Skip to main content

குருநாதரின் வழியில்…

 


இம்மாதம் மூன்று, ஆறு, ஏழு ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்தேன். மூன்றாம் தேதி நீதிமன்றத்தில் ஹியரிங் இருந்தது. 
(1)
ரொம்ப சீக்கிரமாகவே போய்விட்டதால் வெளி இருக்கையில் அமர்ந்து போனைப் பார்த்தேன். ஹன்சிகா மோட்வானியைப் போல ஒரு பெண் (அந்தளவுக்கு இல்லை, சும்மா ஒரு பேச்சுக்கு சொல்கிறேன்) என் பக்கத்தில் வந்து உரசிக் கொண்டு அமர்கிறார். நான் செம கடுப்பில் இருந்ததால் கண்டுகொள்ள வில்லை. எதிரே ஹன்சிகாவின் வயதான அம்மா முறைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறார். இது எனக்கு அங்கு எப்போதுமே நடக்கிறது. என்னைப் போல வந்திருக்கும் அப்பாவி ஆண்களிடம் போய் “இது எத்தனாவது வருசம் நடக்குது? யார் வாதி, நீங்களா?” என்று நைசாகக் கேட்டு மொத்த கதையையும் கறந்துவிடலாம் என நினைத்துக் கொண்டிருந்தால் இதைப் போன்ற பெண்கள் - நான் மொத்த பெண்ணினத்தையும் மனதுக்குள் சபித்துக் கொண்டிருக்கையில் - வந்து என் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு அமர்கிறார்கள். வேறிடங்களில் என்றால் நான் இப்பெண்களுடன் ஒரு சிநேகமான உரையாடலில் ஈடுபடுவேன். ஆனால் இங்கே எனக்கு இவர்களைப் பார்த்தாலே எரிகிறதா … என்ன செய்ய? “ஏன் குருநாதா எனக்கு மட்டும் இப்படி நடக்க வேண்டும்?” என வேலூர் இப்ராஹிமை மனதுக்குள் வேண்டிக் கொண்டால் அவர் சட்டென முன்னால் தோன்றி “எந்த பெண் உன் முன்னால் வந்தாலும் அவளுக்கு என்ன வேண்டும் என யோசி. உன்னை எல்லாரும் பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள், நீ விரும்பியோ விரும்பாமலோ. நீ இப்போது என்ன பண்ண வேண்டும் என யோசி.” என அருளினார். “நன்றி குருநாதா” என்று மனதுக்குள் வணங்கி அவரை பார்சல் பண்ணினேன். எனக்கு எல்லாம் தெளிவானது போல இருந்தது. யாரும் எங்கும் ஸ்பெஷல் அல்ல. நாம் ஒரு நாற்காலி, மேஜையைப் போலத் தான். தேவைப்படும் போது நம் மீது மனிதர்கள் அமர்ந்து கொள்கிறார்கள். நம்மை பயன்படுத்தி தானிருக்கும் சூழலுக்கோ அங்குள்ள மனிதர்களுக்கோ தனக்கோ ஏதோ ஒரு சேதியைத் தெரிவிக்கிறார்கள். அவ்வளவு தான், அதற்கு மேல் நமக்கு எந்த மதிப்பும் இல்லை. எனக்கு இப்போது ஹன்சிகாவால் எந்த பயனும் இல்லை. அவர் இருந்துவிட்டுப் போகட்டும். நான் ஒரு நாற்காலி, வெறும் நாற்காலி. ஹன்சிகா அரைமணிநேரம் கழித்து தன் தாயை அழைத்து அங்கு அமர்ந்து கொள்ளச் சொல்லிவிட்டு போனுடன் நீதிமன்ற அரங்கின் வாயிலில் போய் நின்று கொண்டார். ஹன்சிகாவின் அம்மா ஒரு சுருங்கிய அத்திப்பழத்தைப் போல என்னருகே ஒட்டிக்கொள்ளாமல் வீற்றிருந்து அடிக்கடி தலைதூக்கிப் பார்த்தார். என்னென்ன சந்தர்பங்கள் அவரை இந்த இடத்திற்கு தன் மகளுக்காக வரும்படி பண்ணியிருக்கும், ஹன்சிகாவும் வயதானால் இப்படித்தான் இருப்பாரோ என யோசித்துக் கொண்டிருந்தால் மணி அடித்தது. ஒவ்வொருவராக எழுந்து நின்று கொள்கிறார்கள். சத்தமாக அறிவிக்கிறார்கள்.

