ஏன் பொறுக்கிகள் மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்கிறார்கள்? அறம், நீதி எல்லாம் பொய்யா கோப்பால்?
ஆம் பொய் தான். பொய்யே தான்.
அண்மையில் வேலூர் இப்ராஹிம் பற்றி அவரது இரண்டாவது மனைவி அளித்த பேட்டியைப் பார்த்தேன். வியப்பாக இருக்கிறது - அவர் கள்ளக்கடத்தலில் ஈடுபட்டதற்காக வழக்கு இருக்கிறது. ஆனால் ஒருநாள் கூட அவர் அதற்காக சிறை செல்லவில்லை. அவர் தன் உறவினரின் வீட்டைப் பிடுங்கி இருக்கிறார். ஒரு வழக்கு கூட பதிவாகவில்லை. அவர் பெண்கள் பலரை ஏமாற்றி சுரண்டியிருக்கிறார், ஆனால் அவருக்கு எதிராக வழக்குகள் இல்லை என்பதோடு, இரண்டு மனைவியரும் அவரை விவாகரத்தே பண்ணவில்லை. அவர்கள் இப்போதும் அவருடன் இருக்கவே விரும்புகிறார்கள். இரண்டாவது மனைவி அவர் மீது கோபமாக, கொந்தளிப்பாக இருக்கிறார். ஆனால் நான் இதை சொல்லும் போது இப்ராஹிம் இவரை சரிகட்டியிருப்பார். நீங்கள் ஒரே ஒருமுறை குடும்பநல நீதிமன்றத்திற்கு வந்து பாருங்கள் - இவரைப் போல ஒரு ஆணைக் கூட பார்க்க முடியாது. எல்லாம் நம்மைப் போன்ற பைத்தியங்கள் தாம் அல்லாடுகிறார்கள்.
வேலூர் இப்ராஹிமுக்கு அரசியல், வரலாறு ஒன்றும் தெரியாது. ஆனால் பாஜகவில் மாநில அளவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். அவருக்கு பள்ளிப்படிப்பு கூட இல்லை. ஆங்கிலத்தில் எழுதத் தெரியாது. தமிழில் எழுதத் தெரியுமா என்பதும் சந்தேகத்துக்குரியது. பெண்களைப் பேசி ஏமாற்றுவதைத் தவிர எந்த திறனும் இல்லை. ஆனால் அவர் நிறைய பணம், தோழிகள், அரசியல் அதிகாரம் என கம்பீரமாக, நிறைவாக வாழ்கிறார். சூர்யா சிவாவை எடுத்துக் கொள்ளுங்கள். அவரால் பாஜவுக்குப் போய் சில மாதங்களே சமாளிக்க முடியவில்லை. ஆனால் இப்ராஹிம் அங்கே ராஜாவைப் போல இருக்கிறார். சூர்யா சிவா தன்னை அடுத்தவர்கள் கையாள அனுமதித்தார். இப்ராஹிம் அடுத்தவர்களைக் கையாள்கிறார்.
நீங்கள் நினைக்கலாம் இவரைப் போன்ற பொறுக்கிகள் ரொம்ப காலம் நன்றாக இருக்க முடியாது என. அது அது ரஜினி “பாட்ஷாவில்” சொன்னது. அது பாலகுமாரன் எழுதியது. அது உங்களை நீங்களே சமாதானம் பண்ணிக்கொள்வது. ஒரு உளவியல் ஆய்வில் இப்ராஹிமைப் போன்றவர்கள் தாம் நீண்ட காலம் ஆரோக்கியமாக மனநலனுடன் வாழ்வதாக நிரூபித்திருக்கிறார்கள். நம்மைப் போன்றவர்கள் துன்புற்று, நோயுற்று விரைவில் மடிந்து போவோம். பாலகுமாரனே நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழவில்லை. இப்ராஹிம் பாலகுமாரனை விட நன்றாக வாழ்கிறார். அவரை விட இவர் ஜித்து.
சரியாக யோசி, தவறு செய்யாதே, அநியாயம் பண்ணாதே என்றெல்லாம் தவறாகச் சொல்லி நம்மைத் தவறாக வளர்த்து விட்டார்கள். அதைவிடக் கொடுமை இந்த இலக்கியவாதிகள் மானுட அறம், மானுட நேயம், அன்பு, பாசம் என்றெல்லாம் எழுதி எழுதி நம்மை மேலும் குழப்பிவிட்டார்கள். அதனால் தான் பாருங்கள் சில இலக்கியவாதிகள் (தாம் எழுதுபவற்றையும் படிப்பனவற்றையும் அப்படியே நம்புகிறவர்கள்) சுலபத்தில் உறவு வியாபாரத்தின் கொடுக்கல் வாங்கலில் ஏமாந்து போகிறார்கள். சிலர் தப்பி ஓடுகிறார்கள். இந்த உலகை டீல் செய்வதற்கான மனத்திராணி நிறைய படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் இருப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் நீதியை, நியாயத்தை நம்புகிறார்கள், அது இல்லாத போதும் அதை கற்பனையாக உருவாக்கி அதைக் குறித்தே சிந்திக்கிறார்கள், புலம்புகிறார்கள்.
