இலை எடுப்பவருக்கு நல்ல சம்பளம் கொடுத்தால் இந்த பிரச்சினை மறைந்துவிடும். நீதி பேதி விவாதமெல்லாம் எழாது. நாம் தொடர்ந்து நீதி, அறம் பற்றி அங்கலாய்ப்பதெல்லாம் பணத்தை செலவு பண்ணாமல் தப்பிப்பதற்குத் தான் எனத் தோன்றுகிறது. குப்பை அள்ளுகிறவர், மலம் அள்ளுகிறவர்களுக்கு மாதம் 50000-70000 சம்பளம் கொடுத்துப் பாருங்கள் - உடனே அப்பணி எந்திரமயமாகி விடும். ஊழியர்கள் காரில் வந்திறங்கி அவ்வேலையை செய்தால் அது ஒரு மதிப்பான தொழிலாக மாறும். இதுவே ஓட்டல் பணியாளர்களுக்கும் பொருந்தும். பெண்கள் நாங்கள் அடுப்படியில் கிடந்து அல்லாட வேண்டுமா என பெண்ணியவாதிகள் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தார்கள். பெண்கள் உயர்வான சம்பளத்துக்கு வேலைக்குப் போகத் தொடங்கியதும் என்னயிற்று? சமையலுக்கு ஆள் வைத்துக் கொண்டார்கள் அல்லது மூன்று வேளைகளும் வெளியே சாப்பிடுகிறார்கள். இன்று பெருக்கக் கூட. தெரியாத ஒரு தலைமுறை தோன்றியுள்ளது. இந்த மாற்றம் நீதியுணர்வால் அல்ல பண வரவாலே நடந்தது. ஆனால் பணத்திற்கு வழியில்லை அல்லது செலவழிக்க மனமில்லாத போது ஆண்களும் பெண்களும் பெண்ணியம் பேசி அப்பிரச்சினையை கடந்து போனார்கள். ஒரு முதலீட்டிய சமூகத்தில் நீதி, அ...