(2)
வழக்கம் போல நீதிமன்ற செஷன் பரபரப்பாக நடந்தது. 
60 வயதிருக்கும் ஒரு தாத்தாவை அவரது மகன் வயதுள்ள இளைஞர் - அல்லது பேரனா - கையைப் பிடித்துக் கொண்டு வந்தார். அவரது முகச்சாயல் கொண்ட இளைஞன். பின்னாடியே தாத்தாவின் மனைவி. முதல் ஹியரிங் என்பதால் கையெழுத்திட்டுப் போனார்கள். தாத்தாவுக்கு கை நடுங்குவதை கவனித்தேன். அந்த இளைஞன் யாராக இருப்பான் என யோசித்தேன். ஒருவேளை அவன் மகனாகவோ பேரனாகவோ இருந்தால் என்னவொரு அபத்தம். 
ஒருவர் அந்நியன் அம்பி போன்ற முகத்துடன் நிறைய பதற்றத்துடன் என் பக்கத்தில் இருந்தார். வயது 30க்குள் இருக்கும். அவர் தன் மகனைப் பார்க்க விஸிட்டேஷனுக்காக மனு போட வந்திருந்தார். அவரிடம் திருமணத்திற்கான சான்றாக அழைப்பிதழைக் கேட்க இல்லை என்றார். அதற்குப் பதிலாக சான்றிதழைக் கொண்டு வந்தார். அழைப்பிதழ் எங்கே என திரும்பத் திரும்ப கேட்கப்பட ஒரே குழப்பம். ஆனால் இந்த குழப்பத்தில் இடையே எப்போதும் நீதிமன்றத்தில் காணக் கிடைக்கும் தெளிவும் நிதானமும். அவரை கூண்டிலேற்றி எதையோ கேட்டார்கள். அவர் மிகுந்த பதற்றத்துடன் ஏதோ மன்னிப்புக்காக காத்திருக்கும் தூக்குத்தண்டனை கைதியைப் போலத் தெரிந்தார். நீதிமன்றத்திற்கு வெளியே வக்கீலின் முன் கண்ணீர் விட்டு அழும் வயதான பெண்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். அங்கு புதிதாக வருவோர் அப்படித்தான் இருப்பார்கள். இன்னும் சில மாதங்களில் இந்த அழுகை எல்லாம் மறைந்து ஏதோ பஸ் பிடித்து நேரத்திற்குள் லாக் இன் பண்ண டிபன் பாக்ஸுடன், கக்கத்தில் வியர்வையுடன் வரும் ஊழியர்களைப் போலாகி விடுவார்கள் என நினைத்துக் கொண்டேன். நான் மட்டுமே வேடிக்கை பார்க்கும் பயணியைப் போல இருந்தேன். எல்லாம் என் எண் வரும் வரை தான். 

(3)

