முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாரு நிவேதிதா எனும் இன்மையின் திளைப்பு

 


தமிழ் புனைவெழுத்தாளர்களும் கவிஞர்களும் தொடர்ந்து நான் காலாதீதம் வரை நிலைத்திருப்பேன், இந்த உலகமே அழிந்தாலும் என் எழுத்தில் நான் உயிர்வாழ்வேன் என்று எழுதுவது வழக்கம். அந்த அளவுக்கு போகாதவர்கள் கூட அடுத்த முப்பதாண்டுகளில், ஐம்பதாண்டுகளில் தமிழின் முன்னிலை எழுத்தாளர்களில் ஒருவனாக நான் இருப்பேன், என் பெயர் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும், என்னை விடுத்து விட்டு தமிழ் நவீன இலக்கியத்தைப் பற்றி யோசிக்கவே முடியாது என்று நினைத்துக் கொள்வார்கள், கிடைக்கிற இடைவெளிகளில் எல்லாம் சொல்லவும் செய்வார்கள். தன் நிலையாமை குறித்து இவ்வளவு கவலைப்படுகிற ஜீவிகள் எழுத்தாளர்கள் அன்றி வேறு யாரும் இல்லை. ஏன் இவ்வளவு கவலை? யாருக்குத் தான் சாவு குறித்து பயமில்லை? எழுத்தாளன் ஏன் இவ்வளவு மனம் உடைந்து போய் தான் நிரந்தரமானவன் என சுயசமாதாப்படுத்திக் கொள்கிறான்? அவனுடைய நுண்ணுணர்வினாலா? கூருணர்ச்சியாலா? சின்ன விசயமாக பிறர்க்குத் தெரியும், சமயத்தில் மறந்தே போய் விடும் ஒரு அச்சம் அவனுக்கு மிகப்பெரிதாக ரூபமெடுத்து முன் நின்று அவனைத் தூங்க விடாமல் பண்ணுகிறதா?

இருக்கலாம். ஆனால் அந்த அச்சம் அவனுக்கு தன் எழுத்தில் இருந்தே கிடைக்கிறது என நினைக்கிறேன். எழுத்து என்பது நிகழ்ந்து அழியும் காலம். நாம் எழுதும் போது நம் முன்னே நம் காலம் தூல வடிவெடுத்து வரி வரியாகத் தோன்றி மறைந்தபடியே இருக்கிறது. ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் அடுத்த வரி தோன்றுவதற்கும் முன்பு ஒரு திகைப்பு - தோன்றலின் அதிசயம், தோன்றுதல் அழிதலின் நீட்சியாக இருப்பது குறித்த பதற்றம் - அவனுக்கு ஏற்படுகிறது. இது வாசிப்பின் போதும் நமக்கு ஏற்படுவதுண்டு என்றாலும் எழுத்தாளன் தன் எழுத்தை தனது நீட்சியாக காணும் அளவுக்கு வாசகன் தான் படிக்கும் எழுத்தைக் கருதுவதில்லையே! ஆனால் எழுத்தாளனோ எழுதுகையில் அதில் தன் ஆன்மா, தன் சாரம், தன் அடையாளம், தன் இருத்தல் என அவன் நினைக்கிற ஒன்றின் நீர்க்குமிழி வாழ்க்கையும், அந்த அநிச்சயத்தில் அது வெளிப்படுத்தும் நித்தியத்தையும் கண்டு அசந்து போகிறான், உடலுறவின் உச்சத்தில் ஒருவர் தன் இறந்து போவோமோ என நெஞ்சைத் தொட்டுப் பார்ப்பதைப் போல. அவன் அடுத்து இதை தன் இருத்தலுடன் ஒப்பிட்டு வாழும் கணத்தில் தான் இல்லாமல் போய் விடுவோமா, காற்றில் பறந்து போகும் காகிதமோ தான் என பதறுகிறான்.

