Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

அந்த காலம் போல இல்லை

 கடைசி விவசாயிபடத்தில் ஒரு வசனம் வரும். புரோக்கர்கள் நல்லாண்டியிடம் இருந்து நிலத்தை வாங்க எவ்வளவோ ஆசை காட்டியும் அவர் மசிய மாட்டார் என்றாகும் போது ஒருவர் மற்றொருவரிடம் ஏமாற்றத்துடன் சொல்லுவார்: “முப்பது வருசமா காது வேற கேட்கல. படிச்சு அறிவுள்ளவங்கன்னா பேசி எதையாவது சொல்லி ஏமாத்திரலாம். ஆனால் படிக்காத இவரை ஏமாத்தவும் முடியல.”


கடந்த இருபதாண்டுகளில் நான் தொலைத்தது கிராமங்களிலும் சிறுநகரங்களிலும் கிடைத்த ஒரு எளிய அமைதியான வாழ்க்கையைத் தான். அங்கு கேட்கக் கூடாத எதையும் கேட்க வேண்டியிராதவராக, பார்க்கத் தேவையில்லாதவற்றை பார்க்காதவராக இருந்தோம்


நான் குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் எனும் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து கல்விக்காகவும், வேலைக்காகவும், பின்னர் காதலுக்காகவும், இலக்கியத்துக்காகவும் சென்னையை வாழ்விடமாகக் கொண்டவன். அதன் பிறகு பெங்களூருக்குச் சென்றேன். நகரங்களுக்கு வந்து கடந்த 22 ஆண்டுகளில் நான் பெற்றது சமயோஜித அறிவையும், சந்தடியில், அவசரத்தில் வாழும் திறனையுமே. நான் இழந்தது குழந்தைத்தனமான ஒரு நம்பிக்கையை, நான் களங்கமற்றவன் என இருக்கே இருந்த ஒரு நம்பிக்கையை. ரொம்ப கொஞ்சமாக வசதி இருந்தாலும் போதும் எனும் நிறைவை.


நகரம் என்னைத் தன்னுணர்வு மிக்கவனாக்கியது. என்னுடைய தோற்றம், ஆடைத்தேர்வு, வாங்கிப் பயன்படுத்தும் பொருட்கள் எனது மதிப்பைத் தீர்மானிக்கின்றன எனும் அச்சம் என்னை ஆட்கொண்டது. நான் மிக அதிகமாக இதை உணர்ந்தது சென்னைக்கு படிக்க வந்த போது தான். ஊரில் வசிக்கையில் என்னிடம் மொத்தமாகவே இரண்டு டிஷர்ட்டுகள் தாம் இருக்கும். அவற்றையே கல்லூரிக்கும் அணிந்து செல்வேன், வீட்டிலும் அணிவேன். அங்கு யாரும் பிறரை ஆடைகளின் வகைமை, தரத்தால் மதிப்பிடுவதில்லை. அங்கு சிறிதோ பெரிதோ எல்லாருக்கும் ஒரு வீடு இருக்கும். அங்கு அனேகமாக எல்லாருக்கும் இரவுண்ண கஞ்சியும் சிறிது மீனும் இருக்கும். அது கார்களும் பைக்குகளும் மலியாத காலம். அனேகமாக எல்லாரும் நடந்தோ பஸ்ஸிலோ தான் அலுவலகத்துக்கு, கடைகண்ணிக்கு சென்றார்கள். சென்னை போன்ற ஒரு நகரத்தில் நான் முதன்முதலாக குப்பையில் இருந்து பொறுக்குவோரை, கழிவுணவை எடுத்துத் தின்னுவோரை, உறங்க இடமின்றி தெருவில் உறங்கும் குழந்தைகளைக் கண்டேன்.


