Skip to main content

இளம் வெர்தரின் துயரங்கள்



"இளம் வெர்தரின் துயரங்கள்" எனும் குறுநாவல் உலக இலக்கியத்தின் தலைமகன்களில் ஒருவரான ஜெர்மானிய மேதை கோதேயின் (சரியான உச்சரிப்பு “கோற்ற” - கமகம் என்பதில் உள்ள ‘க’. ஆனால் தமிழில் கோதே என்றெழுதுவதே வழக்கம் என்பதால் அதையே இங்கும் பயன்படுத்துகிறேன்.) பிரபலமான படைப்புகளில் ஒன்று. 1774இல் எழுதப்பட்ட இந்நாவல் ரொமாண்டிஸ இயக்கத்தை பெருமளவில் பாதித்த ஒன்று. அக்காலத்தில் காதல் தோல்வியுற்ற பலரும் தம்மை நாவலின் நாயகனான வெர்தராகக் கருதிட இளைஞர்களின் ஹீரோவாக வெர்தர் மாறினான். வெர்தரைப் போன்றே ஆடையணிய பலர் தலைப்பட்டனர். நாவலில் வரும் வாசனை திரவியம், பீங்கான் பாத்திரங்கள் வெளியாகி ஆகியவை பெருமளவில் விற்பனை ஆகின. நெப்போலியன் போனபர்ட் இந்நாவலை ஏழுமுறைகளுக்கு மேல் படித்ததுடன் எகிப்துடன் போர் தொடுக்கப் புறப்பட்ட போது இதையும் கையுடன் கொண்டு போனாராம். இந்த ஆவேசம் அக்காலத்தில் “வெர்தர் ஜுரம்” என அறியப்பட்டது. ஒரு கட்டத்தில் வெர்தரைப் போன்றே சில இளைஞர்கள் தற்கொலை பண்ணி விட, அவர்களுடைய பிணத்தருகே வெர்தர் நாவலில் பயன்படுத்திய பாணியிலான துப்பாக்கியும், அந்நாவலும் கிடைக்கப்பட்ட ஒரு பரபரப்பை இது அக்காலத்தில் உண்டு பண்ணியது. விளைவாக அரசு இந்நாவலையும் வெர்தரின் பாணியிலான ஆடைகளைத் தடை செய்தது.

"இளம் வெர்தரின் துயரங்கள்” கோதேயின் நிஜ காதல் அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இது ஒரு கடித வடிவிலான நாவல். வெர்தர் எனும் மேல்மத்திய வர்க்க இளைஞன் கலையின் உன்னதங்களையும், இயற்கையுடன் இணைந்த ரசனையான வாழ்க்கையையும் அனுபவிக்கும் நோக்கில் வால்ஹெய்ம் எனும் கிராமத்துக்கு வருகிறான். வெர்தர் தனக்கு அன்றாடம் கிடைக்கும் அனுபவங்களை தன் நண்பனான வில்ஹெம்முக்கு கடிதங்களாக எழுதிக் கொண்டிருக்கிறான். இவற்றை நாவலாசிரியன் எனும் எடிட்டர் தொகுத்து அளிப்பதாக கோதே எழுதுகிறார்.
