முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதலின் தத்துவப் பிரச்சினை



காதலில் ஒரு மெட்டாபிஸிக்கலான தன்மை இருக்கிறது - ஒருவரை அவராக அன்றி மற்றொருவராக நினைத்து சிலாகிப்பது, அந்த இன்னொருவருக்காக ஏங்குவது, கிடைக்காத போது தன்னையும் பிறரையும் வருத்துவது, கிடைத்ததும் வானுக்கும் பூமிக்குமாக குதிப்பது. ஒரு பிரியாணியை பிரியாணியாக மட்டும் கருதி சாப்பிட முடிவதைப் போல, ஒரு குளத்தை குளமாக மட்டும் கருதி இறங்கி நீந்துவதைப் போல அசலாக பௌதீகமாக காதலை அணுக முடிவதில்லை. இது தான் காதலின் பிரச்சனை. இது கிட்டத்தட்ட பக்திக்கு நிகரானது. தெய்வத்தை நாம் புலன்களால் அறியவோ அதுவாகவே எடுத்துக் கொள்ளவோ முடியாது. இதனாலே தானோ ஏனோ பக்திக் கவிதைகளில் காதல் ரசம் முக்கியமானதாக இருக்கிறது.

நவீன காதல் பணத்தைப் போன்றது. பணத்தை வைத்து நேரடியாக ஒன்றும் பண்ண முடியாது. அதை ஈடாகக் கொடுத்து மற்றொன்றைப் பெற மட்டுமே முடியும். ஒருவனுக்கு கடுமையாகப் பசிக்கிறது. அவனுடைய ஊரில் எங்குமே உணவில்லை. அவனால் தன்னிடம் உள்ள பணத்தை தின்ன முடியாது. காதலைக் கொண்டும் உங்கள் புலன்களால் அனுபவிக்கத்தக்க எதையும் பெற முடியாது.

நேற்று பத்து ரூபாய்க்குக் கிடைத்தது இன்று இருபது ரூபாயாகும். நவீன காதலுக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது பரிமாற்ற ஈடுகளைத் தர வேண்டி உள்ளது. எவ்வளவு கொடுத்தாலும் அது அதிருப்தியின் விளிம்பிலேயே வாழ்கிறது.

பண மதிப்பிழப்பானால் நேற்று வரை பயன்பட்ட அந்த ரூபாய் நோட்டால் இன்று எந்த பலனும் இல்லை. நேற்று காதலிப்பதாகத் தோன்றிய ஒருவரிடம் நமக்கு இன்று காதல் தீர்ந்து விடுகிறது. அவர் இருப்பார், உலகம், காலம், இந்த உடல்கள் இருக்கும், ஆனால் காதல் இருக்காது. உங்கள் கைவசம் உள்ள அரிசியைப் பொங்க வைத்தால் அது சோறாக மாட்டேன் என சொல்லாது. ஏனென்றால் அது நவீன காதலை விட உண்மையானது.

காதலர்களிடம் அழகைத் தேடியபடியே இருக்கிறோம்; அல்லது அழகானவர்களிடம் காதலைத் தேடித் தேடி சலிக்கிறோம். ஆனால் காதல் கைகூடிய பின்னர் அந்த அழகை வைத்து என்ன பண்ணுவதென நமக்குத் தெரியவில்லை. நாம் உறவு கொள்ளும் உடலில் அந்த அழகு இருப்பதில்லை. அது எல்லா உடல்களையும் போல் மற்றொரு உடலாக இருக்கிறது. நம்மிடம் பரிவும் அன்பும் காட்டிய உடலில் அந்த பரிவும் அன்பும் இருப்பதில்லை. அது எல்லா உடல்களையும் போலிருக்கிறது. ஏனெனில் அது நவீன காதல் தோன்றும் முன்பான ஒரு பழைய உடல். வேண்டுமெனில் அந்த உடல் சுடும் தோசையில் அன்பு இருக்கிறது என நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்ளலாம். எதார்த்தத்தில் அந்த அன்பும் பரிவும் இந்த உலகில் எங்குமே இல்லாத தோற்றங்கள், மொழியின் ரூப மயக்கங்கள். ஒரு புன்னகையில் தோன்றி ஒரு கடுஞ்சொல்லில் மடிவன. 