அன்று என்ன அணிந்தாலும் நான் நன்றாக இருப்பதாக நம்பினேன். சென்னைக்கு வந்த பிறகே ஒவ்வொரு வகையான, தரமான ஆடைக்கும் ஒரு அந்தஸ்து, சமூக நிலையுண்டு எனப் புரிந்து கொண்டேன். பிராண்டுகள் பற்றி கவலைப்பட ஆரம்பித்தேன். விலைமதிப்பான ஆடைகளை அணிந்ததும் கம்பீரமாக தன்னம்பிக்கையாக தோன்றுகிறவர்களையும், மலிவான ஆடைகளில் குறுகி நடப்பவர்களையும் என் கல்லூரி வளாகத்தில் ஒரு சேரக் கண்டேன். பணக்கார வீட்டுப் பையன்கள் வெறுமனே ஓய்வு நேரத்தில் அணியும் சப்பல்கள் வித்தியாசமாக இருக்கும். விலையை விசாரித்தால் ஆயிரம் ரூபாய்க்கு மேலிருக்கும் என்றார்கள். நாங்கள் கிராமத்துப் பையன்களோ நூறு ரூபாய் சப்பலை அணிந்திருப்போம். ஒருநாள் அதைப் போல செருப்புகளை அணிய வேண்டும் என எங்களுக்குள் பேசிக் கொள்வோம். நான் ஊரில் உள்ள கல்லூரியில் படிக்கையில் ஏன் ஒருமுறை கூட செருப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை என்று தோன்றியது. நாம் சம்பாதிக்க ஆரம்பித்ததும் விலையுயர்வான செருப்புகள், ஆடைகளை அணிய முடிந்ததும், ஆனாலும் என்னால் வாங்க முடியாத செருப்புகளும், ஆடைகளும் அணிந்தவர்கள் என்முன்னே தோன்றியபடியே இருந்தார்கள். அது ஏற ஏற தீராத ஒரு ஏணியைப் போன்றே இருந்தது. இருக்கிறது


இன்று நாம் கிராமங்களில் இருந்து அதிகமாக நகரங்களுக்குப் பெயர்ந்து வருகிற போது நம்மிடம் அதிகமான பணமும் வசதிகளும் வந்து சேர்கின்றன, அதே நேரம் கற்பனை செய்ய முடியாத ஏற்றத்தாழ்வுகளில், தன்னிரக்கங்களில் மாட்டி அல்லல்படுகிறோம். ஒரு வாய் நல்ல சோற்றுக்காக, தூக்கத்துக்காக, சுவாசிக்க காற்றுக்காகஇதெல்லாம் எதற்கு, ஒன்றுக்குப் போகக் கூட இடமின்றி, தவிக்கிறோம். எவையெல்லாம் அன்று மிக தாராளமாக, சுலபமாகக் கிடைத்ததோ அவை இன்று அரிதானவையாகி விட்டன.


 அந்த காலத்துக்கு ஆடைகள், வாகனங்கள், மின்சாதனங்களில் இருந்து உறவுகள், கட்டமைப்புகள் வரை இதைக் கூறலாம் - அன்று சாத்தியங்கள், அவற்றைப் பரிசீலிக்கும் சுதந்திரம் இல்லை, ஆனால் இருந்த வசதிகள் நம்பத்தகுந்தவையாக இருந்தன. இன்று வசதிகள் பல்கிப் பெருகி உள்ளன, ஆனால் எல்லாமே உலுக்கினால் உதிர்ந்து விடும் அளவுக்கே இருக்கின்றன. இன்று சமூகவலைதளங்களில் ஆயிரமாயிரம் நண்பர்கள் வாய்க்கிறார்கள், அவர்களில் மிகச்சிலரே நீண்ட கால நண்பர்களாகிறார்கள். முன்பு நாம் பிடிக்காத உறவுகளில் இருந்து விலகும் அச்சத்தினாலே ஒட்டியிருந்தோம். ஆனால் இன்று உறவுகள் முறிந்து போகுமே எனும் அச்சத்தில் தினம் தினம் நடிக்கிறோம், பாசாங்கு பண்ணுகிறோம், புழுங்குகிறோம்