வெர்தர் அக்கிராமத்தில் பலவிதமான மனிதர்களை சந்திக்கிறான். அவனுடைய மனம் முழுக்க ஓவியம், இலக்கியம் வழியாக கலையின் உச்சத்தை எப்படி அடைவது எனும் தேடலால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது. அவனுக்கு ஒரு கட்டத்தில் கலை என்பது இயற்கையின் ஆன்மாவை பிரபலிக்கும் கண்ணாடி மட்டுமே, இயற்கையின் முன் கலை முயற்சிகள் வியர்த்தமானவையே எனத் தோன்றுகிறது. கிராமத்துக் குழந்தைகளை, இயற்கையை ஓவியம் வரையும் போதெல்லாம் தன்னால் இயற்கையின் உன்னதத்தின் சிறுபகுதியைக் கூட கைக்கொள்ள முடியவில்லையே என ஏமாற்றம் கொள்கிறான். இயற்கையின் முன் தான் சிறுத்துப் போவதாக பரவசத்துடன் ஒப்புக் கொள்கிறான். இப்போது அவன் கலைக்கு வெளியே ஒரு தனிமனிதனாக இயற்கையின் பேராற்றலை ஒருவன் தன் வழியாக உணர்வது எப்படி என யோசிக்கிறான். இதற்கு ஒருவர் சமூக, நாகரிக நெறிகளுக்காக தனது உணர்ச்சிகளை அடக்கிக் கொள்ளாமல் தன் உணர்ச்சிகளை காட்டாறாகப் பெருக விட்டு அதில் கரைந்து போவதே வழி என முடிவெடுக்கிறான். ஐரோப்பிய கற்பனாவாத மரபின் ஒரு முக்கியமான கருதுகோள் இது என்பதை நாம் கவனிக்க வேண்டும். வெர்தர் ஒரு அசல் கற்பனாவாதியாக இருப்பதுடன் மெல்ல மெல்ல அவனுடைய மன ஒழுங்கும் குலைந்து போகிறது. அவன் தன்னையே இந்த உலகின் மையமாகக் கருதி, தன்னுடைய இச்சை, தவிப்பு, சிலாகிப்பு, கவித்துவத்தைத் தாண்டி யாரும், இயற்கைக்கு அப்பால், எதுவும் முக்கியமில்லை எனும் இடத்துக்கு வந்து சேர்கிறான்.
இப்போது அவன் ஷார்லெட் எனும் Lotteவை எதேச்சையாக ஒரு நடன நிகழ்ச்சியில் சந்திக்கிறான். அவளுக்கு ஆல்பர்ட் என்பவருடன் ஏற்கனவே நிச்சயமாகி இருக்கிறது. ஆனால் சந்தித்த நொடி முதல் இருவருக்கும் எல்லா விசயங்களிலும் ஒத்துப் போகிறது. அவள் நினைப்பது இவனுக்கு அவள் சொல்லாமலே புரிகிறது. இவனுடைய எண்ணங்கள் அத்தனையும் அவளுக்கு உடன்பாடாக இருக்கின்றன. அவளுடைய சிறு அசைவுகள் கூட அவனுக்கு பேரழகின் பிரதிபலிப்பாகத் தோன்றுகிறது. இயற்கை எனும் பேரனுபவத்தின் மானுட ரூபமாகவே லோட்டெ அவனுக்குத் தோன்றுகிறாள். தன்னால் அவளை அடைய முடியாது என அறிந்தும் அவளை பைத்தியம் போல நேசிக்கிறான். அவளுக்குத் திருமணமாகிறது. அவன் மனமுடைந்து போய் வேறு ஊருக்குப் போகிறான். அங்கு அவனுக்கு செயலாளராக வேலை கிடைக்கிறது. அங்கும் அவனால் நிம்மதியாக வாழ இயலவில்லை. சமூக வாழ்வில் உள்ள போலித்தனங்கள் அவனை எரிச்சல்படுத்துகின்றன. சமூகப்படிநிலைகள் படி தான் கீழாக நடத்தப்படுவது அவனுக்கு அபத்தமாகப் படுகிறது. மீண்டும் லோட்டெவைத் தேடிச் செல்கிறான்.