இந்த பதற்றத்தை அவன் எப்படி எதிர்கொள்கிறான்? அவன் உடனே தான் அழிவற்றவன் என நினைத்துக் கொள்கிறான். திரும்பத் திரும்ப அதைக் கோருகிறான். தன் புத்தகங்கள் பரவலாகப் படிக்கப்படவில்லை என்றால் தொந்தரவுக்குள்ளாகிறான். விருது, விமர்சக கவனிப்பு, மேடை அங்கீகாரம் ஒவ்வொன்றுக்காகவும் ஏங்குகிறான். படைப்பிலக்கியம் ஒரு எழுத்தாளனின் ஆன்மாவின் குரல், அவனது தன்வரலாறு, அவனது குருதியாலும் வியர்வையாலும் எழுதப்பட்டது என்றெல்லாம் பேசுகிறான். தான் கொண்டாடப்படுவதும் தன் எழுத்து கொண்டாடப்படுவதும் ஒன்றே எனும் ஆபத்தான இடத்துக்கு சென்று சேர்கிறான். தமிழில் தீவிர இலக்கியம், சிறுபத்திரிகை படைப்பாளிகள் தோன்றிய காலம் முதலே எழுத்தாளனை, அவனது ஆளுமையை மையமாக வைத்து எழுத்தை வாசகர்கள் தொகுத்துக் கொள்வது, தனது எழுத்து அழிவற்றது தானா என படைப்பாளிகள் தூக்கம் விழித்து கவலைப்படுவது நிகழ்கிறது. நமது விமர்சனப் புலத்தில் அதிகமாகக் கேட்கப்பட்ட கேள்வி “இந்த படைப்பு காலத்தை வென்று நிற்குமா?” என்றதே. எனக்கு எப்போதுமே இதைக் குறித்து எழும் ஐயம்: ஏன் காலத்தை வெல்ல வேண்டும் என்பது. காலத்தை அப்படி வெல்ல முடியுமா எனும் தத்துவ விவாதத்துக்குள் கூட நான் போகவில்லை. அதனால் என்ன பெறுமதிப்பு எனும் எளிய கேள்வியையே கேட்கிறேன்.
2032இல் நான் உயிருடன் இருக்க மாட்டேன். அப்போது என் நாவலை ஒருவர் படித்தாலும் படிக்காவிட்டாலும் எனக்கு என்ன? அவர் படிப்பதால் நான் உயிருடன் மீண்டு வந்து விடுவேனா? புதுமைப்பித்தனைப் பற்றி இப்போது நான் சிலாகிப்பதால் அவருக்கு என்ன பயன்? எவ்வளவு அபத்தமான விருப்பம் இது! நம் காதல் ஆயிரம் காலம் ஆனாலும் மரணமடையக் கூடாது என பழைய காலத்தில் காதலர்கள் பரஸ்பரம் கூறுவார்களே அதைப் போன்றதல்லவா இது!

இந்த ‘பேராசை’ ஆன்மா குறித்து நம் ஆட்களுக்கு உள்ள தீவிர நம்பிக்கையில் இருந்து வருகிறது. அதுவும் நவீன காலத்தில் மனிதன் ஆன்மாவற்றவன் என நிரூபணமாக ஆக எழுத்தாளன் எல்லாவிதமான சாராம்சங்களையும் ஒரு ஆறுதலுக்காக பற்றி தொங்கிக் கொள்கிறான். புறவாழ்வில் சாதி, மத, மரபான நம்பிக்கைகள் ஒவ்வொன்றும் பலமிழக்கும் போது அவனுக்கு 'இலக்கியத்தில் வாழும் ஆன்மா' எனும் நம்பிக்கை ஒரு பற்றுகோலாகத் தேவைப்படுகிறது.

எது எப்படியோ 'இலக்கியம் அழிவற்றது' எனும் திடமான நம்பிக்கை 'இலக்கிய சாரம் அழிவற்றது' எனும் கருதுகோளில் இருந்து வருகிறது. இலக்கிய சாரத்தை ஏற்கிற ஒருவர் இச்சமூகத்தின் ஒவ்வொரு தளையையும் (சாதி, மதம், கடவுள், இறையாண்மை, நன்மை-தீமை, பால்நிலைகள்) ஏற்கிறவராக மாறுகிறார்.

