முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலக்கிய சிகரம் பேட்டி - பகுதி 1


 

2021 டிசம்பரில் இலக்கிய சிகரம் எனும் இதழில் வெளியான பேட்டி இது. நான்கு பகுதிகளாக வெளியிடப் போகிறேன். முதற் பகுதி இங்கே:


சொல்வனம், இலக்கிய சிகரம் பேட்டி

- ஆர். அபிலாஷ்


  1. உங்களைப் பற்றி அறிமுகக் குறிப்பு தர முடியுமா?

பதில்: என் அப்பாவுக்கு சொந்த ஊர் நாகர் கோயில் அருகிலுள்ள பத்மநாபபுரம் எனும் சிற்றூர்.

அம்மாவுக்கு விளவங்கோடு தாலுகாவில் உள்ள காஞ்சாம்புறத்தில் உள்ள, கடலை ஒட்டிய,

வைக்கலூர் எனும் பகுதி. நான் பள்ளிக் கல்வி பயின்றது தக்கலையில். கல்லூரிக் கல்வியில் இளங்கலையை நாகர்கோயிலில் உள்ள ஸ்காட் கிறித்துவக் கல்லூரியிலும், முதுகலையை சென்னையில் உள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியிலும், முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பை சென்னை பல்கலைக்கழகத்திலும் முடித்தேன்.

இப்போது பெங்களூரில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராக உள்ளேன்.


இந்த வேலைக்கு எப்படி வந்தேன் என்பது சுவாரஸ்யமான கேள்வி:

எனக்கு தொழில்பூர்வமான வாழ்வில் மிகுதியான ஈடுபாடு காட்டுவதில் நம்பிக்கை இல்லை. அது என் இயல்புக்கு ஏற்றதல்ல. நிறைய பணம், அதிகாரத்தை அடைவதில் எனக்கு ஆர்வம் ஏற்படுவதில்லைமாறாக எழுத்துக்கு இடையூறு இல்லாத வேலை என்பதே என் இலக்காக எப்போதும் இருந்ததுபடிப்பை முடித்த பிறகு கல்லூரி ஆசிரியராக விரும்பினேன். ஆனால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்காலிகமாக ஒரு காப்பி எடிட்டராக வேலை செய்தேன். பின்னர் அவ்வேலை பிடித்துப் போய் ஆசிரியராகும் விருப்பத்தை மறந்து போனேன். அறிவியல் சார்ந்து வாசிக்க அந்த வேலை உதவியது. ஏஸியில் இருந்து கொண்டு கணினியில் வேலை செய்வது, இளைஞர்கள் மத்தியில் இருப்பது, கார்ப்பரேட் கலாச்சாரம் பிடித்திருந்தது. ஆனால் ஒருநாள் என்னுடைய அணியிலுள்ளவர்களுக்கு மொழி சார்ந்த எடிட்டிங் பயிற்சி அளிப்பதற்கு சொன்னார்கள். நான் அதை அவ்வளவு மகிழ்ச்சியுடன் செய்தேன். அதன் பிறகு என்னை மொழிப் பயிற்சியாளனாக்கி வாரம் சில வகுப்புகள் எடுக்க சொன்னார்கள். நான் அதை உள்ளுக்குள் கொண்டாடினேன். அந்த நிறுவனத்தில்

சில மாற்றங்கள் நிகழ்ந்து எங்கள் அணி கலைக்கப்பட்டது. நான் அப்போது தான் பாடம் சொல்லித் தருவது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிற செயலாக உள்ளது, அதனால் இனி ஆசிரியர் வேலைக்கு முயலலாம் என முடிவெடுத்தேன். ஆரம்பத்தில் ஏற்பட்ட தடைகளைக் கடந்து கல்லூரி ஒன்றில் வேலையும் பெற்றேன். அது என் வாழ்வின் மிகச்சிறந்த காலகட்டம் எனச் சொல்வேன். ஒரு புத்தம் புதிய மனிதனாக, புத்துயிர்ப்பு பெற்றவனாக உணர்ந்தேன். எழுதுவதற்கு, படிப்பதற்கு கூடுதல் நேரம் கிடைத்தது. தினமும் நிறைய மாணவர்கள் மத்தியில் இருப்பது அவ்வளவு உற்சாகத்தை அளித்தது. அந்த காலகட்டத்தில் தான் நான் என்னுடைய முதல் நாவலானகால்களைஎழுத ஆரம்பித்தேன். அந்த நாவல் தான் எனக்கு சாகித்ய அகாதெமி யுவ புரஷ்கார் விருதைப் பெற்றுத் தந்தது. ஆனால் ஆசிரிய வேலையில் ஸ்திரத்தன்மை வேண்டுமெனில் முனைவர் பட்டம் அவசியம்அதற்காக ஆய்வுக்காக வேலையை விட்டு விட்டு பகுதிநேர வேலைகளை (பெரும்பாலும் எடிட்டிங்)

