முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிறையில் தள்ளி விடுங்கள்!

 

என்னுடைய ஆசைகள் மிகச்சின்ன ஆசைகள்


  1. தினமும் எழுத 3-4 மணிநேரங்கள் வேண்டும். தொடர்ந்து சில நாட்கள் இடைவிடாமல் 10-12 மணிநேரம் எந்த வேலை கொடுத்தாலும் - அது உட்கார்ந்து பண்ணுவதே, யாருடனாவது பேசிக் கொண்டே இருப்பதோ, யார் பேச்சையாவது கேட்பதோ, ஆவணங்களை தயாரிப்பதோ, பயணிப்பதோ - எனக்கு கொலை கடுப்பாகும். அப்போது தான் நான் மிக மோசமான மனநிலையில், யாரைப் பார்த்தாலும் கடித்துக் குதறும் கொதிநிலையில் இருப்பேன்.
  2. புதிய நாவல் ஒன்றை மிகவும் ரசித்து பதிமூன்று நாட்கள் எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது வந்தது ஒரு சனியன். தொடர்ந்து அலுவலக வேலைகள் எட்டு மணிநேரம் என்றால், இந்த புதிய சனியன் வேலைக்காக நான் உபரியாக நான்கைந்து, மணிநேரம் தினமும் செலவிட வேண்டி இருந்தது. அதை விட, நாள் முழுக்க அது என் மூளையை அடைத்துக் கொண்டது. அது ஒரு ஆவணத் தொகுப்பு வேலையாக இருந்தாலும் என் கடந்த காலத்தை மீளுருவாக்கத் தேவைப்பட்டதால் என்னை உணர்வுரீதியாக தினமும் புண்படுத்தி வந்தது. அதாவது ஒரு துருவெடுத்த கத்தியால் நம் தேகத்தை நாமே கீறிக் கொள்வதைப் போன்ற வேலை. அதை அடுத்து ஒரு பயணம். இதனால் நாவல் எழுதுகிற சரளம், பாய்ச்சல் அப்படியே முறிந்து போனது. அதன் பின்னர் நாவலுக்குள் புகுந்து அங்கிங்கே உலவ முடிந்தாலும் பழைய ஒழுக்கு கிடைக்கவில்லை. இப்போது ஒரு கணக்கெடுத்துப் பார்த்தேன். தவிர்க்க முடியாத இடைவேளை வருமுன்னர் நான் 14 நாட்களில் 12,000 வார்த்தைகளை முடித்திருந்தேன். இத்தனைக்கும் அப்போது தினமும் வகுப்பு, அதற்கான தயாரிப்புகள், தேர்வுத்தாள் திருத்துவது என கடுமையான வேலைப்பளு இருந்தது. ஆனால் எனக்கான எழுத்து நேரத்தை என்னால் துண்டாக வகுத்துக் கொண்டு செயல்பட முடிந்தது. ஏனென்றால் அந்த வேலைகள் என்னை முழுக்க ஆக்கிரமிப்பவை அல்ல. ஆனால் எழுத்துக்கு தடை வந்த பின்னர் என்னால் அடுத்த 18 நாட்களில் வெறும் 8000 வார்த்தைகளே எழுத முடிந்திருக்கிறது. ஒருவேளை இந்த கொடுமையான இடைவெளி விழுந்திராவிடில் நான் இந்நேரம் நாவலை முடித்து சிறிய திருத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பேன். அதை நினைத்தாலும் தான் எனக்கு கடும் ஆற்றாமை ஏற்படுகிறது.
  3. இப்போது ஒரு பதிப்பகத்துக்கு நாவல் போட்டிக்காக வந்த சில நாவல் பிரதிகளை long listயை தயாரிக்கும் நோக்கில் படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு விசயத்தில் பொறாமை இவர்கள் மீது ஏற்படுகிறது. இவர்களும் என்னைப் போன்றவர்களே. ஆனால் இவர்களால் ஒரே இடத்தில் இருந்து ஒரு குறுநாவலை எழுதி முடிக்க முடிகிறது. அவர்களுடைய அன்றாடத்தில் எந்த அமைப்பும் கொடூரமாக குறுக்கிடுவதில்லை. பதினைந்து வருடங்களுக்கு மேலாக தினமும் எழுதி வருகிறேன் என்றாலும் என்னால் இது முயலவில்லை என்று நினைத்து வயிறெரிகிறது. ஒரு காலத்தில் எனக்கும் இவர்களைப் போல தொந்தரவில்லாத, நிம்மதிக்கு பங்கமில்லாத, அலைச்சல் இல்லாத ஒரு வாழ்க்கை இருந்தது. கொஞ்சம் நேர ஒழுங்கு மட்டும் இருந்தால் எதையும் எழுத முடியும் எனும் நிலை இருந்தது. இன்று இந்த அமைப்புகள் சொன்னால் நான் என் நாவலை விட்டு விட்டு சொன்ன இடத்துக்கு ஓட வேண்டும், சொன்ன வேலைகளை, சொன்ன நேரத்துக்கு செய்து கொடுக்க வேண்டும். அது ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்களாகக் கூட இருக்கலாம், ஆனால் நான் ஆறு மாத கர்பிணியை கருவறுப்பதைப் போன்றாகும் இது. இதைப் பற்றி ஆஷிஸ் நந்தி எழுதின ஒரு கட்டுரை இருக்கிறது. அதன் தலைப்பை இங்கு குறிப்பிட்டால் கூட எனக்கு அதனால் சிக்கல் வந்து விடும்.