எங்கள் ஊரில் அப்போது இரண்டே நல்ல ஓட்டல்கள் தாம் இருந்தன. ஒன்று தக்கலை பேருந்து நிலையத்துக்கு எதிராக இருந்த கௌரி சங்கர். மற்றொன்று தாஜ். நான் வாழ்ந்த கிராமத்தில் ஒரு எளிய ஓட்டல் இருந்தது. சாப்பிட வேறு வழியில்லாதவர்கள் மட்டுமே எட்டிப் பார்க்கும் அங்கு புளித்த ஆப்பமும், வீசினாலும் எறிகணைப் போலச் செல்லும் புட்டும் கிடைக்கும். அதனால் பள்ளிக்கூட வயதில் கௌரி சங்கரில் நெய்தோசை சாப்பிடுவது என்னுடைய கனவாக இருந்தது. எப்போதாவது அப்பா என்னை பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்துப் போக வந்தால், வீட்டில் அம்மாவால் சமைக்க முடியாது என்றால் அங்கு கூட்டிச் செல்வார். போனதுமே நெய்தோசைக்கு சொல்லி விடுவேன். அதை நொறுக்கியும் பிய்த்தும் அந்த பருப்பு தூக்கலாக இருக்கும் மஞ்சள் நிற சாம்பாரில் முக்கிய சாப்பிட்ட பின்னர் விரல்களில் ஒட்டும் நெய்யும், நாவில் உணரும் அபாரமான சுவையும் இன்றும் என் நினைவில் இருக்கின்றன. நான் ரசித்துண்பதை பார்த்தபடி அப்பா இருப்பார்.

 தாஜில் சிறப்பான உணவுகள் பரோட்டா, சிக்கன், பிரியாணி. விலை அதிகம் என்பதால் நான் மிக அரிதாகத் தான் அங்கு சாப்பிட்டிருக்கிறேன். எனக்கு பதினைந்து வயதிருக்கும். தேர்வுகள் முடிந்த நாள். அம்மாவிடம் வெளியே சென்று சாப்பிட வேண்டும் என பணம் வாங்கினேன். ஐம்பது ரூபாய். நான் அதைக் கொண்டு தாஜுக்கு சென்று அமர்ந்தேன். மனதில் பட்டத்தை ஆர்டர் செய்து ரசித்து உண்டேன். தனியாக நானே உணவை ஆர்டர் செய்து யாருடைய துணையுமில்லாமல் சாப்பிட்டு வருவதே அலாதியான அனுபவமாகத் தோன்றியது. பில் வந்தது. எனக்கு அதைப் பார்த்ததும் வியர்த்தது. நூறு ரூபாய்க்கு மேல் வந்திருந்தது. என்னிடம் இருந்ததோ ஐம்பது ரூ. ரொம்ப தயங்கிய பின்னர் சிப்பந்தியிடம் சொன்னேன். அவர் சிரித்து விட்டுபோடே உங்கப்பா கிட்டே வாங்கிக்கிறேன்என்றார். வீட்டுக்கு வந்தால் அதற்குள் செய்தி ஊரெல்லாம் பரவியிருந்தது. அம்மா, அக்கா எல்லாரும் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள். எனக்கு பெரும் மானக்கேடாகி விட்டது. இன்று ஒரு குழந்தையிடம் நீங்கள் நூறு ரூபாய் கொடுத்தால் அதற்குள் எப்படி வாங்கித் தின்ன வேண்டும் என அதற்குத் தெரியும். அது மட்டுமல்ல மீதிப் பணத்தை சேர்த்து வைத்து அடுத்த நாளுக்கான தின்பண்டம் வாங்கும் அது. ஏனென்றால் இன்றைய பெற்றோர்கள் எப்படி பணத்தை செலவழிக்க வேண்டும் என சிறுவயதிலே சொல்லிக் கொடுக்கிறார்கள். அதனாலே அக்குழந்தைகள் அறியாமையின் களங்கமற்ற அனுபவங்களை இழந்து விடுகிறார்கள்


