முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரைவினாடி தாமதமாக செயல்படும் உடல்



பொதுவாக கொழுப்புணவுகள் சுவையானவை. சாப்பிட்டதும் நிறைவு தருபவை. அதனால் கீட்டோ உணவு முறையின் முதல் இரு நாட்கள் நன்றாகவே போயின. மூன்றாவது நாள் தான் தலைவலி, சிறிது களைப்பு தென்பட்டது. அடுத்து இந்நிலை மோசமாகி ஒருவிதமான கோபம், கடுப்பாக மாறி யாரைப் பார்த்தாலும் கொலைகாண்டாகத் தொடங்கியது. தலைசுற்றல் ஏற்படவில்லை, இயல்பாகவே எல்லா வேலைகளையும் பண்ண முடிந்தது. வகுப்பில் நன்றாகவே பேசினேன். அன்றாட வேலைகளிலும் குழப்பம், நினைவு மறதி ஏற்படவில்லை. ஓய்வு நேரத்தில் நிறைய எழுதக் கூட முடிந்தது. ஆனால் ஒரு சின்ன வித்தியாசத்தை உணர்ந்தேன். முன்பு நான் எழுதும் போது விரல்கள் வேகமாக தட்டச்சுப் பலகையில் விளையாடும். ஆனால் இன்றோ நான் நினைத்த சொல்லை ஒரு வினாடி தாமதமாகவே என் விரல்கள் அடித்தன. அதாவது நான் நினைப்பதற்கும் என் உடல் செயல்படுவதற்கும் இடையே ஒரு மிகச்சிறிய தாமதம், lag உணர்ந்தேன். என்னுடைய இதுவரையிலான எழுத்துப் பயிற்சியினால் இக்குறையைக் கடந்து எழுதவும் வேறு வேலைகளை முடிக்கவும் இயன்றது.


ஆனாலும் இன்று முழுக்க மனதின் பின்னால் கண்ணுக்குப் புலப்படாத யார் மீதோ கடும் வன்மம் நொதித்துக் கொண்டிருந்தது. இன்று கஷ்ட காலத்துக்கு யாராவது என் கோபத்தை கிளறும்படியாக, என்னை சீண்டும்படியாக நடந்திருந்தால் நான் நிச்சயமாக என் கட்டுப்பாட்டை இழந்திருப்பேன். நல்லவேளை இன்று உலகம் மிக அமைதியாக என் முன் காட்சியளித்தது. சாலையில் கூட வாகன நெரிசல், இடைஞ்சல்கள் இல்லை. எப்படியோ பகல் நேரப் பணிகளை முடித்து வீட்டுக்கு வந்து ஒரு ஆம்லெட்டை மட்டும் சாப்பிட்டு விட்டு குத்துச்சண்டை பயிற்சிக்காக ஜிம்முக்கு சென்றேன்.


இன்று மாஸ்டர் ஒரு கடினமான அடவைப் பயில வைத்தார். என் எதிரே ஒரு பையன் உட்கார்ந்து கொண்டு இடது கையால் குத்துவான். நான் தலையை இடப்பக்கமாக அசைத்து அந்த குத்தை தவற விட்டு அவனுடைய கை திரும்பப் போகும் முன்பே அதன் மீதாக என் வலக்கை கொண்டு அவனுடைய கைக்கும் தலைக்குமான இடைவெளியில் குத்த வேண்டும். இதைப் புரிந்து கொண்டு சரியாகப் பயிலவே நேரம் பிடித்தது. நான் நினைத்து குத்துகிறேன், அது சில நொடிகள் தாமதமாகவே போய் படுகிறது. நான் தலையை சாய்த்து மிஸ் பண்ணுறேன், ஆனால் நினைத்த வேகத்தில் தலை அசையவில்லை. ஒருவழியாக இதை செய்து காட்டிய பின்னர் அடுத்ததாக மிஸ் பண்ணி குத்தி விட்டு அதே சரளத்துடன் என்னுடைய கை என் வலது காதைப் பாதுகாக்க வரும் முன்பே இடக்கை எதிராளியை அடைந்து அவனை அப்பர் கட் செய்ய வேண்டும் என்றார் மாஸ்டர். எப்படியென்று செய்தும் காட்டினார். இரண்டு குத்துக்களையும் வேகமாக ஒரே ஒழுக்கில் விட என்னால் முடியவில்லை. விலகி மிஸ் பண்ணி குத்தி விட்டு அடுத்தொரு அப்பர் கட்டை விட்டாலும் என் உடம்பு தனியாகவும் கைகள் தனியாகவும் இயங்குவதைப் போலொரு உணர்வு. அப்போது தான் மாஸ்டர் வந்துஉங்க மைண்ட் இங்க இல்ல. வேறெதையோ யோசிச்சிட்டு இருக்கீங்கஎன்றார். நான் அவரிடம் கீட்டோவின் மூன்றாவது நாளாகையால் என் உடல் நான் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறது என்றேன். அவர் கிளம்பும்படி சொன்னார்


அப்போது தான் எனக்கு ஒரு விசயம் புரிந்தது - முழுமையான மன ஆற்றலோ, உடல் வேகமோ இல்லாமல் இருந்தால் கூட பேசுவது, யோசிப்பது, எழுதுவது போன்ற வேலைகளை சமாளிக்க முடிகிறது. உடம்பு சுத்தமாக முடியாத சந்தர்பத்தில் கூட சுணக்கமின்றி ஒரு நாவலை எழுத, ஒரு பாட்டைப் பாட, ஒரு மணிநேரம் மேடையில் பேச, தர்க்கரீதியாக சிந்தித்து முடிவெடுக்க முடிகிறது. ஆனால் உடலை முழுக்க பயன்படுத்த வேண்டிய இடங்களில் தான் அந்த தாமதமான எதிர்வினைகள் நம்மை கைவிட்டு விடுகின்றன. குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் நம் உடல் முழுக்க அம்பலப்பட்டு விடுகிறது. ஒரு அரைவினாடி தாமதத்தில் உடல் இயங்குவது கூட அங்கு அனைவருக்கும் புலப்பட்டு விடுகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...