ஒரு எழுத்தாளனாக நானும் இப்படியாகவே இருந்திருக்கிறேன், என்ன தான் திருந்த முயன்றாலும் இலக்கிய சகவாசம் என்னை உலகியல் அறிவற்ற முட்டாளாகவே வைத்திருக்கிறது. 2021இன் முடிவில் இப்போது நான் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்கு எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு வந்தது. நான் அதைப் பற்றி சில நாட்கள் தீவிரமாக யோசித்தேன். என் மூளை சொல்லியது: இது ஒரு நல்ல தேர்வு, இதை எடுத்துக்கொள், நன்றாக இருப்பாய். என் மனசாட்சி சொல்லியது: இது ஒரு தவறான தேர்வு, இதை எடுத்துக் கொண்டால் நீ நிம்மதி இழப்பாய். இது ஒரு தவறான முடிவு, இதை எடுத்தால் இதன் பின்னுள்ள அநீதி உன்னைத் துரத்தும். இது ஒரு தவறான முடிவு, இதை எடுத்தால்… . நான் வெறுத்துப் போய் என்னைப் போல் சிந்திக்கும் ஒரு நண்பரிடம் பேசினேன். அவர் ஒரு லட்சியவாதி. அவர் “இம்முடிவை எடுத்துவிடாதே, காலம் உன்னை மன்னிக்காது, வரலாறு உன்னை மன்னிக்காது, உன் தத்துவம் உன்னை மன்னிக்காது, உன் மனசாட்சி உன்னை மன்னிக்காது…” அப்படி இப்படி என்றெல்லாம் பேசி என்னைத் ‘திருத்தினார்’. விளைவாக நான் ஒரு வருடமாக படாபாடு பட்டேன். நான் எடுத்த ‘சரியான முடிவின்’ விளைவில் இருந்து தப்பிக்க எனக்கு சிறிது அதிர்ஷ்டம் வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும், என் உழைப்பின் பலனை எதுவும் நான் அனுபவிக்க முடியாதபடி நான் அடிமையாக உழைக்க வேண்டும்.
நான் முதுகலைப் படிப்பை முடித்து விட்டு முனைவர் பட்ட ஆய்வில் நுழைந்தேன். அப்போது பார்த்து என் அப்பாவுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டது. என் பெற்றோர் படிக்க வேண்டாம் என்றென்னிடம் கேட்கவில்லை என்றாலும் நீ இப்போது வேலைக்குப் போனால் நன்றாக இருக்கும் எனும் மனநிலையிலே இருந்தார்கள். நான் என் மனசாட்சியிடம் சிக்கிக் கொண்டேன். நீ மேலும் சில ஆண்டுகள் படிக்கும் செலவை உன் பெற்றோர் மீது சுமத்தி துன்புறுத்தலாமா என அது கேட்டது. என் மூளையோ நீ இப்போது படித்து முடித்துவிட்டால் நீ விரும்பும் கல்லூரி ஆசிரியர் வேலைக்குப் போய் மகிழ்ச்சியாக இருக்கலாம், இப்போது விட்டுவிட்டால் உனக்கு வேலை கிடைப்பது தாமதமாகும் என்றது. அப்போது பார்த்து எனக்கு குறைவான சம்பளத்தில் வேலை வேறு கிடைத்தது. நான் அப்போது தமிழின் முக்கியமான கவிஞர் ஒருவரிடம் (மனுஷ் அல்ல) போய் அறிவுரை கேட்டேன். அவர் என் மனசாட்சியின் அண்ணனைப் போல பேசினார். அடேய் பையா, படிப்பது எப்போது வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாம், ஆனால் வேலை போனால் கிடைக்காது என்று வேறு சொன்னார். நான் அவர் சொன்னவுடன் என் படிப்பை ரத்து பண்ணி, கட்டணத்தில் பாதியை திரும்பப் பெற்றுக்கொண்டு வேலையில் சேர்ந்தேன். அதன் மோசமான பலன்களை நீண்ட காலம் அனுபவித்தேன். என் முனைவர் படிப்பை நான் 16 வருடங்களுக்குப் பின் முடித்தேன். அதன் பின்னர் தான் ஓரளவுக்கு வசதியான வேலை எனக்குக் கிடைத்தது. ஒருவேளை நான் அப்போதே தன்னலத்துடன் சிந்தித்து முனைவர் படிப்பை முடித்திருந்தால் இப்போது இன்னும் நல்ல சம்பளத்துடன் இருந்திருப்பேன். அரசு வேலையில் கூட இருந்திருப்பேன். இன்று நான் என்னிடம் அறிவுரை கேட்கும் மத்திய வர்க்க மாணவர்களிடம் எல்லாம் “தன்னலமாக மட்டும் இரு” என்று ஆசீர்வதிக்கிறேன். என் அனுபவத்தை சொல்லி அவர்களை சரியான வழியைக் காட்டுகிறேன். ஆனாலும் அவர்கள் தவறான வழியையே தேர்ந்தெடுப்பதைக் கண்டு வருந்துகிறேன். இது ஒரு மத்தியவர்க்க பிரச்சினை.
