Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

அன்பு குறித்து ஒரு உரையாடல்



தோழர் உங்க தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட தோல்விகளால் தான் அன்பு, கருணை, நீதி, அறம் போன்ற நல்லுணர்வுகள், விழுமியங்களுக்கு எதிராக எழுதிறீங்களா?”


இல்ல தோழர் நான் 2007இல் இருந்தே, நான் உங்களையும் பிறரையும் போல பிரச்சினைகள் இல்லாமல் இருந்த காலத்திலும், உயிர்மையில் அன்பையும் கருணையையும் அறத்தையும் எதிர்த்து எழுதியிருக்கிறேன். எனக்கு சின்ன வயசில் இருந்தே இந்த நான்கு உருப்படிகளையும் பிடிக்காது.”


அதான் ஏன் தோழர்?”


ஒரே காரணம் தான் - சின்ன வயசில இருந்தே கற்பனையான, அருவமான உலகத்தின் மேலே எனக்கு நம்பிக்கை இருந்ததில்ல.”


அதான் ஏன் தோழர்?”


இவங்க இலக்கியத்தில் எழுதுகிற எதையுமே நிஜ உலகில பார்க்க முடியல. அதான் காரணம். பரிசுத்தமான தாயன்புன்னு சொல்லுவாங்க. ஆனால் நான் பார்த்த தாய்மார் எல்லாம் பயங்கர சுயநலவாதிகள். கடவுளின் அன்புன்னு சொல்லுவாங்க. நான் கடவுளையோ கோயிலுக்குள்ள போய் பார்த்ததில்ல. என்னை மாதிரியானவங்க உள்ளே விட மாட்டாங்க. அதனால கடவுள் எவ்வளவு அன்பானவர்னு பார்க்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைக்கல. மத்த யாரையும் விட அதிகமா நீதியும் கருணையும் அதிகமா தேவைப்படுகிற ஆள் நான். ஆனா இந்த ரெண்டையும் - ஊடகங்களில், இலக்கியத்தில், சினிமாவில் தவிர - எங்கேயுமே நான் பார்த்ததில்ல. அட எனக்கு என்றல்ல, என்னைச் சுற்றியுள்ள யாருக்கும் நீதியோ கருணையோ கிடைத்து நான் பார்த்ததில்ல. அப்படி ஒரு சிறு கீற்று அவர்களை நோக்கி வந்தாலும் சில நாட்களில் அதற்கு ஒரு பில்லைக் கொடுத்து சரியான கட்டணத்தை உலகம் வாங்கி விடும். அது மட்டுமல்ல நமது முயற்சிகளினால் கிடைக்கும் வாய்ப்புகள், அங்கீகாரமே நம்மை முன்னேற்றும் என வாழ்க்கை எனக்கு கற்றுத் தந்தது. நம்மால் பலனில்லாத ஒருவர் கூட நம்முடன் இருக்க மாட்டார்கள். நமக்கு ஒருவர் ஒருமுறை உதவலாம், ஆனால் அடுத்தடுத்து உதவினால் அது அவர்களுக்கு அலுத்துவிடும். அதனால் ஒருமுறை உதவி கேட்டவரிடம் அடுத்த முறை கேட்கலாகாது. இப்படி நான் எத்தனையோ பாடங்களைக் கற்றுக்கொண்டேன். யாருடைய கருணையையும் எதிர்பாராமல் வாழ்வது ஒரு பெரிய சௌகர்யம். அந்த சௌகர்யம் கொண்ட பெரும்பான்மை மக்களே தொடர்ந்து கருணை, நீதி என உருகுகிறார்கள் என்பது விசித்திரம்.


