முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“உண்மையெ சொன்னேன்” - நாவலாசிரியனும் உண்மையும்



பாட்ஷாபடத்தின் பிரசித்தமான வசனம் இது: கல்லூரியில் இடம் தர தன்னோடு படுக்க அழைக்கும் தாளாளரைப் பற்றி தங்கை தன் அண்ணன் ஆட்டோ ஓட்டுநர் மாணிக்கத்திடம் சொல்லுகிறாள். மாணிக்கம் உள்ளே போய் தனியாக தாளாளரிடம் பேச வேண்டும் எனக் கேட்கிறார். அவர் ஒப்புக் கொள்ள அந்த தனியறையில் தான் யாரென சொல்லுகிறார். அவ்வளவு தான், மிரட்டுவதோ கழுத்தைப் பிடித்து உலுக்குவதோ நாற்காலி மீது கால் வைத்து சவடால் விடுவதோ செய்யவில்லை. உண்மையை மட்டும் சொல்லுகிறார். தாளாளர் உடனே பதறிப் போய்அண்ணே உங்களுக்குத் தானே மொத்த காலேஜும், எதை வேணா எதுக்குங்கண்ணேஎன்கிறார். வெளியே வந்து தன் தங்கையிடம் உனக்கு சீட் கிடைச்சாச்சும்மா என்கிறார் ரஜினி. தங்கை அப்படி என்னெண்ணே சொன்னே என்று கேட்கும் போது தான் ரஜினி சொல்வார், “உண்மையெ சொன்னேன்!”


ஒரு எழுத்தாளனாகவும், ஒரு நாவலாசிரியனாகவும் நமது படைப்பு நம்பகத்தன்மை பெற வாசகனின் நெஞ்சில் போய் அறைய, உயிர்ப்புடன் வாசகன் முன்னெழுந்து நிற்க நாம் செய்ய வேண்டியதும் இது மட்டுமே என்கிறார் ஆன் லேமட் தனதுஒவ்வொரு பறவையாய்” (Bird by Bird) எனும் நூலில். “நல்ல எழுத்தானது என்பது உண்மையை சொல்லுவது”. எவ்வளவு எளிமையாக சொல்லி விட்டார். ஏன் புனைவுக்கு உண்மை முக்கியமாக இருக்கிறது?


யோசியுங்கள்! புனைவு என்பதன் பொருளே அது புனைவு, ‘உண்மைக்குஅப்பாலானது என்பது தானே. ஒரு நாவலாசிரியன் தனது அத்தியாயம் ஒன்றில் தனக்கு நடந்ததைஅப்படியேநினைவுபடுத்தி எழுதுகிறான் என்றால் அதுஉண்மையாகவந்து விடும். அதாவது அதைப் படிக்கையில்உண்மையின்வெம்மை அதில் வாசகனுக்கு ஸ்பரிசமாகும். இப்படித்தான் நாம் நம்புகிறோம். ஒரு அத்தியாயம் / ஒரு கதை நம்மை ஆழமாக பாதித்ததென்றால் அதில் கதையை சொல்லும் பாத்திரம் எழுத்தாளனே என்று நம்ப ஆரம்பிக்கிறோம். அல்லது பிற்பாடு யோசிக்கும் போது அது நிச்சயம் எழுத்தாளனுக்கு நடந்ததாகவே இருக்க வேண்டும் என்று முடிவுக்கு வருகிறோம். ஆனால் அதையே அவர் ஏன் ஒரு நாவலின் பகுதியாக, ஒரு சிறுகதையாக எழுத வேண்டும்? தன்னனுபவ கட்டுரையாக எழுதியிருக்கலாமே? அப்படி கட்டுரையாக சொல்லப்பட்டிருந்தால் நீங்கள் அதை இந்தளவுக்கு உணர்வுபூர்வமாக ஏற்றுக் கொண்டிருக்க மாட்டீர்கள். இது ஏன்?