இதை நான் சொல்லும் போது உங்களுக்கும் உங்கள் வாழ்க்கையில் தன்னலம் சிந்திக்காது எடுத்த மோசமான முடிவுகளை அவற்றின் விளைவுகளும் உங்கள் கண் முன் ஓடும். அதனாலே இது என் தவறுகள் மட்டும் அல்ல, என்னைப் போல பலரும் இருக்கிறீர்கள் என்கிறேன்.
தன்னலமாக யோசிப்பது தவறு என சொல்லித் தந்து நம்மைத் தவறாக வளர்த்து விட்டார்கள். அது போதாது என்று இலக்கிய வாசிப்பு வேறு நம்மைக் கெடுக்கிறது.
நான் மிகவும் வருந்துவது இந்த எழுத்தாள நண்பர்களை, என் இலக்கிய ஆசான்களை சந்திக்கும் முன் என் பதின்வயதிலேயே வேலூர் இப்ராஹிம் போன்றவர்களை சந்தித்திருக்கலாம், அவர்கள் என்னை சரியாக வழிநடத்தி இருப்பார்களே என்பதே. இப்போது கூட நான் வாழ்க்கையில் சந்திக்க விரும்பும் மகத்தான மனிதர்களின் பட்டியலில் வேலூர் இப்ராஹிமை வைத்திருக்கிறேன். ஒரு மாதம் அவருடன் இருக்க வாய்ப்பு கிடைத்தால் அவரைத் தலைகீழாகப் படித்து அலசி ஆராய்ந்து விடுவேன். அப்படி அடைந்த படிப்பினைகளை நான் வாழ்நாள் முழுக்க பின்பற்றினால் இன்னொரு தளத்துக்கு நகர்ந்து விடுவேன். மகிழ்ச்சியாக, நிறைய பணத்துடன், நல்ல உடற்தகுதியுடன் நீண்ட ஆயுள் வாழ்வேன். யோசித்துப் பாருங்கள் பள்ளிப்படிப்பையே முடிக்காத அவரால் இந்தளவுக்கு வாழ்க்கையில் உயர முடியும் என்றால் என்னால் எந்தளவுக்கு முடியும்? அட நம் சரவண பவன் அண்ணாச்சியை எடுத்துக் கொள்ளுங்கள் - அவருக்கு மட்டும் இப்ராஹிமைப் போலொருவர் ஆசானாகக் கிடைத்திருந்தால் அவர் சிறைக்கே சென்றிருக்க மாட்டார். இதை உறுதியாக சொல்லுகிறேன். அண்ணாச்சியை, என்னை, உங்களைப் போன்ற எத்தனையோ பேர்களுக்கு வேலூர் இப்ராஹிம் வாழும் கலை வகுப்புகள் எடுத்திருந்தால் நமக்கு வாழ்க்கையில் துன்பங்களே இருந்திருக்காது.
சரி நான் என்ன ஆண்களின் பக்கமிருந்தே யோசிக்கிறேன் என்று நினைக்கிறீர்களா, பெண்களுக்கென்றே இருக்கிறார்களே போலி பெண்ணியவாதிகள், அவர்கள் சரியாக சாமர்த்தியமாக, தன்னலமாக வாழதற்கு, குற்றவுணர்வின்றி ஆண்களை ஏய்ப்பதற்கான அத்தனை வித்தைகளையும் கற்றுத் தருகிறார்கள். பெண்ணியத்தைக் கற்றுக் கொண்டால் பெண்கள் ஏமாறவோ, துன்புறவோ வாய்ப்பிருக்காது. அண்மையில் ஒரு போலி பெண்ணியவாதி, பெண் ஊடகவியலாளர் தன்னை விட வயதிற் குறைந்த ஒருவரைத் திருமணம் செய்து ஏமாற்றியதில் அந்த ஆண் தற்கொலை பண்ணிக் கொண்டார். அதைப் பற்றி ஜு.வியில் ஒரு கவர் ஸ்டோரி போட்டிருந்தார். அதைப் பற்றி போது எனக்கு அந்த பெண் மீது மிகுந்த மரியாதையே ஏற்பட்டது. அவர் பத்தாண்டுகளுக்கு மேலாக இதையே ஒரு தொழிலாக செய்து பலரை ஏமாற்றி வாழ்க்கையில் ஒரு உயர்நிலையில் இருப்பதுடன் நிறைவாக வாழ்கிறார். நான் என்னுடைய தோழி ஒருவரிடம் இந்த கவர் ஸ்டோரியை அனுப்பி “இவர் ஒருபோதும் கைதாக மாட்டார், சொல்லப்போனால் இந்த சிக்கலைக் கூட ஒரு தூசைப் போலத் தட்டிவிட்டுக் கொண்டு கடந்துவிடுவார்’ என்றேன். நான் சொன்னது தான் நடந்தது. இதுவரை ஒரு ஆண் கூட இப்பெண் மீது புகார் அளித்ததில்லை. ஏனென்றால் இவரும் ஜித்து. இவரும் இப்ராஹிமைப் போல பெண்களுக்கு ஒரு வாழும் கலை வகுப்பெடுக்கலாம்.
