முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வட்டார மொழியும் இலக்கியவாதிகளும்

 






வட்டார இலக்கியம் ஏன் சில ஊர்களில் மட்டும் செழிக்கிறது? மற்ற ஊர்க்காரர்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த கேள்விகளை என்னுடையஅந்த காலம் போல இல்லைகட்டுரையை படித்து விட்டு நண்பர் மோகன் ராஜ் எழுப்பி இருந்தார். எங்களுக்குள் நடந்த அந்த விவாதத்தை இங்கு சிறிதுதிருத்திபகிர்ந்து கொள்கிறேன்.


மோகன் ராஜ்: நான் காஞ்சிபுரம் நான் நாகர்கோவிலை நேரில பார்த்த உணர்வு வந்து விட்டது. நாகர்கோவில் எழுத்தாளர்கள் எழுதுவதை படித்து விட்டு அந்நிலத்தில் பிறந்திருக்க கூடாத என்று ஏங்கியதுண்டு. கன்னியாகுமரி தஞ்சை மதுரை கோவில்பட்டி விருதுநகர் நாகர்கோவில் போன்ற ஊர்கள் இலக்கியத்  தின் மீது இவ்வளவு தாக்கம் செலுத்து வதன் பின்னணி என்ன?


நான்: அங்கு தோன்றி இலக்கியம் வளர்த்த படைப்பாளிகள் தாம் அதற்குக் காரணம்.


மோகன் ராஜ்: படைப்பாளிகளுக்கும் நிலத்திற்கும் தொடர்பு இருப்பது உண்மை தானே? எங்கள் ஊர் காஞ்சியிலிருந்து எந்த [இலக்கிய] படைப்பாளியும் வரவில்லையே. நா.முத்துக்குமார் கூட பாடல் ஆசிரியர் தான். ஒரு மாவட்டம் அதாவது நிலவியல் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதும் முக்கியம். உதா "ஜேஜே: சில குறிப்புகள்" வெளிவந்த போது மருத்துவ மாணவர்கள் அதைப் பற்றி பேசிக்கொண்டிருந்ததை கோவில் பட்டியில் பார்த்ததாக எஸ்.ரா எழுதியுள்ளார். இதெல்லாம் என் ஊரில் நடக்காது. பணத்தை தவிர இங்கு வேறு எதுவும் முக்கியப் படுவது இல்லை


நான்: ஒரு ஊரில் ஒரு படைப்பாளிகளின் குழு தோன்றி தொடர்ந்து எழுதும் போது அது ஒரு இலக்கிய தடத்தை ஏற்படுத்துகிறது. அதில் அடுத்தடுத்த படைப்பாளிகளில் பயணிக்க முடிகிறது. ஒரு ஊரின் பண்பாட்டை, மக்களை எப்படியெல்லாம் எழுதலாம் எனத் தெரிந்து போகும் போது அந்த மண்ணின் எழுத்தை வளர்த்தெடுப்பது அடுத்த தலைமுறைக்கு சுலபமாகிறது


 கூடவே ஒரு மாவட்டத்துக்கான தனி அழகியலும் தோன்றுகிறது. அதன் நிலப்பரப்பு துலங்குகிறது. அதற்கென பிரத்யேகமான மனிதர்கள் பாத்திரங்கள் ஆகிறார்கள். அதுவே அந்த ஊரின் எதார்த்தம் என்று நான் கூறவில்லை. ஆனால் அந்த மண்ணின் இலக்கியத்துக்கான ஒரு நிலவியல், ஜனங்கள், சூழல், தட்பவெட்பம், இயற்கை என ஒரு திரட்சி உருவாக்கப்படுகிறது. அது மேலும் மேலும் செறிவாக்கப்பட்டு திரண்டு வெண்ணெய் போல் மேலே வருகிறது.