நான் இன்னொரு விசயத்தைக் கற்றுக் கொண்டேன் - ஒருவருக்கு நாம் பணரீதியாகவோ வேறு வகையிலோ தேவையாக இருக்கிறோம் என்றால் அவரிடம் எவ்வளவு முறையும் கருணையை நாடலாம். பிரச்சினையே இருக்காது. இந்த எதார்த்தத்தை நமக்குக் காட்டாதபடி சமூக இயக்கங்கள் உள்ளன என அறிவேன். ஊடகங்களும் இலக்கியமும் நமக்கு ஒரு போதை மருந்தைப் போல இந்த எதார்த்தத்தில் இருந்து தப்பிக்க ஒரு பொய்யுலகைக் காட்டி காட்டி நம்மை திசைதிருப்புகின்றன. ஆனால் இவர்கள் பணமிழந்து தெருவுக்கு வந்தாலோ உடல்நலமற்று முடங்கிப் போனாலோ எதார்த்தம் இவர்களுடைய முகத்தை வந்து அறையும். அப்போது தான் இந்த இலக்கியம், நீதிபோதனைகள் சொன்னதெல்லாம் அதரபழசான பொய்யா என புரிய வரும்.

இந்த இலக்கிய இழவெல்லாம் படிக்காமல், லட்சியவாத அபத்த சினிமாக்களைப் பார்க்காமல் தெருவையும் மனிதர்களையும் படித்து வாழும் இளைஞர்களே நன்றாக வாழ முடியும்.”


என்ன ஒரு எழுத்தாளனா இருந்து இப்படி சொல்றீங்க? வெட்கமா இல்ல?”


இருக்கு. இந்த இலக்கியம் இப்படி பொய்களின் கூடாரமே இருக்கேன்னு வெட்கமா இருக்கு. ஆனா என்ன செய்ய? இதையெல்லாம் படிக்காதீங்க, படிச்சு கெட்டுப் போகாதீங்க அடுத்த வரக் கூடியவங்களைப் பார்த்து சொல்ல மட்டும் தான் என்னால முடியும்.”


இதை நீங்க சொல்றது கேட்க ஷாக்கா இருக்கு தோழர்.”


கடைசியாக ஒன்று சொல்கிறேன் தோழர் - சகமனிதனை மதிக்கிற, அவனிடம் நேசம் காட்டுகிற மனிதர்களே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். மானுட நேயம் இருக்கிறது. நிச்சயமாக இருக்கிறது.”

இருக்குது தோழர்

நீதி நியாயம் கூட இருக்கிறது, நிச்சயமாக இருக்கிறது. அதன் பெயர் தான் பணம். பணமிருந்தால் உங்களிடம் கன்னாபின்னாவென மானுட நேயம் வந்து குவியும், உங்களால் தாங்க முடியாதளவுக்கு கனிவும் கருணையும் உங்களை மூழ்கடிக்கும். மனித வாழ்வின் எல்லா மெல்லுணர்ச்சிகளின் அற்புத சொரூபங்களையும் நீங்கள் பார்ப்பீர்கள். பணமிருந்தால் நீங்கள் சமத்துவத்தை, சமநீதியைப் பார்ப்பீர்கள். பணமில்லாதவர்கள் அதை சினிமாவிலும் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் இலக்கியத்திலும் மட்டும் பார்ப்பார்கள்.”


ஏன் தோழர் இவ்வளவு விரக்தியா எதிர்மறையா பேசுறீங்க?”


விரக்தி இல்ல. நான் உணர்ச்சிவசப்ப்படாம மிகைப்படுத்தாம பேசுறேன். உங்களை விட நான் தான் அதிகமா நீதியையும் சமத்துவத்தையும் பற்றி கவலைப்படுறேன், கருணையைப் பற்றி யோசிக்கிறேன், அதனால தான் அது ஒரு வெற்றுக்கனவுன்னு முடிவுக்கு வரேன், அதை மறைக்காம உலகத்துக்கு சொல்றேன்.”


அறம் என்பது ஒரு லட்சியம் தோழர். நமது சமூகத்துக்கு லட்சியம் என ஒன்று இருந்தால் தானே மக்கள் முன்னேறுவார்கள். நியாயம், நீதி என்னிக்காவது கிடைக்கும்.”


