முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அந்த இன்னொரு பொண்ணு யாரும்மா?



நான் குடும்பநல நீதிமன்ற வாயிலில் உள்ள பெஞ்சில், அங்குள்ள போலிசாரின் அனுமதியைப் பெற்று, வழக்கம் போல என் ஆட்டோவுக்காக காத்திருந்தேன். அப்போது முகம் முழுக்க ஒப்பனையுடன், துப்பாக்கி முனையில் இருந்து சீறும் நெருப்பைப் போல உதட்டுச்சாயம் பூசின அப்பெண் கையில் குழந்தையுடன் வெளிப்பட்டாள். அவளுக்கு அருகாமையில் கிட்டத்தட்ட உரசுகிற நிலையில் ஒரு ஆண். ஜீன்ஸ், சட்டையில் கேஷுவலாக பாக்கெட்டில் கைகளை நுழைத்துக் கொண்டு தெரிந்தார். இப்படியெல்லாம் நீதிமன்றத்துக்கு ஆணும் பெண்ணும் வர மாட்டார்களே என நான் யோசிக்கும் போது அப்பெண் அவருடைய சட்டையைப் பிடித்துக்கொண்டு கத்த ஆரம்பித்தார். போலீஸ்காரர்களை நோக்கிஇவனைப் பிடிங்க சார், இவனை விடாதீங்க சார்என்று கதறினார். அந்த குழந்தை அலங்க மலங்க முழிக்க போலிசார் சற்று திகைத்து நிற்க அந்த ஆள் எஸ்கேப் ஆகி நடந்து போய்விடுகிறார். அப்பெண் குழந்தையுடன் கத்தியபடி அவர் பின்னாலே பாதி ஓட்டமாகப் போகிறார். அதன் பிறகு நடந்ததை போலீஸ்காரர்கள் வந்து சொல்ல நான் ஒரு காதைக் கொடுத்து கவனித்துக் கொண்டேன். நீதிமன்ற வளாகத்தினுள் சாலை வளைவில் வைத்து அந்த பெண்ணின் அப்பா அவனைப் பிடித்து உதைத்து அவரும் போலிசாரை அழைத்துஇவனைப் பிடிங்க, இவனை அடிங்கஎன்று கூவ போலிசார் இடையிட்டு அவரை விலக்கி அவனைக் காப்பாற்றி விட அவன் மீண்டும் எஸ்கேப். என்ன பிரச்சினை என்று அடுத்து வந்த பெண் போலிசார் சிலர் சொன்னார்கள்.


இந்த இருவருக்கும் மணவிலக்குக்காக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. விவாகரத்து கோரியது மனைவியே. பொதுவாக கணவர்கள் தம் மனைவியர் தம்மைக் காறித் துப்பினாலும் விவாகரத்து என்று வந்துவிட்டால் அதனால் மிகவும் உடைந்து போவார்கள், அல்லது அதை ஒரு அவமானமாகப் பார்ப்பார்கள், அல்லது தனிமை பயமோ என்னவோ மிகவும் பலவீனமாக உணர்வார்கள். அதனாலே தொடர்ந்து நீதிமன்றத்தில் இதற்காக ஏறி இறங்கும் போது அவர்கள் மிகவும் பதற்றமாகி சில நேரம் கோபமாகி அதை வக்கீலிடமோ மனைவியிடமோ வெளிப்படுத்துவார்கள். கடந்த மாதம் ஒரு கணவர் தன் மனைவியின் வக்கீல் மீது பாய்ந்து அடிக்கப் போய் விட்டார். “என் குடும்பத்தைப் பிரிச்சு இப்படி நடுத்தெருவில நிக்க வைச்சிட்டியே பாவிஎன ஒரே அழுகை, கோபம், கூச்சல், களேபரம். அந்த வக்கீல் அவரிடம் இருந்து கழன்று வந்து போலிசாரிடம் வந்து அந்த ஆளை மாட்டிவிட்டார். இது என் கண்முன்னாலே நடந்தது. போலிசார் விரைந்து போய் நீதிமன்றத்துக்குள் தொந்தரவு செய்யும் வகையில் கலவரம் பண்ணியதற்காக அந்த கணவரைக் கைது பண்ணி அழைத்துப் போனார்கள். வக்கீல் தன் மீசையைத் தடவியபடிஹா எங்க கிட்டயாஎன உறுமிக் கொண்டிருந்தார். நாம் சினிமாவில் பார்ப்பதைப் போல பெண்கள் மண்ணை வாரித்தூற்றி சாபம் கொடுப்பதெல்லாம் இங்கு நடப்பதில்லை. ஆண்களே இன்று கொதிப்பது, சாபம் கொடுப்பது, வக்கீல் மீது பாய்வது எல்லாம்