  4. முன்பு போல நினைத்த விசயங்களை எழுதுகிற சுதந்திரம் எனக்கு இல்லை. எதைச் சொன்னாலும் அதை எனக்கெதிராக திருப்பி விடுவார்களோ எனும் அச்சம் இருக்கிறது
  5. என்னைச் சுற்றி எழுத்தாள நண்பர்கள் நிறைய பயணங்களில் ஈடுபடும் போது, எழுத்தாளர்கள் அல்லாத நண்பர்கள் பலதரப்பட்ட வேலைகளை செய்யும் போது இவர்களுக்கு ஏன் மாதக்கணக்கில், வருடக்கணக்கில் கடுமையான கவனத்தை, நேர நிர்வாகத்தை, கடப்பாட்டைக் கோரும் நாவல் வேலைகள் இல்லை, ஏன் அன்றன்றைக்கான வேலைகளை முடித்து விட்டு டிவி பார்த்து, சமூகவலைதளத்தில் உலவி விட்டு நிம்மதியாக உறங்க முடிகிறது என எண்ணி மனம் தொந்தரவுக்கு உள்ளாகிறது, நான் மட்டும் பிடிவாதமாக தினமும் சில மணிநேரமாவது ஒரே புத்தக புரோஜெக்டில் செலவழித்தாக வேண்டும், என் கவனத்தை வேறு வேலைகளில் வீணடிக்கக் கூடாது என இருக்கிறேன் என புலம்புகிறேன். ஆனால் எனக்குத் தெரியவில்லை. இப்படித்தான் இருக்க விரும்புகிறேன். அதே நேரம் எனக்கு இந்த ஜாலியோ ஜிம்கானா உலகத்தையே நினைத்து பொறாமையாகவும் இருக்கிறது.
  6. இப்படியான ஒரு அடிமை வாழ்க்கைக்கு நடுவே 2021 ஏப்ரலில் துவங்கி இவ்வருடம் பிப்ரவரியில் 380 பக்கங்களுக்கு மேல் வருகிற ஒரு நாவலை நான் எழுதி முடித்து விட்டேன் என்பதை நினைத்தால் திகைப்பாக இருக்கிறது. அதற்கு நான் கொரோனாவுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். கொரோனா நமது அமைப்புகளை சக்கரங்களை உடைத்து எல்லாரையும் சற்று தாமதப்படுத்தியதால், கொடுங்கோலர்களின் ரதங்கள் அங்கங்கே தேங்கிப் போனதால், நான் பயனுற்றேன். கொரோனாவை பின்னர் அவர்கள் முறியடித்து பின்னர் என்னை சாட்டையை சொடுக்கி விரட்டத் தொடங்கினார்கள் (நான் எனக்கு சம்பளம் தரும் வேலையை சொல்லவில்லை என்பதை என்னைத் தொடர்ந்து படித்து வருவோர் இந்நேரம் புரிந்து கொண்டிருப்பீர்கள்.)
  7. என்னுடைய ஆசை மிகவும் சிறியது - நான் கேட்பதெல்லாம் தினமும் சில மணிநேரங்களாவது நான் ஒரே இடத்தில் இருந்தே ஒரே ஒரு புரோஜெக்டில் பணி செய்ய, அடுத்தடுத்த ஆண்டுகளில் சில நாவல்களையாவது எழுதி முடிக்க வேண்டும். அந்த சில மணிநேரங்கள் முழுக்க என் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இப்போதைக்கு நான் புக்காவஸ்கியின் கவிதையில் வரும் அந்த மூச்சுத்திணறும் நீலப்பறவையைப் போலிருக்கிறேன்.  
  8. சிறைவாசிகளுக்கு ஏகப்பட்ட நேரம் கிடைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களுடைய நேரம் முழுக்க அவர்களுக்கானது. எனக்காக சிறை நிர்வாகம் ஒரு மடிக்கணினியை மட்டும் அனுமதிக்குமெனில் நான் அடுத்த பத்து வருடங்களும் சிறையில் இருக்க விரும்புகிறேன். ஏனெனில் சுதந்திரமெனில் அது பௌதீகமானது அல்ல, அது ஒருவர் தன் நேரத்தை சுதந்திரமாக செலவழிக்கும் உரிமையாகும். அது இல்லாத சுதந்திரம் என்ன சுதந்திரம்? யாராவது மேற்சொன்ன ஏற்பாட்டை செய்து தர முடியுமெனில் என்னை உடனே சிறையில் தள்ளி விடுங்கள். ஹென்ரி இப்படியான ஒரு கதையை எழுதி இருக்கிறார் - The Cop and the Anthem. அதில் வீடில்லாத ஒரு திருடன் - பெயர் சோபி - குளிர்காலத்தின் கொடுமை பொறுக்க முடியாமல் சிறைக்குப் போய் வசதியாக இருக்கலாம் என யோசித்து பல முயற்சிகளில் ஈடுபடுவான். நானும் சோபியைப் போல கேட்கிறேன்: சிறையில் தள்ளி விடுங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...