பொறுக்கிகளின் மகிழ்ச்சிக்கு, தன்னிறைவுக்கு இன்னொரு காரணம் அவர்கள் அரூபமான, லட்சியபூர்வமான விசயங்களை சுத்தமாக நம்புவதில்லை என்பது, நாம் நம்புகிறோம் என்பது. சொல்லப்போனால் அவர்கள் எதையுமே நம்புவதில்லை, நம்புவதைச் சொல்லுவதில்லை, சொல்லுவதைச் செய்வதில்லை. அவர்கள் ஒருவித பின்நவீனத்துவ மனிதர்கள். அதனாலே பொறுக்கிகள் சாமியார்கள் ஆகும் போது கடவுளையோ மதப்பிரச்சாரங்களை நம்பாமல் அவற்றை பயன்படுத்த மட்டும் செய்கிறார்கள். அதனாலே பொறுக்கிகள் அரசியல்வாதிகள் ஆகும் போது ஜனநாயகத்தையோ அரசியல் சட்ட அமைப்பையோ நம்பாமல் அவற்றை பயன்படுத்த மட்டும் செய்கிறார்கள். இந்த இரண்டு துறைகளுக்குள்ளும் நம்மைப் போன்றவர்கள் போனாலும் துன்புற்று அழிகிறோம்.
பொதுவாக, நாம் ஒரு சிறிய தவறைச் செய்து பெரிய தண்டனைகளை அடைகிறோம். ஆனால் பொறுக்கிகளோ பெரும் தவறுகளைச் செய்து சிறு தண்டனைகள் கூடப் பெறாமல் இந்த நீதியமைப்பையும், சமூக அமைப்பையும் சமாளித்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆம், முட்டாள்களே நீதித்துறையையும் சமூகத்தையும் எதிர்கொள்கிறார்கள், புத்திசாலிகள் இந்த இரண்டையும் சமாளிக்கிறார்கள். சொல்லப்போனால் எந்த குற்றத்துக்கு எதைக் கொடுத்து சரிகட்ட வேண்டும், பிளான் ஏ சரியாக வரவில்லையா, பிளான் பி, பிளான் சி என வேலூர் இப்ராஹிம்கள் ஏகத்துக்கும் வைத்திருக்கிறார்கள். பொதுவாக பொறுக்கிகள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருப்பதற்கு இது ஒரு காரணம்.
பொறுக்கிகளிடம் இருந்து எதைக் கற்றுக் கொள்ளுவது என நான் யோசித்த போது இதை சத்தியமாக கற்றுக்கொள்ள முடியாது எனத் தோன்றியது. ஆனால் வேறு சில விசயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.
- பொறுக்கிகள் கடந்த் காலத்தை அப்படியே ‘கடந்து’ விடுகிறார்கள்.
- பொறுக்கிகள் குற்றவுணர்வு அடைவதே இல்லை.
- பொறுக்கிகள் அடுத்தவர்களின் வங்கி இருப்பை வைத்தே எந்த முடிவையும் எடுக்கிறார்கள்.
- பொறுக்கிகள் அடுத்தவர்கள் தம்மை பயன்படுத்துமுன் அவர்களைத் தாமே பயன்படுத்துகிறார்கள்.
- பொறுக்கிகள் நல்லவர்களை நம்புவதில்லை, தம்மையும் நல்லவர்களென நினைப்பதில்லை, நன்மைக்கான விலையைத் தரவோ பெறவோ வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. நன்மையில் இருந்து விடுதலை உங்களை சுதந்திரமாக்குகிறது. பொறுக்கிகள் சுதந்திரமாக இருக்கிறார்கள்.
- அதற்காக பொறுக்கிகள் கெட்டவர்கள் என்றில்லை. என்னையும் உங்களையும் போன்றவர்களே கெட்டவர்கள் ஆக முடியும். பொறுக்கிகள் நன்மை-தீமை போன்ற இருமைகளை நம்புவதில்லை. அவர்களுக்கு தீமை என்றாலே என்னவெனத் தெரியாது. தேவையானது, தேவையில்லாதது என இரண்டு விசயங்களே அவர்களுக்குத் தெரியும்.
- பொறுக்கிகள் சம்பாதிப்பதில்லை. பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். அதனாலே பணம் அவர்களை அடிமையாக்குவதில்லை. அவர்கள் ஏழைகளாகவோ பணக்காரர்களாகவோ இருப்பதில்லை.
- பணம் சம்பாதிக்க படிக்க வேண்டும், உழைக்க வேண்டும் போன்ற அபத்தங்களை அவர்கள் சுமப்பதில்லை. நம்மைப் போன்ற அடிமைகள் இருக்கும்வரை பொறுக்கிகள் உழைக்க வேண்டியதில்லை.