என்னை எப்போது கூப்டுவாங்களோ, அவர்கள் அழைத்த அடுத்த நொடி அங்கே போய் நிற்காவிட்டால் நான் வரவில்லை என பதிவு போட்டுவிடுவார்களோ எனும் பயத்தில் நீதிபதியின் பார்வையில் படும் படி உள்ளேயே - அனுமதி பெற்று - இருக்கையில் எப்போதும் அமர்ந்து கொள்வேன். இம்முறையும் தான்.
அப்படி இருந்தும் பாஸ் ஓவர் ஆகி விட்டது. மேலும் முக்கால் மணிநேரம் காத்திருந்து அடுத்த ஹியரிங் வரவில்லை. நாமாகப் போய் கேட்டால் தான் கூப்பிடுவார்கள் என எதிர்க்கட்சியின் வக்கீல் வந்து சொல்ல, நான் அதை என் வக்கீலிடம் சொல்ல, அவர் “அதெல்லாம் கூப்டுவாங்க தோழர்” என்று அமைதியாக சொல்ல, நான் அமைதியிழக்க, எப்படியோ கூப்பிட்டு விட்டார்கள். அடுத்த ஹியரிங் எட்டு நாட்களில் என்று சொல்ல நான் மேலும் பதறினேன். ஏனென்றால் 6, 7 வேறு நான் புத்தக வெளியீட்டுக்காக திரும்ப சென்னைக்கு வர வேண்டும். பேருந்தில் நான்கு முறைகள் பயணித்தால் எனக்கு நான்கு இரவுத் தூக்கங்கள் இல்லாமல் போய் விடுகின்றன. அதனோடு மேலும் இரு இரவுகளைச் சேர்த்தால் 6 இரவுகள் தூக்கம் கெட்டுவிடும். தூங்காமல் இப்படி அடுத்த நாள் வேலைக்குக் கிளம்பினால் நான் கையில் இருக்கும் பொருட்களை கீழே போட்டுவிடுகிறேன். காபி கோப்பைகள், சாப்பாட்டுத் தட்டு, பைக் சாவி, புத்தகங்கள் என என்னென்னமோ தவற விடுகிறேன். அதுமட்டுமல்ல தூக்கமிழந்து பதற்றம் அதிகமாகி யாரைப் பார்த்தாலும் சீற்றம். உடல் வலி மறைய சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. அதற்கு அடுத்த பயணம் உடனே வந்தால் மீண்டும் களைப்பு, உடல் வலி, கவனமிழப்பு, எங்கிருக்கிறோம் எனும் குழப்பங்கள்.
செலவு வேறு. நான் செலவைக் குறைக்கும் நோக்கில் இப்போதெல்லாம் தனியாகப் பயணித்து வந்தாலும் 3500 ரூ கையில் இருந்து ஒவ்வொரு முறையும் போய் விடுகிறது. மாதம் ரெண்டு ஹியரிங் என்றால் 7000 ரூ. 
இது போன்ற சந்தர்பங்களில் தான் நான் ஒரு பெண்ணாகப் பிறந்திருக்கக் கூடாதோ என நினைக்கிறேன். ஏதாவது மேஜிக் நடந்து காலத்தில் பின்னால் போய் நான் பெண்ணாக மாற முடிந்தால் கூட வெகு சிறப்பாக இருக்கும். ஏனென்றால் நான் பெண்ணாக இருந்தால் இப்படி ஒரு வழக்கே கிடையாது. அப்படி இருந்தாலும் ஒரு ஊனமுற்ற பெண்ணாக இருப்பதால் நான் இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைனில் கலந்து கொள்ள ஏற்பாடு பண்ண வேண்டும் என தில்லி நீதிமன்ற தீர்ப்பு சொல்லுகிறது. அபிலாஷா எனும் பெயரே கிளுகிளுப்பா இருக்கிறதல்லவா? ஊனமுற்ற ஒரு பெண்ணை ஒடுக்குவதா என நான் குரல் எழுப்பினால் அது முதல்வர் வரை போய் சேர்ந்திருக்கும். பெண்ணிய இயக்கங்கள் திரண்டு வந்திருக்கும். மக்களவை உறுப்பினர்கள் வரை என் பின்னால் நின்றிருப்பார்கள். நான் தெருவில் உட்கார்ந்து குரலெழுப்பினால் மக்கள் திரண்டிருப்பார்கள். என் கண்ணீரைத் துடைத்திருப்பார்கள். ஊடகங்கள் இப்பிரச்சினையை எங்கேயோ எடுத்துப் போயிருப்பார்கள். என்னை பிக்பாஸுக்கு, கருத்தரங்குகளுக்கு அழைத்திருப்பார்கள். வைரலாகி பேஸ்புக்கிலும் நிறைய பேர் லைக்கியிருப்பார்கள். கடைசியில் நீதிதேவதை கைகொடுத்து என்னைத் தூக்கிவிட்டிருப்பாள். எழெவெடுத்து ஆணாய் பிறந்து தொலைத்து விட்டேனே. அநீதி நிகழ்வதானாலும் அது சரியான பாலினத்தில், சரியான இடத்தில் உள்ளவருக்கு நிகழ வேண்டும். மிச்ச பேருக்கு நிகழ்ந்தால் நாய் கூட சீந்தாது. 

