முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ் எழுத்தாளனின் புலம்பல்


தமிழ் எழுத்தாளர்களிடம் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு விசித்திர புகார் இது: “யாருமே என்னைப் பற்றி பேசுவதில்லை, திட்டமிட்டு என்னை இருட்டடிப்பு செய்கிறார்கள். என் புத்தகங்களை திட்டமிட்டு புறக்கணிக்கிறார்கள்.” ஆனால் இவர்கள் மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு எந்த விமர்சனமும் எழுத மாட்டார்கள். தன்னைப் பற்றி மட்டும் பிறர் மெனக்கெட்டு எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள் - 'இதயம்' முரளி போல பிறர் இவர்களை ஒன்சைடாக பின் தொடர வேண்டுமாம், ஆனால் இவர்கள் ஹீராவைப் போல அவர்களைத் திரும்பியே பார்க்க மாட்டார்களாம். சரி இவர்கள் ஏன் அடுத்தவர்களைப் பற்றி எழுதுவதில்லை? ஏனென்றால் அவர்களுடைய படைப்பாக்க பணிகள் இடையே, அன்றாட அலுவல்களின் நெருக்கடிகளுக்கு இடையே, படித்த புத்தகங்களைப் பற்றி விமர்சனம் எழுத நேரம் கிடைக்காது. நியாயம் தானே? ஆனால் மற்றவர்களுக்கும் இது பொருந்தும் தானே?

அடுத்து, விமர்சகர்கள் என இதற்கென்றே மந்திரித்து விடப்பட்ட சில நல்லவர்கள் தமிழில் இருக்கிறார்கள். அவர்களை மேடைக்கு மேடை பேச அழைப்பார்கள். முன்னுரை எழுத புத்தகம் அனுப்புவார்கள். ஆனால் அவர்களுக்கு என வாசகர் படையோ, புத்தக விற்பனை மதிப்போ இராது. அவர்களுக்கு விருதுகள் கொடுக்க மாட்டார்கள். அங்கீகாரம் இருக்காது. அதனால் தான் என் தலைமுறையிலும் அதற்கு அடுத்த தலைமுறையிலும் முழுநேர இலக்கிய விமர்சகர்களே இல்லை. நியாயம் தானே? ஒன்று எழுத்துக்கான மதிப்பு, மரியாதை, வாசக அங்கீகாரம் வேண்டும் அல்லது சன்மானம் கிடைக்க வேண்டும். ஒன்றுமே இல்லாமல் வேலை செய்ய வேண்டியவன் விமர்சகன் / மதிப்புரையாளன் மட்டுமே. யாருமே சுவருடன் தனியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கப் போவதில்லை. இப்போது அறுபது வயதுக்கு மேலுள்ள விமர்சகர்கள் ஓய்வு பெற்ற பின்னர் தமிழில் விமர்சகர் என யாருமே இருக்க மாட்டார்கள்.

அடுத்து, விமர்சனம் என்பது ஒரு தத்துவக் கட்டுரை எழுதுவதற்கு கிட்டத்தட்ட இணையாக உழைப்பை கோரும் பணி. சினிமா விமர்சனத்தை விட கடுமையான பணி. நான் முன்பு அதைத் தொடர்ச்சியாக பண்ணி வந்தேன். ஏனென்றால் நான் ஒரு இலக்கிய பைத்தியம். என்னைப் போன்ற வேறு இலக்கிய பைத்தியங்கள் சிலர் ஒரு பத்தாண்டுக்கு முன்பு வரை இதை செய்து வந்தார்கள். ஆனால் அக்காலம் முடிந்து அனேகமாக விட்டது - நான் நாவல் எழுதும் காலங்களில் வாசிப்பேன், ஆனால் வாசிக்கும் நூல்களுக்கு விமர்சனம் எழுத முனைவதில்லை.

