Skip to main content

காய்கறிகள் எனும் மேஜிக்

என்னுடைய இன்றைய மதிய உணவு இது தான். முக்கால் வாசி தட்டில் வேக வைத்த காய்கறி. கூடவே pro biotic உணவாக தயிரும், புரதச் சத்துக்காக நட்ஸ், விதைகள், உலர்பழம் சிறிதளவு சேர்த்த முட்டை ஆம்லேட். 
காலையில் மாவுச்சத்தை எடுத்துக் கொண்டதால் மதியம் அதைத் தவிர்த்தேன்.
இந்த உணவில் மிக மிக முக்கியமானது ஆம்லேட் அல்ல, இந்த காய்கறிகள் தாம். நான் சிறுவயதில் இருந்தே காய்கறிகளை வெறுத்து வந்தேன். அண்மையில் தான் காய்கறிகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டேன் - நமது உடலில் உள்ள 90வித செல்கள் நல்ல நுண்ணுயிர்களால் ஆனவை என்கிறார்கள். குடலில் வாழும் இவை தான் நமது செரிமானம், சத்துக்கள் உடலுக்குப் போவது, நமது மனநிலை சீராக உற்சாகமாக இருப்பது, கொழுப்பு, சர்க்கரை அளவை சீராக வைப்பது ஆகிய முக்கிய பணிகளை செய்கின்றன. நமது ஹார்மோன்களை பெருமளவு கட்டுப்படுத்துவது நமது குடலில் உள்ள நுண்ணுயிர்களும் மூளையுமே. மூளையின் செயல்பாடும் கூட இந்த நுண்ணுயிர்களின் கையிலே உள்ளதாக சொல்லுகிறார்கள். நல்ல நுண்ணுயிர்கள் நமது குடலில் சரியான எண்ணிக்கையில் இருந்தால் நோயெதிர்ப்பு சக்தியும் வலுவாக இருக்கும். நுண்ணுயிர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவே நம்மையும் பாதுகாத்து நம் உடலையும் நன்றாக இயங்க வைக்கின்றன என நினைவில் வையுங்கள். 
ஆக இந்த நுண்ணுயுர்களை மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக வைத்திருந்தாலே நாமும் மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக இருக்க முடியும். நல்ல நுண்ணுயிர்கள் நமது குடலில் தழைக்க காய்கறிகள் வழங்கும் நார்ச்சத்தும் நீரூற்றி வைத்த பழைய சோறு, தயிர் ஆகிய fermented pro biotic உணவுகளும் அவசியம். 
கடந்த சில பத்தாண்டுகளில் நாம் செய்த மிகப்பெரிய தவறு மூன்று வேளையும் மாவுச்சத்து, புரதச்சத்துணவுகளை மட்டும் எடுத்து வந்தது. நீங்கள் எந்த ஓட்டலுக்குப் போங்கள், யாருடைய சாப்பாட்டு டப்பாவை எடுத்துப் பாருங்கள் - இந்த இரண்டுமே இருக்கும், நார்ச்சத்து மிக மிக குறைவாக இருக்கும். இந்த நார்ச்சத்து சிறுகுடலுக்குப் போய் நொதித்து அதிக நேரம் இருக்க வேண்டும், அப்போதே நல்ல நுண்ணுயிர்கள் பெருகி செழிக்கும், அவை நன்றாக வேலை செய்து நம்மையும் நன்றாக வேலை செய்ய உதவும். ஆனால் நாம் இதை அனுமதிப்பதில்லை. 
கூடவே நிறைய antibioticsஐயும் இப்போது எடுத்துக் கொள்கிறோம். இவை நம் குடலில் வாழும் நல்ல நுண்ணுயிர்களை காலி பண்ணி விடுகின்றன. இதனால் நமது உடலின் இயக்கம் சீர்கெட எடை அதிகரிப்பு, ஹார்மோன் சமநிலையிழப்பு, மனப்பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எடை அதிகமாகிறது. நோயெதிர்ப்பு சக்தி குறைய அடிக்கடி தொற்றுகள் வந்து உடல் நலமழிகிறது. அதை சரிசெய்ய ஆண்டிபயோட்டிக் எடுத்து மேலும் நல்ல நுண்ணுயிர்களைக் கொன்று உடல் ஆரோக்கியத்தை கூடுதலாக அழிக்கிறோம்.

இதற்கு தீர்வு நிறைய காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்வதே. அரைக்கரண்டி பொரியல் போதாது. இப்படி தட்டில் முக்கால் பாகம் வரும்படி எடுத்துக் கொள்ளுங்கள். நான் இரண்டு வேளைகளும் தவறாமல் காய்கறிகளை சாப்பிடுகிறேன். இதன் பலனை நான் ஒரே மாதத்தில் அறிந்தேன். அதாவது டயட் இருப்பது, உடற்பயிற்சி செய்வதை விட காய்கறிகளை அதிகமாக சாப்பிடுவது உடனடி பலன்களை அளிக்கிறது. நீங்களும் முயன்று பாருங்கள். 
உணவே மருந்து!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...