இதுவும் அப்படியான ஒரு பிரச்சினை தான் - ஒரே வித்தியாசம் அந்த நபர் தன்னுடைய கடுப்பையும் கோபத்தையும் நாசூக்காக மனைவி மீது திருப்பிவிட்டார். அன்றைய ஹியரிங் முடிந்து வெளியே வரும் போது அவர் நைசாக தன் மனைவியிடம் போய்எனக்கு பன்னிரெண்டு நாட்களுக்கு முன் இன்னொரு பெண்ணிடம் கல்யாணம் ஆகிடுச்சு. இப்போ என்ன பண்ணுவே? விவாகரத்து பண்ணுவியா என்ன, இப்போ பண்ணுடி.” என்றிருக்கிறார். அதற்குத் தான் அப்பெண் அப்படி கூவி கூச்சலிட்டதும், அவருடைய அப்பா இந்த ஆளைப் பிடித்து உதைத்ததும்.


எனக்கு இது வெறும் வாய் வார்த்தையே, நிஜம் அல்ல என்று தோன்றுகிறது. ஒரு கணம் தன் மனைவியை வெறுப்பேற்ற வேண்டும் என பிட்டு போட்டிருக்கிறார். அது வேலை செய்துவிட்டது, அவருக்கு எதிராகவே


இது மட்டும் உண்மையென்றால் அது கிரிமினல் குற்றம். மனைவி - இரண்டாவது திருமணமான புகைப்படம், அழைப்பிதழ் போன்ற சான்றுடன் - புகார் அளித்தால் இவர் உடனடியாக கைதாகி விடுவார். ஆக அது தெரிந்தும் சொல்லியிருக்கிறார் என்றால் அவர் சும்மா சீண்டுகிறார் என்றே பொருள். ஒரு வயதான போலீஸ்காரர் கூடஏன் எங்களை அடிக்க சொல்றீங்க? இப்போ எல்லா இடத்திலயும் சிசிடிவி கேமரா வைச்சிருக்காங்க. மனித உரிமை, அது இதுன்னு பிரச்சினை பண்ணுறாங்க. பழைய காலத்திலேன்னு நாங்களே கையில எடுத்துட்டு ரெண்டு போடு போடுவோம். இப்போ முடியுமா சார்?” என்றார் என்னை நோக்கி. உடனே இளைஞரான இன்னொரு போலீஸ்காரர் அவரிடம் கேட்டார், “அதான் அந்தம்மா ஏன் நம்ம கிட்ட சொல்றாங்க, ஸ்டேஷன்ல போய் கம்பிளெயிண்ட் கொடுக்கட்டும், நாம ஆக்‌ஷன் எடுப்போமில்ல?” ஏன் புகார் கொடுக்கவில்லை என்றால் அந்த பெண்ணுக்கும் தெரியும் இது வெற்று சீண்டல் என, அதனாலே அவர் ஒரு டிராமாவைப் போட்டு போலீஸ்காரர்களைத் தூண்டி விட முயன்று அதுவும் பலிக்கவில்லை என்றதும் தன் அப்பாவை வைத்து நாலு உதை வாங்கி கொடுத்தார்


