முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இளைஞர்கள் மேலான நாவலாசிரியர்களா?




#நாவலாசிரியனுக்கானகுறிப்புகள் அனுபவம் அதிகமாக ஆக, வயது கூட கூட நாவலாசிரியர்களாக, புனைவெழுத்தாளர்களாக நாம் நமது உண்மையை சொல்லும் திறனை இழக்கிறோமா? இதைக் குறித்து பொதுவாக உள்ள பார்வை இது: கணிசமான இளம் எழுத்தாளர்களிடம் ஒரு அபாரமான துணிச்சலை, அதிரடித்தன்மையை, புதிய மொழியை, ஒரிஜினலான தன்மையை, களங்கமின்மையை அவர்களுடைய முதற் சில கதைகளில், நாவல்களில் நாம் காண்பதுண்டு. (இளமையிலேயே மூத்த படைப்பாளிகளை பிரதியெடுத்து, தேய்வழக்கான மொழியில் எழுதுகிறவர்களும் உண்டு தாம்.) ஆனால் அடுத்தடுத்த நாவல்களில் அவர்களுடைய இந்த தன்னெழுச்சி, களங்கமின்மை, தன்னனுபவ போக்கு குறைந்து, தாம் கண்ட உண்மையை சொல்லியே ஆக வேண்டும் எனும் தவிப்பு குறைந்து அவர்கள் பிரக்ஞைபூர்வமாக எழுத ஆரம்பிப்பார்கள். அதாவது தம்மில் இருந்து வெளியேறி மற்றமைகளில் தம் ஆன்மாவை கடத்தி தம் அன்றாட உலகில் இருந்து மாறுபட்ட உலகொன்றை சித்தரிக்க முயல்வார்கள். சில படைப்பாளிகள் இதிலும் தமது சொந்த குரலை ஒலிக்க விடும் திறன் பெற்றிருப்பார்கள்; சிலரோ பிளாஸ்டிக்கான குரலொன்றில் பேசத் தொடங்குவார்கள். ஆரம்பத்தில் கவனம் பெறாதிருந்த போது இருந்த துணிச்சல் மறைந்து தம்மை பிறர் அதிகமாக கவனிக்கிறார்களோ எனும் பதற்றம் இபோது அவர்களுடைய இயல்பூக்கத்தை தின்று விடத் தொடங்கும். அதனாலே அவர்கள் எல்லாருக்கும் பிடிக்கும்படியாக எழுத முயன்று செயற்கையாக மாறுவார்கள். சில மூத்த படைப்பாளிகள் தமது இளமையில் கொண்டிருந்த செழுமையை, தீவிரத்தை பின்னர் இழந்து தம்மையே பிரதியெடுக்கிறார்கள் என்றும் விமர்சகர்களால் நம்பப்படுகிறது. “அவரோட ஆரம்ப கால கதைகளே எனக்கு பிடிக்கும்” என்று பல சிறந்த எழுத்தாளர்களைப் பற்றி வாசகர்கள் கூறுவதுண்டு. ஜேம்ஸ் ஜாய்ஸின் “டப்ளினர்ஸ்” தொகுப்பு அவருடைய “யுலைஸஸை” விட நல்ல புத்தகம் என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். தஸ்தாவஸ்கியின் ஆரம்ப கால நாவல்களான Insulted and Humilated, The Double மீது எனக்கு ஒரு தனி பிரியம் உண்டு. அவரது பிற்காலத்தைய நாவல்களின் முதிர்ச்சி, விரிவு இவற்றில் இல்லையெனினும் என் இதயத்தை வெகுவாக கவர்ந்த ஒரு எளிமையை இந்த நாவல்களில் நான் கண்டேன். தமிழ் நாவலாசிரியர்களுக்கும் இதை சொல்ல முடியும். ஆன் லேமெட் தனது Bird by Bird (“ஒவ்வொரு