தமிழில் ஒரு அரசியல் கோட்பாட்டாளர் இருக்கிறார் - வாரிசு அரசியல் மக்களின் முன்னேற்றத்துக்கு, ஜனநாயகம் தழைக்க, சமூக நீதி மேம்பட எவ்வளவு முக்கியம் என பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார், இப்போதும் எழுதுகிறார். அதன் அபத்தம் அவருக்குப் புரியவே புரியாது என்றில்லை - தம் கல்விப்புல இயக்கத்தின் வழி அவர் கண்டடைந்த சில லட்சியங்களை வழிபடவே அவர் விரும்புகிறார். அவருக்கு எதார்த்தத்தில் என்ன நடக்கிறதென அக்கறை இல்லை. அரசியலில் தான் சொல்லுகிற விசயத்தின் தாக்கம் என்ன, முறையற்று எத்தனை ஆயிரம் கோடிகள் சம்பாதிக்கப்படுகின்றன, எத்தனை திமிங்கலங்கள் உண்டு செழிக்கின்றன, இதெல்லாம் ஏன் நடக்கிறது என்பது பற்றி அவருக்கு எந்த கவலையும் இல்லை. தமிழில் இப்படி உச்சாணிக்கொம்பில், உயர் பதவியில் இருந்து கொண்டு எந்த நடப்பியல் துன்பங்களாலும் பாதிக்கப்படாமல் எழுதுகிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பிரச்சினை இவர்களுக்கு கும்பி வாடுவதே இல்லை, கூரை ஒழுகுவதே இல்லை. அதனால் நடப்புலகம் பற்றி ஒரு அக்கறையும் கிடையாது என்பது. தமக்கு நிகழ்வதையும் இவர்கள் பரிசீலிப்பதில்லை. புத்தகத்தில் படித்து புத்தகத்துக்குள்ளே விவாதிப்பது தான் சமூக நீதி, அறம் என கருதுகிறார்கள்.
எனக்கு இவர்களை விட இவர்களைப் படித்துக்கொண்டு மேலும் மேலும் கனவுலகுக்குள் நுழைகிற அப்பாவிகளை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது. உங்களுக்கு தனிப்பட்ட முறையில் நாளை ஒரு பிரச்சினை ஏற்படுகிறது, உங்களுடைய நிலத்தை யாராவது ஆக்கிரமித்து உங்களை நீதிமன்றத்துக்கு அலையவிட்டால், அந்த ஆக்கிரமிப்பு சக்திகள் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் என்றால் (நான் சொல்வது கற்பனைக் கதை அல்ல; சில வருடங்களுக்கு முன் எத்தனையோ நூறு பேருக்கு இது தமிழ்நாட்டில் நடந்தது.) அப்போது இவர்களுடைய அரசியல் கோட்பாட்டு எழுத்துக்கும் தமது பிரச்சினைக்கும் எந்த சம்மந்தமும் இல்லையே என அவர்களுக்குத் தோன்றும்.
ஒரு சின்ன ஆவணம் கிடைக்காமல் போவது, தண்ணீர் கிடைக்காமல் போவது, டாய்லட் இல்லாமல் போவது, வேலையில் இருந்து மொத்தமாக தூக்கப்படுவது, சட்டத்தாலும் போலிசாலும் நசுக்கப்படுவது இவற்றைப் போன்றவை தாம் மனிதர்களை அலைகழிக்கும் பிரச்சினைகள். நாம் இப்பிரச்சினைகளை பொருட்படுத்துவதே இல்லை. இந்து-முஸ்லீம் பிரிவினை, ஊழல், சமூக நீதி என்றே ஜல்லியடித்துக் கொண்டிருப்போம். சொல்லப்போனால் ஒரு கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினையே இந்து-முஸ்லீம் ஒற்றுமையாக இருக்காது. அன்றாட வாழ்க்கைக்கு மீள்வது, இழந்த பணத்தை ஈட்டுவது, உடல் நலம் பெறுவது, வழக்குகளில் இருந்து விடுதலை பெறுவது, போலிசாரின் தொடர் தொந்தரவுகளில் இருந்து தப்பிப்பதே அவர்களின் லட்சியமாக இருக்கும். நாம் நினைக்கிறோம் மதவாதத்தை சாடினால் இவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும் என. ஆனால் நாம் தூங்கப் போய் பத்திருபது ஆண்டுகளாக இந்த மக்கள் நரகத்தின் வாயிற்படியிலே கிடப்பார்கள். நமது சித்தாந்தவாதிகள் சரியான கொள்கை கொண்ட இயக்கங்களின் கையில் நாடு சென்றால், சமூக எந்திரங்கள் ஒழுங்காக நடந்துகொண்டால் பிரச்சினைகள் தீரும் என நம்புகிறார்கள். எதார்த்தம் என்னவென்றால் இந்த இயக்கங்களும் அரசியல் எந்தரமும் அதன் கரங்களுமே மக்களின் பிரச்சினைகளுக்கு பிரதான காரணம். இவர்கள் ஒன்றும் செய்யாமல் இருந்தாலே - போலீசும் நீதிமன்றமும் அரசு அலுவலகங்களும் கோப்புகளை உருவாக்காமல் நகர்த்தாமல் இருந்தாலே - மக்களுடைய பாதி பிரச்சினைகள் ஒழிந்துவிடும். இன்னும் சொல்லப்போனால் 1955இல் குடும்ப நலச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்காவிடில் இத்தனை குடும்பங்கள் உடைந்திருக்காது. இத்தனை நீதிமன்றங்கள் தோன்றி, சிவில் சட்டங்கள் ஏற்பட்டு, வக்கீல்களும் தோன்றியிராவிட்டால் லட்சக்கணக்கானோர் அவற்றுக்குள் சிக்கி துன்புற்றிருக்க மாட்டார்கள்.