இதுக்காகத் தான் நாங்க பெற்றோர்களை கோர்ட்டுக்கு உள்ளே விடுவதில்லை சார்என்றார் போலீஸ்காரர். கடந்த மாதம் நீதிபதி முன்னிலையிலேயே ஒரு மாமனார் தன் மருகனை அடித்து விட்டாராம். போலீஸ்காரர்கள் வந்து விலக்கிவிட வேண்டி வந்திருக்கிறது. அதனாலே இம்முறை பெண்களுடன் அவர்களுடைய பெற்றோர் யாரும் வரவில்லை போல என நினைத்தேன். இல்லாவிட்டால் ஒரு பெண்ணுக்கு முன்னால் அவளுடைய அப்பா என்றால் பின்னால் அவளுடைய அம்மா அல்லது சகோதரன், பக்கத்தில் திடகாத்திரமாக வக்கீல், ஜூனியர்கள் என்று ஒரு கௌரவ சேனையைப் போலவே வருவார்கள். போன மாதம் அந்த அப்பா அடித்த அடியின் விளைவாக இம்முறை கூட்டம் குறைந்து விட்டது


சரி ஒருவேளை அப்பெண்ணின் கோபம் நிஜமான உணர்ச்சிதானோ? எந்த பெண்ணுக்குத் தான் அப்படி ஒரு ஆவேசம் வராது? இருக்கலாம். இதை ஒரு நண்பரிடம் சொன்ன போது அவர் கேட்டார், “இவ்வளவு பொஸஸ்ஸிவ்வா இருக்கிற பெண் ஏன் விவாகரத்து கோரி கோர்ட்டுக்கு வர வேண்டும்?” ஏனென்றால் அப்பெண்ணுக்கு செட்டில்மெண்டாக ஒரு நல்ல தொகை கிடைக்கப் போகிறது, கணவனுடன் இருந்தால் அது கிடைக்குமா? மேலும் குழந்தையும் அவளுக்குத் தான். மேலும் தினமும் கணவனின் முகத்தைப் பார்க்கத் தேவையில்லை. மாமியாரைப் பார்க்க வேண்டியதில்லை. திருமணத்தின் போது தன் வீட்டார் போட்ட 50-100 பவுன் நகையும் திரும்பக் கிடைக்கும். குழந்தையை அவரது அம்மா பார்த்துக்கொள்வார். குழந்தைக்கான செலவுக்கு பணத்தையும் தனியாக கணவனிடம் வாங்கிக் கொள்ளலாம். அவர் தரவில்லை என்றால் விவாகரத்துக்குப் பின்னர் அதற்கு ஒரு தனி மனு போட்டு வாங்கிக் கொள்ளலாம். இவர் பாட்டுக்கு நிம்மதியாக வேலைக்குப் போகலாம். சுதந்திரமாக இருக்கலாம். இன்னொரு கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம், இன்னொரு விவாகரத்து கூட பண்ணிக் கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக இது ரொம்ப நல்ல டீல் தானே. ஒருவேளை அவள் திருமணமே செய்திருக்காவிடில் செட்டில்மெண்டும் நகைகளும் இவ்வளவு பணமும் நஷ்டம் தானே? ஒரு ஆணுக்கும் இப்படி திருமணத்தின் போது யாராவது நகையைப் போட்டு, விவாகரத்தின் போது அந்நகையுடன் ஒரு செட்டில்மெண்ட் தொகையும் கொடுத்தால் ஒவ்வொரு ஆணும் அடுத்த நாளே விவாகரத்து கோரி வரிசையில் நிற்பான். ஆனால் பாருங்கள் அவன் செட்டில்மெண்ட் கொடுப்பதுடன் வரதட்சணையாக வந்த பணத்தையும் திரும்பக் கொடுக்க வேண்டும். அவனுடைய வீட்டிலும் ஒரு தங்கை இப்படி போகும் போது கைநிறைய பணமும் நகையுமாகவே செல்வாள். அவளுக்கு சொத்தும் பின்னர் கிடைக்கும் என்கிறது சட்டம். இதனாலே பெண்கள் சுலபமாக மணவிலக்கு கோரி நீதிமன்றத்துக்கு வர நேர்கிறது