செய்தேன். நான் என் ஆய்வறிக்கையை சமர்ப்பித்து விட்டு பட்டம் கிடைக்கும் இடைவேளையின் போது ஒரு நிறுவனத்தில் வேலைக்காக நேர்முகத்துக்கு சென்றேன். என்னை நேர்முகம் செய்தவர்களில் முக்கியமானவர் பின்னாளில் எனக்கு மேலாளராக வந்தவர். அவரை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. (அவரைப் பற்றி பின்னர் ஒரு சிறுகதை எழுதினேன்.) அதனாலே வேறு வேலை வாய்ப்புகளை விட்டு விட்டு அங்கேயே சேர்ந்து

 கொண்டேன். அந்த வேலையும் எனக்கு முக்கியமான திறப்புகளைத் தந்தது. அது புத்தகங்களை எடிட் செய்யும் வேலை. இலக்கிய, தத்துவம், சினிமா கோட்பாட்டு புத்தகங்களை என்னிடம் தந்து விடுவார்கள். (நான் அங்கு எடிட் செய்த கோட்பாட்டு புத்தகம் பின்னாளில் நான் இப்போது பணி செய்யும் பல்கலைக்கழகத்தில் பாடநூலானது.) ஒவ்வொரு நூலையும் ஊன்றி வாசித்து நிறைய பரிந்துரைகள், திருத்தங்களுடன் அனுப்புவேன். பொதுவாக எனக்கு நேர்மறையான எதிர்வினைகள் கிடைக்கும் என்பதால் எனக்கு அங்கு நல்ல பெயர் இருந்தது. அங்கு தான் நான் ஹைடெக்கர் குறித்த ஒரு முக்கியமான நூலைப் படித்தேன். அது பின்னமைப்பியல் பற்றின என் பார்வையை மாற்றி அமைத்தது. என் வாழ்க்கைப் பார்வையையும், இலக்கிய அணுகுமுறையையும் நிச்சயம் மாற்றியது.

அங்கும் நான் மொழிப் பயிற்சியாளனாக கூடுதல் பணி செய்தேன். என் சகோதரி பங்களூரில் இருந்தார். அவர் என்னை அங்கு ஒரு பல்கலையில் வேலைக்கு விண்ணப்பிக்க சொன்னார்அவருடைய வற்புறுத்தலின் பெயரில் நான் அதைச் செய்தேன். அங்கிருந்து நேர்முகத்துக்கு அழைப்பு வந்த போது எனக்கு போக மனமில்லை. சென்னையை விட்டுப் போக மனமில்லை. பெரிய சம்பளமும் தேவையில்லை. நான் வேலை பார்த்த இடத்தில் கூட இருந்த அணியில் நல்ல நண்பர்கள் இருந்தார்கள்; அந்த மேலாளர் மீதிருந்த நன்மதிப்பு வேறு. எனக்கு அங்கிருந்து கிளம்பவே பிடிக்கவில்லை. ஆனால் அப்போது பார்த்து அலுவலக நடைமுறைகள் மாறினகடுமையான அழுத்தம், வேலை இலக்கை இரட்டிப்பாக்கினார்கள். சரி முயன்று பார்ப்போமே என நேர்முகத்துக்கு கிளம்பினேன். ஒரு பக்கம் மனத்தில் இந்த வேலை கிடைக்காது என்றும், மறுபக்கம்இப்போதைய வேலையின் அழுத்தத்தில் தாக்குப்பிடிக்க முடியும், வேறு வேலை அவசியம் என்றும் தோன்றிக் கொண்டிருந்தது. இருகூறாக பிரிந்து தத்தளித்துக் கொண்டிருந்தேன். வேலை கிடைத்ததும் நான் ஒரே சமயம் மிகவும் வருத்தமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன் - பெங்களூருக்கு இடம் பெயர வேண்டுமே எனும் நிரந்தர வருத்தம், நேர்முகத்தில் வெற்றி கிடைத்த தற்காலிக மகிழ்ச்சி இன்னொரு பக்கம்அப்போது கூட இன்னொரு வேலை கிடைத்தால் சென்னையிலே கிடைத்தாலே அங்கேயே இருந்து விடலாம் என நினைத்தேன். அந்த மூன்று வாரங்கள் கடுமையாக அதற்கு முயன்றேன். ஆனால் வேலை ஏதும் சென்னையில் அமையவில்லை. அதனால் கசப்புடன் கவலையுடன் பெங்களூருக்குப்

புறப்பட்டேன். அந்த தருணம் என் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போடும் என அப்போது எதிர்பார்க்கவில்லை


ஒவ்வொரு முறை ஒரு முக்கியமான மாற்றம் என் தொழில்வாழ்வில் நிகழும் போதும் அது என்

தனிப்பட்ட வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்கும். இந்த முறையும் அப்படியே நடந்தது -

