முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ரோஸ்மேரியின் குழந்தை"



சில புத்தகங்களை எடுத்தால் நேரம் போவது தெரியாமல் வாசித்து மாய்வோம். ஐரா லெவினின் Rosemary's Baby அப்படியாக நேற்றுமுதல் என்னை ஒரு மயக்கத்திலேயே வைத்திருந்தது. (சிலர் ரொமான் பொலான்ஸ்கி இதைத் தழுவி எடுத்த அந்த அபாரமான படத்தை பார்த்திருப்பீர்கள்.)

இதை காத்திக் புனைவு (Gothic), மர்மக் கதை, உளவியல் டிராமா என எப்படி வேண்டுமெனிலும் வகைப்படுத்தலாம். என்னை வெகுவாக கவர்ந்தது எவ்வளவு சாமர்த்தியமாக நுணுக்கமாக இந்நாவலை ஐரா லெவின் எழுதியிருக்கிறார் என்பது. ஸ்டீபன் கிங் இவரை "மர்ம நாவல்களின் ஸ்விஸ் கைக்கடிகார வல்லுநர்" என்று சிறப்பித்தது சும்மா அல்ல.

லெவின் வசனங்களை எழுதும் பாணி சிலாகிக்கத்தக்கது. வசனங்களை ஒரு தகவலையோ உணர்ச்சியையோ எண்ணத்தையோ வெளிப்படுத்துவதற்காக மட்டுமன்றி ஒரு மறைமுகப் பொருள் கொண்ட விளையாட்டுத்தனம் மிக்கவையாக எழுதுவார். நாம் சுஜாதாவிடம் வசனங்களில் சுட்டித்தனத்தை மட்டும் பார்ப்போம், ஆனால் லெவின் நகைமுரணை, மறைபொருளையும் வசனங்களில் உணர்த்துவார். இவர் இதைத்தான் சொல்கிறாரா என நம்மை ஒரு கணம் சந்திக்க வைப்பார்.

இந்த நகைமுரண் வசனங்களில் மட்டுமல்ல கதைகூறலிலும் முக்கிய இடம்பிடிக்கிறது. தன் கணவன் கய்யுடன் வாடகைக்கு ஒரு பெரிய வீட்டைத் தேடும் ரோஸ்மேரியின்  பார்வையில் second personஇல் கதை சொல்லப்படுகிறது. அவர்கள் ஒரு பழமையான பாரம்பரிய தோற்றம் கொண்ட பெரிய வீடொன்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ரோஸ்மேரியின் நண்பர் ஒருவர் அந்த வீட்டில் சில துர்மரணங்கள் நடந்துள்ளன, அங்கு மாந்திகம் பயிலும் சாத்தான் வழிபட்டாளர்கள் முன்பு இருந்துள்ளார்கள் என்று கூறியதையும் மீறி அவர்கள் அந்த வீட்டுக்கு குடிபெயர்கிறார்கள். அதன் பின்னர் என்னென்ன துர்சம்பவங்கள் நடந்து ஒரு பெரும் துயர நிக்ழ்வில் போய் முடிகின்றன என்பதே மீதிக் கதை. ஆனால் இந்த நண்பர் எழுப்பும் சந்தேகங்கள் முதல் ரோஸ்மேரிக்கு குழந்தை பிறந்து இறப்பது வரை அவளுடைய மனப்பிரமையாக இருக்கலாம் என பின்னர் அறிந்து கொள்ளும் போது எந்தளவுக்கு மெல்ல மெல்ல உண்மை போன்றே பொய்கள் இந்த புனைவுக்குள் ஊடுருவி உருக்கொள்கின்றன என வியப்பேற்படுகிறது. புனைவில் நகைமுரண் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் இப்படைப்பு.