மாதம் நான்கு முறைகள் அலுவலகத்தில் விடுப்புகள் வாங்கி இந்த காலை வைத்துக் கொண்டு பல சாகசங்கள் செய்து பேருந்தில் ஏறி இறங்கி அதற்கான செலவுகள் வேறு பண்ணி சிரமப்பட வேண்டி இருக்கிறது. நான் இங்கு வேலைக்கு சேர்ந்த முதலிரு ஆண்டுகளில் ஒரு விடுப்பு கூட எடுக்கவில்லை. ஆனால் இந்த வழக்கு ஆரம்பித்த பின்னர் கடந்த சில ஆண்டுகளில் இந்த வழக்குக்கான பயணத்திற்காகவே நான் என்னுடைய அத்தனை விடுப்புகளையும் 7-8 மாதங்களில் காலி பண்ணி விடுகிறேன். மீதி மாதங்களில் loss of payஇல் தான் ஓட்ட வேண்டும். நான் இப்படி மாதாமாதம் தவறாமல் விடுப்பெடுப்பதால் என் வகுப்புகள் ரத்தாகின்றன. ஒரு வகுப்பு கூட ரத்தாகக் கூடாது எனும் கொள்கையை கொண்ட கல்லூரி என்னுடையது. இது ஒரு இடையூறாக மாறுவதால் எனக்கு விடுப்பு கேட்கவே தயக்கமாக இருக்கிறது. ஆனாலும் கேட்டு வாங்கிவிடுகிறேன். 
வெறும் பயணச் செலவு மட்டுமே இதுவரைக்கும் ரெண்டு லட்சம் ஆகிவிட்டது. நான் காரில் வந்திருந்தால் 5 லட்சம் ஆகியிருக்கும். விமானத்தில் என்றால் 8-10 லட்சம் ஆகியிருக்கும். அதனாலே பேருந்தில் அலைகிறேன். இன்னும் 3 ஆண்டுகள் நான் வழக்காடுவதென்றால் கூடுதலாக ரெண்டரை லட்சங்கள் ஆகும். வக்கீல் செலவு இன்னொரு மூன்று லட்சங்கள் குறைந்தது ஆகும். கூடுதலாக ஒவ்வொரு முறை ஆஜராவதற்கும் வக்கீல்கள் ஹியரிங் கட்டணம் வேறு 2000 ரூ வசூலிக்கிறார்கள். அதற்கும் கணக்குப் போட்டால் 48,000 வருடத்திற்கு தனியாக ஆகிறது. எப்படிப் பார்த்தாலும் 7 லட்சங்கள் அடுத்த மூன்றாண்டுகளில்.

அதனாலே மீண்டும் நான்கு நாட்களுக்குள் வர வேண்டுமா எனப் பதறி என் வக்கீலிடம் போய் “தோழர்” என்று கெஞ்சினேன். அவர் களமிறங்கி திரும்பத் திரும்ப கெஞ்சியதில் நீதிபதி இரங்கி பொங்கலுக்குப் பின்னால் ஒரு தேதி அளித்தார். எப்படியோ இரு வாரங்கள் அவகாசம் நடுவில் கிடைத்துவிட்டது. ஆனால் எப்படி விடுப்பு வாங்குவது? இந்த முறை விடுப்புக்காக நான் என் நண்பர்கள் சிலரை என் வகுப்பை எடுக்கக் கேட்க வேண்டி வந்தது. அடுத்த விடுப்புக்காக யாரைக் கேட்பது? இப்படியே போனால் வேலை நீக்கம் பண்ணி விடுவார்களோ என ஒரு பயம் வேறு எனக்குள் இருக்கிறது. என்னவெல்லாம் பிரச்சினைகள்?