அங்கு அவள் மீது அவனுக்குள்ள மிதமிஞ்சிய ஈடுபாடு, பற்று, வழிபாட்டுணர்வு, பித்தான செயல்பாடுகள் அவளுடைய கணவனான ஆல்பர்ட்டுக்கு எரிச்சலூட்டுகிறது. அவளும் அவனிடம் சூசகமாகவும் பின்னர் நேரடியாகவும் சொல்லிப் பார்க்கிறாள். ஆனால் மனதுக்குள் அவளுக்கு அவன் தன்னை விட்டுப் போய் விடக் கூடாதென்றும் இருக்கிறது. கணவனுடனான இயல்புவாழ்வு, அக்கறைக்கும் வெர்தருக்கு தன் மீதான பித்தான காதல் அர்ப்பணிப்பும் இரண்டுக்கும் இடையே தான் தத்தளிப்பதை அவள் உணர்ந்தாலும் சமூக மரியாதைக்காக அவனிடம் இருந்து விலகுகிறாள். இறுதியில் கைகூடாத காதலால் பைத்தியமான ஒரு இளைஞனை வெர்தர் சந்திக்கிறான். பைத்தியம் முற்றும் போது அவன் அனுபவிக்கிற பரவசத்தை, உன்மத்த பேரனுபவத்தை அறிய வரும் போது வெர்தருக்கு ஒரு மனிதனுக்கு அவன் இயல்பாக இருக்கையில் கிடைக்கிற துன்பத்துடன் ஒப்பிடுகையில் பைத்தியமாகும் போது வரும் உவமை மகத்தானது என்று தோன்றுகிறது. கடவுள் ஏன் நம்மை பித்து நிலையில் இருந்து பறித்து அர்த்தமற்ற வாழ்க்கைக்குள் தள்ளுகிறார் என வினவுகிறான். அதன் பிறகு ஒருநாள் அந்த இளைஞன் தான் காதலித்த பெண்ணைக் கொன்று விடுகிறான். கைதாகிறான். அந்த சம்பவம் வெர்தரை மனதளவில் மிகவும் நொறுக்கி விடுகிறது. ஏனென்றால் இந்த இளைஞனே தன் எதிர்காலத்தை முன்கூறுகிறான் என அவன் உள்ளுணர்வு சொல்லுகிறது. தான் அவனைப் போலாகாமல் இருக்க வேண்டுமெனில் என்ன செய்வதென யோசிக்கும் அவன் தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான். ஆல்பர்ட்டின் துப்பாக்கியை வேட்டைக்கென்று கேட்டு வாங்கிப் போகிறான். தன் அறைக்குள் போய் கதவை மூடிக் கொண்டு ஒரு தற்கொலைக் கடிதத்தை லோட்டெவுக்கு எழுதி வைத்து தன் தலையில் சுட்டுக் கொண்டு வீழ்கிறான்.
இந்நாவலின் சிறப்பு அது கலை-இயற்கை-காதல் எனும் மனிதத் தேடலின் புள்ளிகளை ஒன்றில் இருந்து மற்றொன்றாக தொடுத்துக் கொண்டே செல்வதும், ஒரு கட்டத்தில் கட்டற்ற பேரனுபவத்தை, அழகை, அனைத்தையும் மீறிச் செல்லும் ஆவேசத்தை, அந்த சுதந்திரத்தை ஒரு மனிதன் நாடுகையில் அவனுக்கு என்னாகிறது எனப் பேசும் பாங்கு தான். கொஞ்சம் கற்பானாவாத ரசனையை, நெகிழ்ச்சியை, பரவசத்தை கத்தரித்து சுருக்கினால் இது ஜி.நாகராஜனின் கதையும் தான் என்று தோன்றியது. இயற்கையை கலையிலும் பெண்ணிலும் தேடியவன், இலக்கை விட தேடலே மகத்தானது எனக் கருதியவன் வெர்தர் என்றால் அதையே காமத்திலும் போதையிலும் தேடியவர் அல்லவாஜி. நாகராஜன்? வெர்தர் தன்னையே சுட்டுக் கொள்ள ஜி. நாகராஜன் தன்னை நோய்மையில், வறுமையில் மாய்த்துக் கொண்டார்.
இந்த நாவலை மனச்சிதைவின் துவக்கம் பற்றின ஒரு சித்தரிப்பாகவும் பார்க்க முடியும். அவ்விதத்தில் எனக்கு இது செகாவின் “கறுப்புத் துறவி” நீள்கதையை நினைவுபடுத்தியது. வடிவ அளவில் செகாவின் கதை கோதேவின் நாவலை விட மேலானது, நுட்பமும், அர்த்த மடிப்புகளும் கொண்டது என நினைக்கிறேன். அதே நேரம், கோதேவின் படைப்பு கற்பனாவாத மிகைகள் கொண்டது, ஆனால் செகாவினுடையது நவீனத்துவ கச்சிதம் பெற்றது எனும் வித்தியாசத்தை கருதுகையில் காலத்தால் வேறுபட்ட இரு படைப்புகளை ஒப்பிடுவதும் அவசியமற்றது எனத் தோன்றுகிறது.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...