யாரும் அறத்தை வைத்து முன்னேறியது இல்லை தோழர். உழைப்பையும் அதில் இருந்து கிடைத்த பணத்தையும் வைத்தே முன்னேறியிருக்கிறார்கள். அப்படி முன்னேறியவர்களைப் பார்த்து நமக்கு பொச்செரிப்பு ஏற்படும் போதுநாம் காட்டிய அறத்தை, சமூக நீதியுணர்வை வைத்தே அவன் முன்னேறி இருக்கிறான் பார், பார்என ஆறுதலடைய பயன்படுத்துவதே லட்சியம். எளிய மக்களுக்கு, அடித்துப் பிடித்து முன்னேறுகிறவர்களுக்கு லட்சியத்தால் எந்த பயனும் இல்லை. லட்சியம் என்பது சோம்பேறிகளின் சொர்க்கம்.”


அது அவங்கவங்க நம்பிக்கையை பொறுத்தது தோழர். உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா இருக்கிறவங்கள ஏன் பழிக்கிறீங்க?”

நீங்க அன்பைப் பற்றி பேசுறீங்களா கடவுள் பக்தி பற்றி பேசுறீங்களா?”

அன்பைப் பற்றி தான்

அன்பும் கடவுளும் ஒண்னு தான். கடவுளைப் பற்றிக் கொண்டால் ஆறுதல் கிடைக்கும் எனச் சொல்வதைப் போன்றது அறம் இருந்தால் சமூகம் மேம்படும் என்பது. கடவுளிடம் மன்றாடும் எவனுக்கும் ஆறுதல் கிடைத்ததில்லை. பணத்தைப் பற்றிக் கொண்டவனுக்கும், அதிகாரம் படைத்தவனுக்குமே ஆறுதல் கிடைக்கிறது. கடவுளைப் பற்றிக் கொள்பவர்கள் தான் கவலையை மறைக்க மதுவையும் வேறு போதைகளையும் நாடுகிறார்கள். அவர்கள் தான் உதவிக்காக அல்லாடுகிறார்கள். தாம் இப்படி தத்தளிப்பதை மறைக்க பக்தியை ஒரு கேடயமாக பயன்படுத்துகிறார்கள். பணம் இருந்தால் அவர்களுக்கு இவை எதுவுமே தேவையிருக்காது. பணம் நிம்மதியைத் தரும்.”


ஆனால் பணம் படைத்தவர்கள் தாம் நிம்மதியற்று தூங்க முடியாமல் தவிப்பதாக…”


எங்கே பார்த்தீங்க? பழைய சிவாஜி படத்திலா? இல்லை ரஜினியோட அண்ணாமலையிலா?”


பொதுவா கேள்விப்படுறதை வச்சுத்தான்.”


சரி தோழர் உங்க கிட்ட நிம்மதி இருக்குது, ரஜினி கிட்ட பல நூறு கோடிகள் பணம் இருக்குது. அவர் ஏன் தன் பணத்தை உங்க கிட்ட தந்து நிம்மதியை எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்க கூடாது?”


ஆமால்ல…”


பாருங்க நீங்க கூட உங்க நிம்மதியை விட்டுக்கொடுத்திருவீங்க பணம் தரதின்னா?”


ச்சேச்சே


தோழர் பணக்காரங்க நிம்மதியா இல்லைங்கிறது பணமில்லாத மத்திய வர்க்கம் தன்னை ஏமாத்திக்கிறதுக்காக உருவாக்கின ஒரு கற்பனை கதை மட்டும் தான். பணக்காரங்க அவங்க பாட்டுக்கு சந்தோசமா நிம்மதியா ஆரோக்கியமா நீண்ட காலம் வாழத்தான் செய்யுறாங்க. எந்த பணக்காரனும் தன் பணத்தை கடைசி வரை யாருக்கும் கொடுத்திட்டு பரதேசியா போறதில்ல.”


இல்லியே தோழர் பண்றாங்களே


எங்க பார்த்தீங்க? திரும்பவும் ரஜினி படத்தில பார்த்திருப்பீங்க?”