பறவையாய்”) நூலில் இதைப் பற்றி பேசும் போது அனுபவம் பெற்ற ஒரு எழுத்தாளனின் சுயபிரக்ஞை அவனுடைய எழுத்தின் சரளத்தை பாதிக்கக்கூடியதே, அதே நேரம் அதில் இருந்து விடுபட முடியும், அதற்கு அவன் திரும்பத் திரும்ப தனது குழந்தைப்பருவ நினைவுகளுக்குள் பயணிக்க வேண்டும் என்கிறார். இங்கே ‘குழந்தைமை’ என்பதை ஒரு உருவகம் என்றே நான் பார்க்கிறேன். அதாவது நமக்குள் இருக்கும் குழந்தையை திரும்பத் திரும்ப கண்டுபிடிப்பது. புத்திசாலிகளின், நாகரிக வழக்கங்களின் உலகில் அக்குழந்தை ஒரு நிழலாகத் தேய்ந்து போகக் கூடும். தன்னுணர்வும் எழுத்துக்கலை குறித்த போதமும் மிக்க ஒரு நாவலாசிரியனுக்கு தான் எழுதி வரும் படைப்பு பற்றின பயம், குழப்பம், பதற்றம், கற்பனை (இந்நாவல் இப்படியாகுமோ, அப்படியாகுமோ, இப்படி விமர்சிப்பார்களோ, அப்படி பாராட்டி தழுவுவார்களோ) சில நேரம் எழுத்தின் சரளத்தை, வேகத்தைக் குறைக்கும்; போகப் போக நாவலே நின்று போகும். எழுதும் பயத்திலே எழுதுவதை நிறுத்தி ஆய்வில், கற்பனையில் திளைப்பார்கள், எழுதியதை அவ்வப்போது திருத்தி சந்தேகத்தில் எழுத்தாணியால் மண்டையை குத்திக் கொள்வார்கள். ஆக, அந்த ‘குழந்தை’ நமக்கு மிகவும் அவசியம். எதைப் பற்றியும் அஞ்சாமல் கிடைத்த இடத்தில் எல்லாம் ஓடித் திரிந்து ஆபாயங்களுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து காயம்பட்டு அழுது, பொருட்களை போட்டுடைத்து அடிவாங்கி அழுது, எதையாவது கண்டுபிடித்த பரவசத்தில் குதித்து கும்மாளமிட்டு, ஊரெல்லாம் தன் உற்சாகத்தை சரவெடியாக வெடிக்க வைக்கிற அந்த குழந்தை நமக்கு மிகவும் அவசியம். அக்குழந்தையை ஒரு கட்டுக்குள் வைக்கிற முதிர்ச்சியான மனமும் அவசியம். அக்குழந்தை இந்த முதிர்ச்சியும், சுயயோசனையும் மிக்க உலகில் நலிந்து காணாமல் போக விடாமல் தொடர்ந்து அதன் பேச்சுக்கு செவிகொடுப்பது, அதனுடன் விளையாடுவது, அதனுடன் இந்த உலகை மீளக் காண்பது முக்கியம். உண்மையை விளையாட்டுத்தனத்தால், சாகசத்தால் எதிர்கொள்ளும் அதன் இயல்பை நம் எழுத்துக்குள் கொண்டு வருவது ஆகியன நிச்சயமாக நமது எழுத்து ஒரு ஜெராக்ஸ் எந்திரமாக மாறாதிருக்க உதவும். அதே நேரம், நாம் ஒரேடியாக ஒரு குழந்தையாக மாறாதிருப்பது இளம்பெண்களே கிடைக்கவில்லை என்று ஆண்களின் மூஞ்சியில் வண்ணப்பொடியை பூசிக்கொண்டு ரோடெல்லாம் பைத்தியமாக அலைகிற ஹோலி விளையாட்டாக நமது நாவல்கள் மாறி விடாதிருக்க உதவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...