முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆயிரம் கோடி பணம் வைத்திருப்பவனுக்கும் கிடைக்காதது



 கடந்த ஆறு ஆண்டுகளாகவே அனேகமாக நான் தினமும் ஏதாவது ஒரு நாவலில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். அவற்றில் பல நாவல்களை என்னால் சரிவர எழுதி முடிக்க இயலவில்லை என்பதாலே பாதியில் கைவிட நேர்ந்தது. 2021இல் தான் ஒரு நாவலை முடித்து தொடராக வெளியிட்டேன் - “ஒரு முடிவற்ற துப்பறியும் கதை”. 2023இல் அது புத்தகமாக வெளிவரும். தடைகள் வராமல் போனால் மற்றொரு நாவலையும் இவ்வருடம் முடித்து விடுவேன். கடந்த ஐந்தாண்டுகள் என் வாழ்வின் மிக மோசமான கட்டம். ஒவ்வொரு சில மாதங்களும் நான் நரகத்தில் மூழ்கி வெளிவருகிறேன். ஒவ்வொரு கணமும் என்னை அழித்து புத்துருவம் பெற்றாலே என்னால் வாழ முடிகிறது. ஒட்டுமொத்த வாழ்வுக்கான துன்பத்தையும் ஒரு சில வருடங்களில் அடைந்து விட்டேன். இருந்தாலும் இந்த கட்டத்தில் நான் ஏன் இப்படி தொடர்ந்து நாவலெழுத்தில் இருந்திருக்கிறேன், இருக்கிறேன் என்பதற்கான பதிலை சொல்கிறேன்.


வேறெந்த வேலையும், அனுபவமும் தராத சில அனுகூலங்களை நாவல் எழுதுவது, ஒரு நாவலின் புனைவுலகம், பாத்திரங்கள், அங்கு தோன்றும் பிரத்யேகமான உணர்வுநிலைகள், நெருக்கடிகள், கண்டடைதல்கள் எனக்கு அளித்திருக்கின்றன:


  1. நடப்பு வாழ்வில் போல யாரோ முடிவெடுப்பதற்காக நாம் நாவலின் உலகில் காத்திருக்கத் தேவையில்லை. ஒவ்வொரு முடிவையும் பாத்திரங்களின் போக்கை ஒட்டி நாமே எடுக்கலாம்.
  2. இந்த புறவுலகிற்கு எந்த சம்மந்தமும் இல்லாத முற்றிலும் புதியதொரு உலகை சிருஷ்டித்து அங்கு என்னால் போய் பதுங்கி இருக்க முடியும். அங்கு நான் என்ன நினைக்கிறேன், என்ன முடிவெடுக்கிறேன், எதற்காக ஒன்றை செய்கிறேன் என யாருக்கும் சொல்லவோ நியாயப்படுத்தவோ தேவையில்லை. நிஜவாழ்வில் இல்லாத ஒரு ஏஜென்ஸி, அதிகாரம், உரிமை, அது தரும் சுதந்திரம் எனக்கு நாவலின் உலகில் உள்ளது. யாராலும் என்னை நாவலை பாதியில் நிறுத்தவோ எழுதி முடித்த பின் பிடுங்கிக் கொள்ளவோ ஒரு பாத்திரத்தின் போக்கை மாற்றவோ நாவலின் கருப்பொருளை மாற்றவோ முடியாது. என் வாழ்வில் சாத்தியமில்லாத எத்தனையோ விசயங்கள் என் நாவலின் உலகில் சாத்தியமாகிறது. நடப்புலகில் நான் ஒரு திறந்த சிறைச்சாலையின் கைதியாகவும் நாவலுக்குள் ஒரு சுதந்திர மனிதனாகவும் இருக்கிறேன்.