ஆமா தோழர். சரி போகட்டும், இந்த அன்பு, கருணை, அகவுலகம், ஆன்ம தரிசனம் இதெல்லாம் வேணாமுன்னா நீங்க ஒரு ரைட்டரா எப்பிடி இருக்க முடியும்?”


இந்த கண்றாவியை எல்லாம் நம்பாத எத்தனையோ எழுத்தாளர்கள் உலகளவில் இருந்திருக்காங்க தெரியுமா?”

அப்படியா தோழர்?”

ஆமா நம்மூரில் கூட ஆதவன், ஜி.நாகராஜன் போல மிகச்சிலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அன்பும், இன்ன பிற போதை வஸ்துக்களும் தேவையிருக்கின்றன. அதுவும் குறிப்பாக கடந்த பத்தாண்டுகளில் நம் இலக்கிய கதைகளிலும் நெஞ்சை நக்குவது அதிகமாகி விட்டது. உலகில் இல்லாத நல்லவர்கள் எல்லாம் மொத்தமாக நம் கதைகளில் தான் வருகிறார்கள்.”

நீங்க கெட்டதை மட்டும் பார்க்கிறீங்க தோழர். அதுக்கு ஏன் அவங்களை பழிக்கிறீங்க?”

நான் இருப்பதை மட்டும் பார்க்கிறேன். அது கெட்டதுன்னு நான் சொல்லல. நீங்க தான் சொல்றீங்க. நான் அதுதான் நிஜமுங்கிறேன். மனிதனுக்கு இந்த உடலால் அறியக் கூடியதை மீறிய வேறெதுவும் தேவையில்லை. இதை நான் மட்டும் சொல்லவில்லை, ஹைடெக்கரும் நீட்சேயும் சொல்லி இருக்கிறார்கள்.”

உங்க நிஜம் உங்களுது, எங்க நிஜம் எங்களுது தோழர்.”

என் நிஜத்தை என்னால் எடுத்துக் காட்ட முடியும். உங்க நிஜத்தை நீங்க காட்ட முடியுமா?”

முடியும் தோழர்.”

உங்க கிட்ட போன் இருக்குதா?”

இதோ இருக்குதே

பைக், கார்?”

பை. அதோ வெளில நிக்குது.”

ரைட்டு இதே மாதிரி உங்களோட அன்பை, நீதியுணர்வை எடுத்துக் காட்டுங்க.”

அதெப்டீங்க முடியும்? சுத்த பைத்தியக்காரத்தனமா இல்ல?”

இல்ல தோழர். எடுத்துக்காட்ட முடியாத எதையும் நான் நம்புறதில்ல. மக்களும் நம்புறதில்ல. உண்மையில் நம்புறதில்ல. அன்பு மேல யாருக்கும் நம்பிக்கை இல்லை.”

யார் சொன்னது?”

அன்பை நிரூபிக்கிறதுக்கு எத்தனை போராட்டங்கள்! ஆனால் பணத்தையோ ஒரு பைக்கையோ வீட்டையோ தோசை இட்லியையோ நிரூபிக்க வேண்டியதில்ல. என் அன்பை யாரும் புரிஞ்சிக்கிறதில்ல, அதை மதிக்கிறதில்லைங்கிற புகார் இல்லாதவங்க யாரு இருக்காங்க? யாரவது என் இட்லியை யாரும் புரிஞ்சிக்கிறதில்ல, என் பிரியாணியை யாரும் லவ் பண்றதில்லைன்னு சொல்றதில்ல. டேஸ்டா இருந்தா சாப்ட போறாங்க.”

ஆமா


ஆனா என் கிட்ட காசிருக்குன்னு சொல்லி எடுத்துக் காட்டினா நம்பிருவாங்க. எந்த பணக்காரனும் தன் பணம் நம்பப்படுவதில்லைன்னு புலம்பறதில்ல. ஆனால் அன்பு, அன்புன்னு பொங்கிறவங்க தான் சதா புலம்புறாங்க.”


ஏன் அன்பு அனாதையா திரியுது தோழர்?”