.தா., என்னுடைய ஊரான பத்மநாபபுரத்தில் இருந்து வெகுசிலரே படைப்பாளிகளாக வந்திருக்கிறோம். என் ஊரை சேர்ந்தவர்களும் எனக்கு சாகித்ய அகாடெமி விருது கிடைத்த பின்னரே என்னை கவனித்தார்கள். என் நாவலைப் படித்தார்கள். ஊர் நூலகத்தில் என்னுடைய நாவல் வாங்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். இதன் பொருள் நான் அந்த ஊரின் பண்பாட்டு முகம் என்றல்ல. நான் ஒரு உதிரி மட்டுமே. தக்கலை, விளவங்கோடு, நாகர்கோயில் பகுதிகளில் இன்னும் அதிகமான இலக்கிய எழுத்தாளர்கள் கடந்த முப்பதாண்டுகளில் தோன்றி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களும் அங்கு உதிரிகளே. ஆனால் ஒரு முகாமாக, குழுவாக செயல்படுகிறார்கள். முன்பு எங்கள் ஊரில் சு.ரா இருந்தார். இப்போதும் ஜெயமோகன் இருக்கிறார். கலை இலக்கிய பெருமன்றத்தின் முகமாக பொன்னீலன் செயல்படுகிறார். மீரான், குமார செல்வா, நட. சிவகுமார், என்.டி ராஜ்குமார், முஸ்தபா, பீர் முகமது போன்ற அண்ணன்கள் இலக்கிய, கோட்பாட்டு எழுத்துப் பணியை முன்னெடுக்கிறார்கள் செல் சேவியஸ் எனும் அபூர்வ படைப்பாளியையும் மறக்க முடியாது. வாஸ்தோ இருக்கிறார். வேறு புது படைப்பாளிகளும் தோன்றி வருகிறார்கள்.


கலை இலக்கியப் பெருமன்றத்தின் விழாக்களில் வெகுமக்கள் சற்றே கலந்து கொள்வார்களே ஒழிய இலக்கியம் அம்மக்களின் மையப் போக்கல்ல. எல்லா ஊரிலும் அப்படித்தான் இருக்க முடியும். நெல்லை, விருதுநகர், கோவை இலக்கியவாதிகளும் இப்படித்தான் ஒரு தடத்தை உருவாக்குகிறார்கள். தனித்தனியாக, ஒரு தனிக்குழுவாக. இலக்கியம் அந்த ஊரின் முகமாக மாறினாலும் கூட அது விளிம்பிலேயே இருக்க முடியும். அதனாலே அம்மக்களின் சிறப்புப் பண்புகளால் அங்கு இலக்கியம் செழிப்பாக வளர்கிறது என்று கூற முடியாது. நீங்கள் உங்களூருக்கு சொல்வது தான் நாகர்கோயிலுக்கும் சொல்வேன். இங்குள்ள மக்களுக்கும் இலக்கியம்உயிர்மூச்சல்ல”. மாறாக அம்மக்களின் வெளிப்படாத விளிம்புநிலை, உதிரிப் பண்பாடே அவ்வட்டாரத்தின் இலக்கியமாக மலர்கிறது என்பேன். ஒரு காட்டுச்செடியில் மலரும், யாரும் பொருட்படுத்தாத பூக்களைப் போல. போத்ரிலர் சொல்லும் தீமையின் மலர்களைப் போல.


சொல்லப்போனால், எந்த மாவட்டத்துக்கும் அப்படி ஒரு தனி இலக்கிய மரபு உண்டாக முடியும். வேலை செய்ய ஆட்கள் இருந்தால் மட்டும் போதும்உங்கள் ஊருக்கென்று ஒரு வட்டார இலக்கியத் தடத்தை நீங்களும் உங்களைப் போன்றோரும் ஆரம்பிக்கலாமே?


மோகன் ராஜ்: எனக்கு அந்த ஆசை உண்டு; ஆனால் சென்னையில் உள்ள விரிவான மனநிலை இங்கு கிடையாது. இங்கு அனைத்தையும் தனிப்பட்ட விரோதமாகவும் விமர்சனம் ஆகவும் எடுத்து கொள்கிறார்கள்.


நான்: எந்த ஊரிலும் சிறு சிறு குழுக்களுக்குள் விரோதமும் பரஸ்பரம் காலைப் பற்றி கீழே தள்ளுகிற நண்டு அரசியலும் இயல்பே. மூச்சு முட்டுவதைப் போலிருக்கும். நீங்கள் சொல்வதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் இன்னும் கூடுதலாக சுதந்திரம் இருக்கும். அதே நேரத்தில் வட்டார புலத்திலே மேலும் தனித்துவமான செயல்பாடுகள் சாத்தியமாகும்.


மோகன் ராஜ்: நிலவியலுக்கும் எழுத்தாளனுக்கும் உள்ள தொடர்பு பற்றிய உங்கள் பார்வையை தெரிந்து கொள்வதற்காக தான் கேட்டேன். எனக்கு விரிவான பதிலை கொடுத்ததற்கு நன்றி


நான்: உங்கள் கேள்விகளுக்கும் அன்புக்கும் நன்றி!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...