எங்கள் ஊரில் முதலில் பிளாஸ்டிக் பைகள் வந்தது 96-97 காலகட்டத்தில் என நினைக்கிறேன். சாலை விளிம்பில் நிறுத்திய லாந்தர் வைத்த தள்ளுவண்டிகளில் மரவள்ளிக்கிழங்கை சீவி பொரித்து அடுக்கி இருப்பார்கள். ஐந்து ரூபாய்க்கு ஒரு பாலிதீன் பை நிறைய போட்டுத் தருவார்கள். அதை நாங்கள் மாலைவேளைகளில் வீட்டுக்கு வாங்கி வந்து ஒரு மணிநேரமாக கொறிப்போம். அதுவே ஒரு தனி பொழுதுபோக்காக அமைந்தது. அதுவரை நாங்கள் பாலிதீன் பைகளை எங்குமே கண்டதில்லை. கடைக்குப் போனால் ஒன்று துணிப்பையை எடுத்துப் போவோம் அல்லது ஒரு தாளில் கூம்புவடிவில் பொட்டலம் மடித்து தருவார்கள். அத்துடன் பாலிதீன் பைகளுடன் பரோட்டா சால்னா கடைகளும் எங்கள் ஊருக்குப் படையெடுத்தன. எனக்கு பரோட்டா பித்துப் பிடித்தது. ஆறரை மணிக்கே பரோட்டா கடைக்கு சென்று காத்துக் கிடப்பேன். ஆனால் கணிசமான ஊர்க்காரர்களுக்கு பரோட்டா சால்னாவின் லாஜிக்கே பிடிபடவில்லை. மதியம் வைத்த சோற்றில் தண்ணீர் விட்டு கஞ்சியாக்கி ஒரு பப்படத்துடன் இரவுணவை ஏழு மணிக்கே முடித்து விடுவதே எங்களுரில் வழக்கம். விஷேஷமென்றால் பயிறு அல்லது உளுந்தங்கஞ்சி. எதுக்கு ஜவ்வு ஜவ்வென்ற மைதா பண்டத்தை கறியுடன் தினமும் பணம் கொடுத்து தின்ன வேண்டும் என மக்களுக்குப் புரியவில்லை. அதன் பிறகு மளிகைக்கடைகளிலும் பிற இடங்களிலும் பாலிதீன் பைகள் பரவிட பரோட்டாவும் அதன் ஒன்றுவிட்ட சகோதரனைப் போல பக்கம் பக்கமாய் இடித்துக் கொண்டு வந்து அமர்ந்து கொண்டது. அதன் பிறகு நான் சென்னைக்குப் படிக்க சென்று திரும்பிய போது பிரைட் ரைஸ், நூடுல்ஸ் போன்ற வகையறாக்களும் பரோட்டாவுடன் எங்கள் ஊர்க்கலாச்சாரத்தில் இடம்பிடித்திருந்தன


இந்த துரித உணவுகள் இன்று ஸொமாட்டோ போன்ற செயலிகளின் உதவியுடன் நம் வீட்டு வாயிலுக்கே வந்து விட வீட்டில் சமைப்பது அந்நிய பழக்கம் ஆகி வருகிறது. நமக்கு ஒரே உணவை சாப்பிடும் அலுப்பில்லை, நிறைய நேரம் மீள்கிறது என்பது உண்மை தான். ஆனால் இந்த உணவுகள் அசலான உயிர்ப்பான உணவுகளைப் போல இல்லை. சுவையிருந்தாலும் இவை எங்கள் ஊர் ஒழிச்சுகூட்டான், புளிசேரியைப் போல எங்கள் நாவுக்கான சுவையை கொண்டில்லை. “ஹலோ என் பேரு…” என்று அறிமுகப்படுத்தி இவற்றுடன் நாம் நமது நாவுச்சுவையை பழக்க வேண்டி உள்ளது.