இது உறவுகளின் பிரச்சனை அல்ல - ரத்த உறவுகள் - அன்னை, தந்தை, சகோதர சகோதரிகள் - எப்போதும் அவர்களாகவே இருக்கிறார்கள். நவீன காதலைப் போல் அல்லாது பௌதீக கொடுக்கல் வாங்கல்களால் அந்த உறவுகள் நீடிக்கின்றன. ஒரு தாய்க்கும் மகவுக்குமான உறவை தொப்புள் கொடி உண்டு பண்ணுகிறது. ஆனால் காதலுக்கு அப்படி ஒரு தொப்புள் கொடி இல்லை. அது முழுக்க மொழியின் மாய்மாலங்களை நம்பி இருக்கிறது!

 அதனாலே காதல் மனித சமூகம் கண்டுபிடித்த மோசமான விஷம் என்று தோன்றுகிறது. அது நம்மை வாழ்தலில், இருப்பில் இருந்து தடுக்கிறது. நீட்சே அன்பு, இரக்கம் ஆகியவை போலித்தனத்தின் உச்சம் என்றார். அந்த கணக்கில் காதலையும் சேர்க்கலாம். 

ஒரு ஆணையோ பெண்ணையோ காதலிக்காமல் ஒருவரை அவராகவே எடுத்துக் கொள்ள முடிந்தால் அதுவே சிறந்த உறவாக இருக்கும், ஒரு பிரியாணி சாப்பிடுவதைப் போல, மதுவருந்துவதைப் போல, பைக்கில் பறந்து போவதைப் போல, உடற்பயிற்சியைப் போல, தாகத்தில் தொண்டை வறள்வதைப் போல, பசி தணிந்து வயிறு அமைதி கொள்வதைப் போல, குளிரைப் போல, வெக்கையைப் போல காதலும் அதுவாக மட்டும், தொடர்ந்து உருமாறும் முயற்சி அற்றதாக,  பௌதீகமானதாக இருக்க முடிந்தால் அது சிறந்ததாக இருக்கும். நேரடியாக கேட்டுப் பெறத்தக்கதாக அது இருக்க வேண்டும். கேட்டதற்கும் பெற்றதற்கும் இடையே கற்பனை வந்து விட்டால் அது மீண்டும் மெட்டாபிஸிக்கலான ஒரு சங்கதி ஆகி விடும். 

நாம் பாலில் ஒரு ஸ்பூன் சர்க்கரையை கலக்கிறோம். இனிக்கிறது, ஒரு போதும் கசக்காது. ஆனால் மனித உறவுகளுக்கு, குறிப்பாக காதலுக்கு, இதைச் சொல்ல முடியாது. அது மாறிக் கொண்டே இருக்கிறது. ஒன்று நினைத்து செய்கையில் மற்றொன்றாகிறது. அதை எதிர்கொள்வோருக்கு அது என்னவென்றே கடைசி வரை புரிவதில்லை. நமக்கும் சர்க்கரைக்கும் இடையே ஸ்பூன் மட்டுமே வருகிறது. ஆனால் காதலுக்கும் நமக்கும் இடையில் மொழி, பண்பாடு இரண்டும் புகுந்து நம்மை ஏமாற்றவும் உலகில் இருந்து அந்நியப்படுத்தவும் செய்கிறது. 

அதனாலே இந்த உலகில் காதலை மீட்கும் சிறந்த வழி அதை உடலாக, உடல்வழியான பிற அனுபவங்களாக மட்டுமே கராறாகக் காண்பதே. அது மொழிக்குள் ஊடுருவாமல் பார்த்துக் கொள்வதே. நீங்கள் காமசூத்திரத்தை எடுத்துக் கொண்டால் அதில் நாம் அறிந்து வைத்திருக்கும் காதலே வருவதில்லை. அதில் செக்ஸ் மட்டுமல்ல, நல்ல வசதியான இடம், நறுமணம், சுவையான உணவு, பௌதீகமான சேவைகள் என ஒரு பெரும் பட்டியலே வருகிறது.  அப்படித்தான் காதல் அனுபவிக்கப்பட வேண்டும் என்கிறது. உடலைக் கடந்து ஒரு மாய்மாலக் காதலை, காபி அருந்தியபடி கண்ணைப் பார்த்திருக்கும், சாட்டிலும் பரிசுகளிலும் வாழ்கிற போலி நவீன காதலை காமசூத்ரா ஏற்பதில்லை. காதலின் நோக்கம் உடல் வழியாகவும், புலன் அனுபவங்கள் வழியாகவும் மட்டும் சாத்தியமாகிற காதலை அடைவது மட்டுமே. காளிதாசன் பாணி மேகதூதை அது காதலாக சித்தரிப்பதில்லை. மருகுவது, உருகுவது, நினைவில் மயங்குவது அல்ல, தொட்டறிவதே காதல்.