- பொறுக்கிகள் தாம் நல்லவர்களாக இருந்தாலே பிறர் தம்மை நேசிப்பர், விரும்புவர், காதலிப்பர், ஏற்பர் போன்ற முட்டாள்தனங்களை ஏற்பதில்லை. அடுத்தவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் அவர்கள் நேசிக்கவும், விரும்பவும், காதலிக்கவும், ஏற்கவும் படுவார்கள் என்பதால் அவர்களுக்கு இந்த உலகில் மிகவும் நேசிக்கவும், விரும்பவும், காதலிக்கவும், ஏற்கவும் படுகிறார்கள். பிறர் சரியாக, நல்லவிதமாக, கச்சிதமாக இருக்க வேண்டும் எனும் முனைப்பில் அடுத்தவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாமல் எல்லாரும் வெறுக்கவும், நிராகரிக்கவும் படுகிறார்கள். உடனே நான் இவ்வளவு கொடுத்திருக்கிறேன், என்னை ஏன் கைவிட்டீர்கள் என உலகை நோக்கி கோபப்படுகிறார்கள், வருந்துகிறார்கள், சபிக்கிறார்கள். பொறுக்கிகள் ஒரு போதும் கோபப்படுவதில்லை, வருந்துவதில்லை, சபிப்பதில்லை.
- எதிர்காலத்தையும் வருங்காலத்தையும் பற்றி தேவைக்கதிகமாக சிந்தித்து வருந்துவதாலே நமக்கு உடல்நல, மனநல பிரச்சினைகள் வருகின்றன என உளவியலும் மருத்துவமும் சொல்லுகிறது. சமகாலத்தில் மட்டுமே வாழ்வதால் பொறுக்கிகளுக்கு அப்பிரச்சினைகள் வருவதில்லை.
- உலகில் வேறெவரையும் விட குறைவாகவே பொறுக்கிகள் ஏமாற்றமடைகிறார்கள். அவர்கள் ஏமாந்தாலும் உடனே பாடம் கற்றுக்கொண்டு முன்னேறுகிறார்கள். அவர்களுக்கு சுயமுன்னேற்ற காணொளிகள் பார்க்க அவசியமில்லை. அவர்கள் செய்ய வேண்டிய எதைப்பற்றியும் சிந்தித்து நேரம் வீணடிப்பதில்லை. செய்துவிடுகிறார்கள்.
- கல்வி நம்மை முட்டாளாக்குகிறது. கல்வி நம்மை குற்றவுணர்வும் பொறுப்புணர்வும் மிக்கவர்களாக்குகிறது. பொறுக்கிகள் படிக்காமலே வெற்றிபெறுவது இப்படியே. இதனாலே இன்றைய தலைமுறை இளைஞர்கள் படித்த பொறுக்கிகளாக வெற்றிகரமாக இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து நாம் தான் பொருமிகிறோம். இன்றைய இளைஞர்கள் இப்ராஹிமின் வாரிசுகள்.
- ஆனாலும் இப்ராஹிமிடம் இருந்து கற்க அவர்களுக்கு ஏராளமாக இருக்கிறது. உதாரணமாக இப்ராஹிம் ஒரு போது தற்கொலை பண்ணவோ மனச்சோர்வுறவோ தன் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்ளவோ மாட்டார். இப்ராஹிம் தான் காதலித்து ஏமாற்றிய பெண்களின் வீடியோ எடுத்து டார்ச்சர் பண்ண மாட்டார். “என்னைக் காதலி, காதலி” என்று பைத்தியம் போல பின்னால் சுற்ற மாட்டார். இப்ராஹிம் தன் காதலியால் 12 முறை விஷம் கொடுக்கப்பட்டு 13வது முறை சாக மாட்டார். “சாகும் முன் அவளா அப்படிப் பண்ணினாள்?” என கேள்வி கேட்டு கண்ணீர் வடிக்க மாட்டார். கண்ணீர் வடித்து பார்த்து நிற்கும் உறவினர்களை, தாய் தந்தையரை டார்ச்சர் பண்ண மாட்டார். முக்கியமாக இப்ராஹிம் காதல், கல்யாணம் போன்ற கண்றாவிகளை நம்ப மாட்டார். அழகுக்கு தன்னை அடிமையாக விற்க மாட்டார்.