பொய் அனாதையா திரியாம பக்கத்தில பாய விரிச்சு படுக்கவா செய்யும் தோழர்?”


அன்பில்லாம நீங்க எப்படி வாழ முடியும் தோழர்?”


அன்பை காட்டவோ எதிர்பார்க்கவோ செய்யாமல், அதை நிகழ்த்துகிறவர்கள் மட்டுமே மிக சந்தோஷமாக வாழ முடியும் தோழர். அன்பில்லாத வாழ்க்கையில் எந்த புகார்களும் இருக்காது. அன்பை நீங்க மதிக்காம இருந்தா அது தாராளமா உங்க கிட்ட வரும். அது மட்டுமில்ல நீங்க மனிதர்களுக்கு அன்பை அல்ல புலனின்பத்தையே கொடுக்க வேண்டும். அதை நேரடியாகக் கேட்க பயந்தே அன்பு, அன்பு என மருகுகிறார்கள்.”


இலக்கியம் அன்பையே போதிக்கணும் தோழர்.”


யாரு சொன்னது?”


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்னு சொல்லியிருக்காங்களே.”


யாரு?”


பவா செல்லத்துரை


அது திருக்குறள். அதே திருக்குறள்ல காமத்துப்பால்னு ஒரு பகுதி இருக்குது. அதுல ஒரு இடத்தில கூட வள்ளுவர் அன்பைப் பற்றி பேசுறதில்ல. காதல்னாலே உடலான ஒரு அனுபவம்னு வள்ளுவர் தெளிவா சொல்றார். அது மட்டுமில்ல, நமது சங்கக் கவிதைகளில் எங்குமே நாம இப்போ பேசுற தூய அன்பு வரதில்ல. இவ உடம்ப அவனும், அவன் உடம்ப இவளும் நேசிக்கிறாங்க, சேர்ந்து இருக்கிறாங்க, பிரிஞ்சு வருந்திராங்க, சேர்ந்ததும் சந்தோசப்படுறாங்க.”


லவ் யூ சொல்றதில்ல?”


இல்ல, அந்த கண்றாவி எல்லாம் வெள்ளைக்காரன் கொண்டு வந்தது. என்னோட கணக்கு சரின்னா பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பிறகு கற்பனாவாத மரபின் தாக்கத்தால் தான் இந்த அன்பு, பேரன்பு, மிகப்பேரன்பு, அனகோண்டா சைஸில் மிக மிக பிரம்மாண்டமான அன்பெல்லாம்  உருவாகி இருக்கணும். அதுக்குப் பின்னாடி ஒரு சதித்திட்டம் இருந்தது.”


சதித்திட்டமா?”


ஆமா மனிதனை தொடர்ந்து ஒரு குற்றவுணர்வுக்கு ஆளாக்குகிறது அன்பு. குற்றவுணர்வில் அவன் தன் தேவைகளை எல்லாம் மறந்துவிட்டு இந்த சமூகத்துக்கு அடிமையாகி உழைக்கிறான். மதத்துக்கும், அரசுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கிறான். எல்லா பொய்மைகளையும் போலித்தனத்தையும் ஏற்கிறான். தன் காதலி மீது, தன் மனைவி மீது, தன் பிள்ளைகள் மீது வைத்த அன்புக்காக தான் அப்படி அடிமைப் பணி செய்வதாக நம்புகிறான். ஆனால் அவனுக்குப் புரியவில்லை, அவர்கள் உள்ளுக்குள் அவனுடைய பொய்மையைக் கண்டு அவனை வெறுக்கிறார்கள் என. அவன் தன் போக்குக்கு தன் குற்றவுணர்வை அவர்கள் மீதும் சுமத்துகிறான். நான் குற்றவுணர்வு எனும் சிலுவை ஏந்தி முதுகு வளைந்த சமூகம் ஆகி விட்டோம். அதற்குக் காரணம் இந்த அன்பு எனும் போலித்தனம் தான்.”