மக்களுக்காகவே இவை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக சொல்லுகிறார்கள். ஆனால் மக்கள் அப்பக்கம் போகவே அஞ்சுகிறார்கள். இதுவே காட்டவில்லையா இவை மக்களுக்காக கட்டியெழுப்பப்படவில்லை என்று?
நவீன அரசும், அதன் எந்திரங்களும், கட்டமைப்புகளும் மக்களுக்காக தோன்றியவை அல்ல. ஆனால் நமது அரசியல் எழுத்தாளர்கள் எழுதுவதைப் படித்தால் மக்களைப் பாதுகாக்க தோன்றிய தேவதூதர்கள் இவை எனத் தோன்றும். இந்தியாவில் நவீன அரசு தோன்றியிரா விட்டால் பிரிவினையின் போது லட்சக்கணக்கான பேர்கள் எல்லையைக் கடக்க முயன்று நாடின்றி திரிந்து கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். “பொன்னியின் செல்வன்” பட விழாவின் போது ஜெயமோகன் சோழ சாம்ராஜ்ஜியம் தமிழர்களின் தனிப்பெருமை, அந்த வரலாற்றை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும் என்றார். ஆனால் சாதாரண மக்களுக்கு இந்த சோழ சாம்ராஜ்ஜியத்தால் ஒரு பயனும் இருந்திருக்க முடியாது, பல பிரச்சினைகளும் துன்பங்களுமே இருந்திருக்கும் என இப்போதுள்ள நவீன அரசுகள் செயல்படுவதைப் பார்த்தாலே தெரிகிறது. ஆனால் சோழர்களை மிகைப்படுத்த கல்கியும் ஜெமோவும் என்றால் இன்றைய அரசுகளை மிகைப்படுத்த அரசியல் கோட்பாட்டு எழுத்தாளர்கள் வருகிறார்கள். அவர்கள் வெட்கமில்லாத சியர் லீடர்ஸ் போன்றே செயல்படுகிறார்கள். அவர் பண்பாட்டு சாதனை என்றால் இவர்கள் ஜனநாயகம், மக்கள் அதிகாரம், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றம், சமத்துவம் என்கிறார்கள். ஆளுக்கொரு பெருங்கதையாடலை எடுத்துக் கொள்ளுகிறார்கள்.
அரசியல் மாற்றங்களினால் பயனே இல்லை என்று நான் சொல்லவில்லை, மாறாக அன்றாட உலகுக்கும் இந்த மாற்றங்களுக்கும் தொடர்பே இல்லை, நாம் ஆட்சி அதிகார உலகிடம் இருந்து, நிர்வாகப் போக்குகளில் இருந்து, கொள்கை, லட்சியம் போன்ற சங்கதிகளில் இருந்து வெகுவாக அந்நியப்பட்டு இருக்கிறோம் என்று சொல்கிறேன். உ.தா., கர்நாடகத்தில் அண்மையில் அரசு வேலைக்கு ஆளெடுப்பதில் நடந்த முறைகேட்டை எடுத்துக் கொள்வோம். ஊழல் ஒரு சமூகக் கேடு. அதை ஒழிக்க வேண்டும். ஆனால் இந்த முறைகேட்டை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து குரல் எழுப்பியதால் மக்களுக்கு கிடைத்த பலனை விட துன்பங்களே அதிகம். பணம் கொடுத்து வேலைக்காக காத்திருந்தவர்கள் இப்போது பணமும் இல்லாமல் வேலையும் இல்லாமல் தத்தளிக்கிறார்கள். அவர்கள் ஏன் ஊழலுக்குத் துணை போனார்கள், நியாயமாக தேர்வெழுதிப் போக வேண்டியது தானே எனக் கேட்பது தடித்தனம். ஒரு நெருக்கடியில், பேரசையில் பணத்தை எங்கிருந்தோ கடன் வாங்கிக் கொடுத்திருப்பார்கள். ஒரு நியாயமான அமைப்பில் இந்த பணத்தை உடனடியாக திருப்பி வாங்கிக் கொடுக்க முடிய வேண்டும். ஆனால் அவர்கள் பல ஆண்டுகள் காத்திருந்து சாகப் போகிறார்கள். பணம் வரப்போவதில்லை. தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இப்படி பலர் பணத்தை பறிகொடுத்தார்கள். ஊழலை