- நுண்ணுயிர்களின் இரண்டு வகை உண்டு: நல்ல நுண்ணியிர்கள், கெட்ட நுண்ணுயிர்கள். கெட்ட நுண்ணியிர்கள் நம்மைப் போல - எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு தான் ஏதோ நல்லது பண்ணுவதாகக் கோரிக் கொண்டு அந்த குற்றவுணர்வில் வாழ்ந்து, அதைப் பிறர் மீதும் ஏற்படுத்தி அவர்களையும் அழித்து விடும். ஆனால் நல்ல நுண்ணுயிர்கள் தமக்கு ஏற்றாற் போன்ற சூழல் இருந்தால் அங்கு வாழ்ந்து தமக்கு ஏற்றாற் போல உடலை மாற்றி அதனால் சில நல்ல விசயங்களையும் தான் வாழும் உடலுக்குப் பண்ணும். நமது குடலில் இருந்து மூளை வரை இவையே நிர்வகிக்கின்றன. இவற்றால் நல்ல நுண்ணுயிர்களுக்காக மனிதன் பலவித உணவுகளை உண்கிறான். இந்த இயற்கையே இப்படி லட்சியமற்ற ஒரு கொடுக்கல் வாங்கலின் அடிப்படையில் இயங்குகிறது என்றால் அந்த இயங்கியலின் பிரதிநிதியே இந்த நல்ல நுண்ணுயிர்கள். இந்த நுண்ணுயிர்களின் கடவுள் தான் இப்ராஹிம் போன்றவர்கள். இவர்கள் எப்போதும் தாம் சுரண்டுவோருக்குத் தேவையானதை சரியான நேரத்தில் சரியான அளவில் கொடுத்து விடுகிறார்கள். இதனாலே தாம் வாழ அனுமதிக்கப்படுகிறோம் என அறிந்திருக்கிறார்கள். இப்ராஹிமை எடுத்துக் கொண்டால் அவர் பணம் சம்பாதிப்பதில்லை என முதல் மனைவி தொடர்ந்து அவரிடம் சண்டை போடுகிறார். தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ளும் அவர் உடனே தன் மனைவிக்கு சம்பாதித்துக் கொடுக்கும் விதமாக இன்னொரு பெண்ணை மணந்து கொள்ளுகிறார். இந்த உண்மையை, தன் எதிர்பார்ப்பை இரண்டு பெண்களிடமும் சொல்லிப் புரிய வைக்கவும் செய்கிறார். இரண்டாவது மனைவிக்கு ஒரு கணவன், அவருக்கு இணக்கமான, உதவிகரமான ஒரு கணவன் தேவை. அத்தேவையை நிறைவேற்றுகிறார். அவரும் ஹேப்பி, இவரும் ஹேப்பி. எப்போதும் இரண்டாவது மனைவியின் வங்கி இருப்பு கரைகிறதோ அவர் அப்போதே விடைபெறுகிறார். அதற்கு மேல் இரண்டாவது மனைவியுடன் இருந்தால் நிலைமை மோசமாகும் என அவருக்குத் தெரியும். இதை முன்கூட்டி கணித்தே அப்பெண் கருவுறாமல் பார்த்துக்கொள்ளுகிறார், கருவுறும் போதெல்லாம் கலைக்கும்படி செய்கிறார். இதைக் கேட்க அதிர்ச்சியாக, அருவருப்பாக இருக்கும். ஆனால் அந்த சூழலில் அதுவே சரி.
- எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு இருக்கிறது, அதைத் துல்லியமாக இப்ராஹிம் அறிந்திருக்கிறார். ஒருவேளை குழந்தை பிறந்திருந்தால் இப்ராஹிமால் தப்பிக்கவே முடிந்திருக்காது, இரண்டாவது மனைவியும் அவரை மன்னித்திருக்க மாட்டார். முதல் மனைவியும் கடுப்பாகி இருப்பார். இப்போது இரண்டாவது மனைவி தன்னை இவர் மறந்து இன்னொரு பெண்ணுடன் ஜாலியாக, நிறைய பணம் மற்றும் அதிகாரத்துடன் இருக்கிறாரே எனும் கடுப்பில் பேசுகிறார். என்ன கொடுத்தால் அவர் வாயை மூடுவார் என இப்ராஹிமுக்குத் தெரியும். அதற்கு அவர் ஒரு புதுக் கணக்கை ஆரம்பித்து இங்கே வாங்கி அங்கே கொடுத்து எல்லா தரப்புகளையும் சமாதானப்படுத்த வேண்டும். அதை அவர் சுலபத்தில் செய்வார். தான் பயன்படுத்துகிற பெண்களுக்கு தன்னால் ஓரளவுக்கு பயனுள்ளபடி அவர் எப்போதும் பார்த்துக் கொள்வார். ஏமாற்றத்தக்கவர்களிடம் இருந்து ஏமாறலாம் என்று நான் சொல்லவில்லை. எதையாவது கொடுக்காமல் ஏமாற்றுவது ஏமாற்றுதல் அல்ல என்கிறேன். நயவஞ்சகம், துரோகம் எல்லாம் பொய்யான வார்த்தைகள். தேவையானதைப் பெற்றுக்கொள்வோர் தாம் வஞ்சிக்கப்பட்டதாக கருதுவதே இல்லை. பெறாதோர் வஞ்சிக்கப்படவில்லை என்றாலும் அப்படியே கருதுவர். பெரும்பாலான நேரங்களில் நம் உறவினால் லாபமில்லை என்று நினைத்து நம்மிடம் இருந்து விலகுவோர் “நீ என்னை ஏமாற்றி விட்டாய்” என்று சொல்லுவார்கள். உடனே நாம் “என்னையா சொன்னாய்?” எனக் கொந்தளிப்போம். ஏமாற்றுதல் என்றால் தேவையானதைக் கொடுக்காதிருத்தல். அவ்வளவு தான். அதனாலே இப்ராஹிம் யாரையும் ‘வஞ்சிப்பதில்லை’ என்கிறேன்.
- இதெல்லாம் ஒரு பிழைப்பா, இவனையா பாராட்டுகிறாய் என உங்களுக்கு இந்நேரம் கோபம் வரும். வருகிறதென்றால் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற மாட்டீர்கள், நிறைய துன்புறுவீர்கள் என அர்த்தம். புன்னகையோடு படித்தால் உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குப் போகப் போகிறீர்கள் என அர்த்தம்.