 சங்க இலக்கிய காதலும், காவியக் காதல்களும் இப்படித்தான் இருக்கிறது. இரு மனங்களுக்கு இடையிலான முயக்கமாக காதலை யார் மாற்றினார்கள் எனத் தெரியவில்லை. அது காதலை ஒரு ஏமாற்றுத் தொழிலாக மாற்றிவிட்டது. தொடர்பற்ற பல பெரும் எதிர்பார்ப்புகளை அது நம் மீது சுமத்தி விட்டது. அது காதலை அரூபமான, ரொமாண்டிக்கான ஒன்றாக மாற்றி விட்டது, அதை தியாகமாக, ஆதரவாக, கருணையாக சுய ஏமாற்றாக மாற்றி விட்டது. விக்டோரிய காலகட்டத்துக்குப் பின்னர், அது நம்மை "நான் உன்னை உன் அழகுக்காக, உடலுக்காக, நீ தரும் இன்பத்துக்காக காதலிக்கிறேன்" என நேரடியாகச் சொல்ல முடியாதவர்களாக்கி விட்டது. அப்படி நினைப்பதே அருவருப்பானது என கூச்சப்பட்டுக் கொண்டே சதா அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

காதலை இவ்வளவு உடலற்றதாக, ஒரு அரசியல் செயல்பாடு போல, சமூக சேவை, தொண்டு, சகோதர பந்தம் போல, பக்தியைப் போல மாற்றியதில் நமது கற்பனாவாத கவிஞர்களுக்கு, சினிமா கலைஞர்களுக்கு பெரும் பங்குள்ளது. 

காதலை மீட்க நாம் நமது முன்னோர்களின் தாம்பத்ய உலகுக்கு மீள வேண்டும். அவர்களுக்கு காதலிக்கத் தெரியவில்லை என்று கூறப்பட்டது. எனக்கு அவர்களே கூடுதலாக நிறைவாக குழப்பமின்றி குற்றவுணர்வின்றி காதலித்தவர்கள் எனத் தோன்றுகிறது. பரஸ்பரம் உடல்ரீதியாக பார்த்துக் கொள்வது, அக்கறை காட்டுவது, உறவு கொள்வது மட்டுமே காதல் என அவர்கள் பயின்றார்கள். நம்மைப் போன்று மலட்டுத்தன்மை, செக்ஸ் வறட்சி அவர்களுக்கு இருக்கவில்லை. வெளியில் இருந்து பார்க்க அது கிளாமராக, ஜிகினாவுடன் இருக்காது. காதல் மொழிகள், கோரல்கள் இருக்காது, ஆனால் அதில் இன்றுள்ள அந்நியத்தன்மை இல்லை. சிறந்த ஒன்றை தேடிக் கொண்டே இருப்பதே காதல் எனும் பைத்தியக்காரத்தனம் இல்லை. நாம் எப்படி ஒரு கிளையில் இருந்து கனியைப் பறித்து உண்டோமோ அப்படி ஆண் பெண் உறவு இருக்க வேண்டும் என அவர்களுக்குத் தெரிந்திருந்தது. நாம் இன்று கிளையில் இருந்து பூவைப் பறித்து முகர்கிறவர்களாக, சாப்பிட தயங்குகிறவர்களாக, அல்லது சாப்பாட்டையே நுகர்வாக பார்க்கிறவர்களாக இருக்கிறோம்.

 ஏனென்றால் நாம் காதலை மொழிக்குள் தேடும் பித்தர்களாக இருக்கிறோம். தனிமையில் இருந்தபடியே தொடர்ந்து காதலைத் தேடுகிறவர்களாக இருக்கிறோம். பக்கத்திலே காதலனோ காதலியோ இருந்தாலும் தொடர்ந்து இல்லாத காதலைத் தேடுகிறவர்களாக, உள்ளுக்குள் கடுமையான தனிமையை உணர்கிறவர்களாக இருக்கிறோம்.

நவீன காதல் ஒரு பெரும் மோசடி. அழகு, அதைக் குறித்த கற்பனைகள், அலங்காரங்கள், தப்பித்தல்கள், அரூபமான விழுமியங்கள் இல்லாத அசல் காதலை அறிவதே நம்மை இனி காப்பாற்றும். பிளேட்டோ தன் லட்சிய உலகில் கவிஞர்களை தடை செய்ய வேண்டும் எனக் கோரினார். நான் என் உலகில் நவீன காதலை தடை செய்வேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...