ஐரோப்பாவில் இலக்கியத்தை சாராம்சப்படுத்தி இலக்கியவாதியை அவதாரமாகப் பார்ப்பது இலக்கிய நாவல்கள் வணிகமயமானதன் விளைவாக நிகழ்ந்தது - எழுத்தாளனின் பிம்பத்தை பெருக்கி அதைக் கொண்டு புத்தகங்களை அதிகமாக விற்பது - என ரொலாண்ட் பார்த் சொல்கிறார் என்றால் ஆர்ஹன் பாமுக்கோ மூன்றாம் உலக நாடுகளில் இலக்கியத்துக்கு வலுவான சந்தை இல்லாத நிலையில் எழுத்தாளன் புத்தக விற்பனையைக் கடந்து தனது அங்கீகாரம் குறித்தே அதிகமாக கவலைப்படுகிறான் என்கிறார்.

இதற்கு மாறாக ஒரு அராஜகவாதி, ஒரு பின்னமைப்பியல் படைப்பாளி தான் அழிந்து கொண்டே இருப்பவன், தனக்குள் அழிவற்ற ஒன்றுமே இல்லை, தான் எதையும் நிறுவி கட்டமைக்க வேண்டியதில்லை, தான் வாழ்வுக்கு ஒரு முற்றுமுழுதான தரிசனத்தை அளிக்க வேண்டியதில்லை என்கிறான். அதுவே வாசிப்பின் இயல்பான நிலை, எழுத்தும் தளையற்றுப் போகும் போது, அது கதைகள் வழியாக வாழ்க்கையை ஒழுங்கமைவுக்குள் கொண்டு வராமல், அதன் சிதைவை தொடர்ந்து முன்னிறுத்துகையில் பெரும் உவகை வாசிப்பில் சாத்தியமாகும் என்கிறான். இந்த உவகையையே ரொலாண்ட் பார்த்த ‘வாசிப்பின்பம்’ என்றார். (தமிழில் இதை ‘சுவாரஸ்யம்’ என்பதன் இணைச்சொல்லாக தவறாகப் புரிந்து கொண்டோம் என்பதொரு துயரம்.)

தமிழில் பின்நவீன படைப்பாளிகள் தமது வடிவ பரிசோதனைகள், மொழி விளையாட்டுகள் மூலம் சாராம்சமின்மையின் பேருவகையை வெளிப்படுத்த முயன்றார்கள் என்றாலும், கோட்பாட்டெழுத்துக்களில் இது அரசியல்ரீதியாக விவாதிக்கப்பட்டது என்றாலும் சாருவே வெளிப்படையாக இதைக் கோரியவர், ஒரு எழுத்தாளனாக தான் எதையும் பற்றிக் கொள்ளத் தேவையிலை என்று துணிந்து நின்றவர். “ஸீரோ டிகிரி” நாவலில் இதை ஒரு படைப்பாக்க கொள்கையாகவே அவர் அறிவிப்பதைப் பாருங்கள்:

"இந்த வாக்கியங்களை நீ வாசிக்கும்போது அது நிகழக்கூடும் ஜெனீ. ஆம். அப்போது நீயும் இந்த பிரதியும்தான் இருப்பீர்களே தவிர இந்த பூஜ்ய கணக்கில் இதை எழுதிக் கொண்டிருக்கும் நான் இருக்க மாட்டேன். மரணத்தின் மௌன வெளி என்னை உறிஞ்சிக்கொண்டு போய்விடும். கடந்த காலப் பேராழத்தில் மூழ்கிவிடுவேன். எனது வார்த்தைகள் பிரதியின் வார்த்தைகளாகிவிடும். எனது நான் அழிந்து பிரதியின் நான் ஸ்தூல உருப்பெற்றுவிடும்."