ஒழிப்பதை விட இவர்களுடைய பணத்தை திருப்பி அளிப்பது தான் என்னைப் பொறுத்தவரையில் நியாயம். அப்போது தான் அவர்கள் அன்றாட வாழ்க்கையைத் தொடர முடியும். ஆனால் நம் அரசியல் எழுத்தாளர்களைக் கேட்டால் “இந்த சமூகம் ஏன் இப்படி அடிப்படை நீதியுணர்வின்றி அரசு வேலைக்கு பணம் கொடுத்து சீரழிகிறது?” என நீளமாக கட்டுரை எழுதுவார்கள். பணம் இல்லாமல் வேலை வாங்குவது குதிரைக் கொம்பாகி விட்ட சமூகத்தில் மக்கள் என்ன பண்ண வேண்டும், நேர்மை, நீதி தான் முக்கியம் என டிராபிக் ராமசாமி போல இருக்க வேண்டுமா? இவர்களால் முடியும் - அரசு வேலையோ சொத்தோ பணமோ இருக்கும். “ஜனநாயகம், ஜனநாயகம்” என டிவி விவாத பேனலிலோ பேஸ்புக்கிலோ இருந்து கூவிக்கொண்டிருக்க முடியும். ஒன்றுமில்லாமல் தெருவில் நிற்க நேர்ந்தால் இப்படி லட்சியவாதம் பேச மாட்டார்கள்.
அரசியல் நீதியை விட பணம் தரும் நீதி தான் அன்றாட உலகில் நமக்கு அதிகமாக பயன் தருகிறது.
நான் இம்முறை சென்னைக்கு சென்றிருந்த போது தம் மரணத்துக்காக காத்திருக்கும் மூன்று பேர்களை எதேச்சையாகப் பார்த்தேன். ஒருவர் ஆட்டோக்காரர். அவர் தன் கையைக் காட்டி மாரடைப்புக்கான சிகிச்சையை சில வருடங்களுக்கு முன்பு தான் சௌதியில் வேலை செய்த போது பண்ணியதாகவும், தனக்கு சில வருடங்களாகவே நீரிழிவு உண்டென்றும், அதற்கு எந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்வதில்லை, “போகும் வரை போகட்டும்” என விட்டுவிட்டதாக சொன்னார். அதன் பிறகு மேலும் இரு முதியவர்களை சந்தித்தேன். அவர்களுக்கும் இதே போல நீரிழிவு உள்ளிட்ட நோய்கள். அவர்களும் இதையே சொன்னார்கள். ஏன் இப்படி? பண நெருக்கடி. அன்றாட தேவைகளுக்காக ஓடிக்கொண்டிருக்கும், அடிப்படையான பொருளாதார தேவைகளை நிறைவேற்ற முடியாத நபர்களுக்கு தம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கத் தோன்றுவதில்லை. அவர்கள் தம் சாவை நோக்கி முழுவேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவேளை இன்னும் சிறிது பணமிருந்தால், குடும்பத்தின், உறவுகளின் பாதுகாப்பு இருந்தால் இவர்கள் தம் உடலைப் பாதுகாத்து நீண்ட காலம் வாழ எத்தனிப்பார்கள். ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது சுலபம் தான். ஆனால் அதற்காக உங்கள் வாழ்க்கையில் சிறிது நேரத்தை, கவனத்தை, பணத்தை செலவிட இயல வேண்டும். அதற்கான அவகாசம் வேண்டும். உங்களைச் சுற்றி உள்ளோருக்கு நீங்கள் தேவை எனும் குடும்ப அழுத்தம், நீங்கள் ஒரு தனிநபராக இச்சமூகத்துக்குத் தேவை எனும் ஒரு சமூக அழுத்தம் வேண்டும். அப்படி ஒன்றும் இல்லாத மக்கள் இன்று பெருகி விட்டார்கள். ஒரு வீட்டுக்குள் நெருக்கமாக வாழ்கிறவர்களுக்கு கூட எதையும் விட்டுக்கொடுக்க மனமில்லை. நோயுற்றவர்கள் பணமில்லாதவர்கள் எனில் தத்தம் சாவுகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் செத்துவிடாமல் இருப்பது, தம்மிடம் உள்ளதை தம் குடும்பத்துக்கு கொடுத்து பாதுகாப்பதே அவர்களுடைய அரசியல்.