அதனால் தான் தமிழின் கணிசமான முக்கிய படைப்புகளுக்கு விமர்சனக் கட்டுரைகளே வருவதில்லை. முன்னணி படைப்பாளிகளுக்குக் கூட சமூகவலைதளங்களில் தான் அதிகமாக அறிமுகக் குறிப்புகள், ரசனை உரைகள் வருகின்றன. அதாவது எழுத்தாளனாக அல்லாதவர்கள் தாம் புத்தகங்களைப் பற்றி எழுதுகிறார்கள். எந்த திட்டமிடலும் ஒருங்கிணைப்பும் இல்லாமல் தன்னிச்சையாக அவர்கள் எழுதுகிறார்கள். அவர்களும் தாம் எழுத்தாளனாகி கதை, கவிதை எழுதும் வரை தான் இப்பணியை செய்வார்கள்.

சிலநேரம் ஒரு டிரெண்டிங் போல ஒரு புத்தகத்தைப் பற்றி சகஎழுத்தாளர்களும் தொடர்ச்சியாக பேசுவதுண்டு. ஆனால் அது விதிவிலக்கு மட்டுமே. இப்போதைக்கு எழுத்தாளர்கள் அமெச்சூர் எழுத்தாளர்களான வாசகர்களையே நம்பி இருக்கிறார்கள்.

ஆகையால் இனி எழுத்தாளர்கள் தம் சகஎழுத்தாளர்களை எதிர்நோக்காமல் வாசகர்களிடமே மதிப்புரை, ரசனை உரை, விமர்சனத்துக்காக எதிர்பார்த்திருக்க வேண்டும். என்னுடைய நாவல்களை, சிறுகதைகளை, மற்ற புத்தகங்களைப் பற்றி கூட மூத்த, சமகால எழுத்தாளர்கள் பெரும்பாலும் எழுதியதில்லை. முழுக்க முழுக்க வாசகர்கள் தாம் என்னைப் பற்றி பேசியிருக்கிறார்கள். இதுவே எதிர்காலம்.

இனிமேல் எழுத்தாளன் தன் சகஎழுத்தாளன், மூத்த எழுத்தாளர்கள் முன்பு காற்சலங்கையுடன் சென்று நீதிகேட்க செல்லக் கூடாது. உங்களுக்கும் அவர்களுக்கும் ஏதாவது கொடுக்கல் வாங்கல் இருந்தால் மட்டுமே உங்களைப் பற்றி எழுதுவார்கள். சும்மா சும்மா அவர்களிடம் போய் ஒப்பாரி வைக்காதீர்கள். எழுத்தாளர்கள் பரஸ்பரம் ஆதரிக்கிற, ஒன்றாக இணைந்து இயக்கமாக செயல்படுகிற காலம் முடிந்து விட்டது.
யாருக்கும் யார் மீதும் வன்மமோ குரோதமோ இருட்டடிக்கும் நோக்கமோ இல்லை. எழுத்தாளர்களுக்கு பரஸ்பரம் அன்பும் மரியாதையும் உண்டு, ஆனால் அந்த அன்பையும் மரியாதையையும் நினைத்துப் பார்க்க இன்று ‘நேரம்’ இல்லை. எல்லாரும் தத்தமது அன்றாட வாழ்க்கையை, இலக்கிய உலகை, இடத்தைக் காப்பாற்ற, எழுத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்ய போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இனி நீங்கள் கவனிக்கப்படவில்லை என்று தோன்றினால் வாசகர்களிடம் கேளுங்கள். உங்கள் புத்தகத்தைப் பற்றி அறிமுகம் செய்ய அவர்களிடம் கோருங்கள். வாசக சாலை செய்வதைப் போல இத்தகையோரை உங்கள் கூட்டங்களில் பேச வைத்து உத்வேகப்படுத்துங்கள், ஆற்றுப்படுத்துங்கள். அவர்கள் பயிற்சியற்ற மொழியில் எழுதினாலும், உணர்ச்சிவயப்பட்டு மட்டுமே பேசினாலும் அதில் ஒரு களங்கமின்மை, உண்மைத்தன்மை இருக்கும். இனி இலக்கிய விமர்சனத்தை வாசகர்கள் எடுத்து செய்வார்கள், செய்யட்டும். சக எழுத்தாளன் பாவம் அவனை விட்டு விடுங்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...