அந்த பெண் ஏன் பொஸஸிவ்வாக இருந்தாள் என்றால் அதற்குப் பின்னால் இன்னொரு கதை இருக்கிறது: என் நண்பர் ஒருவரிடம் இருந்து விவாரகரத்துக்காக அவரது மனைவி மனு போட்டார். அப்போது அம்மனைவி மறுமணம் புரியும் திட்டமிருந்ததால் அவர் செட்டில்மெண்டுக்காக பேசவில்லை. பணம் வாங்காமலே பரஸ்பர விருப்பத்துடன் விவாகரத்து கோரினார்கள். சுலபத்தில் கிடைத்தும் விட்டது. ஆனால் அப்போது வந்தது ஒரு டிவிஸ்ட் - அந்நேரம் என் நண்பரும் தன் மறுமணத்துக்கான முயற்சியில் இருந்தார். அவருடைய அதிர்ஷ்டம் முதலில் முயன்ற வரனே செட்டாகி விட்டது. ஆனால் அவரது மனைவி திருமணம் செய்ய உத்தேசித்திருந்தவர் பின்வாங்கி விட்டார். இப்போது மனைவி மணவிலக்குக்குப் பிறகு பார்த்தால் தன் முன்னாள் கணவன் மணக்கோலத்தில் மகிழ்ச்சியாக நிற்கிறார். இவர் மட்டும் தனியாக நிற்கிறார். இவரால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அடுத்த ஆறு மாதங்களும் இவர் தன் கணவனின் புதிய மனைவியின் எண்ணை வாங்கி அழைத்து மிரட்டுவதும் வசைபாடுவதுமாக இருந்தார். இதுதான் மேற்சொன்ன பொஸஸிவ்னெஸ். நிறைய பெண்களிடம் இது இருக்கிறது - “நீ என்னுடன் இருக்க முடியாது, உன்னை வீட்டைவிட்டு அடித்து துரத்துவேன், உன்னிடம் இருந்து பணத்தையும் குழந்தையையும் பிடுங்கி உன்னை அழ விடுவேன், ஆனால் அதற்காக நீ இன்னொரு கல்யாணமும் பண்ணிக் கொண்டு ஜாலியாக இருக்கக் கூடாது, அதை நான் அனுமதிக்க மாட்டேன். அதற்காக நான் கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டேன் என்றில்லை. நான் பண்ணிக் கொள்வேன். நீ அதை ஏற்றுக் கொண்டு மனதுக்குள் அழ வேண்டும். ஆனால் நீ பண்ணிக் கொள்ளக் கூடாது. இப்போது அல்ல எப்போதுமே என் உடைமை, உன்னை சீண்ட மாட்டேன், ஆனால் நீ என் வீட்டுப் பரணில் பயன்படுத்தாத ஒரு பழைய பொருளைப் போல என் கண்பார்வையிலேயே இருக்க வேண்டும்.”


இதையெல்லாம் சரி செய்ய ஒரு சிறந்த வழி உள்ளது. திருமண காப்பீடு ஒன்று வரவேண்டும். சில லட்சங்கள் கொடுத்து நாம் காப்பீடு பண்ணிக் கொண்டால் மணவிலக்கு ஆகும் போது வக்கீல் கட்டணத்தில் இருந்து செட்டில்மெண்ட் வரை அந்த காப்பீடு நிறுவனமே பார்த்துக் கொள்ள வேண்டும். இதை நான் சொன்ன போது, இப்படி ஒரு ஏற்பாடு இருந்தால் கணவனும் மனைவியும் சொல்லி வைத்துக் கொண்டு விவாகரத்து பண்ணி காப்பீட்டுத் தொகையையையும் பெற்றுக்கொண்டு மீண்டும் சேர்ந்து கொள்வார்களே என்று நண்பர் கேட்டார். ஆனால் இப்போது உள்ளதை விட அதுவே நல்ல டீல் என்று தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...