வீட்டில் நிம்மதியுடன் இருப்பது, அதற்காக முயல்வது கூட அரசியல் தான். சாரு தன் மனைவி தன் மீது விதிக்கும் கட்டுப்பாடுகளைப் பற்றி புலம்பி நிறைய எழுதுகிறார், தன் புனைவிலும் அபுனைவிலும். எந்த அரசியலுக்கும் இணையான அரசியல் தான் அது. ஒரு ஆண் இதைப் புகாராக சொன்னால் அவனை மதிப்பார்களா, ஒரு ஆணுக்கு வரும் தொநதரவை, அழுத்தத்தை, நெருக்கடியை பதிவு பண்ணினால் நம்மை ஆணாதிக்கவாதி என்று சொல்ல மாட்டார்களா என்றே நமது பிற எழுத்தாளர்கள் என்ன நினைப்பார்கள். அதனாலே அவர்களுடைய வீட்டில், அணுக்கத்தில் நடக்கும் கொடுமைகள் எழுத்துக்குள் வருவதே இல்லை. அவர்கள் ‘அரசியல் சரித்தன்மையின் கைதிகள்’.
கவிஞர் தாமரையை எடுத்துக் கொள்ளுங்கள் - அவர் பெண்ணியவாதி தான், அவர் தமிழ் தேசியவாதி தான். ஆனால் ஒரு பெண்ணியவாதியோ, தமிழ் தேசியவாதியோ நடைமுறை உலகில் பல்வேறு அநீதிகளை இழைப்பார்கள், அதனால் தாம் பாதிக்கப்படுகிறோம் எனும் போது துணிந்து அவர்களை எதிர்த்து தன் எழுத்திலும் பதிவு பண்ணுகிறார். அவரிடத்தில் வேறு யார் இருந்தாலும் அரசியல் சரித்தன்மை கருதி இதை மொத்தமாக மறைத்து விடுவார்கள். என்னிடம் கேட்டால் அவரது தமிழ் தேசியத்தை விட பெரிய அரசியல் இது தான்.
அன்றாட உலகின் நிம்மதி இழப்புகள், சுரண்டல்கள், அதிகார ஆட்டங்களை நாம் புனைவெழுத்தாளர்கள் எழுதப்பட்டும் என விட்டுவிடுகிறோம். ஆனால் அவர்கள் எழுதுவது அரசியல் என்றே நாம் கருதுவதில்லை. அவர்களுடைய கதைகளில் அரசியல் இல்லை, எழுத்தாளர்கள் ஏன் அரசியல் பேசுவதில்லை என புலம்புகிறோம். எனக்கு சத்தியமாகப் புரியவில்லை!
அருந்ததி ராய் “சின்ன விசயங்களின் கடவுள்” என ஒரு நாவல் எழுதினார். அதில் குடும்பத்துக்குள் சாதி, பாலினம், பொருளாதாரம் சார்ந்த அரசியல் எப்படி சிலரது வாழ்க்கையை சீரழிக்கிறது, ஒரு உயிரைப் பறிக்கிறது எனக் காட்டிவிட்டு, பின்னணியில் மிகப்பெரும் அரசியல் சித்தாந்த இயக்கங்கள், கோட்பாடுகள் செயல்படுவதையும் ஒரு பகடிக்காக வைத்திருப்பார். பெரும் சித்தாந்த அரசியலுக்கு நம் அன்றாட வாழ்க்கையில் எந்த தாக்கமும் இல்லாததை அவர் கலாய்த்திருப்பார். அதனாலே அந்நாவல் அரசியல் சித்தாந்தவாதிகளால் கடுமையாக சாடப்பட்டது. ஆனால் அருந்ததி ராய் சொல்வது எவ்வளவு உண்மை என இன்று எனக்குப் புரிகிறது. ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்துக்கு வெளியே உறவு கொள்ளுவதும் அரசியல் தான், ஏனென்றால் அதற்குள் இரண்டு உடல்கள், வெவ்வேறு சமூக அரசியல் மத சாதிய அடையாளங்களுடன் சம்மந்தப்பட்ட உடல்கள் உள்ளன. அவை அரசியல் கோஷம் எழுப்ப வேண்டியதில்லை. முத்தமிடுவதே அரசியல் தான்.
இயக்க அரசியலோ சித்தாந்த அரசியலோ அவசியமில்லை என்று நான் கோரவில்லை. ஆனால் அவரவருக்கு அவரவர் அரசியல் என்று தோன்றுகிறது. எல்லா அரசியல்களும் ஒரே அளவுக்கு முக்கியம் தான். ஒவ்வொரு அரசியலையும் நேர்மையுடன் எழுத்தில் பதிவு பண்ணுவது அவசியமானது!
Comments