மனிதன் மதவெறிக்காக, சாதிக்காக, தனக்காக வாழாமல் அன்புக்காக வாழ்வது என்பது கேட்கவே எவ்வளவு அழகாக இருக்கிறது?”


அன்பும் பக்தியும் ஒன்று தான். அதனால் தான் அழகா இருக்குது. வேஷம் எப்பவும் அழகு தானே? ஆனா அது நிலைக்காது. அன்பு ஒரு முற்போக்கான பக்தி. பக்தி நம்மை இந்த புலனுலகில் இருந்து விடுபட்டு ஒரு கற்பனையான அப்பால் உலகை நாட சொல்கிறது. அன்பும் அதையே சொல்கிறது. இரண்டுமே நம்மை வாழ்தலில் இருந்து தடுக்கிறது. அதனால் தான் மானுட நேயம் வந்ததும் அதுவரை பக்தி இலக்கியம் படித்தும் எழுதியும் வந்தவர்கள் அந்த வண்டியில் குதித்து ஏறிக்கிட்டாங்க. கடவுளை நேசி என்பதை மனிதனை நேசி என மாற்றினார்கள். சரி நானும் மனிதன் தான் என்னை நேசின்னு சொன்னா என்னையும் உங்களையும் நேசிக்க மாட்டாங்க.”


அது ஏன் தோழர்?”


அவங்க மானுடர்களை மட்டுமே நேசிப்பாங்க.”


அப்போ நாம மனிசங்க இல்லையா?”


அவங்களுக்கு நாம மனிசங்க இல்ல. அவங்க கற்பனையான ஒரு மனித குலத்துக்காக எழுதுவாங்க, உருகுவாங்க, கண்ணீர் விடுவாங்க, ஆனா நாம ஒரு டீ கேட்டா வாங்கித் தர மாட்டாங்க.”


கரெக்ட் தோழர்


கை கொடுங்க தோழர். நாம ஒரு வாக்குறுதி எடுத்துப்போம். இனிமேல் நான் உங்களை நேசிக்க மாட்டேன், நீங்க என்னை நேசிக்காதீங்க. நாம எந்த பாரமும் இல்லாம இந்த வாழ்க்கையை கொண்டாட்டமா வாழ்வோம்.”

லோன்லியா இருக்குமே?”

அந்த பயத்தை விட்டொழிக்கணும். அதைக் காட்டித் தான் நம்மை பயமுறுத்துறாங்க.”

அது முடியுமா தோழர்?”

நமக்கு கூட வாழ, பழக ஆள் வேணும். ஆனா யாரும் தவிர்க்க முடியாதவங்க இல்ல. யார் இருந்தாலும் நமக்கு இந்த உடலைத் தவிர வேறெதுவும் வேறு யாரும் இல்லைங்கிறது தான் உண்மை. எனக்குப் பசிச்சா நான் தான் சாப்பிடணும். எனக்கு உச்சா வந்த நான் தான் போகணும். எனக்குத் தூக்கம் வந்தா நான் தான் தூங்கணும். இதில் எல்லாம் நான் தனியா இருந்தாலும் ஜாலியா தானே இருக்கேன். தூக்கத்தில் காதலியை விட்டுத் தனியா இருக்கோமுன்னு பிடிக்காம யாராவது தூக்கத்தை துறந்து வாழ்நாள் பூரா இருந்ததுண்டா? நீ சாப்டா என் பசி ஆறிடிமுன்னு நம் சாப்பாட்டை யாருக்கும் கொடுத்திட்டு நாம தினமும் பட்டினியா இருக்கிறதில்ல. மேட்டரின் போது கூட நமக்கு திருப்தி கிடைக்குமான்னு தான் கவலைப்படுறோம். அதிலெல்லாம் நம்மால் தனியாக மகிழ்ச்சியா இருக்க முடியுமுன்னா தனிமை மீது பிறகென்ன பயம்? இந்த உடல் இருக்கும் வரையில நமக்குத் தனிமையில்லை தோழர்.”


Comments

murugu said…
நீங்களும் ஒரு ஓஷோ

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...