முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலக்கிய விழா - அறிவுரைகள்

இலக்கிய விழா அழைப்புகளுக்கு போவதற்கு விருதுகளை ஏற்பதற்கு முன் அறிய வேண்டியவை:

நமக்கு பயனில்லாத நாம் எதையும் செய்யக் கூடாது - இது இலக்கியத் திருவிழாக்களுக்கும் பொருந்தும். பயன் என்றால் கவனம், புகழ், புதிய வாசகர்கள்,  முக்கியமாக சன்மானம். 

வெறுமனே பள்ளி மாணவர்கள் அமர வைக்கப்படும் அரங்குகளில் பேசுவதை விட யுடியூப் சேனலிலோ ரியாலிட்டி ஷோவிலோ பேசலாம். ஆள் வராத பொதுக்கூட்டங்களில் பேசுவது "சின்ன கவுண்டரில்" கவுண்டர் கழுதைகளிடம் உரையாற்றுவதற்கு நிகர். அங்கெல்ல்லாம் போய் தலையைக் கொடுக்கதீர்கள்.

உங்களை எங்காவது பேசக் கூப்பிட்டால் புதிய வாசகர்கள், பணம், பரவலான சமூக கவனம் கிடைக்காத இடங்களைத் தவிருங்கள். மெனெக்கெட்டு தயாரித்து போய் கதறிக் கதறிப் பேசி செலவிடும் ஆற்றலை, நேரத்தை உங்கள் படைப்புகளை எழுத பயன்படுத்துங்கள். 

அதே நேரம் சிறுபத்திரிகை கூட்டங்களில் தாராளமாகப் பேசலாம். திருப்தி, அறிவுப் பகிர்தல், தொடர்புகள், கொஞ்சம் அடிதடி, வயிற்றெரிச்சல், அரசியல் என ஜாலியாக இருக்கும். 

பணம் தர இயலாதவர்கள், ஒரு லட்சியத்துக்காக இலக்கிய பணி ஆற்றுபவர்களை நாம் மதிக்க வேண்டும். சன்மானம் கேட்கலாகாது. ஆனால் பந்தாவுக்காக கூட்டம் நடத்துபவர்களை மதிக்கக் கூடாது, சன்மானம் கேட்டுப் பெற வேண்டும்.

மேடையேறும் குறியீட்டு மதிப்புக்காக இப்படி கரடியாக அலைய வேண்டியதில்லை. கூப்பிடாவிட்டால் அதை ஒரு அவமதிப்பெனக் கருதி மருகாதீர்கள். உங்கள் நேரம் காப்பாற்றப்பட்டது என மகிழுங்கள்.

என்னை நெல்லைத் திருவிழாவில் பேச அந்த பகுதி துணை தாசில்தார் கூப்பிட்டார். ரயில் டிக்கெட்டும் மூவாயிரம் ரூ பணமும். தலைப்பு திராவிட இலக்கியம். அது என்னுடைய ஆர்வத்திற்குள் வரும் தலைப்பு அல்ல. மூவாயிரம் ரூபாய்க்காக கடுமையாக உழைத்து தயாரித்து அவ்வளவு தூரம் போய் பேச வேண்டுமா என யோசித்தேன். கூட்டிக் கழித்துப் பார்த்தால் எனக்கு நட்டமே எனத் தோன்றியது. வேண்டாம் என்றேன். அதன் பிறகு அங்கு நடந்த ஏற்பாடுகளைப் பற்றி நண்பர்கள் எழுதியதைப் படித்தால் நான் எடுத்தது ஆகச்சிறந்த முடிவு எனத் தோன்றியது.