தமிழில் இதுவரை நம் முன்னோடிகள் கூறியதற்கு நேரெதிரான ஒரு கொள்கைப் பிரகடனம் இது. சாரு எனக்குத் தெரிந்து 'அடுத்த ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நான் மொழியில் நிற்பேன்' என்று கூறாதவர். அந்தந்த தருணங்களில் இருத்தலின் அவசியத்தை வலியுறுத்துபவர். அதையே “பூஜ்ய கணக்கில்” எழுதுவது என்கிறார். இங்கு அவர் writing degree zero என்று ரொலாண்ட் பார்த்தை மேற்கோள் காட்டுகிறார். நாவலின் தலைப்பும் அங்கிருந்தே வருகிறது.

“மரணத்தின் மௌன வெளி என்னை உறிஞ்சிக்கொண்டு போய் விடும்” என்பதை தன் எழுத்தின் சாதனையாகவே அவர் முன்வைக்கிறார். ஒரு சொல்லை வாசிக்கையில் தோன்றும் அர்த்தங்கள் ஒன்றையொன்று ரத்து செய்தே தோன்றுகின்றன, அந்த ரத்து செய்யப்படும் உள்கணத்தில் நாம் அழிந்து அழிந்து தோன்றுகிறோம் என்றார் தெரிதா. “நிழல்” என்றதும் நிழலின் பல ஆயிரம் அர்த்தங்கள் மட்டுமல்ல, நிழலற்ற ஒரு உருவும் தான் அங்கு தோன்றுகிறது. நிழலின்மையின் ஒப்பீட்டுடன் நிழல் தோன்றும் போது கிடைக்கும் இடைவெளியில் ஒரு சிறு இன்பம் இருக்கிறது. ஆஹா என்று திளைக்கிறோம். அது என்னவென அறியாததன் திளைப்பு அது. நாமே பிரக்ஞையில் நேரடியாக உணராத இன்பப்பெருக்கு அது. வடிவான இடையினள் எனும் போது பருத்த இடையினளும் அங்கு தோன்றுகிறாள். இவள் இல்லாமல் அவள் இல்லை. ஆனால் இவளா அவளா யார் இங்கே வருவது என தத்தளிக்கும் போதே நாம் வாசிப்பின்பத்தை அடைகிறோம்.
சொற்களின் இணைப்பில் வரும் சிறு பொருத்தமின்மை அழகியலுடன் ஏற்படுத்தப்பட்டால் ஒரு தனி அழகாவது இப்படியே. அதைக் கண்டு திகைத்து நிற்கும் போது நம்மை இந்த பேருவகை ஆட்கொள்கிறது. அது தான் “மரணத்தின் மௌன வெளி.”
அதைப் போன்றே படைப்பாளியின் வெகு அருகில் அவனது நிழலைப் போன்ற படைப்பாளியல்லாத ஒரு வெற்று மனிதனும் நிற்கிறான். சாரு நிவேதிதா எனும் மனிதன் இல்லாத உலகில் நாம் சாரு நிவேதிதா எனும் படைப்பாளியை எதிர்கொள்வதே சாத்தியமில்லை. நான் தூலமாக மட்டும் கூறவில்லை. அந்த பெயரை நீங்கள் புத்தக அட்டையில் பார்க்கையில் அது அப்பெயராகவும் (எழுத்தாளனின் பெயராகவும்) அப்பெயரற்றதாகவும் (எழுத்தாளனல்லாத மனிதனின் பெயராகவும்) இருக்கிறது. அதனாலே அவர் சாரு நிவேதிதாவாகிறார். இது சாருவுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு படைப்பாளிக்கும் பொருந்தும். ஆனால் சாரு மட்டுமே அதை வெளிப்படையாகக் கோருகிறார்.