  1. நாவலை எழுதிப் போகையில் ஒரு கட்டத்தில் என் துயரங்கள், நடப்புலகில் நான் எதிர்கொள்ளும் அபத்தங்கள், அவை தரும் மண்டையிடியைப் பற்றி நான் கவலைகொள்ளத் தேவையில்லாமல் போகிறது. எழுதாத போதும் அவற்றை நான் மறந்திருக்கிறேன் அல்லது பொருட்படுத்தத் தேவையில்லை என நினைக்கிறேன். இதைப் பற்றி ஒரு உளவியல் பேராசிரியரிடம் நான் விசாரித்த போது ஒரு விளக்கம் சொன்னார்
  2. நாம் ஒவ்வொருவருக்குள்ளும் உணர்வுகளை செயலாக்கம் செய்வதற்கு என ஒரு டெம்பிளேட் உள்ளது. இதை ஒரு வண்ணக் கண்ணாடி என்று கூறலாம். இதை நாம் அணிந்து கொண்டதும் உலகை நாம் பார்க்கிற வண்ணம், தீவிரம் மாறுபடுகிறது. பச்சைக் கண்ணாடியெனில் உலகம் பச்சை, சிவப்பெனில் உலகம் சிவப்பு. இந்த நடப்பு உலகம் ஏற்படுத்தும் பாதிப்பை சார்ந்து அதை எப்படி அர்த்தப்படுத்துவது, அதை எந்தளவுக்குப் புரிந்து கொள்வது என்பதைத் தீர்மானிப்பது இந்த டெம்பிளேட் தான். சிலருக்கு ஒருவர் முறைத்தாலே கடும் கோபம் வந்து கத்தியைத் தூக்கி வீசத் தோன்றும், மற்றொருவரோ காறித் துப்பினால் கூட அது உறைக்கவே உறைக்காததைப் போல போய் விடுவார். இது அடுத்தவர்களின் செயல்களை, உலகின் நிறபேதங்களை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் எனத் தீர்மானிக்கும் டெம்பிளேட் ஆகும். ஆனால் ஒரு படைப்பாளி தான் எழுதும் நாவலுக்குள் தீவிரமாகப் போகும் போது அவர் அந்த நாவலின் உலகில் இருந்து, அங்கு உலவும் பாத்திரங்கள், அவர்களுடைய பிரச்சனைகள், உணர்வெழுச்சிகளில் இருந்து ஒரு மாற்று டெம்பிளேட்டை தன்னையறியாது உருவாக்குகிறார். இப்போது ஒரு அவனுக்குள் இரண்டு டெம்பிளேட்டுகள் தோன்றுகின்றன. அவனுடைய புனைவின் டெம்பிளேட் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்தத் தொடங்க நடப்புலகின் டெம்பிளேட் பின்னுக்குப் போகிறது. இது ஏன் என்றால் நமது நரம்பணுக்கள் அதிகமாக புனைவு டெம்பிளேட்டால் தூண்டப்பட நடப்புலகின் பல தூண்டுதல்களுக்கு ஈடுகொடுக்க பின்னர் அதற்கு சக்தியில்லாமல் ஆகிறது. என் நாவலுக்குள் நடக்கும் ஒரு பிரச்சனைக்காக ஒரு பாத்திரத்தின் தரப்பில் நின்று நான் கொந்தளித்திருப்பேன். அது எனக்கு மிகப்பெரிய நெருக்கடியாகத் தெரியும். நிஜ உலகில் ஒருவர் எனக்கு நெருக்கடி கொடுக்கும் போது அவரை நோக்கி கொந்தளிக்கும் ஆற்றல் என் நரம்பணுக்களுக்கு இருக்காது. சார்ஜ் இல்லாத போனைப் போல அது தானாகவே தன் திரை ஒளியைக் குறைத்துக் கொள்ளும். மின்சார வரத்து குறைகையில் ஒரு குமிழ்விளக்கு மங்கலாக எரிவதைப் போல நாம் இவ்வுலகில் ஆவோம். இப்படி ஒரு மங்கலாக எரியும் குமிழ்விளக்காக நடப்புலகில் திரிவது அவ்வளவு மகிழ்ச்சியாக சில நேரம் இருக்கிறது. ஆனால் எப்போதும் இப்படியான ஒருடிரிப்அனுபவம் கிடைப்பதில்லை. நாவலை தினமும் நான்கைந்து மணிநேரங்கள் எழுதுகையிலே சாத்தியமாகிறது. (இதையே சிக்ஸன்மிகாய் flow என்றார்.) நாவலுக்கு வெளியே உள்ள உலகில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கையில் போகப் போகடிரிப்மனநிலை குறைந்து எரிச்சலான ஒரு திறந்த புண்ணைப் போல் ஆகிறேன். எப்போதும் யார் மீதாவது எரிந்து விழத் தோன்றுகிறது. ஆனால் மீண்டும் போதுமான அளவுக்கு எழுதத் தொடங்கியதும், நாவலின் பிரவாகத்தில் மூழ்கியதும் நான் மீண்டும் உலகின் முன் புலன்கள் ஒடுங்கி அகவுலகின் திளைப்புகளின் பாற்பட்டு வாழத் தொடங்குகிறேன். எழுதாத போது என் மனம் எழுத்தின் போது கிடைக்கும் போதை மனநிலைக்காக ஏங்குகிறது. இதற்கு ஈடாக நடப்புலகில் இருந்தபடியே அதில் இல்லாதிருக்கும் ஒரு அனுபவத்தை வேறெதுவும் தராது. எவ்வளவு ஆயிரம் கோடி பணமிருந்தாலும் கிடைக்காது. அதற்காகவே ஒருவர் நாவலாசிரியர் ஆகலாம்.
  3. இறுதியாக, நடப்புலகில் நான் மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியாதவனாக, அவர்களை கருணையுடன் அக்கறையுடன் நடத்தாதவனாக இருக்கிறேன். ஒருவரிடம் அன்பு காட்டுமுன் அதற்கான தருணம் மலர்ந்து மூடிவிடுகிறது. நாவலுக்கு வெளியே பெண்கள் மீது எனக்கு கடும் கோபம் இருக்கலாம், முன்முடிவுகள் இருக்கலாம், ஆனால் நாவலுக்குள் என்னால் ஒரு பெண் மனத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு அவளுக்காக இரங்க, அவளைப் போல் யோசிக்க, அவளுடைய சிக்கல்களை வெகு அருகாமையில் இருந்து நுட்பமாக கவனிக்க முடிகிறது. நான் கடுமையாக வெறுக்கக் கூடிய ஒருவராக ஆகி அவரை நேசிக்க முடிகிறது. வாடிய பயிரை காண்கையில் எல்லாம் வாட முடிகிறது. நாவலுக்கு வெளியே சாத்தியமாகாத மனவிரிவு எனக்கு நாவலுக்குள் சாத்தியமாகிறது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...