ஒரு வாசகனுக்கு எதுநம்பத்தகுந்தபுனைவாக இருக்கிறதோ அதை அவன் உறுதியாக நம்புகிறான். இதை அரிஸ்டாட்டில் தனதுகவிதையியல்நூலில் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார். நம்பத்தகுந்தது என்றால் எதார்த்தத்தில் நடப்பது எனும் பொருள் அல்ல. ஒரு படைப்புக்குள், கதைக்களத்துக்குள் ஒரு பாத்திரம் எதையெல்லாம் செய்ய முடியுமோ, சொல்ல முடியுமோ, உணர முடியுமோ அதை மட்டுமே எழுத வேண்டும். அப்படி செய்யவும், சொல்லவும், உணரவும் படுவன கதையின் நோக்கத்துடன் துல்லியமாக பொருந்தி வர வேண்டும்; சிறிது கூட கதையின் கட்டமைப்புக்கு பொருந்தாமல் துருத்தி நிற்கக் கூடாது. அப்போதே அரிஸ்டாட்டிலைப் பொறுத்த மட்டில் அதுநம்பத்தகுந்தஉண்மையாகிறது. நீங்கள் எழுதும் ஒரு கதைக்குள் ஒரு பன்னிரெண்டு வயது சிறுவன் குதிரையில் ஏறி பயணிக்கிறான். அவன் ஒரு ஊனமுற்ற சிறுவனும் கூட. இதை உங்களால் நம்ப முடிகிறதா? முடியாது. ஆனால் கதைக்குள் அதற்கான சாத்தியங்களை உண்டு பண்ணி, அதற்கான தேவைகளை கதையின் அர்த்தம், விவாதத்தைப் பொறுத்து உருவாக்கினால் நிச்சயமாக நம்புவீர்கள். ஏனென்றால் அப்படி நம்ப வேண்டும் என ஆசைப்பட்டே நீங்கள் அக்கதையை வாசிக்க அங்கு வருகிறீர்கள். இதையே லேமெட்டும் சொல்லுகிறார் - “மனிதர்கள் தாம் யாரென அறிய அவசியப்படுகிற, ஆசைப்படுகிற ஒரு இனம்”. ஆனால் ஆட்டில் வாழும் ஒட்டுண்ணிப் பூச்சிகளுக்கு அந்த அவசியம் இருப்பதில்லை என்கிறார் லேமெட். மனிதன் அர்த்தத்தை புசித்து வாழும், அர்த்தங்களுக்காக சப்புக் கொட்டி எப்போதும் காத்திருக்கும் ஒரு பிராணி. அவனுக்கு ஒரு நாவலாசிரியன் ஒரு பிரத்யேகமான அர்த்தத் தொகுப்புகளால் அறைகளும், தூண்களும், கூரையும், மாடமும், கோபுரமும் கொண்ட ஒரு தனி கட்டிடத்தை எழுப்புகிறான். அந்த கட்டிடமே நாவல். அதற்குள் புகுந்தால் அதற்குள் பொருந்தக்கூடிய எதுவும் அவனால் நம்பத்தகுந்ததாகும். அந்த கட்டிடத்தில் தொங்குவிளக்குகள் இருந்தால், அந்த விளக்குகள் பாம்புகள் தொங்கினால் அவன் நம்புவான். ஆனால் அந்த பாம்புகளைப் பார்த்தபடி ஒரு சிறுவன் தன் அலைபேசியில் கேம்ஸ் ஆடுகிறான் என்றால் அது பொருந்தாது, அவனுக்கு தான் வாசிப்பது ஒருகதைஎனும் உணர்வு வரும். மாறாக அந்த பாம்புகளின் கீழ் ஒரு ஆணும் பெண்ணும் அவற்றைப் பார்க்காமலே / பார்த்தபடி ஆவேசமாகப் புணர்கிறார்கள் என்றால் அது அக்கதையின் போக்கைப் பொறுத்து நம்பும்படியாக ஆகலாம் என்பதுடன் அக்கதையின் முடிவில் அமானுஷ்யம், ஆபத்து, அச்சம் ஆகியவை காமத்துடன் தொடர்புறுத்தப்பட்டால் அவனுக்கு அத்தகவல் மிகுந்த வியப்பையும் கிளர்ச்சியையும் கூடத் தரலாம்