படிப்பைப் பொறுத்தமட்டில் சொற்பமான புத்தகங்களே அப்போது கிடைத்தன. எனக்கு 11 வயதிருக்கும் போது என் அப்பாவின் அலுவலகத்தில் ஒரு நூலகத்தை அமைத்தார்கள். அங்கிருந்து அவர்பொன்னியின் செல்வன்போன்ற வணிக நாவல்களை எடுத்து வருவார். மாலையில் தினமும் மின்சாரம் போய் விடும். அப்பா வந்ததும் மன்ணெண்ணெய் விளக்கை எரிய வைத்து நானும் அக்காவுமாக ஆளுக்கு ஒரு மணிநேரம் என போட்டி போட்டு வாசிப்போம். அதன் பிறகு அப்பா எங்களிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு வாசிப்பார். இப்படித்தான் கல்கியில் இருந்து சிவசங்கரி, ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் வரை படித்தோம். என்னிடம் அப்போது வைரமுத்து, மு.மேத்தாவின் இரண்டே கவிதைகள் நூல்களே இருந்தன. ஆகையால் தினமும் அப்புத்தகங்களை ஒருமுறையேனும் படித்து விடுவேன். ஒரு கட்டத்தில் நூற்றுக்கணக்கான முறை படித்து அப்புத்தகங்கள் கிழிந்தே விட்டன. அடுத்து பாரதியார், பாரதிதாசன் நூல்களை வாங்கித் தந்தார்கள். அவற்றையும் மனனமாகும் அளவுக்குப் படித்தேன்

அடுத்து 15வது வயதில் எனக்கு இலக்கிய வாசிப்பு அறிமுகமானது. ஆனால் அன்று இலக்கிய நூல்களைப் பெறுவது மந்திர தந்திரம் கற்பதைப் போன்றது. ரகசியமாக தீவிரமாக அங்கங்கே மூலைகளில் அது நடைபெற்று வரும். புத்தகங்களை கடன்பெறவே சில நண்பர்களை, தொடர்புகளை உருவாக்கத் தவித்தோம். கடன் பெற்ற நூலை வேகமாகப் படித்து அதை இன்னொருவருக்குக் கொடுத்து பிறகு நாங்கள் சந்தித்து வாசிப்பைப் பற்றி உரையாடுகிற அலாதியான மாலைப்பொழுதுகள் அப்போது இருந்தன. முன்பு நாங்கள் சுந்தர ராமசாமியின் வீட்டில் உள்ள பிரம்மாண்டமான நூலகத்தைப் பற்றி வியப்பாகப் பேசிக் கொள்வோம். அதை நாங்கள் யாரும் பார்த்திருந்ததில்லை. நாகர் கோயிலில் வசித்து வந்த ஜெயமோகனிடம் இருந்து நான் ஒருமுறை தி.ஜாவின்மோகமுள்நூலை நான் வாங்கிப் படித்து விட்டு திரும்ப கொடுக்க செல்லும் போது தொலைத்து விட்டேன். தயங்கி அவரிடம் சொன்னேன். அவரும் பரவாயில்லை என்றார். “ஒரு முக்கியமான டெக்ஸ்ட் அதுஎன்று முணுமுணுத்தார். எனக்கு அதைக் கேட்டு மனமே உடைந்து விட்டது. அந்த குற்றவுணர்வு நீண்டகாலமாக நீங்கவில்லை. இருபது வருடங்களுக்குப் பிறகு இப்போதும் அலமாரியில் உள்ளமோகமுள்நூலைப் பார்க்கையில் சுருக்கென நெஞ்சில் குத்தும் உணர்வு ஏற்படுகிறது. இன்றெனில் தொலைத்த உடனே ஆன்லைனில் ஆர்டர் செய்து மூன்றே நாட்களில் புத்தகத்தை அவருடைய முகவரிக்கே அனுப்பி இருப்பேன். ஆனால் அன்றிருந்த அந்த முக்கியத்துவம் இன்றிருக்காது.


இணையம் இன்று நம் வாசிப்பை எளிதாக்கியுள்ளது. புத்தகப் பரவலாக்கம் நடந்துள்ளது. வாசிப்பும் அதிகமாகி இருக்கிறது. ஆனால் ஏதோ ஒன்றைப் புதியதாகக் கற்றுக் கொண்ட திகைப்பு இப்போது இல்லை. கூகிள் நொடிக்கு நொடி எல்லாவற்றையும் பழசாக்கி விடுகிறது. கருத்துப் பகிர்வு உரையாடலை ஒருவழிப்பாதையாக்கி விட்டது. டெலிகிராமில் தரவிறக்கிய ஆயிரக்கணக்கான படிக்காத நூல்களைப் பார்க்கும் போது கூட நமக்கு குற்றவுணர்வு வருவதில்லை.


