முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடவுள் என்னை ஆட்கொண்ட கதை




நான் சிறுவயதில் இருந்தே கடவுளைக் கும்பிட்டதில்லை. யாரும் எனக்கு கையைக் குவித்து கடவுளைத் தொழவோ மனமுருகி வேண்டவோ சொல்லவில்லை. எங்களுடைய வீட்டில் ஒரு சிறிய மூலையில் ஒரு கடவுளின் படம் இருக்கும். அங்கு அம்மா மட்டுமே விளக்கேற்றி வைத்து சில நிமிடங்கள் தொழுவார். கோயிலுக்குப் போவார். என் அப்பா ஒரு தீவிர நாத்திகர். சாகும் வரை அவர் அப்படித்தான். அவருக்கு புற்றுநோய் வந்த போது கூட அவர் கடவுளை நம்பவில்லை. நான் ஆரம்பம் முதலே அவருடனே இருந்ததால் அம்மா செய்வதெல்லாம் வேடிக்கையாகவே ஒரு கட்டத்தில் தோன்றியது. ஆனால் பகுத்தறிவு சார்ந்து நான் நாத்திகன் ஆகவில்லை. (வெகுபின்னரே பெரியாரைப் படித்தேன்.) கடவுளுக்கு என் வாழ்க்கையில் இடமே இருக்கவில்லை. எப்படி ஒரு ஆண் பெண்களின் பாத்ரூமுக்குள் போவதில்லையோ அப்படியே நான் கடவுளின் பக்கமும் போனதில்லை.


 தமிழ் எழுத்தாளர்களில் கோயில் கலாச்சார பழக்கமே இல்லாத ஒரே ஆள் நானாகத் தான் இருப்பேன். எந்தளவுக்கு என்றால் எந்த பண்டிகை, விசேச தினங்கள் பற்றியும், விரதங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் பற்றியும் எனக்கு ஏதும் தெரியாது. நான் என் சிறுவயதில் ஜெயமோகனை சந்தித்த போது அவர் மதம் சார்ந்த சடங்குகள், பக்தி இலக்கியங்கள்தொன்மங்கள், இடங்களில் தான் நமது பண்பாட்டின் வேர்கள் உள்ளன, அதுவே படைப்பூக்கத்தின் அடிப்படை என நம்புகிறவராக இருந்தார். என் மனதில் எங்குமே கடவுளோ கோயிலோ இல்லையே என்றவரிடம் ஒருமுறை அப்போது கூறிய போதுஉங்கள் உபமனதில் எங்காவது இருக்கும், எழுதும் போது தானே வரும்என்றார். ஆனால் நான் எவ்வளவோ தேடித் துருவிப் பார்த்ததில் வேறு பல ஐட்டங்கள் கிடைத்தன, கடவுள் கிடைக்கவில்லை. அதன் பிறகு அப்படியே விட்டு விட்டேன். கடந்த சில ஆண்டுகளில் பௌத்தம் சார்ந்த வாசிப்பு எனக்கு கடவுள் நம்பிக்கையின் சிக்கல்களை, ஆபத்துகளை தர்க்கரீதியாக விளக்கியது. கடவுள் என்பவர் சாராம்சவாத சிந்தனையின் ஒரு உருவகம், ஒரு சின்னம், அவரைக் கொன்றாலே அதிகார மையங்களை, மொழிக்குள் உறைந்திருக்கும் பிழையான பார்வைகளை ஒழிக்க முடியும் என்று புரிந்து கொண்டேன். சரி கடவுளின் ஆணிவேரையே அறுத்து விட்டோம் என நினைத்தேன். ஆனால் பாருங்கள், பின்னர் ஜெயமோகன் சொன்னது பாதி உண்மையாகி விட்டது. இந்த பதிவே அதைப் பற்றியது தான்