இந்த உண்மைக்கு நெருக்கமாக ஒரு கதையை எழுதும் ஆற்றலை நாம் நமது நினைவுகளில் இருந்து சில தகவல்களை வருவித்து அவற்றை மொழி / கற்பனை வழியாக செறிவூட்டி வளர்க்க முடியும் என லேமெட் நம்புகிறார். இதிலும்உண்மைஉள்ளதே. நம்மால் 100% கற்பனையில் இருந்து உண்மைக்கு நெருக்கமான, உண்மையாகப் படுகிற ஒரு கதையை எழுத இயலாது. ஏனென்றால் கதைக்குள் வரும் உண்மையானது நமது மனதுக்குப் படும் ஒரு கதைக்குள் உணர்வுபூர்வமாகஉண்மையாகஇருக்கிற உண்மையே. அதாவது எனக்குள் என் கற்பனை வழி பேருரு எடுக்கும் ஒரு பிரக்ஞைபூர்வமான கனவையே நான் மீண்டும் ஒரு கதையாக ஒரு வெற்றுப்பக்கத்தில் வடிக்கிறேன். இது ஒரு எழுத்தாளனுக்கு காலத்தடங்கல் இன்றி ஒரே சமயம் நடக்கிறது என்பதே ஒரு ஒழுக்கு / நீரோட்ட மனநிலை என சிக்ஸன்மிஹாய் எனும் ஆய்வாளர் சொல்லுகிறார். இது சாத்தியமாக சில நேரங்களில் நமது நினைவுகளின் குழாயைத் திறந்து விட வேண்டி இருக்கிறது. அதில் இருந்து கொட்டும் நீரானது உண்மையும் புனைவும் கலந்தது தானே. நீங்கள் நேற்று ஒரு நண்பருடன் உணர்ச்சிகரமாக பேசிய ஒரு அனுபவத்தை திரும்ப எழுதக் கேட்டால் சிறிது புனைவு கலக்காமல் உங்களால் துல்லியமாக நினைவுகூர முடியாது. ஆக நினைவுகளும் படைப்பூக்கம் தேவைப்படும் விசயங்களே. கற்பனையின் புலத்தில் நினைவெனும் குதிரை பிடரி பறக்க ஓடும் போதே எழுத்துமிக மிக உண்மையாகநமக்குத் தோன்றுகிறது


ஆக, உண்மையை சொல்ல இரண்டு விசயங்கள் தேவையுள்ளன:

  1. அது கதைக்குப் பொருத்தமாக, கதையின் அர்த்தத்துக்கு தேவைப்படுவதாக இருக்க வேண்டும். கதைக்கு வெளியே அது உண்மையா என்பது முக்கியமல்ல.
  2. அது நமது கற்பனையின் சாயல் கொண்டு உருவாகும் நினைவுகளின் சேகரத்தில் இருந்து உருவப்பட்டு நம் கற்பனையால் மேலும் செறிவுபடுத்தப்பட வேண்டும். கற்பனையால் ஒரு கதையாகி தனக்குள் தத்ரூபமாக உணரப்படாத ஒரு நினைவினால் ஒரு நாவலாசிரியனுக்கு பயனில்லை


கருத்துகள்

சா.விஜயகுமார் இவ்வாறு கூறியுள்ளார்…
பாட்ஷா படத்தின் அந்தக் காட்சி நீங்கள் விவரித்ததுபோல்தான் உண்டா எனத் தெரியவில்லை. திரைக்கதையில் அது பிழையல்லவா தன் தங்கைக்காக அவன் சமரசம் செய்கையில் அத்தாளாளர் வேறொரு அபலையின்மீது பாய்ந்திருக்கவே சாத்தியங்கள் அதிகம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...