கல்வி மனித சமூகத்துக்கு கேடானதோ என்று கூடத் தோன்றுகிறது. ஆம் கல்வி நமக்கு பொருளதார தன்னிறைவைத் தருகிறது, ஆனால் அதே கல்விதான் நம்மை தனிமையும், சுயநலம், தந்திரமும் மிக்கவர்களாக ஆக்கிவிட்டது. கல்வி பெற்றவர்களிடம் துளி நன்மை கூட தென்படுவதில்லை. ஆனால் கல்வி பெறாதவர்கள் அவ்வளவு நெருக்கமாக இணக்கமாக வாழ்கிறார்கள். நான் ஒரு கல்வியாளனே - ஆனால் கல்வியானது நம்மை சுயமுன்னெடுப்பு மட்டும் கொண்டவர்களாக, சுயநலமிகளாக மாற்றுகிறது என்பதையும் மறுக்க முடியாது. கல்விக்கும் நமது குடும்பங்கள் இப்படி உடைந்து துண்டுதுண்டானதற்கும் ஒரு மறுக்க முடியாது தொடர்பு உள்ளது. அதாவது பொருளாதார முன்னேற்றமும் நகரமயமாக்கலும் மட்டுமல்ல கல்வி தரும் சுயமோகமும் சுயமுன்னெடுப்பும் தான் நம்மை இப்படி தனித்தனி தீவுகளாக வாழ்ந்து நான்கு சுவர்களுக்குள் பிணமாக வைக்கிறது. இன்னொருவரை கவனிக்காமல் தன் காரியமே முக்கியம் என வாழ்வது சரிதான், அதில் தப்பில்லை என்பது நமக்கு முதலில் பயிற்றுவிப்பது கல்வியமைப்பு தான். தேர்வு என்றால் என்ன பக்கத்தில் உள்ள நண்பன் தோற்றாலும் கவலையில்லாமல் நீ உன் மதிப்பெண்ணை அதிகப்படுத்து என குழந்தைக்கு போதிப்பது தானே. நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது மாணவர்கள் சிலர் பிற அதிக மதிப்பெண் எடுக்கக் கூடாது என்று பாடப்புத்தகங்களை திருடி மறைத்து வைப்பதுண்டு. இன்றும் தேர்வு மதிப்பெண்ணை அறிவிக்கையில் அது மாணவர்களிடையே ஒரு பரஸ்பர வெறுப்பை, பதற்றத்தை ஏற்படுத்துவதைப் பார்க்கிறேன். இதை நாம் போட்டியுணர்வு என்கிறோம். ஆனால் இது போட்டியுணர்வு அல்ல தனிமையுணர்வே. இதுவே பின்னர் ஒரு சமூகமாக நாம் தனித்தனி துண்டுகளாக மாறி பரஸ்பரம் இணக்கமில்லாமல், ஆதரவில்லாமல் தன்முனைப்பு மட்டுமே முக்கியம் எனக் கருத வைக்கிறது. மேலும் கல்வி சமூக உணர்வை விட தனிமனித உணர்வை அதிக முக்கியம் என கருத வைக்கிறது. சமூகப் பொறுப்புணர்வு, அறவுணர்வு எல்லாம் அவசியமற்றவை என நவீன கல்வி கல்வி சொல்லுகிறது.
நமது பெற்றோரை நாம் தனித்து விடுவதற்கும், நமது பிள்ளைகள் நம்மிடம் இருந்து விலகி இருப்பதற்கும் இந்த நவீன கல்வி அளிக்கும் பயிற்சியே முக்கிய காரணம் என்று நான் சொன்னால் அதை நீங்கள் பெரும்பாலும் ஏற்க மாட்டீர்கள். ஏனென்றால் கல்வி நம் சமூகத்தில் மிக அதிகமாக கொண்டாடப்படுகிறது. கிட்டத்தட்ட கடவுளாக வழிபடப்படுகிறது. ஆனால் நம் சமூகத்தில் இன்றுள்ள பல கேடுகெட்ட போக்குகளுக்கு வழிகோலுவதே நமது நவீன கல்வி தான் என உறுதியாக நம்புகிறேன்.
முழுக்க முழுக்க சுயமுன்னேற்றம் என்றில்லாமல் சமூக முன்னேற்றம், நிதியுணர்வு சார்ந்த கல்வி என மறுவரையறுத்தால் மட்டுமே இதை சரிசெய்ய முடியும்.
Comments