அண்மையில் நான் இவ்வருடத்தின் எனது இரண்டாவது நாவலை எழுத ஆரம்பித்தேன். அது ஒரு காதல் கதை. அதில் ஒரு கதாபாத்திரத்தை ஒரு கட்டத்தில் தீவிர முருக பக்தனாக்க முடிவு செய்தேன். இது தற்செயலாக அமைந்தது தான். நான் கல்லூரியில் படிக்கையில் மகாபலிபுரம் சென்றிருந்த போது ஒரு முருக பெருமான் கோயிலைக் கண்டேன். அங்கு கிடைத்த ஒரு பிம்பம் இந்த நாவலில் ஒரு அத்தியாயத்தில் ஒரு இடத்தில் நினைவு வந்தது. அப்போது ஒரு வசனத்தை எழுதினேன். உடனே இவனை நாம் முருக பக்தனாக்க வேண்டும் என முடிவு செய்து நாவலின் துவக்கத்துக்கு சென்று அங்கிருந்து திரும்ப நிறைய மாற்றங்களை அவனுடைய நடவடிக்கைகளில், மொழியில், சிந்தனைகளில் கொண்டு வந்தேன். கூடவே இங்கு எனக்குப் பயிற்சியாளராக இருப்பவரிடம் அவதானித்த ஒரு சிறு இயல்பை (பக்தியே தானே) பிரதானமாக்கி மற்றொரு பாத்திரத்தை உருவாக்கினேன். இந்த இரு பாத்திரங்களுக்காக பக்தி இலக்கியங்கள், பாடல்கள், கோயில்கள் என நிறைய கவனிக்கத் தொடங்கினேன். என்னுடைய ஒரு நாளானது பக்திப் பாடல்களைக் கேட்டே துவங்க ஆரம்பித்தது. நாள் முழுக்க பக்திப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருப்பேன். மனதுக்குள் ஏதாவது ஒரு வரியை உருப்போட்டபடி இருப்பேன். அவனையும் பயிற்சியாளரையும் சேர்த்து உலவ விட்ட போது அவனுடைய பாத்திரத்திற்கு ஒரு ஆழமும் நம்பகத்தன்மையும் வருவதை உணர்ந்தேன். ஆனால் இங்கே சொல்ல வந்த விசயம் அதுவல்ல. இந்த பாத்திரம் ஒரு எழுத்தாளனாகவும் மனிதனாகவும் என் சிந்தனாமுறையை, புரிதலை வெகுவாக மாற்றி விட்டான். வாழ்க்கையில் முதன்முதலாக பக்தர்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனுடன் சேர்ந்து நானும் உருகினேன், பித்தாக திரிந்தேன், அபத்தமாக யோசித்தேன். விளைவாக, இந்த பக்தர்கள் சொல்வது, செய்வது எல்லாம் முட்டாள்தனம் தான், ஆபத்து தான், ஆனால் அதில் ஒரு உண்மை உள்ளது என எனக்கு பொட்டில் அடித்தாற் போலத் தோன்றியது.


அண்மையில் இந்திய இலக்கியத்தின் ஒரு பகுதியாக பக்தி மார்க்கம் பற்றி மாணவர்களிடம் வகுப்பில் பேசிய போதுபக்தி என்பது ஒருவிதமான காதல். ஒரு பக்தன் பக்தியில் திளைப்பது கடவுளை அடையவோ, பிறவிச் சங்கிலியை அறுக்கவோ அல்ல. தானற்றுப் போவதற்கல்ல. பக்தியின் இலக்கு பக்தி மட்டுமே. பக்தியில் இருக்கவே அவன் பக்தியில் இருக்கிறான்


