மணிமகுடங்கள் சரியும்,
ஆனால் பெருமுதலாளிகள் என்றுமே சரிய மாட்டார்கள்.
மாபெரும் பஞ்சம், மக்கள் போராட்டங்கள், யுத்தங்கள் வரும்
பெருமுதலாளிகளின் லாபம் இன்னும்
பலமடங்காகும்.
ஜனாதிபதிகள், தலைவர்கள்
நாட்டை விட்டு ஓடுவார்கள்
ஆனால் நீரோக்களோ நீச்சற்குளத்தில் வைனுடன்
அழகிகள் சூழ நீந்திக் களிப்பார்கள்.
மக்கள் கிளர்ச்சிகள்
ஒரு குழந்தை கனவில் அழுவதைப் போல்
கனவில் சிரிப்பதைப் போல்
ஒரு பொம்மையுடன் சமாதானம் ஆவதைப் போல்
சில கோட்டைத் தளவாடங்களை
மணிமாளிகளைகளை எரிப்பதுடன் முடியும்,
ஆனால் நீரோக்களும் சேடிகளும்
வெளியில் இருந்து சிரித்துக் கொண்டிருப்பர்.
ஏனெனில் ஜனநாயகம் எனும் கோட்டை
தம்மைக் காப்பதற்காகவே கட்டி எழுப்பப்பட்டதென அவர்கள்
அறிவர்!
ஒவ்வொரு முறையும் மக்கள் வாக்களிக்க வரிசையில் நிற்கையில்
ஜனநாயகம் நமுட்டுப் புன்னகையுடன்
நீரோக்களுக்கு சலாம் வைத்தபடியே
மக்களை வரவேற்கும்!
நீரோக்கள் எந்தெந்த வங்கிகளை, ரயில்களை, பொதுசொத்துக்களை, ஒப்பந்த பணிகளை, அண்டை நாட்டு சொத்துக்களை, வரிப்பணத்தை இம்முறை களவாடலாம் என
சப்புக் கொட்டி தயாராவர்!
வலி அதிகமானால் மக்களுக்குத் தான்
இருக்கிறதே
முகமூடி மனிதர்களை அகற்றுவதற்கென
போராட்டங்கள், ஆர்ப்பரிப்புகள்!
இன்றைய நீரோக்கள் வயலின் இசைப்பதில்லை.
அவர்களுக்கென இருக்கின்றன
மக்கள் கிளர்ச்சி பொழுதுபோக்குகள்!
Comments