எனக்கு இந்த பத்தியில் மிகவும் பிடித்தது அதன் இறுதி வரி: “நான் அழிந்து பிரதியின் நான் ஸ்தூல உருப்பெற்றுவிடும்” என்கிறார். பிரதியின் நான் என்பது கதைசொல்லியின் தன்னிலை. இது கற்பனையாக உருப்பெற்ற ஒன்று. “அசலான நான் மறைய பொய்யான நான் ஸ்தூலமாவேன்” என்கிறார். இங்கு “ஸ்தூலம்” மிக முக்கியமான சொல். என் கதைசொல்லியின் தன்னிலை ஒரு காகிதமாகும் என்கிறார், எழுத்தாளனின் ஆன்மாவானது வெறும் காகிதமே என்று கூறுகிறார் என நான் இதைப் புரிந்து கொள்கிறேன். அவ்வளவு தான் - இதை விட எழுத்தின் காலாதீத கற்பிதங்களை, சாராம்சவாதத்தை ஒருவர் போட்டுடைக்க முடியுமா?
ஆம் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் நமது இலக்கிய மேதைகளின் ஆன்மா நிலைக்கும், அச்சடித்த காகிதமாக. ஆனால் இப்படி காகிதமாக மாறுவதே நம்மை நினைவுகளின் சுமடுகளில் இருந்து விடுவிக்கிறது. கனமற்று போவதே அகவிடுதலை. அதுவே சாருவின் புனைவுகளில் கொண்டாட்டமாக, வழுக்கிக் கொண்டே போகும் பனிச்சறுக்கு விளையாட்டு வாழ்க்கையாக இருக்கிறது. அதனாலே அவரது படைப்புகளில் எந்த கனத்தையும் நாம் உணர்வதில்லை. அது நம்மைப் பிடித்து அழுத்துவதில்லை.
வாசிப்பின் உவகை அளிக்கும் அகசுதந்திரத்தைக் கண்டு அஞ்சும் நிறைய வாசகர்கள் இருக்கிறார்கள். பேராசிரியர் அ. ராமசாமி சொல்வதைப் போல அவர்கள் மதசார்பற்றவர்களாக இருந்தபடியே மரபின் மீது தீவிர பற்று கொண்டவர்களாக இருக்கிறார்கள்; மரபில் வேர்பிடித்து நின்றபடியே அதை வெளிப்படையாக ஏற்க மனமற்றவர்கள் அவர்கள். மறைமுகமாக அவர்கள் பற்றிக் கொள்ளும் கொழுக்கொம்பாக நவீன இலக்கியம் இருக்கிறது. அங்கு அவர்களுக்கு கடவுளின் இடத்தில் எழுத்தாளன் அமைந்து விடுகிறான். அவர்களுக்கு இவ்வாழ்வு ஆழமான அர்த்தங்கள் பொதிந்தது, மகத்தான தரிசனங்களை உள்ளடக்கியது எனும் நம்பிக்கையை அளிப்பதாக எழுத்து இருக்க வேண்டும். கோயிலுக்குப் போய் “என்னைக் கைவிட்டிராதே” என வேண்டிக் கொள்ளும் அதே மனதுடனே அவர்கள் ஒரு நாவலிடமும் வருகிறார்கள். இறைவன் கைவிடுதலே தரிசனம் என அவர்களுக்குப் புரிவதில்லை. அவர்கள் தம்மைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை வழிபடும் சிறைவாசிகள். அவர்களிடம் இந்த நாவலில் ஒன்றுமே இல்லை, அதுவே இதன் சிறப்பென்று நீங்கள் சொல்லி புரியவைக்க முடியாது. அவர்களை பொய் சொல்லி ஏமாற்றி மேலுமொரு தங்க கைப்பூணை மாட்டி விடுவதே எளிது. சாரு அதைச் செய்வதில்லை என்பதே அவரது ஆகப்பெரிய சிறப்பு என்று எனக்குத் தோன்றுகிறது!

இன்மையின் பேருவகையை அறிவதே இருத்தலின் கொண்டாட்டம் என சாரு தன் நாற்பதாண்டுகால எழுத்து வாழ்வில் நிரூபித்திருக்கிறார் என்பதே அவரது தனி சாதனை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...