- நாம் இப்படித் தவறாக யோசிப்பதற்கு ஒரு நீண்ட தத்துவ மரபு இருக்கிறது. இதை ஆரம்பித்து வைத்தவர் பிளேட்டோ. அல்லது அவருடைய குருநாதரான சாக்ரடீஸ். இருவரும் கருத்துமுதல்வாத சிந்தனையாளர்கள். கருத்தின் அடிப்படையிலே உலகம் இயங்குகிறது, அதுவே உண்மை என்று தவறாகக் கருதினர். உ.தா., சரி, தவறு என்பவை கருத்துகள். அன்பு, வெறுப்பு ஆகியன கருத்துக்கள். நியாயம், அநியாயம், அறம், அறமற்றது ஆகியன கருத்துக்கள். இதைப் போன்ற கருத்துக்கள் இந்த வாழ்க்கையில் எங்குமே தூலமாகக் காண முடியாது. ஆனால் இவற்றை வாழ்க்கை முழுக்கத் தேடி அலையவும், இவற்றின் நிழல்களை நிஜமென நம்பி அவற்றுக்காக வாழ்க்கையை பலிகொடுக்கவும் முடியும். இப்படி கருத்துக்காக, அரூபமான ஒன்றுக்காக வாழ்வோருக்கு தம் வாழ்வுக்கு ஏதோ அர்த்தமுள்ளதாக, தாம் மிக்க நல்லவர்கள் என்பதாக ஒரு அற்பத் திருப்தி இருக்கும். ஆனால் அதன் சுமை மட்டும் கழுத்தை முறிப்பதாக இருக்கும். மகாபாரத்தத்தின் முடிவில் இதனாலே கௌரவர்கள் சொர்க்கத்துக்குப் போகிறார்கள், பாண்டவர்கள் நரகத்துக்குப் போகிறார்கள். ஒரு நாய் கூட சொர்க்கத்துக்குப் போகிறது, ஆனால் பாண்வர்கள் போவதில்லை. சாக்ரடீஸும் பிளேட்டோவும் நரகத்துக்குத் தான் போயிருப்பார்கள். நாமும் நரகத்துக்கே போவோம். சரி நரகம் என்றால் வேறெங்கோ இல்லை. இங்கு தான், இதே உலகம் தான். நம் வாழ்க்கையை நரகமாக்கி இருக்கிறோம்.
- 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து 20ஆம் நூற்றாண்டு வரை நீட்சே, ஹைடெக்கர் போன்ற தத்துவவாதிகள் இந்த கருத்துமுதல்வாத, குற்றவுணர்வு வியாபாரி சிந்தனையாளர்களை, தத்துவாதிகள் சாடி phenemenology, ontology, இருத்தலியம் ஆகிய தத்துவ துறைகளில் காத்திரமான பங்களிப்புகளை செய்தார்கள். சரி-தவறு எனும் இருமைகள் வழி சிந்திக்காமல், காலத்தை ஒரு நேர்கோடான இருப்பாகக் கருதாமல், சரி-தவறற்றும், காலமற்றும் வாழ்தலே சரியான இருத்தல் என நீட்சே தன் Beyond Good and Evil நூலில் விளக்கினார். பிளேட்டோவின் குறுக்கீடே மேற்கத்திய சிந்தனை வரலாற்றில் ஒரு சீரழிவை ஏற்படுத்தி மனிதர்களை தம்மை உணர விடாமல் போலியாக வாழச் செய்தது என்று கூறிய நீட்சே தன்னை ஒரு எதிர்-கிறிஸ்து என அறிவித்துக் கொண்டார். ஹைடெக்கரும் கிட்டத்தட்ட இதையே தனது Being and Time நூலின் துவக்கத்தில் சொன்னார். உலகில் இருத்தலே முக்கியம், என்னவிதமாக இருக்கிறோம் என்பதல்ல என்றார். மனசாட்சி, நீதியுணர்வு, சரி-தவறு மதிப்பீடுகள் போன்ற அளவுகோல்களின் படியோ, சமூக எதிர்பார்ப்புகள், கட்டமைப்புகள் படியோ ஒழுகுவது இருத்தலில் இருந்து நம்மை விலக்கி வைக்கிறது என்றார். யோசிப்பதல்ல, உலகுடன் இருப்பதே முக்கியம் என்றார். யோசிப்பதென்றால் என்ன அடுத்தவரை, மற்றமையைப் பற்றி யோசிப்பதன்றி. அடுத்தவர், மற்றமை வழி நம்மைப் பற்றி யோசிப்பதன்றி. இதல்லாமல் யோசிக்கையில் நாம் ‘உலகை யோசிக்கிறோம்’, அதுவே உன்னதமானது, அதுவே அசலான இருத்தல் என்றார் ஹைடெக்கர். (ஆனால் அவரும் கூட நாஜிக்களை வெளிப்படையாக ஆதரித்து தவறிழைத்தார், தான் எதிர்த்த கருத்துமுதல்வாதத்தில் தானே சிக்கிக் கொண்டு, பின்னர் அதற்காக வாங்கிக் கட்டிக் கொண்டார். ) எதிர்-கிறிஸ்துவாக ஆவதற்கான முயற்சியில் மிக மிக கீழ்நிலையில் இருப்பவர் எனும் அடிப்படையில் எனக்கு வேலூர் இப்ராஹிமைப் பிடித்திருக்கிறது. ஏனென்றால் நாமெல்லாம் அந்த போட்டியிலேயே இல்லை. (சரி சரி, காறித் துப்பாதீர்கள்!)