என் குருநாதர் வேலூர் இப்ராஹிம் என்ன அறிவுரை தருவார் என யோசித்தேன். அவர் என் முன் மீண்டும் தோன்றி “நீ இத்தனை ஆண்டுகளாக பஸ் கம்பெனிகளுக்கும் விடுதி அறைகளுக்கும் வக்கீல்களுக்கும் செலவழித்த பணத்துடன் இன்னும் சிறிது பணத்தை சேர்த்து செட்டில்மெண்ட் பண்ணியிருந்தால் நீ இத்தனை கொடுமைகளை சந்தித்திருக்க வேண்டியிராது. பேஸ்புக்கில் பக்கம் பக்கமாக எழுதியதால் எந்த பலனும் இல்லை. என் பக்கத்தைப் பாரு, அதில் ஒன்றுமே எழுதியிருக்க மாட்டேன். ஆனால் எனக்கு எந்த பிரச்சினை வந்தாலும் உடனே தீர்ந்து விடும். ஏனென்றால் எனக்கு எதை யாரை எப்படி கையாள வேண்டும் எனத் தெரியும். அவர்கள் எனக்கு தொந்தரவளிக்க முடிவு பண்ணுமுன்பே அவர்களுக்கு எப்படி பதில் கொடுக்க வேண்டுமெனத் தெரியும். பிரச்சினை கொடுப்போருக்கு என்ன வேண்டுமோ அதைக் கொடுத்தால் பிரச்சினை தீர்ந்துவிடும். பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுவது தவளை நள்ளிரவில் ஒரு இணைக்காக கத்துவதைப் போல. கத்துவதால் பயனில்லை, கண்ணைத் திறந்து சுற்றிலும் நடப்பதை கவனிக்க வேண்டும்.” என்றார். “ஆனால் குருநாதா எனக்கு கிடைக்க வேண்டிய நீதி? நான் அப்படி செய்திருந்தால் அது தன்னலம் ஆகாதா?” “தன்னலம் தான் ஆகச்சிறந்த நலம் சிஷ்யா. தன்னலம் இல்லாதோரை இச்சமூகம் மதிக்காது. அவர்களை காலில் இட்டு மிதிக்கும்.” “என் பிரச்சினை சட்டம் சம்மந்தப்பட்டது குருநாதா.” “ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, அது பணம் சம்மந்தப்ப்பட்டது சிஷ்யா. சமூகமோ சட்டமோ தராத நீதியை பணம் தந்து விடும். நிறைய பணம் சம்பாதிச்சுக்கோ. எந்த வழியிலும் போ, எப்படியும் போ, இலக்கே முக்கியம். பணம் இருந்தால் உனக்கு எப்போதும் அநீதி நடக்காது.” ஆம், அங்கிங்கே புரட்டி, கடன் கிடன் வாங்கி ஒரு தொகையைக் கொடுத்து இந்த வழக்கை செட்டில் பண்ணினால் எனக்கு இதுவரை கிடைக்காத நீதி கிடைத்து விடும். குருநாதர் சொல்வது சரி தான். அவரை நான் சில ஆண்டுகள் முன்பே சந்தித்திருந்தால் என் வாழ்க்கை மிகவும் தெளிவாக அழகாக ஒரு ஜென் குளத்தைப் போல் இருந்திருக்கும். இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் சகவாசத்தால் நேராக மட்டுமே யோசிக்கக் கற்றுக்கொண்டு வீணாய்ப் போய்விட்டேன். குருநாதா இனிமேல் உன் சொல்படியே முடிவெடுக்கிறேன். இனிமேல் உன் அறிவுரைப்படியே இந்த வாழ்க்கையை எளிமையாக நேரடியாக வாழப் போகிறேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

கல்வி ஒரு மோசடியா?

