முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திரஜித்தின் “ஞானக்கூத்தன்”

 


இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிழைப்பு தேடி சிங்கப்பூருக்கு வந்த சில தமிழர்களின் கதை எனத் தோன்றினாலும் இது அதுவல்ல. மாறாக வியாபாரம், உழைப்பு, வன்முறை மூலம் தன்னையறிவதே இந்த நாவலின் மையம். கதைசொல்லி சிறுவயதிலேயே தன் பெற்றோரை விட்டு சிங்கப்பூருக்கு வந்து ஒரு மளிகைக்கடையில் சேர்ந்து வேலை செய்கிறான். தன்னைப் போன்று அந்த ஊருக்கு வந்தவர்களுக்கு என்னவெல்லாம் நேர்கிறது, மது போதை, வன்முறை, பெண்ணாசை என ஆண்கள் தம் பாதையை இழப்பதை, பெண்கள் அவர்களால் துயருறுவதையும், பிரித்தானியர்கள் அதிகாரத்தை விட்டு விலகும் இடத்தில் வந்து சேரத் தவிக்கும் அரசியல் தலைவர்களையும் காண்கிறான். இறுதியில் எப்படி தன்னுடைய கடை முதலாளி தனது முதலாளியின் கடையை எடுத்துக் கொண்டாரோ அதே போல அவரது கடையும் தன்னிடம் வந்து சேர்வதைப் பார்க்கிறான். கடும் உழைப்பாலும் அதிர்ஷ்டத்தாலும் அவன் மேலே வந்து சிறிய அளவில் ஒரு பணக்காரன் ஆகிறான். வாழ்க்கை மிக எளிதானது, காதல், கோப வெறி, அரசியல் சித்தாந்தம், லட்சியம் ஆகியவற்றுக்கு வெளியே இருப்பது வாழ்க்கை, வாழ்க்கைக்குத் தேவை பணம், சாப்பாட்டுக்கு உத்தரவாதம், அமைதியான குடும்ப வாழ்க்கை, இவற்றில் மிதமிஞ்சி உணர்ச்சிகரமாக ஈடுபடாமல் விலகி இருப்பதே எனும் தெளிவுக்கு வருகிறான். அதனாலே அவனைஞானக்கூத்தன்என இந்திரஜித் அழைக்கிறார்.


இது போக இந்நாவலுக்குள் மற்றொரு கதைமடிப்பு இருக்கிறது - அது கதைசொல்லியின் (அவனுக்கென்று பெயர் இருப்பதாகத் தெரியவில்லை, அவன் ஒரு everyman.) உளச்சிக்கல், அடிக்கடி அவனுக்கு ஏற்படும் பிரமைகள், அவனை வழிநடத்தும் மிகுபுனைவு தோற்றங்கள் பற்றியது. ஏனோ இந்திரஜித் அந்த பாதையில் நாவலை எடுத்துச் செல்லவில்லை. அந்த பாதையில் ஐம்பது பக்கங்கள் நாவல் போயிருந்தால் இன்னும் சிக்கலானதாக, இருண்மையானதாக (செகாவின்கறுப்புத் துறவியைப்போல) வந்திருக்கும். நான் இந்நாவலை எழுதியிருந்தால் அந்த எருமை மீது வரும் சீனருடன் அவன் பேசுவதாக, அதன் பிறகு அதன் பொருளென்ன, அவனுடைய அப்போதைய நிலையில் அவன் அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என ஒரு தீர்வுக்கு (மதம், சிறுதெய்வங்கள், குடும்ப தெய்வம், காதல், காமம், அப்பா, அம்மா இப்படி ஏதாவது ஒன்றை ஒரு உருவகமாக மாற்றி) வருவதாக முடித்திருப்பேன்.


அதே போல நாவலின் இறுதி அத்தியாயங்களை - கதைசொல்லி தன் வியாபாரத்தை எப்படி போராடி மீளுருவாக்கி பணக்காரனாகிறான், அவனுடைய சவால்களை முறியடிக்கிறான் என்பதை - அவர் இன்னும் விரித்து 50-70 பக்கங்களாக எழுதி விட்டு கதைசொல்லி அடிதடி கேங்குகளுக்குள் போகலாமா வேண்டாமா எனத் தடுமாறுவதை ஒன்றிரண்டு அத்தியாயங்களில் சுருக்கியிருக்கலாம். இது நாவலுக்கு ஒரு சமநிலையைக் கொடுத்திருக்கும்.


இவ்வகை நாவல்களை நமது மத்திய வர்க்க ஆண்களின் (பூர்ஷுவா எலிப்பொந்து வாழ்க்கைக்கு வெளியில்) பணத்தேடல், வாழ்வில் நிறைவை அடைவதற்காகன் தத்தளிப்பு, இறுதியில் வெற்றியைப் பேசும் bildungsroman பாணி கதைகள் என்று கூறலாம். தமிழில் 80களில் பாலகுமாரனும், 2010க்குப் பிறகு சரவணன் சந்திரனும் இவ்வகை கதைகளை இலக்கிய-வணிக ரசனைக்குள் நின்று எழுதினார்கள். மேற்கில் பவுலோ கோய்லோ Alchemist போன்ற நாவல்களை வெற்றிகரமாக எழுதி இந்த வடிவத்தில் தனிமனிதனின் தன்னறிதலை பிரதானப்படுத்தினார். சரவணன் சந்திரன் பொருளாதார வெற்றி, ஆன்மீக மலர்ச்சி இரண்டையும் ஒரே புள்ளியில் (வியாபாரம் + முருக வழிபாடு + செக்ஸ்) இணைக்க முயன்றார். இதில் இரண்டாவது இரு அம்சங்களையும் பெரிதாகத் தொடாமல் கொஞ்சம் இருத்தலியல் தொனியில் இந்திரஜித் எழுத முயன்றிருக்கிறார்


வடிவரீதியாக இன்னும் கொஞ்சம் திருத்தியிருக்கலாம், அல்லது இன்னும் ஒரு நூறு பக்கங்கள் எழுதியிருந்தால் மேலும் சிறப்பாக வந்திருக்கும்.  


பதிப்பகம்: உயிர்மை


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...