நான் யுவ புரஸ்கார் விருது வாங்கியதை அடுத்த ஒரு வருடத்திற்கு என்னை சில கல்லூரிகளில் தொடர்ச்சியாக பேச அழைத்தார்கள். ஒரு தொகையை தீர்மானித்து வைத்து கேட்டு வாங்கிய பின்னரே பேசினேன். அப்போது நான் முழுநேர முனைவர் பட்ட மாணவன். எனக்கு அப்போது அந்த வருமானம் பயன்பட்டது. தேவையில்லாத கூட்டங்களைத் தவிர்ப்பதற்கும் உதவியது. முக்கியமாக, நம் நேரத்தை, நம் உழைப்பை, நம் திறனை நாமே மதிக்காவிடில் உலகம் மதிக்காது. உலகத்துக்கு மதிப்பென்றால் பணம் கேட்பதே. பணம் வேண்டாமல் எவ்வளவு சிறப்பான பணியை செய்தாலும் உங்களை மதிக்க மாட்டார்கள். இதுவே நான் மேடையில் பேசத் துவங்கிய போது கற்றுக்கொண்ட பாடம்.

இது விருதுகளுக்கும் பொருந்தும். சன்மானமில்லாத விருதுகளை பக்கத்துத் தெருவில் நம் நண்பர்கள் கொடுத்தால் பேஸ்புக்கில் படம் போடுவதற்காக போய் வாங்கலாம். உங்களிடம் நிறைய பணம் இருக்கிறது, கார் இருக்கிறதென்றால் ஒவ்வொரு ஊராட்சியாகப் போய் விருதுகளை வாங்கி வரலாம். இல்லாவிட்டால் சன்மானமில்லா விருதுகளைத் தவிர்ப்பதே நலம். விருதென்று வந்துவிட்டால் 25,000 கூடத் தர முடியாவிட்டால் என்ன மரியாதை அது? தருபவர்கள் மட்டும் புகழை அடைய முயற்சிக்கும், எழுத்தாளனை சுரண்டுகிற முயற்சி அல்லவா அது?

சன்மானமே இல்லையென்றாலும் கூட டிவி சேனல், யுடியூப் சேனல், விகடன் போன்ற பத்திரிகைகளின், நல்ல பெயர் பெற்ற இலக்கிய அமைப்புகளின் விருதுகள் விதிவிலக்குகள். ஒரு வாரம் இதை வைத்து உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் தீபாவளி கொண்டாடலாம். 

இதைப் பற்றி இம்மாதம் வெளியாக உள்ள என்னுடைய "எழுத்தாளனாக வாழ்வது எப்படி?" எனும் நூலில் பேசியிருக்கிறேன் - விருதுகளை வாங்குவதற்கு எல்லாரிடமும் பணிவாக இருக்க வேண்டும். கொஞ்சமே கொஞ்சம் திமிரைக் காட்டினால் கூட விருதுகள் கிடைக்க்காது. ஆசானைப் பாருங்கள். அவருடைய திமிருக்கு சின்ன சொப்பு சாமான் விருதைக் கொடுக்க மாட்டார்கள். அவர் இளைஞராக இருந்த போது கிடைத்த சம்ஸ்கிருத சம்மான் விருதுக்கு அடுத்து அவர் ஒன்றுமே வாங்கவில்லை என நினைக்கிறேன். மேலும் அவருக்கு கொடுத்தால் திட்டுவிடுவாரோ எனும் பயமும் எல்லாருக்கும் உள்ளது. ஆனால் தலை எவ்வளவு கெத்தாக இருக்கிறார்!

அதே போல பெயர் பெற்று உயர்ந்த அந்த்ஸ்துடன் இருக்கும் படைப்பாளிகளுக்கும் விருதுகளைக் கொடுக்க மாட்டார்கள். இவரெல்லாம் நம்ம விருது வாங்கும் தகுதிக்கு அப்பாலானவர்கள் என அவர்களாகவே நினைத்துக் கொள்வார்கள். ஆக நிறைய விருதுகள் உங்களுக்கு வரவில்லை என்றால் இலக்கிய படிநிலையில் உயர்ந்து விட்டீர்கள் எனப் பொருள். மாதம் ஒரு விருதாக வந்து கொண்டே இருக்கிறது என்றால் இந்த உலகம் உங்களை ஒரு டுபாக்கூர் எனக் கருதுகிறது எனப் பொருள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...