சகமனிதர்களை யாரும் புரிந்துகொள்வதில்லை, அது சாத்தியமும் இல்லை என்பதால் ... அறம் என ஒன்று இல்லை எனும் முடிவுக்கு நாம் சுலபத்தில் வந்து விடலாம்.
சரி இது பிரபஞ்சனுக்குத் தெரியாதா என்று கேட்டால் நிச்சயமாகத் தெரியும். ஆனால் தமிழில் கணிசமான எழுத்தாளர்கள் தாம் வாழ்க்கை அனுபவத்தில் கண்டறிந்த உண்மைகளைப் பற்றி எழுதாமல் தாம் கனவு காணும் உண்மைகளைப் பற்றியே எழுதிக் கொண்டிருப்பார்கள். நா தழுதழுக்க அன்பு, கருணை எனப் பேசுவார்கள், நெருங்கிப் போய் பார்த்தால் எந்த அன்பும் இல்லாமல் தனிமையில் பல அநீதிகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். கலகம், புரட்சி என எழுதுவார்கள், ஆனால் வீட்டுக்குப் போய் பார்த்தால் அங்கே மதம், சடங்கு, சம்பிரதாயம், சாதிப் பிணைப்பு என முற்றிலும் மற்றொரு சூழலில் அடங்கிப் போயிருப்பார்கள். தமிழில் அறம் பற்றி பேசுகிறவர்கள், மானுட நேயம், மானுடவாதம் பேசுகிறவர்கள் முழுக்க வறட்சியான சூழலில் தான் வாழ்கிறார்கள். ஆனால் கடைசி வரை இந்த கற்பனாவாதத்தை விட மாட்டார்கள்! தமிழில் யார் அன்பைப் பற்றி பேசினாலும் நம்பாதீர்கள், அவர்களுடைய வாழ்க்கை மிகப் பரிதாபமாக இருக்கும்.
ஒருவிதத்தில் தாம் எதிர்கொள்ளும் எதார்த்தத்தில் இருந்து தப்பிக்கவே இப்படி ஒரு கற்பிதத்தில் மாட்டிக் கொள்கிறார்களோ எனத் தோன்றுகிறது. மானுடவாதம் தோற்றுப் போவது இந்த போலித்தனத்தில் தான்.
Comments