந்து என்னைப் பற்றி ஒரு முரட்டுப்பீஸ் பிம்பத்தை உருவாக்கி விட்டது. என்னைப் போன்றோரைக் கண்டடைந்து எழுத வைக்க ஒரு திறந்த மனமும், ஊடகம் குறித்த தெளிவான நம்பிக்கைகளும் கொண்ட எடிட்டர் வேண்டும். அப்படியான ஒருவர் தான் ப்ரியா கல்யாணராமன்.
அவர் என்னை நேரில் போனில் அழைத்து கிரிக்கெட் பற்றி ஒரு தொடர் எழுதக் கேட்டார். எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. தொடருக்கான தலைப்பையும் அவர் தான் தேர்ந்தெடுத்தார். என் போக்கில் எழுத அனுமதித்தார். என்ன விமர்சனம் வந்தாலும் உறுதியாக கூட நின்றார். 25 வாரத்தில் முடிக்க வேண்டிய தொடரை 60 வாரங்கள் எழுத வைத்தார். அதன் பிறகு நான் தீராநதியில் தொடர்ந்து இலக்கிய / தத்துவக் கட்டுரைகள் எழுதினேன். அதற்கு ப்ரியா கல்யாணராமனும் மணிகண்டனும் தன் காரணம். அவ்வப்போது அவரிடம் “கட்டுரை அனுப்பட்டுமா?” என்று கேட்டால் “உடனே அனுப்புங்க” என்பார். அந்த மாதமே அதை பிரசுரித்தும் விடுவார். இதை ஏன் தனியாக வலியுறுத்தி சொல்லுகிறேன் என்றால் வேறு இலக்கிய / நடுநிலை இதழ்களில் இந்த சுதந்திரம் இருப்பதில்லை. Iconoclastஆக, அரசியல் சரித்தன்மை இல்லாமல் எழுதினால் எல்லா இடங்களிலும் கதவை மூடி விடுவார்கள். ஆனால் “தீராநதியோ” ஒரு விதிவிலக்கு. அங்கு எதையும் எழுத முழுசுதந்திரம் தருவார் ப்ரியா கல்யாணராமன். நமது பல சமகால இலக்கிய எடிட்டர்களிடம் கூட இல்லாத ஒரு திறந்த மனம், துணிச்சல் அவருக்கு இருந்தது.
அண்மையில் தீராநதியை திரும்ப ஆரம்பித்த போது என்னிடம் எழுதக் கேட்டார். “பேஸ்புக்கில பதிவு எழுதிறதுல ஆர்வம் காட்டுறீங்க. நான் கேட்டால் கொடுக்க மாட்டீங்களா?” என கோபப்படவும் செய்தார். அவரது மறைவு ஒரு மிகப்பெரிய இழப்பு.
விகடனில் வந்துள்ள அஞ்சலிக் குறிப்பில் இருந்து:
"ப்ரியா கல்யாணராமனின் சொந்த ஊர், நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல். இவரது இயற்பெயர் ராமச்சந்திரன். தந்தை மற்றும் தாயார் பெயரை இணைத்து தனக்குப் புனைப்பெயர் சூட்டிக்கொண்டார். கல்லூரிப் படிப்பு முடித்து, தனக்குக் கிடைத்த அரசுப்பணியையும் மறுத்து, குமுதம் வார இதழில் தன் 21 வயதிலேயே பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கியவர். பிற்காலத்தில் குமுதம் வார இதழின் ஆசிரியராக உயர்ந்து, பல ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்து பணியாற்றியவர்.
குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி அவர்களால் பத்திரிகை உலகத்துக்கு அடையாளம் காட்டப்பட்ட ப்ரியா கல்யாணராமன், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், நாவல்களையும் எழுதியவர். குமுதத்தில் பல தொடர்களையும் எழுதியவர். 108 திருப்பதிகள், கோயில் சொல்லும் கதைகள், தெற்கத்தி தெய்வங்கள், மகிமை மிக்க மகான்கள், ஜகத்குரு, ஆதலினால் ஆலயம் செல்வீர், ஜாக்கிரதை வயசு 16, ஆண்டவன் உங்கள் அருகில் என்று அவர் எழுதிய பல தொடர்கள் நூல்களாகவும் வெளியாகியிருக்கின்றன.
இளம் பத்திரிகையாளர்களையும் எழுத்தாளர்களையும் அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் இயல்பு கொண்டவர் ப்ரியா கல்யாணராமன்.
ப்ரியா கல்யாணராமனின் மனைவி ராஜ சியாமளா ஒரு எழுத்தாளர். ப்ரியா கல்யாணராமனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்."
மனம் உடைந்த நிலையில் தான் இதை எழுதுகிறேன். உங்களை மிகவும் மிஸ் பண்ணுவேன் சார். நீங்கள் இன்னும் ஒரு முப்பது, நாற்பதாண்டுகளாவது இருந்திருந்தால் எத்தனையோ புதிய படைப்பாளிகளுக்கு குமுதத்திலும் தீராநதியிலும் ஊக்குவித்திருப்பீர்கள். உங்களுடையது ஒரு கலாச்சார முக்கியமான பங்களிப்பு. நீங்கள் என்றும் எங்கள் நினைவில் ஒரு வாடாத மலரைப் போல இருப்பீர்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...