சென்னையில் இருந்து வந்தது என் குடும்பத்துடனான என் உறவை உடைத்தது. குடும்பத்தை இழந்து தனிமையானேன். கடுமையான விரக்திக்கும் துக்கத்துக்கும் ஆளானேன். பிறகு அது என்னை அன்றாடத்தில் ஆர்வமற்றவனாக, கடுமையான எதிர்மறை எண்ணம் கொண்டவனாக்கியது. **** பற்றி நிறைய யோசித்தேன். நேரில் யாராவது லேசாக சீண்டினாலே தன்னை மறந்து கோபம் கொள்ளுகிறவனாக மாறினேன். ஒருநாள் மாலையில் நான் வேலை முடித்து விட்டு வெளியே வந்து ஒரு கடைக்கு சென்று விட்டு வரும் போது என்னுடைய வண்டியை நிறுத்தி இருந்த இடத்தில் அதை மறித்தபடி யாரோ இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார்கள். ஒரு சின்ன விசயம் தான்ஆனால் உலகமே என்னை தடை செய்யும் நோக்கில் அங்கு மறித்து நிற்பதாகத் தோன்றியதுசொல்லப் போனால் இதையெல்லாம் யோசிக்கக் கூட அவகாசம் இல்லாமல் என் மனம் செயல்பட்டது. ஒரு ஆவேச அலை என்னை அடித்து சென்றது. அந்த வாகனத்தை என்ன செய்வது என யோசித்து அதன் கண்ணாடியை முஷ்டியால் குத்தி உடைத்தேன். அது அவ்வளவு சீக்கிரம் உடைந்து தெறிக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. கூடவே என் முஷ்டியும் கிழிந்து ரத்தம் பெருகிக் கொட்டியது. ஆனால் எனக்கு வலி மட்டும் ஏற்படவில்லை. வீடு செல்லும் வரை வழியெல்லாம் ரத்தம் சிந்தியபடி சென்றேன். அன்றிரவு தான் இது ஒரு பிரச்சனை என நான் உணர்ந்தேன். என் அதிர்ஷ்டம் வண்டியின் சொந்தக்காரர் அப்போது அங்கில்லை. இல்லாவிட்டால் பெரிய சண்டை ஆகியிருக்கும்.

இன்னொரு சந்தர்பத்தில் யாரிடமாவது நேரடியாக முரண் ஏற்பட்டு நான் கையை நீட்டி விட்டால் என்னவாகும்? இதற்கு முன்பு யாரிடமும் வன்முறையை காட்டியதில்லையே என யோசித்தேன். நான் முன்பு என்னைச் சுற்றி நிகழ்பவனவற்றால் சீண்டப்படாமல் சாமநிலையை கடைபிடிக்கிறவனாக இருந்தவன் தானே என நினைவுபடுத்திக் கொண்டேன். இந்த இயல்பு மாற்றம் பற்றி, அதன் உளவியல் பற்றி புத்தகங்கள் சில வாசித்தேன். கோபம், வன்முறை சார்ந்த எண்ணங்களை பிடிவாதமாக மாற்றிக் கொண்டு ஒருவிதமாக மீண்டு வந்தேன். இந்த கொடுமையான காலம் எனக்கு முதிர்ச்சியையும் அளித்தது. கூட இருப்பவர்களின் அன்பு, அக்கறை போன்றவை எவ்வளவு பெரிய இழப்பில் இருந்து மீண்டு வர உதவும் என புரிந்து கொண்டேன். என்னுடைய எழுத்து என்னுடன் எப்போதும் இருந்தது. நமக்கு என நிரந்தர இயல்பு என ஒன்று இல்லை; யாரும் எப்படியும் மாறலாம்பலவீனப்படலாம், அழியலாம், அங்கிருந்து மீண்டும் வரலாம் என தெளிவு வந்தது. நாம் எல்லாரும் ஒரு திரியின் நுனியில் காற்றில் அணைந்து அணைந்து எரிகிற தீபம் தானே என இப்போது அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.


2. தற்போது நடக்கும் கோவிட் அமளி துமளிகளுக்கு நடுவே உங்களின் வாசிப்பு எவ்வாறு பாதிப்புக்கு

உள்ளாக்கியிருக்கிறது? அன்றாடக் குழப்பங்களின் தாக்கத்தினால் படிப்பது மாறியிருக்கிறதா?


பதில்: கோவிட் அமளி துமளிகள் எளிய மக்களை நிர்கதியாக்கி இருக்கிறது. என்னைப் போன்ற நீலக்காலர் ஊழியர்களை அது பெரிதாக பாதிக்கவில்லை. வாசிக்க, எழுத கூடுதல் நேரம் கிடைத்துள்ளது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...