- எதை, எப்படி செய்கிறோம் என்பதை விட எதை எப்போது, எங்கு, யாருடன் இருந்து செய்கிறோம் என்பது முக்கியம். இதை நன்கறிந்தவர் வேலூர் இப்ராஹிம். அதனால் தான் அவர் திமுகவில் சேராமல் பாஜகவில் சேர்ந்து கண்ணைத் திறந்து மூடும் முன் பதவியையும் அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார். உண்மையான அரசியல் ஞானி அவர் தான்.
- அவருக்கு புத்தகம் படிக்கவோ எழுதவோ தெரியாது, அவருக்கு இந்த உலகில் தேவையில்லாத எதுவுமே தெரியாது. நம்மைப் போன்றோர் தேவையில்லாத எவ்வளவோ குப்பைகளால் மூளையை ரொப்பி வைத்திருக்கிறோம். அவை நம்மை முன்னேற விடாமல் தடுக்கின்றன. நாம் எவ்வளவோ பேசுகிறோம், எவ்வளவோ எழுதிக் குவிக்கிறோம். இதனால் நாம் எவ்வளவோ துன்பங்களன்றி எதைப் பெற்றோம்? பாஜகவின் பி-டீமாக, உளவுத்துறையின் வாயாக இருந்து பேசிப் பேசி சவுக்கு சங்கர் சிறை சென்றார், கிஷோர் கெ ஸ்வாமியும் சிறை சென்றார், இரண்டு பேருமே கூடுதலாக நிறைய கெட்ட பெயரையும் சம்பாதித்து அந்த உண்மையைக் கூட புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாஜக நாராயணன், ராகவன் போன்றோர் என்ன பெற்றார்கள்? ஆனால் வேலூர் இப்ராஹிம் பாஜகவுக்காக ஒருமுறை பேசினார், காரைப் பெற்றார், இன்னொரு முறை பேசினார், நிறைய பணத்தைப் பெற்றார், மேலும் பேசினார், பதவியை அடைந்தார், இன்னும் கொஞ்சம் பேசினார், டெய்சியை அடைந்தார். ராகவன் எவ்வளவு சுலபத்தில் மாட்டினார்! இருந்த பதவியையும் இழந்தார். வேலூர் இப்ராஹிம் தடவல் மன்னன் என பத்திரிகைகளில் பெயர் பெற்றார், ஆனால் பதவி, பணம், அந்தஸ்தையும் கூடவே பெற்றார், அவர் எதையும் இழக்கவில்லை, ஏனென்றால் அவர் எதையும் இழக்கும்படியாக தன்னை வைத்துக்கொள்ளவில்லை, ஏனென்றால் அவர் தேவைக்கதிகமாக எதையும் பேசுவதே இல்லை, செய்வதும் இல்லை. எதாவது பிரச்சினை என்றால் பிரச்சினை பன்ணுகிறவர் பெரிய கை என்றால் யோசிக்காமல் போய் காலில் விழுந்துவிடுவார். இது ராகவனுக்கோ சவுக்குக்குக்கோ சாத்தியமாகாது. அவர்கள் பாரம் சுமக்கிற பறவைகள், வேலூர் இப்ராஹிம் பாரமற்ற பறவை. அதனாலே இந்த உலகமும் வாழ்வும் வேலூர் இப்ராஹிம்களால் ஆனது, அவர்களுக்காக இயங்குவது.
எனக்கு இன்னும் சொல்வதற்கு ஏராளமாக உள்ளது, இன்னும் எழுத பல நூறு பக்கங்கள் உள்ளன, ஆனாலும் எனக்கோ உங்களுக்கோ இப்போதைக்கு பொறுமையில்லை என்பதால் இத்துடன் நிறுத்தி அமைகிறேன். 2023இல் நான் வேலூர் இப்ராஹிமை ஒருமுறையாவது சந்தித்து உரையாடி அவருடன் தற்படம் எடுத்து வெளியிட விரும்புகிறேன். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏராளமாக உள்ளது. அவரிடம் இருந்து பெற்ற படிப்பினைகளை வைத்து ஒரு புத்தகம் கூட எழுத முடியும். நான் கற்றுக்கொண்டதை உலகுடன் பகிர்ந்து கொண்டு ஏராளமான இளைஞர்களைத் திருத்த முடியும். பெண்களுக்கு போலி பெண்ணியவாதிகள் இருக்கிறார்கள். நமக்கு யார் இருக்கிறார்கள், இப்ராஹிமைத் தவிர?அதனால் அவரை சந்திக்க வேண்டும் என விரும்புகிறேன். அதுவே இனி என் வாழ்நாள் லட்சியம்!

Comments