லகான் சொல்லும் வேட்கையின் மார்க்கத்தைப் போன்றதே பக்தி மார்க்கமும். ஏன் ஒருவராலும் பக்திக்கான தர்க்கத்தை விளக்க முடியாது என்றால் காதலைப் போன்றே அதற்கு ஒரு தர்க்கமில்லை, காதலைப் போன்றே அது ஒரு புதைமணலைப் போல நம்மை உள்ளே உள்ளே இழுத்து செல்கிறது. தெளிவாக சீரான முன்னேற்றத்துடன் வாழ்வதை விட இப்படி பைத்தியமாக இருப்பதையே மனிதன் விரும்புகிறான். பக்தி அதனால் ஒரு முடிவற்ற, அரூபமான வேட்கையாக உள்ளது. காதலைப் போன்றே இந்த வேட்கை அவனை முழுமையாக்குகிறது. காதலில் போல ஒரு மனிதத் துணை இங்கு தேவையில்லை என்பதால் இறைவன் மீதான பக்தி காதலைப் போலல்லாது ஒரு முடிவற்ற பயணமாகிறது. அவன் இழுத்த இழுப்புக்கெல்லம் கடவுள் வருகிறார், கடவுள் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவன் போகிறான், அவர்களிடையே என்ன நடக்கிறது என யாருக்குமே தெரியாது. அவர்களுக்கு யாரும் கல்யாணம் பண்ணி வைக்கவோ விவாகரத்து வழங்கவோ முடியாது. சமூகத்தின் இடையீடு இல்லாததாலே இந்த இறை வேட்கை மிக மிக அந்தரங்கமாகிறது, அதனாலே அது கண்மூடித்தனமாகிறது, அதே நேரம் புறவுலகை பரிசீலிக்க அல்லது அதை மாற்ற ஒரு அசல் பக்தனுக்கு ஆர்வமோ தேவையோ இல்லாமல் ஆகிறது. (இதுவே சங்கிகளுக்கும் பக்தர்களுக்குமான வித்தியாசம் என நினைக்கிறேன்.)” என்றேன். இதையே நான் மூன்று மாதங்களுக்கு முன் பேசியிருக்க மாட்டேன். பேசி இருந்தால் என்னையே நான் காறித் துப்பி இருப்பேன். ஆனால் இந்த நாவலை எழுதிய அனுபவம் என்னை தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. தர்க்கத்திற்கு அப்பாலான ஒரு மனவுலகை காட்டித் தந்திருக்கிறது. பக்தர்களின் தரப்பின் நியாயத்தை இப்போது புரிந்து கொள்கிறேன். அவர்களைப் பார்த்தால் கேலியாக நகைத்து நான் இப்போது கடப்பதில்லை. அது மட்டுமல்ல கோயில்களைக் கடக்கும் போது நான் மறைந்து என் பாத்திரம் அங்கே தோன்றி கோயிலுக்குள் நுழைகிறது. அந்த சூழல், சப்தங்கள், வாசனை என்னை மதிமயங்க செய்கிறது


இதோடு விட்டால் பரவாதில்லை. இந்த இரு பாத்திரங்களை எழுதுவதால் வேறொரு பிரச்சனையும் ஏற்படுகிறது. முன்பு பெண்கள் என் முன்னால் வந்தால்அழகு என்பது ஒரு சாராம்சமற்ற தோற்றம்என்று எனக்குள் நானே விவாதிப்பேன். பெண்கள் எதிரில் வந்தால் புத்தகத்தினுள் முகத்தைப் புதைத்துக் கொண்டு கடந்து விடுவேன். கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களாலும், படித்த கருத்துக்களாலும் நான் ஒரு சாமியாரைப் போலாகி விட்டேன். ஆனால் இந்த இரு பாத்திரங்களும் பெண்களே கதி என விழுந்து கிடப்பவர்கள் என்பதால் இப்போது எந்த ஒரு பெண் என்னைக் கடந்து போனாலும் இவர்கள் மனதில் தோன்றும் எண்ணங்களும் இவர்கள் சொல்லக் கூடிய வசனங்களும் எனக்குத் தோன்ற நான் பயந்து போகிறேன்


இந்த மனவோட்டங்கள்  எனக்குள், என் உபமனதில் இருந்து வருவன என நான் நினைக்கவில்லை. இவை அப்பாத்திரங்களினுள் நான் புகுந்து விட்டதால் வரும் சிக்கல்கள். நாவலை எழுதி முடித்த ஒரே மாதத்தில் நான் தர்க்க மனம் பெற்றவனாக, விட்டேந்தியானவனாக மீண்டும் மாறி விடுவேன் என அறிவேன். (அதனாலே ஜெ.மோ சொன்னதில் பாதி மட்டுமே பலித்திருக்கிறது என்றேன்.)


நாளை ஒருவேளை நான் இரு சைக்கோ கொலைகாரர்களைப் பற்றி நாவலெழுதினால் என் கதி என்னவாகும்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...