இந்த நாவல் persecution complex பற்றியது - அதாவது சதா நாம் ஒடுக்கப்படுகிறோம், நம்மை சிக்க வைக்க திட்டமிட்டு வலைவிரிக்கிறார்கள், அந்த சதித்திட்டத்தில் நமக்கு நெருக்கமானவர்களுக்கும் பங்குள்ளது எனும் பீதி, அதனாலான உளச்சிக்கல் நவீன உலகில் ஒரு பண்பாடாகவே மாறி உள்ளது. மற்றமை மீதான சந்தேகம், ஒவ்வாமை, அச்சமாக இது உருக்கொள்கிறது, சுதந்திர எண்ணம் கொண்டவர்கள், விளிம்புநிலையாளர்கள், உதிரிகள் மீது வெறுப்புக் கலாச்சாரமாக இது வளர்ந்து பீதியுணர்வால் நடத்தப்படும் ஒரு கூட்டு மனப்பிரமையாக பேருருவம் எடுக்கிறது. அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் witch huntingஆக (எதிர்-கிறித்துவ நம்பிக்கையாளர்கள் என சிலரை அடையாளப்படுத்தி கொல்வது, விசாரித்து ஒடுக்குவது), இருபதாம் நூற்றாண்டில் மெக்கார்த்தியின் நிர்வாகத்தில் கம்யூனிஸ்டுகள் என்று அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட களையெடுப்பு நடவடிக்கையாக இது அரசியல் வடிவெடுத்தது. இதன் பெண்ணிய பரிணாமத்தையே ஐரா லெவின் "ரோஸ்மேரியின் குழந்தை" நாவலில் சித்தரிக்கிறார்.  

ஒரு நவீன படித்த உயர் மத்திய வர்க்க பெண்ணான ரோஸ்மேரி தன் பெற்றோர், உறவினரிடம் இருந்து விலகி மாற்றுமத்தவனான தன் கணவனுடன் வாழ்பவள். அவளுக்கு சில நேரம் தான் உலகில் இருந்து முழுக்க தனிமைப்பட்டிருப்பதாக, காதலுக்காக திருமணம் செய்துகொண்டு தன்னை ஒரு வளர்ப்புநாயாக ஒரு ஆணுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டதாகத் தோன்றுகிறது. இந்த கண்மூடித்தனமான பயம், தனிமை, கோபம் மெல்ல மெல்ல கற்பனைக்கும் உண்மைக்கும் இடையிலான கோட்டை அழித்து விட்டால் என்னவாகும் என்பதே இந்நாவல். ஐரா லெவினின் மற்றொரு பிரசித்தமான நாவல் The Stepford Wives - இது மற்றொரு தீவிர பெண்ணிய மனக்கிலேசத்தை, கொடுங்கனவை பரிசீலிக்கிறது: கணவனின் மகிழ்ச்சிக்கு இணங்க வாழும் நிறைவான பெண்கள் ஒருவேளை மாயமந்திரத்தால் எந்திரப்பெண்களாக மாற்றப்பட்டவர்கள் என்றால், அவர்களுக்கு மத்தியில் சுதந்திர சிந்தனை கொண்ட ஒரு இளம்பெண் மாட்டிக் கொண்டால் என்னவாகும்?

ஐரா லெவினின் அனேகமான நாவல்கள் திரைபடமாக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் அவை அடிப்படையில் திரைக்கதை வடிவில் எழுதப்பட்டவை எனத் தோன்றுகிறது. "ரோஸ்மேரியின் குழந்தை" இலக்கிய நுட்பத்துடன் எழுதப்பட்ட ஒரு வெகுஜன நாவலே. ஏனென்றால் இதன் கதை ஒரு செறிவான  நாவலுக்கு ஏற்ற சிக்கலான ஒன்றல்ல. இதன் பலமும் பலவீனமும் இதன் நேரடியான எளிய கதையும் கூறலுமே. கதையமைப்பின் வேலைப்பாடுகளும் மொழியின் லாவகமுமே வாசகர்களை கட்டிப் போடுகிறது.

குறிப்பாக இந்நாவலின் கடைசி மூன்று அத்தியாயங்கள் சரியாக எழுதப்படவில்லை. ஒருவித மீளக்கூறலும், அதுவரையிலான நிகழ்வுகளுக்கு விளக்கமளிக்கும் படியாகவும் இவை எழுதப்பட்டது கதைக்கு சரியான முடிவை அளிக்கத் தவறுகிறது. நான் இதன் கிளைமேக்ஸை எழுதியிருந்தால் ரோஸ்மேரியின் மனச்சிக்கலை அம்பலப்படுத்தாமல் அவள் சொல்வது உண்மைதானோ என வாசகனை கடைசி வரை நினைக்க வைத்துவிட்டு முடிவில் ரோஸ்மேரியின் கோணத்தில் இருந்து முற்றிலும் வேறொரு வாழ்க்கைப் பார்வையை தருவதாக முடிவை அளித்திருப்பேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.