நாம் மிகவும் மதிக்கும் படைப்பாளிகளை சந்திப்பதற்காக மாதக்கணக்காய் முன்று காத்திருந்ததுண்டு. சந்தித்ததும் அது தவற விட இயலாத ஒரு அனுபவமாக மாறிப் போகும். வருடக்கணக்காய் நினைவில் பதிந்திருக்கும். ஒவ்வொரு முறை சோர்ந்து போகும் போது அந்த ஆளுமை நமக்குத் தந்த படிப்பினையை, சொன்ன ஒரு விசயத்தை நினைவில் மீட்டு உற்சாகம் பெறுவோம். ஆனால் இன்று இணையம் வழியாக தொடர்பெண்ணைப் பெற்று ஒரு ஆளுமையிடம் பேசும் போது அவர் வெகுசாதாரணமானவராக நமக்குத் தோன்றுகிறார். யாரிடமும் எப்போது வேண்டுமெனிலும் பேசலாம் என்பதால் யாரிடமும் எப்போதும் பேச வேண்டாம் என நினைத்து யாரிடமும் ஒரு போதும் பேசாமல் இருந்து விடுகிறேன்!


பெண்ணுடலின் ரகசியங்கள் மீது ஆண்களுக்கு அன்றிருந்த திகைப்பு இன்று சுத்தமாகப் போய்விட்டது. குழந்தைகளின் விரல் நுனியில் கூட ஸ்மார்ட் போன் வழியாக போர்னோகிராபி வந்து விட்டது. அது மட்டுமல்ல, இரு பாலினத்தோரும் அந்தரங்கமாக அரட்டை அடிக்கவும், தொட்டுப் பேசி பழகவும் முன்பிருந்த பரபரப்பு, வியப்பு முழுக்க மறைந்து விட்டது. இன்னும் சொல்லப் போனால் இணையம் நமது பாலியல் தேவைகளை நிவர்த்தி பண்ண முன்வருவதால் மாற்றுப்பாலினத்துடன் பொருந்திப் போகத் தேவையில்லை என்று மனிதர்கள் அதிகமாக தனிமை விரும்பிகளாக மாறி வருகிறார்கள்


முன்பு நான் பத்மநாபபுரத்தில் இருந்து வில்லுக்குறி வழியாக நாகர்கோயிலுக்கு சென்று, சில நாட்களில் என் காதலியை அழைத்துக் கொண்டு கன்னியாகுமரிக்கு பைக்கில் செல்வேன். அது மனதை விட்டு அகலாத சாகசப் பயணமாக ஒவ்வொரு முறையும் தோன்றும். அந்த காற்று, மரங்கள், கடந்து போகும் வாகனங்கள், இரவில் பெய்யும் மழையினூடே அரைகுறை ஒளியில் வருவது என ஒவ்வொரு சின்ன விசயமும் சிலாக்கியமாக இருக்கும். ஆனால் இன்று நீங்கள் சாதாரணமாக பைக்கில் காஷ்மீர் வரை செல்லும் இளைஞர்களைப் பார்க்கிறீர்கள். அவர்களுக்கு காஷ்மீர் ஏதோ தெருமுனையில் உள்ள பெட்டிக்கடை போலத் தோன்றுகிறது. விமானம் ஏறி சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற தேசங்களுக்கு செல்வதை ஏதோ பஸ் ஏறி பாரிஸ் கார்னருக்கு போய் இறங்குவதைப் போல மக்கள் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். என் நண்பர் ஒருவர் ஒருமுறையாவது விமானத்தில் செல்ல வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருந்தார். ஒருவழியாக விமானத்தில் ஏறிப் பறந்தார். “எப்படி இருந்தது அனுபவம்?” நான் கேட்டேன். அவர் சொன்னார், “என்னய்யா விமானம், ஒரே சத்தமாக இருக்கிறது, ஏதோ பஸ்ஸில் ஏறினதைப் போல இருக்கிறது!”

Comments

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...