இந்தக் கட்டுரையில் சொல்லப்படுவதைத் தான் நான் கடந்த ஆண்டு எழுதினேன். பள்ளி, உயர்கல்வியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய முதலீட்டில் குழந்தைகள் லாபம் உண்டா? இல்லை. ஐ.ஐ.டியிலே 21, 500 ஐ.ஐ.டி பட்டதாரிகளில் 8000 பேர்களுக்கு வேலை இல்லை. ஐ.ஐ.டி மும்பையில் கடந்த ஆண்டு வளாக நேர்காணலில் வேலை பெற்றவர்களுக்கு முன்பு இல்லாத அளவுக்கு குறைந்த சம்பளமே கிடைத்துள்ளது. வட-இந்தியாவில் ராணுவத்தில் சேரவும் அரசு வேலையைப் பெறவும் பட்டதாரிகள் தவிப்பது இதனாலே. 2024இல் மகாராஷ்டிராவில் போலீஸ் வேலைக்கு ஆளெடுத்தார்கள். 17,471 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 17.76 லட்சம் பேர்கள் திரண்டார்கள். CMIE தரும் புள்ளிவிபரப்படி இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 7 சதவீதமாக வளர்ந்துள்ளது. மற்றொரு புள்ளிவிபரம் இன்னும் அதிர்ச்சியானது - 20-24 வயதுக்கு உட்பட்டோரில் 44.5% பேர்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். இவர்கள் எல்லாருமே இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்கள். சந்தோஷ் மெஹ்ரோத்ரா மற்றும் ஜஜாதி பரிதா எழுதிய India Out of Work நூலில் வரும் தரவு இது - 2019இல் 42% இருந்த விவசாயத் தொழில் 2024இல் 46 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிட...

நமக்கு நாமே எதிரி

கேள்வி: புரோ, வைரமுத்துவிற்கு ஞானபீடம் கிடைத்தால் நம் தமிழ் நவீன இலக்கியம் பெயர் கெட்டு விடாதா? நம் மொழியின் சிறந்த படைப்பாளி வைரமுத்து என்று அயல்மொழியினர் நினைத்து காறித் துப்ப மாட்டார்களா? பதில்: இல்லேன்னா மட்டும் ரொம்பவே வாழுதாகும். இங்கே ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.01 சதவீதத்தினரே வாசிக்கிறார்கள். ஊடகங்கள் இலக்கியத்தை மதிப்பதே இல்லை. நம்மை ஆங்கில மொழிபெயர்ப்பில் கொண்டு வருவதோ வந்தால் மதித்துப் படிப்பதும் இல்லை. பெருமாள் முருகனே விதிவிலக்கு. ஏனென்றால் நம் மக்கள், சாரு சொல்வதைப் போல, தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு தமிழ் இலக்கியத்தைக் கொண்டு போக, அதைச் சந்தைப்படுத்த முயற்சி எடுப்பதில்லை. நம்மை யாருக்குமே தெரியவில்லை. ஒரு வினோதமான தகவல் சொல்கிறேன்: மோடி இங்கே வந்து கொடூரமான உச்சரிப்பில் குறள் சொன்னபோது நாம் கடுப்பானோம். ஆனால் அதன்பிறகுதான் அயல்மொழி நண்பர்கள் பலரும் தமிழ் இலக்கியம் என்றால் திருவள்ளுவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். யோவ் வள்ளுவரைத் தாண்டி நவீனத் தமிழுக்கு வாங்க என்று நான் அவர்களிடம் சொல்கிறேன். அதிகாரத்தின் உச்சாணியில் உள்ள ஒருவர் வள்ளுவர் பெயரைச் சொன்னால்தான் அது இந்திய...

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...