முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நண்பர் லஷ்மி சரவணகுமாருக்கு (சற்று தாமதமான) பிறந்த நாள் வாழ்த்துகள்!

 


லஷ்மி சரவணகுமார் பங்கேற்ற ஒரு கூட்டத்திலே நான் இதைச் சொன்னேன் - எதிர்கால தமிழ் இலக்கியத்தின் திசைகளைத் தீர்மானிக்கும் ஒரு சில படைப்பாளிகளில், ஆளுமைகளில் ஒருவராக அவர் இருப்பார். எழுத்து மட்டுமல்ல, தொடர்ச்சியான வாசிப்பு, தனக்கான பாதையை அமைக்கும் முயற்சி, அயராமல் தன்னை தக்க வைக்கும் முனைப்பு ஆகிய இயல்புகளை நான் என் தலைமுறையினர் அனைவரிடம் காண்பதில்லை. நிறைய பேர் தனிப்பட்ட தேவைகளால் இலக்கிழந்து போகிறார்கள். ஒரு சில புத்தகங்கள் எழுதிய பிறகு ஒரு நீண்ட இடைவெளி, அடுத்து திரும்ப வருகிறார்கள், காணாமல் போகிறார்கள், அல்லது வெறும் தோற்றமாக மட்டும் நிலைக்கிறார்கள். லஷ்மி என்ன தடுமாற்றங்கள் வந்தாலும் இலக்கிய குதிரையில் இருந்து இறங்குவதே இல்லை என்பது பாராட்டத்தக்கது. இன்னொரு பக்கம் சினிமாவிலும் இயங்கி வருகிறார். இரு எதிரெதிரான களங்களில் வேலை செய்வது மிக மிக கடினம். கடும் பிரயாசை, கவனம், தீர்க்கமான பார்வை இருந்தாலே அது சாத்தியமாகும்.


கடந்த பத்தாண்டுகளில் அவர் சிறுகதைகளில் கையாண்டுள்ள பரப்பு, உணர்ச்சிகள், வித்தியாசமான கதையமைப்புகளைப் பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரே கதையை திரும்பத் திரும்ப எழுதக் கூடாது எனும் தெளிவும், ஆசான்களை பிரதியெடுக்கக் கூடாது எனும் முடிவும், தனக்கான எழுத்துலகை உருவாக்க வேண்டும் எனும் தீர்மானமும் இக்கதைகளின் பின் இருக்கிறது


புதிய உலகொன்றை, தனக்கேயான உலகொன்றை உருவாக்க முயலும் படைப்பாளிக்கே ஆன தடுமாற்றங்களை அவருடைய கதைகளிலும் காண முடியும். அதுதான் அவருடைய வலிமை என்றும் தோன்றுகிறது.


கடந்த ஓராண்டில் வெகுஜன பரப்பில் அவர் எழுதிய தொடர்புனைவில் தன் மொழியை, கதைகூறும் பாணியை சற்றே லகுவாக்கி, பரபரப்பாக்கியிருக்கிறார். நரனும் இதைச் செய்திருக்கிறார். இது இன்று தோன்றியுள்ளதொரு போக்கு


அதே போல கடந்த ஏழாண்டுகளில் அவர் சிறுகதையின் இலக்கணத்தை, வடிவ ஒருங்கை மீறி நாவலுக்கான களத்தை சிறுகதைக்குள் கொண்டு வருகிறார். சில சிறுகதைகளை சுருக்கமான திரைக்கதை வடிவிலும் எழுதுகிறார். இதைப் பற்றி நான் விசாரித்த போது சிறுகதையின் கராறான இரும்பு விதிகள் மூச்சுத்திணறடிக்கும் வகையில் உள்ளன, அவற்றை மீறிப் போக வேண்டும் என்று தெரிவித்தார். இது தான் எனக்கு லஷ்மியிடம் பிடித்தது - சரியோ தப்பா தான் என்ன செய்கிறோம், செய்ய வேண்டும் என்பது குறித்த தெளிவு அவரிடம் உண்டு. யோசித்தால் உடனடியாக செயல்படுத்தும் பாங்கும் அவருக்கு உண்டு.


தற்போது அவரது மோக்லி அமைப்பைக் கொண்டு அவர் ஒருங்கிணைக்கும் கூட்டங்களும் முக்கியமானவை. சிலரைப் போல ஒரு அமைப்பை உருவாக்கி தன் படைப்புகளைப் விளம்பரப்படுத்த அதை பயன்படுத்தாமல் தான் நம்புகிற, முக்கியமாக கருதுகிற விசயங்களை, ஆளுமைகளை உள்ளே கொண்டு வந்து அக்கூட்டங்களை நடத்துகிறார். மடங்களை உருவாக்க முயலவில்லை.


மனதளவில் லஷ்மி இன்னும் ஒரு 12 வயதுக்காரரே என அவரிடம் பேசும் போதும் அவர் தன் அப்பாவைப் பற்றி எழுதியுள்ளவற்றைப் படிக்கையிலும் தோன்றும். அதாவது தன்னை ஒரு தன்னிலையாக அவர் எப்படி பார்க்கிறாரோ அந்த பிம்பத்தை சொல்கிறேன். அந்த பிம்பத்தின் குரலிலே அவர் எழுத்துக்குள் பேசுகிறார். அவருடைய புனைவுகளிலும் அவர் தனக்கென முதிர்ச்சியான குரலை உருவாக்கிக் கொள்வதில்லை. அவருடைய கதைகளில் - குறிப்பாக தன்மையில் (first person) சொல்லப்படும், பெண்களை மையமிட்ட கதைகளில் - ஒலிப்பது இந்த பன்னிரெண்டு வயதினனின் குரலே. தான் எப்படியே தன் கதைகளிலும் அப்படியே இருக்க முயல்வது தான் அவரது பிரதானமான சிறப்பே. அதில் செயற்கைத்தனம், நாடகம் துளியும் இல்லை. அவரது எழுத்து நம்மை ஈர்ப்பதற்கு - அதன் கலைத்தன்மையை, மனவெழுச்சியை கடந்து - இந்த உளவியலும் ஒரு முக்கிய காரணம். மேற்கில் ஜெ.சி சாலிங்கர், புக்காவஸ்கி போன்றோர் - வேறு தளங்களில், சூழல்களில் - இப்படியான பதின்வயது ஆளுமையை எழுத்துக் குரலாக உருமாற்றி வெற்றி கண்டவர்களே.


லஷ்மி சரவணகுமார் சினிமாவிலும் வெப்சீரிஸிலும் வெற்றி பெற இத்தருணத்தில் வாழ்த்துகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...