முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொல்வனம், இலக்கிய சிகரம் பேட்டி: பகுதி 3



5. உங்களின் தற்போதைய சிந்தனையையும் இலட்சியங்களையும் எவ்வாறு கண்டடைந்தீர்கள்?
அந்தப் பயணம் குறித்து சற்றே வெளிச்சம் பாய்ச்சுவீர்களா?
பதில்: என் அப்பாவுக்கு திராவிட சிந்தனைகளில் ஆர்வம் இருந்தது. அவர் வாயில் இருந்து ஓராயிரம் முறைகள் பெரியார், அண்ணா, கலைஞர் பற்றிய புகழ்மொழிகளைக் கேட்டிருப்பேன். ஆனால் சின்ன வயதில் இவர்கள் என்னை ஈர்க்கவில்லை. பதினைந்து வயதில் நான் அறிமுகம் கொண்ட சிறுபத்திரிகை மரபும் திராவிட சிந்தனைகளில் இருந்து விலக்கியே வைத்தது. ஆனால் பின்னாளில் கிடைத்த அனுபவங்கள் பெரியாரியம் எவ்வளவு முக்கியமான சிந்தனைப் பள்ளி, சாதியம், பாகுபாடுகள் ஆகியவற்றுக்கு மையம் சாராம்சவாதம், இறைநம்பிக்கை எனப் புரிய வைத்தது. பெரியாரிய வாசிப்பு, பௌத்தம் குறித்த வாசிப்புகளும் சிந்தனையும் இந்த நிலைப்பாட்டை இன்னும் ஆழமாக்கியது. இன்னொரு பக்கம் எனக்கு சோஷலிஸ சிந்தனைகளில் உள்ள நம்பிக்கைக்கும் கலை இலக்கிய பெருமன்ற தொடர்புக்கும் சம்மந்தம் உள்ளது. தாராளமயமாக்கல், நவீன பொருளாதாரம் மக்களிடையே ஏற்படுத்தும் பிளவுகள், அநீதியான வாழ்க்கைமுறை, அடிமைத்தனம், சுரண்டல் இதையெல்லாம் காணும் போது மார்க்ஸியத்தில் இருந்தே நமது நெருக்கடிக்கான விடையை காண முடியும் எனும் நம்பிக்கை எனக்கு வலுத்துள்ளது. நவதாராளாவதத்தின் போக்கை உள்வாங்கி அரசின் முழுக்கட்டுப்பாட்டில் மக்களை முதலீட்டாளர்களாக்கி, பங்குதாரார்களாக்கி உற்பத்தியும், தொழில்களும் நடக்கிற ஒரு புதிய சோசலிச முதலீட்டிய அமைப்பு, அரசே முதலீட்டியமாகிற, அதை மக்களே கட்டுப்படுத்துகிற, வரிகளோ வலுவான இறையாண்மையோ இல்லாத நிலை தோன்ற வேண்டும். அதே நேரம் அது இறையாண்மையை முழுமையாக வலியுறுத்தாத ஓரளவுக்கு அனார்க்கிஸத் தன்மை கொண்ட அரசாக உருவாக வேண்டும் என கனவு காண்கிறேன். எல்லா மாற்றங்களும் கனவிலும், கற்பனைகளில் இருந்தும் தானே உருவாகின்றன!
தத்துவத் தளத்தில் தெரிதாவைப் பற்றி படிக்கையில் எதேச்சையாக ஒரு ஆய்வுக்கட்டுரையில் நாகார்ஜுனர்-தெரிதா ஒப்பிட்டை கவனித்தேன். பௌத்தம் என்றால் ஜென் என்ற அளவில் தெரிந்திருந்த எனக்கு மகாயான பௌத்தத்தை சேர்ந்த நாகார்ஜுனரின் “மூலமத்யமகா காரிகா” எனும் நூல் மிகப்பெரிய திறப்பை அளித்தது. சாக்ரடீஸ், ஹைடெக்கர், தெரிதா, லக்கான், டெலூஸ் இவர்களை எல்லாரையும் விட சிறந்த தத்துவஞானி நாகார்ஜுனர் தான் எனும் முடிவுக்கு வந்தேன்.
ஏனென்றால் நாகார்ஜுனர் அடிப்படை எனும் விசயத்தையே தகர்க்கிறார். வாழ்வில் விடுதலை என்றால் என்ன என புரிய வைக்கிறார். இந்த புரிதலை இலக்கியத்துக்குள் எப்படி கொண்டு வருவது, வாழ்க்கையில், நடப்புலகில், சிந்தனைமுறையில் எப்படி பரிசீலித்துப் பார்ப்பது என இப்போது யோசிக்கிறேன்.
6. சிறந்த கட்டுரையாளர்களாக,அபுனைவு எழுத்தாளர்களாக எவரை எல்லாம் பட்டியல் இடுவீர்கள்? தமிழுக்கு மட்டும் அல்லாமல் ஆங்கிலத்தையும் வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். வியாசம் என்றால் “ஒரு விஷயத்தைப்பற்றி யெழுதுங் கட்டுரை” என்கிறது அகராதி. உங்களின் வியாசர்கள் யார் யார்?
7. உங்களுக்குப் பிடித்த புனைவு எழுத்துக்கள் என்ன? எவரின் நாவல்கள் உங்களைக் கவர்கிறது? யாரின் கதைகளை ரசித்து வாசித்திருக்கிறீர்கள்?
8. இந்த வருடத்தில் வாசித்த புத்தகங்களில் எது உங்களை ஈர்த்தது? எந்த நூலை (நூற்களை எல்லாம்) குறிப்பிடத்தகுந்ததாகச் சொல்வீர்கள்?
பதில்: எனக்கு சிறந்த நூல் பட்டியலில் நம்பிக்கை இல்லை. “சிறந்த” என ஒன்றுமில்லை,
யாருமில்லை. ஒவ்வொன்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான் அந்த இடத்தைப் பெறுகின்றன.
மேலும் வாசிப்பு ஒரு அந்தரங்க நடவடிக்கை. எப்படி உங்கள் காதலியை நான் பரிந்துரைப்பதில்லையோ அப்படியே உங்களுக்கான எழுத்தாளனையும் நான் பரிந்துரைக்கக் கூடாது என நினைக்கிறேன். எனக்கு சுத்தமாகப் பிடிக்காத, நம்பிக்கை இல்லாத எழுத்தாளனை நீங்கள் கொண்டாடினாலும் நான் உங்களை மாற்ற முயல மாட்டேன். எதை வாசிக்கிறோம் என்பதல்ல, எப்படி வாசிக்கிறோம் என்பதே முக்கியம் என்கிறார் தெரிதா. ஒரு சிக்கலற்ற படைப்பைக் கூட ஒருவர் வெகுசுவாரஸ்யத்துடன் படித்து ஒன்றை அவர் அடைய முடியும்.
அந்த ஒன்று என்ன? நமது உளவாதலின் நுட்பத்தை, நமது இன்மை நோக்கிய ஒரு திறப்பை, புத்தக வாசிப்பு சாத்தியமாக்கும். அது எதையும் உருவாக்கித் தருவதில்லை; அதனால் வாசிப்பை மகத்துவப்படுத்த அவசியமில்லை. மாறாக அது நமது இன்மைக்கான வாயிலாக இருக்கிறது. ஆகையால் வாசிப்பே முக்கியம், எதை என்பதல்ல.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...